பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 3

அவர்களுக்குள் என்ன ஆகியிருக்கக்கூடும்?
- சுரேஷ் கண்ணன்


அந்த தம்பதியரை, அலுவலகத்திற்கு கிளம்புகிற பரபரப்பான காலை வேளைகளில் ஏறக்குறைய தினமும் பேருந்து நிறுத்தத்தில் காண நேரும்.

அவருக்கு ஐம்பத்து இரண்டிலிருந்து ஐம்பத்து ஐந்து வயதிருக்கலாம். தலை ஏறக்குறைய வழுக்கையாகி பளபளவென்று இருந்தாலும், ஆள் மிக கட்டுமஸ்தாக எந்தவொரு இளைஞனுக்கும் குறையாத மிடுக்கோடு இருப்பார். சில சமயங்களில் அவர் வயதுக்கு பொருந்தாத ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சட்டையை இன் செய்து கொண்டு கேன்வாஸ் ஷீ போட்டுக் கொண்டு வருவார். 'நான் இன்னும் இளமையோடுதான் இருக்கிறேன்' என்று உலகத்திற்கு அறைகூவல் விடுக்கிறாற் போலிருக்கும் அது. முகத்தை கடுகடுவென்றுதான் வைத்திருப்பார். எப்பவாவது அபூர்வமாக புன்னகைப்பார்.

ஏதோ ஒரு அரசு அதிகாரியாக முக்கியப் பணியிலிருக்கிறார் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. பேருந்தில் அவர் ஏறிய பின்னால், நடத்துநர் அவரை மரியாதையாக வணங்கிவிட்டு, உட்கார இருக்கை இல்லாத பட்சத்தில் தன் இருக்கையிலேயே அமரச் செய்வார். அவர் எந்நாளும் பயணச்சீட்டு எடுத்தும் நான் பார்த்ததில்லை. பேருந்து துறையிலேயே கூட பணிபுரியலாம் என்று நான் எண்ணிக் கொள்வதுண்டு.

அந்த பெண்மணிக்கு நாற்பத்து ஐந்திலிருந்து ஐம்பது வயது வரை இருக்கலாம். தலைமுழுகியதால் ஏற்பட்ட ஈரதலைமுடியோடு, நெற்றியில் ஒரு பெரிய குங்குமப்பொட்டோடு, தலையில் கதம்பமோ, மல்லிகையோ அழகான முறையில் சூடியிருப்பார். பட்டுப்புடவையை ஒத்த அதே மாதிரி தோற்றந்தருகிற விதவிதமான புடவையோடு தினமும் வருவார். தினமும் அவரை பார்க்க நேர்வதாலும், எப்பவோ ஒரு முறை அவர் அமர என் இருக்கையை நான் தந்ததாலும் சில சமயங்களில் என்னைப் பார்த்து புன்னகைப்பதுண்டு. எப்பவும் சிரித்த முகமாகவும், தன் சக பெண் பயணிகளோடு கலகலப்பாகவும் பேசிக் கொண்டிருப்பார்.

எத்தனையோ பேர் திருமணம் செய்து கொண்டு சாலைகளில் உலவினாலும், சில ஜோடிகளைப் பார்க்கும் போதுதான் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவாக நம்மால் உணர முடியும். அவர்கள் இருவரும் அழகாக இருக்கவேண்டுமென்று கூட அவசியமில்லை. அவர்கள் உடல்மொழிகளினாலும், அறிமுகமில்லாதவர்களிடம் கூட சகஜமாக பழகும் விதத்தினாலும் இதை உணர இயலும். மேற்சொன்ன தம்பதியரும் இந்த வகையில் அடங்குவர். அதுவரை வெறிச்சோடி அழுது வடிந்து கொண்டிருக்கிற அந்த பேருந்து நிறுத்தம், இவர்கள் வந்த பின்னால் ஏதோ பளிச்சென்ற விளக்கு போட்டாற்போல் களைகட்டிவிடும். அவர்களை முன்பின் பார்த்திராதவர்கள் கூட வியப்புடனும் மரியாதையுடனும் அவர்களை காணுவதை பார்க்க முடியும். இருவரும் சேர்ந்து நடந்து கொண்டு வருகிற காட்சி என்னுள் எப்போதும் பரவசத்தை ஏற்படுத்தும்.

அவர்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட பேருந்துகளுக்காக காத்திருப்பார்கள். பெரும்பாலும் சென்னை, கோட்டைக்கு செல்லும் பேருந்தாகத்தான் இருக்கும் அது. நானும் பெரும்பாலும் அந்த பேருந்தில்தான் செல்வேன். மற்ற பேருந்துகள் நிறைமாத கர்ப்பிணி போல் சென்று கொண்டிருக்க, இந்த பேருந்துகளில் மட்டும்தான் மூச்சு முட்டாமல் சுவாசிக்கவும், கால்களை குறுக்கிக் கொண்டு நிற்க வேண்டிய அவசியமில்லாமலும், அதிர்ஷமிருந்தால் உட்கார இருக்கை கூட கிடைக்கும்.

சில சமயங்களில் இந்த பேருந்துகள் வராத சமயங்களில், அந்த பெண்மணி கூட்டமான பேருந்தில் ஏற முயற்சிக்கும் போது அவரோ மிக கடுகடுப்புடன் "கொஞ்சம் வெயிட் பண்ணலாம். வந்துடும். இவ்வளவு கூட்டத்துலயா போகப் போறே?" என்று அந்த பெண்மணியை தடுத்துவிடுவார். இருவரும் பேருந்தில் ஏறிவிட்ட பிறகு, அவர் செய்யும் முதல் காரியம் தன் மனைவி உட்கார இடம் இருக்கிறதா என்று நோட்டமிடுவதுதான். அந்த பெண்மணி வந்து இருக்கையில் உட்காரும் வரை அவர் பதைபதைத்துப் போய்விடுவார். மனைவி உட்கார இடம் கிடைக்காத வரை ஏதோ நெருப்பில் நின்றிருப்பவர் போல் தவிப்புடன் காணப்படுவார். சில சமயங்களில் உட்கார இடமிருக்காத போது, அவர் நின்றிருக்கும் இடமருகில் மகளிர் இருக்கை காலியாகும் பட்சத்தில், அதில் அமரப் போகிறவர்களை கெஞ்சலுடன் தடுத்துவிட்டு சற்று தூரத்தில் நின்றிருக்கும் மனைவியை மிக அவசரமாக கூப்பிடுவார். அவர் வருவதற்கு சற்று தாமதமானாலும் எரிச்சலோடு ஏதோ கூறுவார். அந்த பெண்மணியும் மிக கூச்சத்தோடு அந்த இருக்கையில் வந்தமர்வார்.

மேலோட்டமாக பார்ப்பதற்கு அந்த கணவர் கோபக்காரராக தென்பட்டாலும், தன் மனைவியின் மீது மிக உள்ளார்நத அன்பை வைத்திருக்கிறார் என்பதை அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும் சொல்லும்.

ஒரு ஆதர்ச தம்பதிக்கு இவர்களை தாராளமாக உதாரணம் காட்டலாம் என்று எனக்குள் நான் சொல்லிக் கொள்வேன். ஏதோ சில காரணங்களினால் சமயங்களில் என் மனைவி மீது எரிச்சல் வர நேரும் போதெல்லாம், இந்த தம்பதியரை மனதில் நினைத்துக் கொண்டு எனக்குள் அமைதியாகி பிறகு மனைவியிடம் மன்னிப்பு கேட்பேன்.

நடிகர் அஜீத்குமார் நடித்த ஏதோவொரு திரைப்படப்பாடலில்

'முதுமையின் முத்தங்கள்கூட இனிப்பென்று வாழ்ந்திடுவோம்'

என்கிற பாடல்வரிகள் இவர்களைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் வந்தடங்கும்.

O

ஆனால் அவர்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை.

சமீப காலங்களில் அவர்களின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தனித்தனியாகத்தான் வருகிறார்கள். சில சமயம் அந்த கணவரோ, அல்லது மனைவியோ மட்டும்தான் வருகிறார்கள். மற்றவரை காணமுடிவதில்லை. அரிதாக இருவரும் ஒரே நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க நேரும் போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. அந்த பெண்மணி உட்காரும் இருக்கைக்காக அவர் எந்தவொரு முயற்சியும் எடுப்பதில்லை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் அந்த பெண்மணி கூட சற்று - சற்றுத்தான் - வருத்தமாக இருப்பதாக எனக்குப்படும். அல்லது என் பிரமையோ?

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்த காட்சியை வேதனையுடன் காண வேண்டியிருக்கிறது. ஏதோ பிணக்கு போல, இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும் என்று காத்துக் கொண்டிருக்கிற என் பொறுமை காணாமல் போயக்கொண்டிருக்கிறது. அவர்கள் இருவரும் பழையபடி இணைந்து பேசிக் கொண்டே வரமாட்டார்களா என்று என் மனம் ஏங்கத் தொடங்கியிருக்கிறது.
தன் துணையுடன் ஒன்றாக சுற்றி இன்பமாக பறந்துக் கொண்டிருந்த பறவை, தன் துணையை இழந்து வருத்தத்துடன் கூவுகிற ஓலம் எனக்கு நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. அந்த பெண்மணி தனியாக வரும் நேரங்களில், இதைப்பற்றி அவரிடம் விசாரிக்கலாமென்றாலும், முறையான அறிமுகமில்லாததாலும், அவர் தவறாக எடுத்துக்கொள்வாரோ என்கிற பயமும், இயல்பாக இருக்கிற என் கூச்ச சுபாவமும் இந்த காரியத்தை செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அலுவலக நேரங்களிலோ, இல்லத்தில் ஓய்வாக அமர்ந்திருக்கும் நேரங்களிலோ இவர்களைப் பற்றிய நினைவு எனக்குள் எழுந்து ஒரு பெருமூச்சுடன் அடங்கி விடும்.

அவர்களுக்குள் அப்படி என்னதான் ஆகியிருக்கும்?

0 பின்னூட்டங்கள்: