பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 4

1927 இல் சிலோனின் அரசியலமைப்பை ஆராயவும், புதிய அரசியல் நிர்ணய சபைக்கான பரிந்துரையை வழங்கவும் ஒரு சிறப்புக் கமிஷனை இங்கிலாந்து அனுப்பியது. மக்களிடம் இன ஒற்றுமை இல்லாமலிருப்பதை அந்த கமிஷன் கண்டறிந்தது. இனத் துவேஷம் சரியான மருந்தின் மூலம் குணமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த அக்கமிஷன் அந்தப் பிரச்சினைக்கான ஆணி வேரைக் கண்டறியாமல் ஆண்களுக்கு 21 வயதுக்கு மேலும், பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் வாக்குரிமை என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றது.



மலையக மக்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார். 1920-1930 வாக்கில் மலையகத் தமிழர்களை 'இந்திய வம்சாவழித் தமிழர்கள்' என்று சிங்களத் தலைவர்கள் அழைக்கத் துவங்கினர். அதாவது சிலோன் தீவிற்கும், மலையக மக்களுக்கும் தொடர்பில்லை என்பதே அவர்களது பிரச்சார உத்தியாகும். சேனநாயாகவின் அரசியல் எதிர்காலம் இந்தப் பிரச்சினையை மூலதனமாக்கி சிங்கள தேசிய உணர்வைத் தோற்றுவிப்பதைச் சார்ந்திருந்தது. அதாவது, ஆங்கிலேயரிடம் யார் போராடி விடுதலை பெறுகிறார்கள் என்பதை விடு சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிங்கள-புத்த உணர்வுகளின் காவலனாகக் காட்சியளிப்பது அவர்களுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசியப் பண்பானது. ஏனென்றால் இந்தியா விடுதலை அடையும் போது இலங்கைக்கும் கிடைத்து விடும், அதனால் சிங்கள மக்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பதை நோக்கமாகக் கொண்டே அவர்கள் செயல்பட்டனர்.



1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இலங்கை மக்கள் தொகையில் 15.4 சதவீதத்தினர் மலையகத் தமிழர்களாக இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஈழத் தமிழர்களைக் காட்டிலும் கூடுதல். சிங்களர்களுக்கு அடுத்த படியாக மிகப் பெரிய சிறுபான்மை இனமாக அவர்கள் இருந்தனர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டியவர்கள் இவர்களுக்காக எதையும் செய்யவில்லை. கல்வி மறுக்கப்பட்டது. மாறாக ஏராளமான மதுக் கடைகளும், கோவில்களும் திறக்கப்பட்டன. மலையகத்தினுள் வெளியார் செல்லத் தடையாக இருந்த அத்துமீறம் சட்டம் 1957 வரை அமுலில் இருதது. இப்படியான பின்னணியில் மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்க சிங்களத் தலைவரகள் முயன்றதில் வியப்பில்லை.



மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிங்களர்களின் கோரிக்கைக்கு இணங்காத பிரிட்டிஷார் பிராந்தியப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தில் சோடை போனார்கள். சிங்களப் பிராந்தியங்களுக்கு அதிகமான தொகுதிகள் என்று ஒதுக்கி, 2:1 என்றிருந்த சிங்கள/தமிழ் பிரதிநிதித்துவத்தை 5:1 என்ற நிலைக்கு மாற்றும் துரோகத்தில் துணை நின்றனர். இதைக் கண்டு மனம் கலங்கி நொந்த சர் பொன்னம்பலம் ராமநாதன், "ஆபத்தான காலம் நம்மை எதிர்நோக்கியுள்ளது. Donougmore கமிஷன் தேசத்தை உருக்குலைக்கும் காரியத்தைச் செய்திருக்கிறது. தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு பேரழிவைச் சந்திப்பதற்கு முன்னர் கிளர்ந்தெழும் கூட்டம் ஒன்றை என் கண்ணுக்கு முன்னால் காண்கிறேன்" என்று வேதனையோடு தன் இறுதி உரையை நிகழ்த்தினார்.



கடைசியாக 1930 நவம்பர் 30 அன்று மரணமடைந்தார். ஒருங்கிணைந்த சிலோன் தீவு முழுமைக்கும், அதன் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அவர்களது நலனுக்கும் தன் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றையும் அர்ப்பணித்து உழைத்த சிலோனின் முதலும், கடைசியுமான தேசியத் தலைவரான பொன்னம்பலம் ராமநாதனின் மரணம் ஆங்கில ஆட்சிக் கால சிலோன் வரலாற்றில் ஒரு மாபெரும் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.



பொன்னம்பலம் ராமநாதனின் மரணத்தின் போது தமிழர் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை வெகு விரைவில் ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற சொக்க வைக்கும் பேச்சாளர் நிரப்பினார். ஏறத்தாழ அதே கால கட்டத்தில் 1931 வாக்கில் சிங்களர் மத்தியில் S W R D பண்டாரநாயகா என்ற பேச்சாளரும் உருவெடுத்தார். அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 1933 ஆம் ஆண்டு ஜெர்மெனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். ஹிட்லரின் தாக்கம் சிங்களத் தலைவர்களிடம் பெருமளவில் ஒட்டிக்கொண்டதை 1931 இல் வேளாண்மை மற்றும் நிலத் துறை (காணி) அமைச்சராகப் பொறுப்பேற்ற D.S.சேனநாயகா தன்னுடைய திட்டங்கள் மூலம் நிரூபித்தார். இந்த ஹிட்லரின் தாக்கம் அடுத்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் என்பது 1981 இல் யாழ்ப்பாண நூலகம் இரண்டு சிங்கள அமைச்சர்களின் மேற்பார்வையில் எரிந்து சாம்பலான நிகழ்வு எடுத்துக்காட்டியது.



டான் ஸ்டீபன் சேனநாயகா அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா? மிக எளிமையானது அவர் கணக்கு. ஆதாவது தமிழர் பாரம்பரிய நிலப் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை சிங்களர்களுக்கு வழங்கி அங்கே அவர்களைக் குடியமர்த்த வேண்டும். இவ்வாறு தமிழர் வாழும் பகுதிகளை காலப் போக்கில் சிங்களர்களைப் பரவச் செய்து, மூன்றில் இரண்டு பகுதி சிங்களர் வசம் என்றும் ஒரு பகுதி தமிழர் வசமென்றும் உள்ள நிலப்பரப்பை மாற்றி நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு சிங்களர் என்ற நிலைக்குக் கொணர்ந்து தமிழர்களுக்கென்று பெரும்பான்மையாக உள்ள பாரம்பரிய இடத்தை துடைத்தெடுப்பது. இப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தமிழர் பெரும்பான்மையினராக இருக்க மாட்டார்கள். காலப் போக்கில் அவர்களுக்கென்று மக்கள் மன்றத்தில் பிரதிநிதித்துவம் அறவே அற்றுப் போகும்.



அதற்காக அவர் தொடங்கிய திட்டம்தான் படிப்பளை ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதற்கு கால் ஓயா (Gal-Oya) என்று சிங்களத்தில் பெயர் சூட்டி அந்தப் பகுதியில் பெரும்பாலான சிங்களர்களைக் குடியமர்த்தும் நூதனத் திட்டம். சிங்களர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அணை கட்டாமல் தமிழர் பிராந்தியத்தில் அபிவிருத்தித் திட்டத்தை அவர் தொடங்கியதற்கான அரசியல் காரணத்தைப் புரிந்துகொள்ள ராக்கெட் விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்க வல்லுனர்களைக் கொண்டு கட்டிய இந்த அணைக்கு சேனநாயகா சமுத்திரம் என்ற பெயர் சூட்டப்ப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் வசித்த ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிங்களர் வந்தமர்வதற்கு வசதியாக அடித்து விரட்டப்பட்டனர்.



சிங்களரின் இந்தக் குடியமர்வுத் திட்டம் பல வடிவங்களில் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் அணைக்கட்டு, புதிய பாசனப் பகுதி உருவாக்கம் என்ற போர்வையில் நடந்த ஊடுருவல் காலப் போக்கில் அப்பட்டமாக நடந்தேறியது. தமிழர் தலைவர்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அடுத்து வந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட பல உடன்படிக்கைகளில் (அவற்றை சிங்களத் தலைவர்கள் கிழித்துக் குப்பையில் போட்டது வேறு விஷயம்) சிங்களர்களாலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழர் பாரம்பரியப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் அவலம் இலங்கை சுதந்திரம் பெறும் முன்பே துவங்கியது.



யூதர் வாழ்ந்த பிரதேசங்களில் அவர்களைத் துரத்தி விட்டு அல்லது கொன்று விட்டு ஜெர்மானியர்களைக் குடியேற்றி தன் ஆளுமையை விரிவாக்க முயன்றதன் அடியொற்றி சிங்களத் தலைவர்கள் தமது கொள்கையை வகுத்தனர். ஹிட்லர் கிழக்கு நோக்கி ஆஸ்திரியா, ஹங்கேரி என தன் விரிவாக்கலை நடைமுறைப் படுத்தினார். சிங்களர்களும் தங்கள் விரிவாக்கலைக் கிழக்கு நோக்கியே துரிதப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய நிலப் பரப்பா¡க இருந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கிழக்குப் பிராந்தியமே. அதன் மக்கள் தொகை விகிதாச்சாரம் தலை கீழாக மாறியது. கிழக்குப் பிராந்தியத்தை மூன்றாகப் பிரித்து சிங்களர்களுக்கு ஒன்று, தமிழர்களுக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு ஒன்று என 1986 ஆம் ஆண்டு சார்க் மாநாட்டின் போது ஜெயவர்த்தனே பேசுமளவுக்கு அரசு ஆதரவுடனான சிங்களக் குடியமர்வு தமிழர் நடந்தேறியது. நம் நாட்டில் ஆந்திராவின் புறம்போக்கு நிலங்கள் தமிழகத்து மக்களுக்கு வழங்கப்பட்டு அங்கே நாம் குடியேறி, ஒரு கால கட்டத்தில் ஆந்திராவின் மூன்றில் ஒரு பகுதி தமிழ் நாட்டுக்குச் சொந்தம் என்று சொன்னால் உதைக்க மாட்டார்களா?



சாலமன் பண்டாரநாயகா என்ற S W R D பண்டாரநாயகா சிங்கள மகா சபை என்ற சிங்களர்களுக்கான அரசியல் இயக்கத்தை 1936 இல் தோற்றுவித்தார். அதன் தொடக்க நிகழ்ச்சியிலேயே தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்று நிரூபித்தார். வளர்ந்து வரும் இளைய தலைமுறைச் சிங்களத் தலைவர்கள் பலர் சபையில் துவக்க விழாவில் கலந்துகொள்ள வாந்திருந்தனர். அவர்களுள் D.S.சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகாவும் ஒருவர். அவரகள் அனைவரும் கூடியிருந்த போது சங்கள மகா சபை என்று பெயர் வைக்கக்கூடாது. சுதேசிய மகா சபை என்று பெயர் வைக்க வேண்டுமென்று பண்டாரநாயகா வாதிட 'சிங்கள' என்ற வார்த்தை இல்லாததை எதிர்த்து டட்லி சேனநாயகா உள்ளிட்ட பலரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். இப்படியாக, அவர் வெளியேறிய பிறகு அந்த அமைப்பின் பெயரை சிங்கள மகா சபை என்றே வைத்துக்கொண்டார் சாலமன்.



சிங்கள மகா சபையை ஆரம்பித்த போது சாலமன் பண்டாரநாயகா மாகாண கவுன்சிலராகவும், அமைச்சராகவும், சிலோன் தேசிய காங்கிரசின் முக்கியப் பிரமுகராகவும் விளங்கினார் என்பது கவனிக்கத் தக்கது.



தமிழ் பேசும் உறுப்பினர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் 1939 இல் 15,000 இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடு கடத்தும் தீர்மானம் சிங்களர்களால் ஆட்சி மன்றத்தில் நிறைவேறியது. அதே வருடம் 8,000 இந்திய ரயில்வே ஊழியர்களை போக்குவரத்து அமைச்சகம் வீட்டுக்கு அனுப்பியது. அரசுப் பணியில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை D.S.சேனநாயகா நிறைவேற்றினார். சிங்களத் தலைவர்களின் தமிழ் வெறுப்பும், இந்திய வெறுப்பும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வெளிப்பட்டது.



மலையகத் தமிழர்களையும், இந்தியர்களையும் நாடு கடத்தும் சிங்களரின் நடவடிக்கை இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி பதவி வகித்தார். இந்திய காங்கிரசின் சார்பாக இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக பண்டித ஜவஹர்லால் நேரு பம்பாயிலிருந்து கிளம்பி சிலோன் ரத்னமாலா விமான நிலையத்தில் வந்திறங்கினார். சிங்கள அமைச்சரவையைச் சந்தித்தார். மலையகத் தமிழர் பிரச்சினையில் அவர்களத் இறுக்கமான நிலைப்பாடு நேருவைக் கவலைப்படுத்தியது. "(மலையகத்) தொழிலாளர்களைப் பொறுத்த வரை சிங்களர்கள் மற்றும் அவர்களது தலைவர்கள் குறுகிய கண்ணோட்டம் படைத்தவர்களாக உள்ளனர்" என்று ஒரு ஊர்வலத்தில் பகிரங்கமாகவே அவர் அறிவித்தார்.



ஜூன் 17, 1939 இல் கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் கனத்த இதயத்துடன் பேசிய நேரு, "நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு இந்தியனின் ஒற்றை ரோமத்தைக் கூட மற்றவர் தொடுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது" என்றார். சிலோனிலிருந்து இந்தியா திரும்பிய நேரு அங்கே இந்திய வம்சாவழித் தொழிலாலர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு இனி மேல் சிலோனுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்திய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டது.



அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்குப் போராடும் அரசியல் இயக்கம் தேவையென உணர்ந்த நேரு அதற்கான வேலையை முடுக்கி விட்டார். பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் ஆசான் சத்தியமூர்த்தி மற்றும் பிற்காலத்தில் இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்த வி.வி.கிரியும் 1939, செப்டம்பர் 7 அன்று மலையகத் தமிழர்களுக்காக 'சிலோன் இந்திய காங்கிரஸ்' என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



மலையகத்தின் நிலவரம் இவ்வாறு இருக்க பொன்னம்பலம் ராமநாதனின் மறைவால் பூர்வீகத் தமிழர்களின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிய ஜி.ஜி.பொன்னம்பலம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 1944 ஆகஸ்ட் மாதம் சிலோன் தமிழர் காங்கிரஸைத் தோற்றுவித்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார். இதற்கிடையில் காலனியாதிக்க நாடுகளுக்கு சுதந்திரம் அளிப்பதை பிரிட்டிஷ் அரசு பரிசீலித்து வந்தது. அப்படி ஒரு சூழல் எழும்போது அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில், சிலோன் தமிழர் காங்கிரஸ் உருவாகி ஒரு மாத காலத்திற்குள் சோல்பெரி பிரபு தலைமையில் ஒரு கமிஷன் சிலோனில் வந்திறங்கியது.

0 பின்னூட்டங்கள்: