பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 3

1912 ஆம் வருடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் மாபெரும் துக்ககரமான சம்பவம் ஒன்று நடந்தது. மூழ்காத கப்பல் என்ற பெயருடன் மேட்டுக்குடி மக்களை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவை நோக்கிச் சென்ற டைட்டனிக் கப்பல் கடலில் கவிழ்ந்து வரலாற்றில் இடம் பெற்றது. ஆனால் அன்றிலிருந்து சரியாக மூன்று வருடம் ஆறு வாரம் கழித்து மே 28, 1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் உருவான சிங்கள-முஸ்லிம் கலவரம் ஆங்கிலப் பேரரசிற்கு டைட்டானிக் மூழ்கியதைக் காட்டிலும் பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது.



சிலோன் தீவு ஆங்கிலேயரின் நிர்வாக வசதிக்காக ஒரே தேசமாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட முதலாவது பெரிய இனக்கலவரம் இதுவே ஆகும். இன்னும் சொல்லப் போனால் அன்று வரை பிரிட்டிஷ் காலனி தேசங்களிலேயே அது போன்ற கலவரம் உண்டானதில்லை. பிற்பாடு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட உயிர்ச்சேதம் இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது வேறு கதை. இருந்தாலும் இலங்கையைப் பொறுத்த மட்டில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் என்ற மூன்று சமுதாயங்கள் ஒன்றிணைந்து வாழும் சூழலில் அன்று தொடங்கிய இனவெறுப்பு 93 ஆண்டுகள் கடந்து பிறகும் கூட இன்று வரை தணிந்த பாடில்லை.



புத்த ஜெயந்தியை பெளத்த சிங்களர்கள் கண்டியில் ஊர்வலத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் 1815 இல் Kandyan Convention மூலம் தமிழ் மன்னன் விஜயராஜசிங்கனின் அரசை வீழ்த்திய நிகழ்ச்சியின் நூற்றாண்டு விழாவையும் சேர்த்து புத்த ஜெயந்தியை விமரிசையான ஊர்வலமாகக் கொண்டாட சிங்களத் தலைவர்கள் திட்டமிட்டனர். ஆயினும் முஸ்லிம் மசூதி முன்னர் அமைதியாகச் செல்லவேண்டும் என்றும், மசூதிக்கு 100 அடி முன்பே வாத்தியங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த அரசுப் பிரதிநிதி உத்தரவிட்டிருந்தார். மேளதாளத்துடன் நள்ளிரவு ஊர்வலம் மசூதியை நெருங்கிய போது நிலைமையைச் சமாளிப்பதற்காக போலீஸ் அதிகாரி வேறு வீதி வழியாக அவர்களை விலகிச் செல்லுமாறு பணித்தார். இதை மசூதிக்குள்ளிருந்து கண்டு குதூகலித்த இஸ்லாமியர்கள் கை தட்டி மகிழ்ந்தனர். சிங்களர்களுக்கும் உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தைத் தட்டியெழுப்ப அது போதுமாகவிருந்தது. மாற்றுப் பாதை வழியாகப் பயணிக்க நினைத்தவர்கள் மசூதியை நோக்கி விரைந்தனர். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஆறு கான்ஸ்டபிள்களும் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இரு பிரிவினரும் கற்களையும், சீசாக்களையும் மாறிமாறி வீசினர். அமைதியைப் பரப்ப அவதரித்த புத்த பிரான் பிறந்த நாளில் ஒரு இனக் கலவரம் அங்கே வெடித்தது. சிலோன் தீவின் ஒன்பது மாகாணங்களில் ஆறு மாகாணங்களுக்கு இந்தக் கலவரம் பரவியது.



சுமார் 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து நாசமானது. ஒட்டு மொத்தமாக 140 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற ஆங்கில அரசாங்கம் ராணுவ அடக்கு முறைச் சட்டத்தைப் பிற்ப்பித்து எண்ணற்ற சிங்களர்களைச் சிறையில் தள்ளியது. சுமார் 4,500 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது சிலோன் தீவின் சட்ட மன்றத்தில் அங்கம் வகித்த 21 உறுப்பினர்களின் 'படித்த சிலோன்காரர்' என்ற பிரிவில் ஒரே உறுப்பினராக சர் பொன்னம்பலம் ராமநாதன் என்ற தமிழர் இருந்தார். சிங்களர்கள் செய்தது தவறுதான் என்ற போதிலும் அவர்களை நியாயமற்ற முறையில் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து இங்கிலாந்து வரை சென்று வாதாடினார். அந்தச் சமயத்தில் இங்கிலாந்திற்கும், ஜெர்மனிக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அதனால் தேவையில்லாமல் உருவான இந்த இனக்கலவரத்தைச் சரியான முறையில் பிரிட்டிஷ் அரசு விசாரிக்கத் தவறியது. உண்மையில் பிரிட்டிஷ் அரசாங்கம் கலவரத்தைத் தூண்டிய சிங்கள வெறியர்களைக் கைது செய்த அதே நேரம் அரசாங்கத்தை எதிர்த்த அத்தனை பேரையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பழி தீர்த்தது. ஆங்கில ஆதிக்கத்திலிருக்கும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் அக்கறை கொண்ட ராமநாதன் விடுதலை உணர்வைத் தட்டியெழுப்புவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக இதைக் கருதினார். சிறைப்பட்ட சிங்களை விடுவிக்க உதவியதில் ராமநாதனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி விடுதலையானவர்களில் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகப் பிற்காலத்தில் வரப் போகும் D.S.சேனநாயகாவும், இலங்கையில் முதல் எக்சிக்யூட்டிவ் அதிபர் 'குள்ள நரித்தன' ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசியில் ஆசானாக விளங்கிய அலக்சாந்தர் ஏகநாயகே குணதிலகேவும் அடக்கம்.



ஆனால் ராமநாதனின் கணிப்பு இரண்டு கோணத்தில் தவறியது. முதலாவதாக ஒன்றுபட்ட சிலோன் தீவின் பிரஜைகளாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவது அவரது எண்ணம். ஆனால் சிங்கள மக்கள் மனதில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த வெறுப்பு 'ஆங்கில எதிர்ப்பு உணர்வை' தூக்கிச் சாப்பிட்டது. சிங்கள, புத்த உணர்வுகள் விழித்தெழுந்தன. மற்றொரு பக்கம் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் முரண்பாடு ஏற்படவும் இந்நிகழ்ச்சி காரணமாக அமைந்தது. அநியாயமான முறையில் சிங்களர்கள் தம்மைத் தாக்கிக் கொன்ற போது, நியாயமாக தம் பக்கம் சாயாது பெரும்பான்மை சிங்களர்களுக்குப் பரிந்து பேசுவதாக சர் ராமநாதனை முஸ்லிம் சமுதாயம் கருதியது. அச்சமுதாயம் தன்னை தமிழர் அல்லாத ஒரு பிரிவினராகவே உணரத் தொடங்கியது. ஆக, ஒரு பக்கம் சிங்களர்களின் வலுவான இன உணர்வு, மறு பக்கம் முஸ்லிம்கள் தனியாகப் பிரிந்து நிற்றல் என இந்த இரண்டுக்கும் மத்தியில் சிலோன் தேசிய உணர்வை உருவாக்குவதற்கு ராமநாதன் முயன்றார்.



ஆங்கிலேயரை வெளியேற்றிவிட்டு சிலோன் மக்கள் தம்மைத் தாமே ஆளவேண்டும் என்ற நோக்கில் 1917 இல் அவர் சிலோன் சீர்திருத்த லீக் என்ற அமைப்பை நிறுவினார். ஏகாதிபத்திய ஆட்சியைக் கடுமையாக எதிர்த்துப் போராடி அவர் தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த முயற்சியில் அடுத்த கட்டமாக இந்திய விடுதலைக்குப் போராடும் இந்திய தேசிய காங்கிரசைப் போல 'சிலோன் தேசிய காங்கிரசை' 1919 இல் தோற்றுவித்தார். அதன் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கைத் தீவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முதல் தேசியத் தலைவர் ஆனார். ஆனால் சிங்கள மக்களிடம் ஆங்கில அடக்கு முறைக்கு எதிரான சிலோன் தேசிய உணர்வைக் காட்டிலும் சிங்கள இன உணர்வு மேலாக இருந்தது.



1920 ஆம் ஆண்டு ஜேர்ஸ் பெரிஸ் என்ற சிங்கள் சிலோன் தேசியக் காங்கிரசின் தலைவராவத்தற்கு ராமநாதன் வழிவிட்டார். அந்த வருடம் பிராந்திய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. கொழும்பில் வசித்த ராமநாதன் கொழும்பு தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் சிலோன் காங்கிரசில் சிங்களர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். வேறு வழியில்லாமல் சிங்களர் ஒருவர் கொழும்பில் போட்டியிடும் வகையில் அவரது மனுவை விலக்கிக்கொண்டார். மேலும் அவர் எந்த சிலோன் தேசிய காங்கிரசை அவர் உருவாக்கினாரோ அந்த சிலோன் தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிலோன் மக்களின் விழிப்புணர்வுக்கா அர்ப்பணித்த அவர் எழுபது வயதைக் கடந்திருந்தார். கொழும்பில் அவரைப் போட்டியிட அனுமதிக்காத சிங்கள அரசியல்வாதிகள் நடப்பது பிராந்திய உறுப்பினர்களைப் பிரதிநிதிப்படுத்தும் தேர்தலல்ல, மாறாக இனப் பிரதிநிதித்துவத்துகான தேர்தல் என்பதை நீருபித்தனர்.



சிங்கள மக்களுக்கு சிங்கள மொழி மீதும், புத்த மதம் மீதும் பற்று இருக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்து அவர்களின் கலாச்சார உணர்வுகளை மீட்டெடுக்க பல காலம் உழைத்தவர் ராமநாதன். ஆங்கில ஆட்சியின் போது மேற்கத்திய மோகத்தில் திளைத்திருந்த சிங்களருக்கு சுய மரியாதையை ஏற்படுத்தி அவர்தம் கலாச்சாரத் தொன்மையை மீட்டெடுக்கும் காரியத்தைச் செய்தார். 1886 இல் பெருமளவில் நிதி திரட்டி சிலோனின் முதல் பெளத்தக் கல்லூரியான அனந்தா கல்லூரியை நிறுவினார். சிங்களம் பேசுவதைத் தவிர்த்து சக சிங்களரிடம் கூட ஆங்கிலத்தில் பேசுவதைப் பற்றிக் கவலைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிருந்து மீள்வதற்கு மக்களுக்கு மொழிப்பற்றை ஊட்டினார். "ஒவ்வொரு சிங்களனும், தமிழனும் இந்த நாட்டில் நடைபெறும் தேசிய உணர்வு அழிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். பாரம்பரியம் மிக்க தமது மொழியைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வரவேண்டும். தன் மொழியை உதாசீனம் செய்வதும், தனது பெருமிதம் மிக்க மொழியைப் பேச முன் வராதிருப்பதுமான சிங்களன் உண்மையான சிங்களனாக இருக்க முடியாது" என்று பேசினார்.



மேலும் 1904 ஆம் ஆண்டு அதே அனந்தா கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் சிங்களம் பேசுவதைக் கேவலமாகக் கருதிய மேட்டுக்குடி சிங்களர்களை நோக்கி, "சிங்களரின் உதடுகள் சிங்கள மொழியைப் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? தன் தாய் மொழியைப் பேச விரும்பாத மக்களைக் கொண்ட தேசத்தை தவறுகளிலிருந்து எழச் செய்து, சீர்திருத்தி, விழிப்புணர்வுள்ள பிரதேசத்திற்கு முன்னேற்றுவது எப்படி?" என்று வினவினார். இந்த உரை சிலோன் மக்களின் சுய நிர்ணயப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.



எனினும் ஆங்கில ஆட்சியின் போது சுயாட்சிக் கோரிக்கை முதலில் எழுந்தது தமிழர்கள் மத்தியில்தான். ஒட்டுமொத்த சிலோனின் விடுதலைக்காகப் பாடுபடும் நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் உருவானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஹேண்டி பேரின்பநாயகம் போன்றோர் மகாத்மா காந்தியடிகள், கமலாதேவி அம்மையார், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் பேச வைத்தனர்.



இப்படிப்பட்ட சூழலில் சிங்கள மக்களுக்கு இன உணர்வும், மொழிப்பற்றும் இருக்க வேண்டும் என்று அரும்பாடு பட்டு நாடு தழுவிய சுயாட்சிக் கோரிக்கையைத் தோற்றுவித்த ராமநாதனுக்கு சிங்களர்கள் தகுந்த பாடம் புகட்டினர். உண்மையான சிலோன் தேசியத் தலைமை என்ற நிலை மாறி சிலோன் தேசிய காங்கிரஸைக் கைப்பற்றிய சிங்களத் தலைமை என்றும், அதிலிருந்து வெளியேறிய தமிழர் தலைமை என்றும் இரு துருவங்களாகப் பிளந்து நின்ற அவலம் 1920 லியே அரங்கேறியது.

0 பின்னூட்டங்கள்: