பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - அறிமுகம்

ஜமாலன் - அறிமுகம்


ஜமாலன் புனைபெயர்தான். இயற்பெயர் ஜாகிர் உசேன். சொந்தஊர் குடந்தை அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்கிற பேரூராட்சி. படித்தது முது அறிவியல் இயற்பியல் (M.Sc. Physics). காதலித்தது இயற்பியலை, கட்டிக்கொண்டது கணிப்பொறியை, எப்பொழுதும் கள்ளக்காதல் இலக்கியத்துடன்தான். விஞ்ஞானி ஆகவேண்டும் என்பதுதான் கனவு, மெய்ப்பட்டதோ கணிப்பொறி குமாஸ்தா? அதுவும் அரேபியா எனும் அந்நிய மண்ணில். அரேபியாவில் தோல்வியான 16-வது ஆண்டு. 10-ஆண்டுகள் "தனிமையின் இசை", துணையற்ற உடல் வாதைகள் எழுத்துக்களாய் கொப்பளித்த காலங்கள். கடந்த 6-ஆண்டுகளாக குடும்பத்துடன் கும்மிதான், உப்பு, பருப்பு என. கஷ்டப்பட்டும் உழைக்கவில்லை, இஷ்டப்பட்டும் உழைக்கவில்லை, வாழ்க்கையை நஷ்டப்பட்டுதான் உழைக்கிறேன். சொல்வதற்கு ஒன்றுமில்லை, சுவாசிக்கிறேன் என்பதைத்தவிர, யாரோ எழுதிய கவிதை வரிகள்.

80-களுக்குப் பிறகான சிறுபத்திரிக்கை உலகுடன் தொடர்பு. நடத்திய பத்திரிக்கைகள் 9-ஆம் வகுப்பில் தேனி கையெழுத்துப் பத்திரிக்கை - சக ஆசிரியை காதலியனாதால் 2-வது இதழில் நின்றுபோனது, +2ல் திசைகள் கையெழுத்துப்பத்திரிக்கை, கல்லூரி முதலாம் ஆண்டில் ஜனகனமன உருட்டச்சிதழ், 2-ஆம் ஆண்டில் விடிவு அச்சிதழ், காதலிக்கு கல்யாணகுமார் பாணியில் அச்சதைப்போட்டுவிட்டு, தாடி வளர்த்து, வேறொரு பெண்ணை காதிலித்து கல்யாணம் செய்து கொண்டு சவுதி வந்த பிறகு காலக்குறியில் தொடர்ந்து எழுத்துப்பணி. அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை தொகுத்து நண்பன் காலக்குறி ஆசிரியர் கான் தொகுத்து "மொழியும் நிலமும்" என்கிற நூலாக 2003-ல் வெளியிட்டான். மார்க்சிய அரசியலில் நம்பிக்கை உண்டு. புதிய சிந்தனைத் துறைகளான பின்காலனீயம், அமைப்பியல், பின்-அமைப்பியல் மற்றும் பின்-நவீனத்தும் ஆகியவற்றை குறித்த படிப்பும் அறிந்து கொள்வதற்கான ஆர்வமும். அவற்றை மார்க்சீய எல்லைக்குள் கொண்டுவந்து புரிந்துகொள்ள முயல்வதும். இந்திய தத்துவஞானத்தில் ஈடுபாடு உண்டு. எதிர்காலத் திட்டம் உடலரசியல் குறித்த ஒரு முழுமையான நூல் எழுதுவது.

என்னைக்குறித்து நானே சொல்வது என்பது என்னைக்குறித்து பிறர் என்ன எண்ண வேண்டும் என்கிற வேட்கையின் வெளிப்பாடே. ஆக, இவ்வறிமுகம் என்னைப் பற்றியதல்ல, என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்கிற எனது ஆசையே. ஏனென்றால் சுயம் என்று ஒன்று இல்லை. சுயம் என்பது பிறறால் அல்லது மற்றமையால் கட்டப்படுவதால், எனது சுயம் என்பது மற்றமையான உங்களால் கட்டமைக்கப்படுவதே. அத்தகைய முயற்சியே இவ்வறிமுகம்.

பொதுவாக, வாசகர்களைக் கவரக்கூடியதல்ல எனது எழுத்துமுறை என்றாலும் ஒருசிலரது வாசிப்பையாவது இவை பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது

1 பின்னூட்டங்கள்:

புதுப்பாலம் said...

"என்னைக்குறித்து நானே சொல்வது என்பது என்னைக்குறித்து பிறர் என்ன எண்ண வேண்டும் என்கிற வேட்கையின் வெளிப்பாடே. ஆக, இவ்வறிமுகம் என்னைப் பற்றியதல்ல, என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்கிற எனது ஆசையே"

ம்........நல்ல எதிர்பார்ப்பு

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா