பிறகான - நவீனத்துவமும் நவினத்தவத்தின் பிறகும் - பேரண்டபட்சிகளின் கதைகூறல்கள் : பகுதி - 3
-ஜமாலன்
தொகுப்பாக, அமைப்பியல்வாதம் ஒரு ஆய்வுமுறை. அது எல்லாவற்றையும் ஆய்வதற்கான அடிப்படைகளை பேசுகிறது. அது தத்துவமோ? மொழியியலொ? அல்லது அறிவியலோ அல்ல. பிறகான-நவீனத்துவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். செவ்வியல் காலம், நவீன காலம் போன்றவற்றை எந்த வகையில் சேர்ப்போமோ அந்த வகைதான் பிறகான-நவீனத்துவமும். நவீனத்துவம் என்றால் என்ன? என்பது புரிந்தால்தான் பிறகான-நவீனத்துவம் எங்கு இதனை உடைக்கிறது என்பது புரியும். அதைதான் மனிதமுதல்வாதம் குறித்த முந்தைய குறிப்புகள் விளக்குகிறது.
நவீனத்துவத்தின் சிந்தனையை 5 வகையாக பிரிக்கலாம்.
1. Humanism (மனிதேநேயவாதம்)
2. Individualism (தனிமனிதவாதம்)
3. Rationalism (பகுத்தறிவுவாதம்)
4. Secular Moralism (மதச்சார்பற்ற அறத்தத்துவம்)
5. Progressive History or progress. (வரலாற்றின் முன்னொக்கிய வளர்ச்சி)
இந்த 5-ற்குள் எல்லாவித கோட்பாடுகள் இஸங்கள் நடைமுறைகளை அடக்கி விடலாம். இந்த 5-யும் பிறகான-நவீனத்துவம் மறுத்து, இதன் மையமாக உள்ள மனிதமுதல்வாதத்தை சிதைக்கிறது. மனிதனின் மையமான ஆத்மா அல்லது self என்கிற ஒன்றை தன்னிலை என்பதாகவும் அதன் உருவாக்கம் அதன் மையமற்ற தன்மை என்பதாக விளக்கிச் செல்கிறது. பிறகான-நவீனத்துவம் பிறகான-அமைப்பியலின் பல்துறைச் சார்ந்த அறிதல்களைக் கொண்டது. அதனை விளக்கப் புகுவது என்பது ஒரு தனித் திட்டமாகும் (a seperate project).
பிறகான-நவீனத்துவம் மொத்தத்துவ (totality) சிந்தனைகளை மறுக்கிறது. ஒழுங்கமைப்புகளை மறுக்கிறது. உலகம் முழுவதற்குமான சிந்தனைகளை மொத்தத்துவத்தை கொண்ட எல்லாவற்றையும் பெருங்கதையாடல் என்றும், அதற்கு பதிலாக சிறுகதையாடல்களை அதாவது small practice, local events ஆகியவற்றைக் கொண்டதாக கட்டமைக்க வேண்டும் என்கிறது. இவை விவாதத்திற்கு உரியவை. இதனை நாவல் சிறுகதை என்கிற பெரிய சிறிய என்கிற அளவடிப் படையில் புரிந்துக் கொள்ளக்கூடாது.
உதாரணமாக, மனிதனின் மையமாக ஆத்மா என்பதை இதுவரையிலான தத்துவங்கள் சொல்லி வந்துள்ளன. தகர்ப்பமைப்பு இந்த சொல்லாடலின் முரணை முன் கொண்டு வருகிறது. அதாவது, ஆத்மா என்பது உடலை ஒடுக்கி உள்ளிருத்துகிறது. அல்லது ஆத்மா பற்றிய பேச்சு உடல்பற்றிய பேச்சை மறுத்தே உருவாகுகிறது. தனது தீவிர தர்க்கத்தால் இம்முரணை தலைகீழாக்கி ஆத்மா என்பதை உடல் பற்றிய பேச்சின் மூலம் தகர்க்கிறது. இப்படியாக, மனிதனின் மையமாக கருதிவந்த ஆத்மா சிதைக்கப்படுகிறது. இவ்வாறு மையம் அழக்கப்பட்ட மனித நிலையே பிறகான-நவீனத்துவ நிலையாக முன்வைக்கப்படுகிறது. முக்தி, மோச்சம், ஆன்மீக விடுதலை, சொர்க்கம், நரகம் என்பதை பிறகான-நவீனத்துவ வார்த்தையில் கூறினால் பெருங்கதையாடல் எனலாம். கணந்தோறும் வாழ்வதே பிறகான- நவீனத்துவம். இப்படி முக்தி என்று முற்றம் துறந்து (சொர்ணமாலிகா துவங்கி கோவில் பூட்டுவரை துறப்பதல்ல) இறதி நாளிற்காகவோ மற்றோரு உலகிற்காகவோ அல்லது மறுமைக்காவோ வாழ்வதல்ல.
மற்றொரு முக்கிய முரணியக்கமான எழுத்து மற்றும் பேச்சு என்கிற நிலைகளை எடுத்துக் கொள்வோம். எழுதப்படாத தத்துவங்கள் என்று எதுவும் இல்லை. எழுத்து என்பது பேச்சு என்கிற ஒலிமையவாதத்திலிருந்து விடுபட்டதுதான். உதாரணமாக ஒரு தத்தவஞானி பேசுவதை அல்லது பேசியதை பிறிதொருவர் எழுதி தொகுப்பதாகக் கொள்வோம். அப்படி தொகுக்கும்போது, அவர் பேசியதை அப்படியே தொகுக்க முடியாது. காரணம், பேசும் தன்னிலை வேறு, எழுதும் தன்னிலை வேறு. எழுதும் தன்னிலையானது அதன் வரலாற்றுச் சூழலில் அது புரிந்து கொண்டவிதமாகவே அதனை எழுதும். அல்லது அதை வாசிக்கும் தன்னிலை தனது வரலாற்றுச் சூழலில் தான் புரிந்துகொண்டவிதமாகவே அதனை அர்த்தப்படுத்தும். பேச்சு உடனடித்தன்மை வாய்ந்தது. எழுத்து வரலாற்றின் இயக்கத்தைக் கொண்டது. உதாரணமாக இராமயணம். விசாயரின் ராமாயணத்தை நாம் வாசிப்பதில்லை. தற்கால மொழிக்குள் உள்ள அர்த்தமாக்கம் அமைப்பில்தான் அதனை வாசிக்கிறோம். இராமயணப் பிரதியை நமக்கானதாக நாம் உருவாக்கிக் கொள்கிறோம்.
பிறகான-நவினத்துவம் குருவி-மண்டைகளின் அறிவுஜீவித்தனம் என்பதாக தமிழக இலக்கியச் சூழலில் பரப்பப்பட்டு வருகிறது. எந்த ஒரு தத்துவமும், சிந்தனைகளும், கொட்பாடுகளும் எல்லா மக்களுக்கும் புரியவேண்டும் என்பது ஒரு மாயையைதான். மக்கள் செயலூக்கமிக்கவர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், தத்துவம் அவர்களை சென்றடைய வேண்டும் என்றால், அது வகுப்புகள்மூலமோ அல்லது ஒரு கல்வித் திட்டத்தின் மூலமோ அல்லது ஒரு இயக்கத்தின் மூலமோ கோடிக்கான மக்களுக்கு புரியவைப்பதால் நடைபெறுவதி்ல்லை. பேச்சு வழக்கில் உருவாகும் பொதுபுத்தி வழியாகவே அல்லது மொழியின் வழியாகவே சென்றடைகிறது. "நிலையாமை" என்பது ஒரு மதவாதக் கருத்தாக்கம். அதனை மக்களுக்கு யாரும் விளக்கியதில்லை. ஆனால் பண்ணெடுங்கால மொழியின் வழியாக அது மக்களை வந்தடைந்துள்ளது. அவர்களது வாழ்தளத்தில் ஏற்படும் நெருக்கடிகள் வழியாகவும், வாழ்தலுக்கான போராட்டத்தின் வழியாகவும் அவற்றை புரிந்தேற்கிறார்கள். இதைதான் மார்க்ஸ் தத்துவம் மக்களை சென்றடைந்தால் பெளதீக சக்தியாக உருவெடுக்கிறது என்றார்.
எளிமையாக சொல்வதென்றால்.. இயல்பாக உள்ளதாக நம்பப்படும் எந்த ஒன்றும் இயல்பானது அல்ல என்பதுதான் அடிப்படை. உதாரணமாக பாலினம் (gendar) என்பது ஒரு மொழியியல் கட்டுமானம் என்பதை எனது பதிவு ஒன்றில் விளக்கியுள்ளேன். மொழி குறித்த வாசிப்பே இவற்றை முழுமையாக புரிந்துகொள்ள உதவும். மொழியில்லாமல் இந்த உலகை நாம் புரிந்துகொள்ள வேறு ஏதெனும் வழி இருக்கிறதா? என்பதை யோசித்தால் இதன் தர்க்கம் பிடிபடும். மொழிக்குள் வராத எந்த பொருளையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. பார்க்காத ஒன்றை எப்படி கற்பனை செய்ய முடியாதோ? அப்படித்தான். மொழியில் இல்லாத ஒன்றைப்பற்றி நம்மால் சிந்திக்கவோ பேசவோ முடியாது. உலகின் இருப்பிற்கு மொழி அவசியம். இந்த மொழியை புரிந்துகொள்ள இலக்கணம் அவசியம். இலக்கணம் மொழி குறித்த ஒரு ஒழுங்கமைவு. ஆகவே இந்த உலகமும் ஒரு ஒழுங்கமைப்பாக நமக்கு தெரிகிறது. இலக்கணம் தெரியாத பாமர மனிதனும் வாக்கிய அமைப்பை இலக்கண முறைப்படி பேசாவிட்டால், அவனை மனப்பிறழ்ச்சியாளனாகவே இச்சமூகம் கருதும்.
இறுதியாக, தற்சமயம் பிறகான-நவினத்துவமும், பின்-நவீனத்தவமும் செத்து விட்டதாக அறிவிப்புகளும் நூட்களும் வருகின்றன. உருவான சிந்தனை எதுவும் சாவதி்ல்லை. தவிரவும், இவை சாவதில் நமக்கு ஒன்றும் பெரிய இழப்பொ பாலூற்றி 16 கொண்டாடும் நிலையோ இல்லை. ஆனால், இப்படி கூறுபவர்கள் எதனை நிரூபிக்க முயலுகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதற்கான அரசியல்தான் பிரச்சனைக்குரியது. பின் அமைப்பியலை (பிறகான-நவீனத்தவ கோட்பாடு என்கிற அர்தத்தில்) தாண்டிச் செல்லக்கூடிய தெல்லஸ்-கொத்தாரி என்கிற இரு பிரஞ்சு சிந்தனையாளர்களின் கொட்பாடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மொழியின் அடிப்படையான உருவக அமைப்புகளையே மாற்றி, அடுத்த தளத்திற்கு எடுத்த செல்கிறார்கள். ஆக, நமது சூழலில் நாம் இன்னும் இந்த விவாத தளத்தைவிட்டு நகரவில்லை. காரணம், பழக்கப்படுத்தப்பட்ட தளத்தை தாண்ட முடியாத ஒரு மனநிலையும், நாம் நம்பும் கருத்தியலுமே. அதனால்தான் இந்த அறிமுகக் குறிப்புகள் எனது முந்தைய விவாதக் குறிப்பகளில் இருந்து தொகுக்ககப்படுகிறது. இவை புரிந்தால்தான் அடுத்த கட்ட சிந்தனைகளும் புரியும் என்பதால்.
"வித்தியாசம் அதிகமில்லை
நான் கவிதை எழுதுகிறேன்.
என்மகன் -
தீப்பெட்டி சேகரிக்கறான்."
- விகரமாதித்யன்.
தனது முயற்சியல் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மண்டை வெடிக்கும் மரணபயத்துடன் தனது தோளில் வேதாளத்தை தூக்கித் திரிந்தபடி அது சொல்லும் கதையைக் கேட்கத் துவங்கினான். தனது கழுத்திற்கு நேராக நீட்டப்பட்ட வாளுடன் தனது சாவைத் தள்ளிப்போட 1001-அரேபியக் கதைகளை சொல்லத் துவங்கினாள் ஷகர்சாதி. இப்படியாக எத்தனையோ கதையாடல்கள் சாவிற்கு எதிரான சாட்சிகளாக இவ்வுலகு பற்றி விவரித்தன... அவற்றில் ஒரு கதையாடலே பிறகான-நவீனத்துவம் அல்லது பொதுவாக குழப்பத்துடன் அழைக்கப்படும் பின்நவீனத்துவம் என்பதாக....
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 4
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment