பின்புத்தி உணர மறுத்த உண்மையைப் பற்றிய சில குறிப்புகள்
- மோகன் தாஸ்
பெண்களைப் பற்றிய என் நிலைப்பாடு எப்பொழுதும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. கோ-எஜுகேஷன் பள்ளிகளில் ஆரம்பித்த பெண்களின் மீது உண்டான காரணமேயில்லாத பொறாமையாகட்டும், பெண் என்ற காரணத்தினாலேயே நிறைய இடங்களில் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த சலுகைகளால் வந்த கோபமாகட்டும் அதிக காலம் தாக்குப்பிடிக்கவில்லை. தற்சமயங்களில் அந்நாட்களைப் பற்றிய எண்ணங்கள் புன்னகையை மட்டுமே வரவழைக்கின்றன. கல்லூரிப் பருவம் அவிழ்த்த பல ரகசியங்களில் உடைந்து போன பிறகான மிச்ச சொச்ச நிலைப்பாடுகளும் திருமணத்திற்குப் பிறகு சிதறிப்போனது. கடைசி வரையில் தொற்றிக்கொண்டிருந்த பெண்களுக்கான பொதுப்புத்தியைப் பற்றிய சிந்தனைகள் கூட அகிலாவினுடனான இந்த ஆறாண்டுகால மணவாழ்வில் கடற்கரைக்குச் சென்று வந்த பிறகு கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் மணலைப் போல் எங்கோ ஒரு மூளைக்கு தூக்கி எறியப்பட்டிருந்தது. ஆனால் அது தவறோ என்று நான் மறுபரிசீலனை செய்ய நினைக்கும் அளவிற்கு வந்ததற்கும் அகிலாவே முழுக்காரணம்.
ஒரு மாதமாகவே அகிலாவுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தாலும் பிரச்சனையை நானாக வேட்டிக்குள் விட்டுக்கொள்ள விருப்பமில்லாமல் மௌனமாகவே இருந்தேன். பவானியாவது பரவாயில்லை கொஞ்சம் பெரிய பையன் குந்தவைக்கு இன்னும் இரண்டு வருஷம் கூட ஆகலை, அவளையும் அம்மாவிடம் ரூமில் விட்டுவிட்டு பெட்ரூமிற்கு தனியாக வரத்தொடங்கியிருந்தாள். அம்மாவுமே கூட என்னை தப்பா நினைத்திருக்கலாம்.
தாம்பத்தியத்திற்கான தேவை இல்லையென்று சொல்லாவிட்டாலும் அதற்காக அகிலாவை நச்சுப் பண்ணியது ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். அவளுடைய இயல்பான ஆர்வமும் எங்களுக்கிடையில் இந்த விஷயத்தில் பெரிய ஈகோ பிரச்சனை இல்லாததும் சுலபமான தாம்பத்ய உறவை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சில நாட்களாக அவளை யாரோ இல்லை அவளேயோ கட்டாயப்படுத்துவதைப் போன்ற ஒரு உணர்வு எனக்கு. இப்படியே போய்க்கொண்டிருந்த ஒரு வாரத்தின் கடைசியில் இரவில் சட்டென்று விழித்தவனுக்கு பக்கத்தில் படுக்கையில் அகிலா தூங்காமல் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து பயந்தே போனேன்.
"ஏம்மா என்னாச்சு தூங்கலையா? அழுதுக்கிட்டிருக்யா என்ன?" என்று கேட்டதும்
"அதெல்லாம் ஒன்றுமில்லை..." என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது அவள் வார்த்தைகளால் திருப்தியடையாமல் அவளை நெருங்கி கன்னத்தை தொட்டுப் பார்க்க அவள் அழுது கொண்டிருந்தது தெரிந்தது.
"என்னாடி இது?"
அவளிடம் பதிலில்லை
"உடம்பு வலிக்குதா?" அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் பதிலெதுவும் சொல்லாமல் முறைத்துப் பார்த்தவள் சில நிமிடங்களில் குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள்.
அவளை இன்னும் நெருங்கி உட்கார்ந்தேன்
தோளில் முகம் புகைத்தவள்
"உங்களுக்கு இப்பல்லாம் என்னைக்கண்டா பிடிக்கிறதில்லை?" காதுக்குள் குசுகுசுத்தாள். அந்த அறையில் சுவருகளுக்கு கூட கேட்டுவிடாமல் சொல்ல நினைத்திருப்பளோ என்னவோ? அவள் சொன்னது அவள் காதில் விழுந்திருக்க வேண்டும். அவளுடைய அழுகை கட்டுப்படுத்த முடியாததாய் ஆனது.
திருமணம் ஆன புதிதில் சண்டை போட்டு இருவரும் பிரிந்திருந்த பொழுதும் அவள் பெரிதாய் அழுததில்லை. நாங்கள் இருவரும் தவறு செய்திருந்தாலும் அவள் அதற்கான தன் பங்கு தண்டனையாய் என்னைப் பிரிந்து இருக்கும் கடும் முடிவை எடுத்திருந்தாள் இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் பொங்குகின்ற காதலோடு தூரத்தில் இருந்து கவனித்தோம். சின்ன ஊடல்தான் அது. அவள் எனக்கானவள் என்றும் என்னைத் தவிர இன்னொருத்தரை அவள் முன் காலத்தில் விரும்பியிருந்தாள் என்ற ஒரு எண்ணம் கூட கோபமாகிய காரணம் அது. என்னைப் பற்றி மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வது எத்தனை தூரம் எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்ததோ அதே அளவு மனவருத்தம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் என்னைப்பற்றி சரியாக புரிந்துகொள்ளாத பொழுதும் வந்தது. ஆனால் மற்றவர்கள் என்னைச் சரியாக உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதில் நான் காட்டிய ஆர்வத்தில் சிறிதளவு கூட என்னைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நம்பியவர்களிடம் நான் காட்டவில்லை. ஏனென்றால் அது போலித்தனமாகத்தான் இருக்கமுடியும் என்றே நினைத்தேன். அகிலாவைப் பற்றி தெரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட ப்ரயத்தனத்தைப் போல் அவளும் செய்வாள் என்றே நினைத்தேன்.
அவளுக்குப் பிடித்த சிறுசிறு விஷயங்களைக் கூட கவனித்து ஆனால் கவனிக்காதது போல் நான் செய்துவந்தது அவளுக்குத் தெரிந்தேயிருக்கவேண்டும். அந்தச் சமயங்களில் அவள் மனம் அடையும் பூரிப்பு சிறுநகையாக உதட்டோரத்தில் காட்டிக்கொடுத்துவிடும். உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த சிலர் தொடர்ச்சியாக என்னைத் தவறாகப் புரிந்துகொண்டபொழுது சரி இவ்வளவுதான் இவர்கள் என்று விட்டுவிட்டு நகர்ந்ததைப் போல் என்னால் அகிலாவைக் கடக்க முடியாததற்கும் அவளே தான் காரணம். அவள் நான் மாட்டிக்கொள்ளும் முகமூடிகளைத் தாண்டி என்னைத் தேடுபவளாகயிருந்தாள், பல சமயம் கையும் களவுமாக முகமூடிகள் கழற்றப்பட்டு அவள் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறேன். ஏன் இத்தனை நாடகம் எதற்காக இப்படி ஒளிந்து மறைந்து விளையாடுவது நாமாக நம்மை வெளிக்காட்டினால் என்ன? என்பது போல் நிறைய கேள்விகளுடன் அவள் எப்பொழுது தயாராகயிருப்பாள். எனக்குப் புரிந்திருந்தால் சொல்லித்தானிருப்பேன் ஆனால் உண்மையில் எனக்கே ஏன் அப்படி என்று புரியவில்லை; என்னை நானாகச் சொல்லிக்கொள்ளாமல் மற்றவர்களாய் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எதுவும் மனநோயுடன் சம்மந்தப்பட்டதா என்ற கேள்விமட்டும் தூரத்தில் தொக்கி நிற்கும். ஆனால் வாழ்க்கை இதனால் சுவாரசியமாயிருப்பதாகப் பட்டதெனக்கு. திருமணத்திற்குப் பிறகான ஒன்றிரண்டு வருடங்களில் அகிலா இந்த விஷயத்தில் என்னை நன்றாய்ப் புரிந்துகொண்டிருந்தாள். அதனால் அவளுடைய சமீபத்திய நடவடிக்கைகள் கோபத்தை வரவழைக்காமல் என்னில் வருத்தத்தையே அதிகம் வரவழைத்தது.
எனக்கும் அவள் என்னிடம் அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை போட்டு உடைத்துவிட்டாள் தேவலை என்றிருந்தது ஆனால் வழமை போல் நல்லதொரு நாளுக்காக நான் காத்திருந்தேன். என் உறக்கம் பெரும்பாலும் நீண்டதாக இடையில் விழிப்பு இல்லாததாக முழுமையானதாகவே இருந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அமைந்த மனைவியின் காரணமாகவும் மாற்றம் எதுவும் இருந்தது கிடையாது; இரவு பாத்ரூம் ஒரு தடவை போய்விட்டு வந்து படுத்தால் காலை ஆறு ஆறரை மணிவரை அசத்திக்கொண்டு வரும் தூக்கத்தின் மீது அகிலாவிற்கே கூட பொறாமை உண்டு. 'போன ஜென்மத்தில் நீங்க புண்ணியம் செஞ்சிருக்கணும் இப்படி தூங்குறதுக்கு' என்று அடிக்கடி சொல்வாள். அன்று உலகதிசயமாய் நான் தூக்கத்தில் இருந்து இடையிலேயே எழ அகிலா அழுது கொண்டிருந்தது தெரிந்தது, நான் எழுந்தது அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது. வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஆனால் சிறிது நாட்களாகவே அவள் என்னிடம் நடத்திக் கொண்டிருந்த நாடகம் கொஞ்சம் அவளைத் தூண்டிப் பார்த்திருக்க வேண்டும். கேவலாகத் தொடர்ந்த அழுகை என் தோள்களில் முடிந்தது. நான் முழுவதுமாய் முடியக் காத்திருந்தேன்.
"என்ன பிரச்சனை உனக்கு?" அவளை அருகில் இழுத்து ஆறுதல்படுத்தியபடி கேட்டேன்.
"உங்களுக்கு என்னைப் பிடிக்கலை!" என் கேள்விக்கான பதில் அதுவா இல்லை ஒரு ஸ்டேட்மென்ட் விடுகிறாளா உண்மையில் புரியவில்லை.
"புரியல..." என்றேன்.
"கொஞ்ச நாளாவே உங்களுக்கு என்னைப் பிடிக்கல, நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா சொல்லிடுங்கோ. என்னால உங்களைப் பிரிஞ்சி இருக்கவே முடியாது..." அவளுடைய வார்த்தைகளில் ஒரு தேர்வேயில்லை வாயில் வந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு உண்மையிலேயே பயங்கரக் குழப்பமாகயிருந்தது.
"என்னாம்மா சொல்ற நீ உண்மையிலயே புரியல. எதைச் சொல்றதுன்னாலும் தெளிவா சொல்லு" என்றேன்.
கொஞ்சம் நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள். மறுபக்கம் திரும்பி,
"உங்களுக்கு இன்னொரு பொண்ணொட தொடர்பிருக்கு!"
கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன், இதுவரையில் என்னைப் பற்றி அகிலா சொன்னதில் மிகப்பெரிய பழி இதுவாகத்தான் இருக்கமுடியும். என் முகமூடிகளைக் கழட்டிவிட்டு என்னையறிந்த ஒருத்தியாய் தான் என்னால் அவளை உணரமுடிந்திருந்தது. அவளை அப்படி என்னைத் தவறாக நினைக்க வைக்கும் படி நான் என்ன செய்திருந்தேன் என்ற யோசனை பெரும்பாலும் பூஜ்ஜியத்தில் முடிவடைந்தது. உண்மையில் என்னால் கண்டுணர முடியாத எல்லைக்கு வெளியே இந்த விஷயங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளால் அப்படி ஒரு வார்த்தையை எப்படி சொல்ல முடிந்தது என்ன திமிர் இருக்கும் என்ற எண்ணம் பின்னால் வந்த அவள் அப்படி நினைக்கும் படி நான் நடந்து கொண்டிருந்தால் அவள் இதை என்னிடம் சொல்ல எத்தனை சிரமப்பட்டிருப்பாள் என்பதை உணர்ந்ததும் கொஞ்ச காலமாய் எங்களைச் சுற்றி பின்னப்பட்டிருந்த வலை விலகுவதாய் உணரமுடிந்தது. வலையைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்தாலும் எதனால் அப்படி ஒரு வலை எங்களைச் சூழ்ந்தது என்று புரியாததால் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தேன்.
நான் சூழ்நிலையை வியந்தபடி உட்கார்ந்திருக்க, மெதுவாய் எழுந்து போய் பீரோவைத் திறந்தவள். கைகளில் எதையோ எடுத்துக் கொண்டு வந்தாள், ஏற்கனவே நான் கண்ணாடி வேறு; கண்ணாடி போடாமல் பகல் நேரத்திலேயே எதுவும் தெரியாதென்பதால் எதுவாயிருந்தாலும் அருகில் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு அவள் கொண்டு வந்து காண்பித்த பொருள் மிகுந்த ஆச்சர்யத்தை வரவழைத்தது. அவளுடைய தலைமுடிதான் அது.
"இது உங்க சட்டையில் இருந்தது. சத்தியமாய் இது என் முடியில்லை! அப்ப யாரோடது."
வாய் திறக்க முடியாத மௌனத்தால் கட்டப்பட்டவன் போல் அயற்சியடைந்து போய் நான், நிச்சயம் அகிலாவிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி சந்தேகப்படும் அளவிற்கு அகிலா எப்பொழுது ஆனால் என்பது எனக்கு ஆச்சர்யத்தையும் அதே சமயம் மிகுந்த வருத்தத்தையும் வரவழைத்தது. அவளை சமாதானப்படுத்தும் வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை.
"என்ன அகிலா இது! நீயா இப்படி கேக்குற?"
இன்னமும் விசும்பிக் கொண்டுதானிருந்தாள்.
"சொன்னேன்ல இது என் முடி கிடையாது, எம்மேலாணை என் குழந்தைகள் மேல்..." சொல்லவந்தவள் முடிக்காமல் நிறுத்தினாள்.
"சரிடி இது உன்னோடதாவே இல்லாம இருக்கட்டும். அதுக்காக என்னைச் சந்தேகப்படுவதா?" கேள்விக்கு பதில் சொல்லாமல் திரும்பவும் பீரோவிற்கு நடந்தாள். அடுத்து என்ன மேட்டர் என்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன். என் ஃபேவரைட் சட்டையுடன் வந்தாள்.
"மோந்து பாருங்க!" சத்தியமாய் அப்படி ஒரு அகிலாவை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. இந்தக் கணத்தை இப்படியே மறந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இப்படிச் சந்தேகப்படும் தோரணையுடனான அகிலாவின் முகம் என் மனதில் பதிந்துவிடக்கூடாதென்று நினைத்தவனாய் வேறு பக்கம் தலையை திருப்பினேன்.
"ஹ்ம்ம்ம்" என்று அழைத்தவள் கைகளில் திணித்தாள், அனிச்சையாய் நான் சட்டையை முகர்ந்து பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"இது நானோ நீங்களோ உபயோகப்படுத்துற செண்ட் கிடையாது. வேற செண்ட் அதுவும் பொண்ணுங்க உபயோகப்படுத்துறது!"
எனக்கு தலையைச் சுற்றுக் கொண்டு வந்தது, என்னிடம் எதுவும் விளையாடுகிறாளா என்று கூட நினைத்தேன் ஆனால் சில காலமாய் அவள் இருந்த மனநிலை அப்படி இருக்கவே முடியாது என்று சொல்லியதால் என்னதான் பிரச்சனையா இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
"இப்ப சொல்லுங்க என்ன விஷயம் போய்க்கிட்டிருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? இரண்டு குழந்தைகள் பிறந்ததும் கழட்டி விடணும்னு முடிவே பண்ணிட்டீங்களா?" அவள் கண்கள் இன்னொரு முறை மழை பொழியக்கூடிய மேகமாய் திரண்டு இருளத் தொடங்கியது.
ஒரு அறை விடலாம் என்று நினைத்தேன் நான், "அகிலா ஸ்டாப் இட். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? லூசாய்ட்டியா நீ?" என்றதும் என் கைகளில் இருந்த சைட்டையைப் பிடுங்கியவள் அதன் பாக்கெட்டில் இருந்து ஒரு பில் எடுத்து என்னிடம் நீட்டினாள். "அப்ப இதுக்கு என்ன சொல்றீங்க. இப்படி ஒரு பட்டுப்புடவை எனக்கோ உங்கம்மாவுக்கோ நீங்க வாங்கலை. அப்ப யாருக்கு வாங்கினது இது."
கைகளில் திணிக்கப்பட்ட பில் ஒரு மாதத்திற்கு முன்னர் நான் 10,000 ரூபாய்க் கொடுத்து பட்டுப்புடவை வாங்கியதாய்ச் சொன்னது ஆமாம் பில் என் பெயரில் தான் இருந்தது. ஆனால் நான் அகிலாவை விட்டுவிட்டு இந்த ஆறுவருடங்களில் பொருட்கள் வாங்கியதில்லை அதுவும் மிக நிச்சயமாய் பட்டுப்புடவை. கடையின் பெயரைப் பார்த்ததும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் என்ன நடந்திருக்க முடியும் என்கிற வழிக்கு என் நினைவுகள் என்னை அழைத்துச் சென்றன. சட்டென்று அனல்மழை பொழிய சூழ்ந்திருந்த மேகம் விலகியதைப் போன்ற உணர்வு. எனக்கு கொஞ்சம் சிரிப்பாய்க் கூட வந்தது என்னால் நடந்திருக்கக்கூடிய அனைத்தையும் ஒருவாறு ஊகிக்க முடிந்ததும்.
அவளை அருகில் அழைத்தேன், நெருங்கி வந்தவளை அருகில் உட்கார வைத்துவிட்டு, மெதுவாய்ச் சிரித்தபடி.
"நான் தோத்துட்டேன் அகிலா, நான் தோத்துட்டேன் அதுவும் உன்னால." சொல்லிக் கொண்டிருந்த என்னை அவள் அழுதபடியே ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.
நான் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் என் அலுவல பெண் தோழியொருத்தி, தன் கணவர் மீதிருக்கும் சந்தேகத்தைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது திமிராய் என் மனைவி என்னைச் சந்தேகப்படவே மாட்டாள். நாங்க இரண்டுபேரும் அப்படி இப்படி என்று சொல்லிப் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். அவள் அப்படியிருக்கவே முடியாது பெண்கள் என்றால் தங்கள் கணவனைப் பற்றிச் சந்தேகப்படாமல் இருக்கவேமுடியாது என்று சொன்னவள் என்னிடம் அதை நிரூபித்துக் காட்டுவதாய் பெட் கட்டினாள். அவள் தான் இப்படிச் செய்திருக்கவேண்டும் என்று கூறிவிட்டு அவளைப் பார்த்தேன். நம்புவதைப் போல் இல்லாததால் சட்டென்று அவளை தொலைபேசியில் அழைத்தேன், நடு இரவு தான் ஆனால் வேறு வழியில்லை அகிலா சந்தேகப்படுவதை விடவும் எனக்குப் பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்று நினைத்தேன்.
நடு இரவு தொலைபேசி அழைப்பை எடுத்தவளிடம் என்றுமில்லாத அளவிற்கு புன்னகை மறுமுனையில் கேட்டது.
"என் பெண்டாட்டி சந்தேகப்பட்டுட்டா நான் தோத்துட்டேன் நீயே பேசு!" என்று சொல்லி அகிலாவிடம் கொடுத்தேன். திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த அகிலா பேசமாட்டேன் என்று சொல்லி நழுவ நினைத்த பொழுதும் அவளிடம் சாமர்த்தியமாய் திணித்தேவிட்டேன்.
இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள், இவள் இந்தப் பக்கம் சிரித்துக் கொண்டிருந்தாள் எனக்கு அதைப் பார்க்க சந்தோஷமாய் இருந்தது. மாதக்கணக்கில் அவள் முகத்தில் சிரிப்பையே நான் பார்த்ததில்லை. இவள் இந்தப் பக்கம் பேசும் வார்த்தைகளை வைத்து அவள் அந்தப்பக்கம் சொல்லும் விஷயத்தை ஊகிக்க முயன்று கொண்டிருந்தேன்.
"ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னுமில்லை உண்மையில் சந்தேகமெல்லாம் படலை சும்மா கேட்டுக்கிட்டிருந்தேன் அவர் உளருறார்." என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி புன்னகைத்தவாறு.
"சரிங்க ஒன்றும் பிரச்சனையில்லை" என்று சொல்லி வைத்தாள். வேகமாய் என்னிடம் வந்தவள் என் நெஞ்சில் குத்தியபடி.
"என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல, ச்ச கடைசியில் இப்படி ஆய்டுச்சே!" என்று ரொம்பவும் வருத்தப்பட்டாள். அந்த ஒரு மாதமாய் அவளிடம் இருந்த முகம் இல்லை இது, அவளால் நடிக்க முடியாது எனக்கு நன்றாய்த் தெரியும். உண்மையிலேயே தன் புருஷனை இந்த விஷயத்தில் தோற்கடித்துவிட்டதாய் வருத்தப்பட்டதாகவே தெரிந்தது.
"அந்தம்மா சொல்லுது நான் பார்த்த இந்த மூணு விஷயம் இருக்கில்லையா இது மாதிரி நிறைய ட்ரை பண்ணினாங்களாம். பாருங்க நான் கடைசியில் இந்த மூணு விஷயத்தில் விழுந்துட்டேன். அந்தம்மா சொன்னிச்சு நான் முன்ன பண்ணினதுக்கு விழுந்துடுவேன்னு நினைச்சாங்களாம், ஆனால் முடி விஷயம் எல்லாத்தையும் விழ வைச்சிடும்னு தெரியும்னு சொன்னாங்க. நானும் அந்த முடி விஷயத்தில் ஆரம்பிச்சி தான் மத்த இரண்டையும் கண்டுபிடிச்சேன். சாரிங்க. உங்களை அப்படி நினைச்சிருக்கக்கூடாது தப்புதான்." உண்மையில் வருத்தப்பட்டாள்.
நான், "ஏய் இங்கப்பாரு என்னா சும்மா வருத்தப்பட்டேன்னு சொல்லி சரிபண்ணிடலாம்னு பார்க்கறியா! அதெல்லாம் சரிப்படாது இதுக்கு சரியான உபகாரம் செய்தாகணும். நான் மூணாவது ஒரு ப்ராடக்ட் தயார்ப்பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்..." என்றபடி ஆரம்பிக்க,
"ஆளைப்பாரு இந்தியாவுக்கு இரண்டே பெரும் பாரம் மூணாவதாம்ல. கனவு காணுறதை விட்டுட்டு மரியாதையாத் தூங்கப்பாருங்க நாளைக்கு ஆபீஸ் போகணும்ல" கண்டிப்புடன் சொல்லியபடி எழுந்து வந்து உட்கார்ந்திருந்த என் 'பெரிய' நெற்றியில் முத்தமொன்று வைத்தாள் பழைய 'ஹவில்தார்' மனைவி அகிலா.
PS: ரப் நே பனா தி ஜோடி படம் பார்த்துவிட்டு வந்து படம் பற்றிய நினைவுகளை எழுதியதும் சட்டென்று இதைப் போன்ற ஒன்றை வைத்து நான் கதை எழுதிய ஞாபகம் இருந்ததால் தேடிப்பார்த்தேன். அகிலா ப்ராஞ்செய்ஸ்க்காக எழுதி முடிக்கப்படாமலும் பதிவிடப்படாமலும் இருந்த இந்தக் கதையை பண்புடனுக்காக இப்பொழுது அனுப்பி வைக்கிறேன்.
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 4
பதிவு வகை : சிறுகதை, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment