பின்-நவீனத்தவமும் பிறகான - நவீனத்துவமும் - பேரண்டபட்சிகளின் கதைகூறல்கள் : பகுதி-1
- ஜமாலன்
மரத்தின் கீழ் உறங்கிய மதுராபுரி மன்னனுக்கு பட்ஷிகள் பாஷைகள் தெரியும் என்ற அறியாததால் அண்டரண்ட பட்சிகள் கூறத் துவங்கின... இவ்வாறாக... "கதைகள்தான் உலகை படைக்கின்றன". இன்று நாம்கானும் உலகு பல கதைகளால் புனையப்பட்டது. நெற்றைய உலகை வரலாறு என்கிற கருவிகொண்டு புனைவாக நினைவில் கொள்வதும், இன்றைய உலகை அதன் தொடர்ச்சியான உண்மையாக கொள்வதும் வாசிப்பினை நம்பி மயக்கமுறும் மனதின் வெளிப்பாடே. தனது வேர்களை தேடித்தேடி வீழம் மனித உடல்கள் இப்படியாக பல கதைகளின் புனைவுகளில் வாழ்ந்து சலித்து வருகிறது. வேதாளங்களின் புதிர்கதைகளால் உயிர் வாழ்ந்த விக்ரமாதித்தன்போல.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மண்டை வெடிக்கும் மரணபயத்துடன் தனது தோளில் வேதாளத்தை தூக்கித் திரிந்தபடி அது சொல்லும் கதையைக் கேட்கத் துவங்கினான். தனது கழுத்திற்கு நேராக நீட்டப்பட்ட வாளுடன் தனது சாவைத் தள்ளிப்போட 1001-அரேபியக் கதைகளை சொல்லத் துவங்கினாள் ஷகர்சாதி. இப்படியாக எத்தனையோ கதையாடல்கள் சாவிற்கு எதிரான சாட்சிகளாக இவ்வுலகு பற்றி விவரித்தன... அவற்றில் ஒரு கதையாடலே பிறகான-நவீனத்தவம் அல்லது பொதுவாக குழப்பத்துடன் அழைக்கப்படும் பின்நவீனத்துவம் என்பது.
முதலில் Postmodernism என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சொல்லே தமிழில் உத்தர-நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்ற சொல்லால் பரவலாகக் குறிக்கப்படுகிறது. Postmodernity என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழிலும் இதே சொல்லே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை இரண்டும் ஒரேபொருளைத் தரும் அல்லது பயன்படுத்தப்படும் சொற்கள் அல்ல. Postmodernism என்கிற சொல் Modernism எனப்படும் நவீனத்திலிருந்து கிளைத்து அதை மறுத்து உருவான பண்பாட்டுத்தளத்தின் அழகியல் செயல்பாட்டை குறிக்கும் சொல். அதாவது கலை, இலக்கியம் உள்ளிட்ட அழகியல் செயல்பாடுகளாக உருவான நவீனத்துவத்திலிருந்து அதை மறுத்து கிளைத்ததே Postmodernism என்கிற பின்-நவீனத்துவம். இது அழகியல் செயல்பாடுகளைக் குறிக்கும் ஒருசொல். Modernity என்பது நவீனக்காலத்தை குறிக்கும் சொல். இது ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதனை மறுத்து உருவானதே Postmodernity என்பது. ஒரு வேறுபாட்டிற்காக இதனை தமிழில் பிறகான-நவீனத்தவம் என்கிற சொல்லால் இங்கு நான் குறிக்கிறேன். அதாவது பின்-நவினத்துவம் என்பது அழகியல்கள் சார்ந்ததாகவும் பிறகான-நவினத்துவம் என்பது கோட்பாடுகள் சார்ந்ததாகவும் புரிந்துக்கொண்டு பயன்படுத்தப்படுகிறது.
பிறாகன-நவீனத்துவம் என்பது ஒரு சித்தாந்தமோ அல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடோ அல்ல. வரையறைகளையும் சேர்த்து மறுப்பதால் இன்னும் வரையறுக்கப்படாத நிலையே உள்ளது. அது ஒரு மையமிழந்த சமுகம் பற்றிய வர்ணணையே. பிறகான-நவீனத்துவம் என்பது ஒரு ஆய்வுமுறையும் அல்ல. அதற்கென கோட்பாட்டு பார்வை இருந்தால் மட்டுமே அதனை ஆய்வுமுறையாக பயன்படுத்த முடியும். பிறகான-நவீனத்துவத்தின் கோட்பாட்டு பார்வையாக ஒரு வசதிக்காக "இன்றைய உலகு "நவீனகாலம்" உருவாக்கிய பல நவீனதொன்மங்களால் கட்டப்பட்டுள்ளது" என்பதைச் சொல்லலாம். இதன்பொருள் 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டில் துவங்கிய நவீனகாலம் கண்டு அறிவித்ததே இன்றைய 'உலகு' எனலாம். அதற்கு முன்பு இருந்தது பல குடிகளின் சமூகங்களே தவிர அனைவருக்குமான "ஒரு உலகு" என்பது இல்லை. அதாவது சிதறுண்ட பல நிலங்களின் வசிப்பிடக் குடிகளும் பல்வேறு பிரபஞ்சம் மற்றும் உலகு பற்றிய பார்வைகளால் தங்களை ஒரு தனித்த உடல்களாக அல்லது உயிரிகளாக உணர்ந்திருந்தனரே தவிர இந்திய மனிதன் அல்லது இந்திய உடல் என்பதையும் ஐரோப்பிய மனிதன் அல்லது ஐரோப்பிய உடல் என்பதையும் ஒரே மனித உடலாக கருதியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால் நவீனத்திற்கு முந்தைய சமூகத்தில் உலகமோ அல்லது மனிதனோ இல்லை என்பதை உலகு மற்றும் மனிதன் என்கிற கருத்தாக்கம் இல்லை என்பதாகவே புரிந்துகொள்ள வேண்டும்.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்கிற கணியன் புங்குன்றனாரின் கூற்றை நாம் இன்று உலகு தழுவியதாக புரிந்து கொள்கிறோம். காரணம் உலகு பற்றிய நமது புரிதலி்ல் உள்ள நவின சொல்லாடலால் கட்டப்பட்ட அறிவே அதற்கு காரணம். நாம் புரிந்து கொள்ளும் சங்ககாலம் என்பது நமது அறிதலில் உள்ள சங்ககாலமே தவிர.. அன்று வாழந்த சங்ககால மக்கள் பற்றியது அல்ல. அது நமக்கு தேவையும் இல்லை. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது நாம் "உண்மையாக" நம்பி உள்ளவை "உண்மைகள்" அல்ல. அது ஒரு வரலாற்றுரீதியான புனைவை அடிப்படையாகக் கொண்டதே. அல்லது அது ஒரு எடுத்துரைப்பு அல்லது கதைகூறல் (narration) எனலாம்.
எனவே, பிறகான-நவீனத்துவம் என்பது இவ்வாறக "உண்மைகள" உருவாக்கும் அல்லது "உண்மை"களைத் தேடும் "உண்மைத்தேடி மற்றும் உண்மை" சார்ந்த தத்தவங்களை மறுக்கிறது. அதனால் அது எந்த ஒரு மையமான கோட்பாட்டையும் மறுக்கிறது. இப்படி மறுப்பதால் ஒரு முறைப்படுத்தப்பட்ட ஆய்வுமுறையையும். உலக்கபார்வையையும் மறுக்கிறது. உதாரணமாக பெரியாரியம். அது பிரதியை பகுத்தறிவு அடிப்படையில் அலசும் ஒரு ஆய்வுமுறையை நமக்குத் தருகிறது. மார்க்சியம் - பிரதியை சமூகத்தின் வர்க்க அடிப்படையில் ஆய்வு செய்யச் சொல்கிறது. அமைப்பியல்- பிரதியின் உள் இயங்கும் பல அமைப்பு மையங்களை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வுமுறை. அதாவது, மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்காரியம் உட்பட எல்லா கோட்பாடுகளையும் ஒரு அமைப்பு ஒழுங்காக கருதி பிரதிக்குள் அப்பார்வைகள் எப்படி அமைவுருகின்றன என்பதை ஆய்வு செய்வதே அமைப்பியலாகும்.
அமைப்பியல்வாதம் உலகலாவிய அனைத்து சிந்தனை முறைகளிலும் உள்ள அமைப்பை கண்டு அறிவித்தது. அதாவது எந்த ஒன்றையும் ஒரு அமைப்பிற்குள் வைத்துதான் மனித மனம் புரிந்து கொள்ள முடியும். அர்த்தம் என்பது அமைப்பிற்குள் அமையும் உறவின் வழியாகவே உருவாகுகிறது என்கிறது அமைப்பியல். இவ்வுறவு வித்தியாசங்களின் வழியே கட்டமைக்கப்படுகிறது. சான்றாக, மரம் என்பது மரம் அல்லாத பிற பொருட்களின் உடன் உருவாகும் வித்தியாசத்தால்தான் அர்த்தமாகிறது. ஒருபொருளை குறிக்க மற்றொருபொருள் இருப்பதால்தான் அவசியமாகிறது. முதல்பொருளிலிருந்து உருவாகும் வித்தியாசமே இரண்டாவது பொருளை தனித்துவமானதாக ஆக்குகிறது. ஒரு பொருள் பிற பொருளுடன் கொள்ளும் வித்தியாசத்தால்தான் அர்த்தம் உள்தாக ஆகிறது. இந்த "பிறராதல்" என்பதையே லக்கான் ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கிறார்.
அதாவது மரம் என்பது செடி அல்ல, சட்டை அல்ல, போன்ற இன்னபிற உலகலாவிய அனைத்து பொருட்களுடன் இல்லை என்கிற எதிர்மறை உறவைக் கொள்வதன் மூலமே மரமாக குறிக்கப்படுகிறது. அல்லது மரம் என்பது மற்ற பொருட்களுடன் கொள்ளும் வித்தியாசமான உறவில்தான் அதனை தனித்து நம்மால் உணரமுடியும். இச்சொல்லின் அர்த்தம் இந்த வித்தியாசத்தின் அடிப்படையில் அது அமையும் அமைப்பிற்குள்தான் அர்த்தமாகிறது. அதாவது இச்சொல் மரம் என்கிற மரத்தை குறிக்கும் அதே வேளையில் மரச்சாமான்கள் செய்யும் மூலப்பொருள் துவங்கி, இலக்கிய குறியீடுகளில் "மரமாய் நின்றான்" என்பதான எண்ணற்ற அர்த்த சாத்தியங்களையும் கொண்டது. அடிப்படையில் மரம் என்பது ஒரு குறியாக உள்ளது. இது மனித மூளையில் நிகழும் குறித்தல் என்கிற செயல்பாடால் அர்த்தமாகிறது.
ஆக, மொழியியல் வழியாக உருவான இச்சிந்தனை மனித மூளை என்கிற அமைப்பில், மொழி ஒரு பிரத்யேக செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது அல்லது மொழி என்பது மூளையின் ஒரு உருப்பமைவாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டியது. ஐம்புலன்களைப்போல மொழி என்பதை ஆறாவது புலனாக கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்டக் கருத்து. மொழி என்பது மூளையின் ஒரு பிரத்யேகச் செயல்பாடாக அல்லது மூளையின் ஒரு பகுதியாக உள்ளது என்கிறார் சாம்ஷ்கி. இச்சிந்தனை முறைகளுக்கு மொழியியல் கொள்கை அதுவும் சசூர் என்கிற ஸ்வீடிஸ் மொழியியலாளரால் முன்வைக்கப்பட்ட அமைப்பு மொழியியலே அடிப்படை. ஆக, அமைப்பியம் எல்லாவற்றிற்கும் அமைப்பு என்கிற ஒரு மையத்தை கண்டு அறிவித்தது.
பிறகான-அமைப்பியம் என்பது அமைப்பியம் முன்வைத்து உலகலாவிய அமைப்புகள் என்பதன்மீதான விமர்சனமாகத் துவங்கி... இவ்வமைப்புகள் அதிகாரத்தின் மையமாக இருப்பதாக அறிவித்தன. இம்மையங்களை சிதைப்பது, அழிப்பது அல்லது மறுப்பது என்பதன் வாயிலாக மையமற்ற சிந்தனையை முன்வைத்தன. இம் மையமற்ற சிந்தனை பல அறிவுத் துறைகளிலும் கிளைத்து பரவியது. அக்கிளைகள் அதிகாரம் பற்றிய சொல்லாடல் ஆய்வாக பூஃககோவிடமும், அதிகாரம் கட்டமைக்கும் தன்னிலைகள் பற்றிய ஆய்வாக லக்கானிடமும், சிதைவாக்கம் அல்லது கட்டுடைப்பு அல்லது கட்டவிழ்ப்பு அல்லது தகர்ப்பமைப்பு (deconstruction என்பதற்கு இத்தனை வார்த்தைகள் தமிழில் ஏன் என்றால் அதன் ஆய்வு முறையை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்தான்) என்பதாக தெரிதாவிடமும், வாசகமைய விமர்சனமுறையாக ரோலான் பார்த்திடமும் கிளைத்தன. மார்க்சிய அடிப்படையில் அமைப்பியலை பின் அமைப்பியல் தளத்திற்கு நகர்த்தியவர் பூஃக்கொவின் பேராசியராக இருந்த லூயி அல்தூஸர் ஆவர்.
அதாவது, சிதைவாக்கம் என்பது ஒரு பிரதிக்குள் மையமாக இயங்கும் ஒரு முரணில் ஆதிக்கம் வகிக்கும் ஒருகூறு பிறிதொரு கூறை வெளிப்படுத்தாமல் அதாவது பிரசன்னப்படுத்தாமல் ஒடுக்கிவைக்கும். ஆதிக்க கூறை தலைகீழாக்குவதன் மூலம் ஓடுக்கப்பட்ட கூறுக்கான வெளியை திறந்துவிடுவது. இது பிரதியின் மையமான அர்த்தத்தை பிரச்சனைப்படுத்திவிடும். அதாவது பிரதி தனது மைய அர்தத்தை இழந்துவிடும். பிரதியை சிதைத்து மறு ஆக்கம் செய்வதுதான் சிதைவாக்கம் அல்லது தகர்ப்பமைப்பு என்பது. எளிமையான ஒரு உதாரணமாக எனது புரிதலைத் தருகிறேன். "இந்தியா என்பது ஒரு தேசியம்" என்கிற வாக்கியத்தில் உள்ள "ஒரு தேசியம்"என்பது "பல தேசியம்" என்கிற சொல்லின் மேல்தான் நிற்கிறது. இந்த ஒரு தேசியம் என்கிற அமைப்பிற்குள் பல தேசியங்கள் இருப்பதை இச்சொல்லானது மறைக்கிறது அல்லது மறுக்கிறது. உண்மையில் பல தேசியங்கள் இருப்பதால்தான் இந்த ஒரு தேசியம் என்கிற சொல்லாக்கமே வருகிறது. ஆக, இந்த வாக்கியம் ஒரு தேசியத்தை முன்மொழியும் போக்கில் அதற்குள் உள்ள பல தேசியத்தை மறமுகமாக வழிமொழிவதாக மாறுகிறது. இந்த வாக்கியத்தின் உண்மையான பொருள் இந்தியா என்பது பல தேசியங்களைக் கொண்டது ஆனால் இதை சொல்பவர் அதை மறுத்து தனது அரசியல் கூற்றாக இதனை முன்வைக்கிறார் என்பதால் இந்த வாக்கியம் உண்மையை சொல்வதில்லை மாறாக ஒரு உண்மையை கட்டமுனைகிறது. இந்த உண்மையை தகர்ப்பதன் மூலம் அல்லது கட்டவிழ்ப்பதன்மூலம் அதன் எதிர்நிலைகளை முன்வைக்க முடியும். இது எளிமையான உதாரணம். பண்டைய தத்துவங்கள் மதங்களின் பிரதிகளை இந்த முறையில் கட்டுடைப்பதன்மூலம் அதற்கு எதிர்நிலையான ஒரு அமைப்பை வெளிக்கொண்டுவர முடியும் என்பதே தகர்ப்பமைப்பின் அல்லது சிதைவாக்கத்தின் அடிப்படை எனலாம்.
பிரதி என்றவுடன் எழுதப்பட்ட இலக்கியவகைமை மட்டுமல்ல. எல்லாமே பிரதிதான் என்பதுவே பின் அமைப்பியலின் நிலைப்பாடு. மனிதன் என்கிற கருத்தாக்கம்கூடஒரு பிரதிதான் என்கிறார் பூஃக்கோ. மனிதன் என்பது கூட 19ஆம் நூற்றாண்டு என்கிற செவ்வியல்கால கண்டுபிடிப்பு என்கிறார். இதன்பொருள் செவ்வியல் காலம் என்கிற 19-ஆம்நூற்றாண்டிற்கு முன்பு மனிதன் என்கிற பொதுமைப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் இல்லை. அதற்கு பகரமாக மனித உடல்களை குறிக்கும் பல சொல்லாடல்கள் இருந்தன. உதாரணமாக அடிமை, ஆண்டான் அல்லது சாதிய அடையாளப் பெயர் இன்னபிற...
மனிதன் என்பவனது உடலில் அவனது தன்னிலை (சஃப்ஜெக்ட்) எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? ஒரு உடலானது ஆதிக்கத்தை ஏற்கும் அல்லது எதிர்க்கும் உடலாக எப்படி கட்டமைகிறது? அதன் தன்னிலை உருவாக்கச் செயல்பாடுகள் எப்படி இயக்கமடைகின்றன? என்பதை லக்கான் பிராய்டியத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கிறார். இவரின் கூற்றப்படி மனித உடலின் ஆழ்மனம் என்பது ஒரு மொழியைப்போல கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் சிந்திப்பதும் அல்லது உணர்வுதும் ஒரு மொழியில் நிகழ்வாக அல்லது ஒரு உள் பேச்சாக நமக்குள் நடைபெறுவதை நாம் அனுபவபூர்வமாக உணரமுடியும்.
இப் பிறகான-அமைப்பியலின் முறையியலை அதாவது மையமிழப்பை அல்லது மையமழிப்பை பிறகான-நவீனத்துவ விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை முன் கொண்டு வருகிறார்கள். பிறகான-நவீனத்துவ படைப்புகள் இம்மையமிழந்த சமூக அவலம் பற்றிய விவரணைகளை வெளிக் கொண்டுவருகிறது.
இதுவரையிலான மனிதனை உய்விக்க வந்ததாகக் கூறிக் கொண்ட தத்துவங்கள் துவங்கி மனிதவிடுதலைக் குறித்து நவீன உலகில் கதைத்த இஸங்கள்வரை எல்லாம் மனித நிலைபாடுகள் குறித்த பொதுவான மையங்களைக் கொண்டு பேசப்பட்ட கதையாடல்களே. இக்கதையாடல்களை பெருங்கதையாடல்கள் என்கிறார்கள் பிறகான-நவீனத்துவவாதிகள். இனி சாத்தியமானது இம் மையமிழந்த மனிதனின் அல்லது இவ்வுலகின் சிறுகதையாடல்களே என்கிறார்கள். இதன் நீட்சி இனி ஆதிக்கத்திற்கு எதிரான உலகலாவிய பெரும் போராட்டங்கள் புரட்சிகள் சாத்தியமில்லை localized போராட்டங்களே அல்லது கலகங்களே சாத்தியம் என்பதாகும். பெருங்கதையாடல்கள் உருவாக்கும் புரட்சி அல்லது சமூக மாற்றங்கள் மீண்டும் ஒரு அதிகார மையமாக மாறி மனிதகுலத்திற்கு பெரும் அழிவைக் கொண்டுவரும் என்பதே.
மார்க்சியரான சமீர் அமீன் போன்றவர்கள் பிறகான-நவீனத்துவம் என்பது உலக நிதிமூலதனக்குவியல் மற்றும் உலகமயமாக்கலின் விளைவால் வெளிப்படும் ஒரு கோட்பாடே. இது இயல்பிலேயே எதிர்புரட்சி தன்மை வாய்ந்தது என்கிறார்கள். உலகை நவீனத்தொன்மம் என்கிற புனைவடிப்படையில் பார்க்கும் பிறகான-நவீனத்திற்கும் இந்திய சங்கர அத்வைத மாயாவாதத்திற்கும் குவாண்டம் எநத்திரவியலின் ஹைஷன்பஃர்க் நிச்சயமின்மைக் கோட்பாட்டிற்கும் (uncertinity principal) இடையில் ஒரு ஒற்றுமை இருப்பதை அறியமுடியும். இதனை இதன் கொண்டு எப்படி பார்ப்பது என்பது அவரவர்கண் விடப்படுகிறது. நிற்க.
இக்குறிப்புகள் எளிமை கருதி சுருக்கமாக கூறப்பட்டவை, விரிவாக பேச இதில் எண்ணற்ற விஷயங்கள் இருப்பதாகக் கூறியபடி தனது கதைகளை கூறி முடித்த அண்டரண்ட பட்சி... பேரண்டமும் வியாபிக்கும் தனது இறக்கைகளை விரித்தபடி பறக்கத் துவங்கியது. கனவுபோலவே இதனைக் கேட்ட மதுராபுரி மன்னன் பரக்க பரக்க விழித்தபடி எழுந்து அமர்ந்தான, இதனைப் படிக்கும் ஒரு வாசகனைப்போல...
ரொம்ப தலைசுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல...
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 2
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment