பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 5

சோல்பெரி அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களது கருத்துக்களையும், அபிலாசைகளையும் கேட்டறிந்தார். சிங்கள, தமிழ் மக்களிடையே கனத்த முரண்பாடு நிலவுவதை உணர்ந்த போதும் அதற்கான தீர்வு எதையும் அவரது பரிந்துரையில் குறிப்பிடாமல் விட்டார். பக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாகிஸ்தான் கோரிக்கை பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அதே மாதிரியான தீர்வை முன் மொழியாவிட்டாலும், மொழி வாரியான மாநிலங்களையும் அவற்றுக்கென்று சில அதிகாரங்களையும், அவற்றை உள்ளடக்கிய மத்திய அரசாங்கத்தையும் சோல்பெரி பரிந்துரைத்திருக்கலாம். இன்னொரு பக்கம் மலையகத் தமிழர்களின் நிலை குறித்து சோல்பெரி கமிஷன் தெளிவாக வரையறுக்கத் தவறியது. குடியுரிமை, வாக்குரிமை அனைத்தையும் சுதந்திர சிலோன் அரசு தீர்மானிக்கும் என்று கூறி நழுவிவிட்டது.



இந்த சோல்பெரி சுதந்திர சிலோனின் கவர்னர் ஜெனரலாக பிற்காலத்தில் பதவி வகித்தார். 1964 இல் சி.சுந்தரலிங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், "நான் பரிந்துரைத்த அரசியலமைப்பில் சிறுபான்மையிருக்குப் போதுமான பாதுகாப்பு இருந்ததாகப் பட்டது. ஆனால் இப்போது இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது போல மனித உரிமைகளைப் பேணும் ஷரத்து ஒன்றைச் சேர்த்திருக்கலாம் என்று உணர்கிறேன்" என மனம் வருந்தி எழுதினார்.



நல்ல கணவன் ஒருவன் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகச் சட்டம் இல்லாத போதும் மனைவியைக் கொடுமைப்படுத்த மாட்டான். ஆனால் கொடுமைக்காரப் புருஷன் என்னதான் சட்டம் போட்டாலும், "உங்க அப்பன் வீட்ல போய் வாங்கிட்டு வா" என்று நிர்ப்பந்திப்பான். சிலோன் சிங்கள இனவாத அரசியல் தலைவர்கள் கொடுமைக்கார புருஷனுக்கு ஒப்பானவர்கள் என்பது சோல்பெரி கமிஷனில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருந்த சட்டங்களையே குப்பையில் தூக்கி எறிந்ததன் மூலம் நிரூபித்தனர்.



1945 ஜூலை 11 ஆம் தேதி சோல்பெரி கமிஷன் தன் அறிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. ஜூலை 16 நடந்த பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போர் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி அட்லியின் தொழிலாளர் கட்சியிடம் தோல்வி கண்டது. தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கு சுயாட்சி உரிமை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் முன் வைத்திருந்தது. மேலும் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு ஐரோப்பிய வல்லரசுகளின் பொருளாதார நலன் காலனியாதிக்க நாடுகளைச் சார்ந்திருக்கவில்லை. மேலும் மூன்றாம் உலக நாடுகளான இவற்றின் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று போராடிக்கொண்டிருந்தனர். இவையெல்லாம் இந்தியாவின் சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சகுனங்களாக அமைந்தன. இந்தியாவிற்கு சுதந்திரம் என்றால் சிலோனுக்கும் கிடைத்த மாதிரி!



இந்தியாவின் புதிய வைசிராய் மவுன்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு விடுதலை அளிக்கும் சிக்கலான காரியத்தைப் பல குழப்பங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் நடுவே இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு தேசங்களை உருவாக்கும் காரியத்தை 1947 ஆகஸ்ட் 15, 16 ஆம் தேதிகளில் செய்து முடித்தார். அதற்கு முன்னதாகவே உலக அரசியலிலும், பிரிட்டிஷ் அரசின் போக்கிலும், பக்கத்தில் இந்தியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் உன்னிப்பாக அவதானித்த சிங்களத் தலைவர்கள் சுதந்திர சிலோன் தேசத்தை ஆள்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.



சோல்பெரி அரசியலமைப்பின் அடிப்படையில் சிலோனின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 செப்டம்பரில் நடப்பதாக இருந்தது. அப்போது சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. ஆனால் அதற்கான முதல் நடவடிக்கையாக இந்தத் தேர்தல் கருதப்பட்டது. அதைச் சந்திக்கும் நோக்கத்தில் D.S.சேனநாயகா அனைத்து சிங்கள அரசியல் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக 1946 ஏப்ரலில் ஐக்கிய தேசியக் கட்சி பிறந்தது. பொன்னம்பலம் ராமநாதனால் தொடங்கப்பட்ட சிலோன் தேசிய காங்கிஸ் மட்டும் கலைக்கப்பட்டது. சாலமன் பண்டாரநாயகா ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தாலும் தனது சிங்கள மகா சபையைக் கலைக்கவில்லை.



ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியது. தமிழர், சிங்களர் கலந்து வாழும் பகுதிகளில் சிங்களையே நிறுத்தியது. ஒரு தமிழ் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் இலட்சியத்துடன் மூன்று உறுப்பினர் தொகுதியாக வரையறுக்கப்பட்ட கொழும்பு மத்தியத் தொகுதியில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த சேனநாயகா அனுமதிக்கவில்லை. ஜவஹர்லால் நேரு ஆசியுடன் தொடங்கப்பட்ட சிலோன் இந்திய காங்கிரஸ் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியாக ஏழு உறுப்பினர்களை அனுப்பியது. அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



செப்டம்பர் 23, 1947 இல் D.S.சேனநாயகா இலங்கையின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவியேற்கும் முன்னர் கண்டி புத்த பற்கோவிலுக்குச் சென்று ஆசி பெறும் பாரம்பரியத்தையும் ஆரம்பித்து வைத்தார். 66 வயதான D.S.சேனநாயகாவின் அமச்சரவையில் 36 வயதான அவரது மகன் டட்லி சேனநாயகா மிக இள வயது அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னர் தந்தை வகித்த விவசாயம் மற்றும் நிலத் துறை அமைச்சகம் மகனுக்குப் போய்ச் சேர்ந்தது. வவுனியா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற சி.சுந்தரலிங்கத்திற்கும் அமைச்சர் பதவி கொடுத்து சிலோன் அரசாங்கம் சிங்கள அரசாங்கம் என்ற அவப்பெயர் வராமல் சேனநாயகா தவிர்த்தார்.



அடிப்படையில் மலையகத் தமிழர் என்றாலே ஆகாத சேனநாயகா பிரதமரான உடனே அவர்கள் மீது தன் பார்வையைத் திருப்பினார். 1947 டிசம்பரில் பாரதப் பிரதமர் நேருவும், சிலோன் பிரதமர் சேனநாயகாவும் இந்தியத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்ப்பதற்காக சந்தித்துப் பேசினார்கள். முடிந்த அளவிற்கு மலையகத் தமிழர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பும் அவா அவருக்கிருந்தது. ஆனால் நேரு இந்த விஷயத்தில் தீர்மானமாக இருந்தார். எனவே "இந்தியர்கள் இங்கிருப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்வோம். நாற்பது கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் ஏழு அல்லது எட்டு இலட்சம் மக்கள் கூடுதலாகச் சேர்வதால் என்ன நேர்ந்து விடப் போகிறது! ஆனால் அவர்களின்றி உங்களால் இருக்க முடியாதென்றால் அது கெளரவப் பிரச்சினை ஆகிறது. மற்ற குடிமக்களுக்குரிய எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் கிடைக்கவேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.



தீர்க்கப்படாத இந்தச் சிக்கலோடு 1947 முடிந்தாலும் 1948 சிலோனுக்கு நல்ல செய்தியோடு விடிந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசு சிலோனுக்கு இந்தா பிடி என்று சுதந்திரத்தைக் கையில் திணித்தனர். அதற்கு முன்பாக சுதந்திர தேசத்தில் தேசியக் கொடியை வடிவமைக்கும் விவகாரத்தில் சிங்களர்களின் ஆதிக்க மனநிலை வெட்ட வெளிச்சமாகிறது.



1948 ஜனவரியில் நாடாளுமன்ற மேலவையில் செனட்டர் நடேசன், இலங்கையின் தேசியக் கொடியை நிகழ்கால உலகின் சித்தாங்களை மனதில் வைத்து அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எனினும் பிப்ரவரி 4 சுதந்திரம் பெற்ற பின்னர் 19 ஆம் தேதி கொடியேற்றிய D.S.சேனநாயகா சிங்கள ராஜ்ஜியத்தின் கொடியையே ஏற்றினார். இந்தியக் கொடியைப் போன்ற மூவண்ணக் கொடி ஒன்றை உருவாக்கலாம் என்ற யோசனை காற்றில் பறந்தது. சிங்களர்களுக்கு சிங்கம், தமிழரின் பாரம்பரியச் சின்னமான நந்தி, மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பிறை நிலவும் நட்சத்திரமும் சேர்ந்த ஒரு கொடியைத் தீர்மானிக்கலாம் என்று செல்வநாயம் கொண்டு வந்த தீர்மானம் குப்பைத் தொட்டிக்குப் போனது. சிங்களர் அல்லாத மக்களின் அதிருப்தியையும், எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தாம் நினைத்ததையே பெரும்பான்மை சிங்கள இனம் சாதித்தது.



சுதந்திரத்திற்குப் பிறகு தேசியக் கொடி குறித்து ஆலோசனை கூற அரசியல் குழு ஒன்றை அமைத்து, சிங்கக் கொடியே தொடரலாம் என்று ஊர்ஜிதப்படுத்தினார் சேனநாயகா. தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் சமாதானப்படுத்த ஓரிரு கோடுகளை மட்டும் கொடியில் சேர்த்தனர். மேலும் கடைசி கண்டி ராஜ்ஜியம் இந்தக் கொடியையே பயன்படுத்தியது என்றும், கடைசி கண்டி மன்னன் ஒரு தமிழன் என்றும், அதனால் இந்தக் கொடியை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் சிங்களத் தலைவர்கள் சப்பைக்கட்டு கட்டினர். ஆனால் 2,500 வருடத்திற்கு முன் எல்லாளனை வஞ்சகமாக வீழ்த்திய சிங்கள மன்னன் தன் இனத்தின் அடையாளமாகப் பறக்க விட்ட சிங்கக் கொடிதான் அது. அதானால்தான் அதெயே பின்பற்ற வேண்டுமென்று பிடிவாதமாக நின்றனர். பல இன, மொழி, மத மக்களை உள்ளடக்கிய தேசத்தின் ஒரு இனத்தின் மேன்மையைப் பறைசாற்றும் சின்னங்கள் அந்த தேசத்தின் ஒற்றுமைக்கே உலை வைத்து இன வெறுப்பை ஊட்டுவனவாகும். அந்தப் பாதையில் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் மிடுக்குடன் தேசத்தை நடத்தினர்.



சிங்கள அதிகாரத்தைப் பிரதிபலிக்கும் சிலோன் தேசியக் கொடி தமிழ் மக்களிடையே தேசிய ஒற்றுமை உணர்வைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்பட்ட இனம் என்ற உணர்வையே தோற்றுவித்தது.

0 பின்னூட்டங்கள்: