பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 5

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 1
- சுரேஷ் கண்ணன்

வண்ணநிலவன் - உள்ளும் புறமும்


வண்ணநிலவனைப் பற்றின அறிமுகம் தேவையில்லை என்றாலும் அறியாதவர்களுக்காக:

தமிழில் நிறைய சிறுகதைகளும், சில நாவல்களும், சில கவிதைத் தொகுதிகளும் எழுதியிருக்கிறார். கடல்புரத்தில் என்கிற இவரது சிறந்து நாவல் தொலைக்காட்சியில் படமாக்கி ஒளிபரப்பப்பட்டது. 'அவள் அப்படித்தான்' என்கிற திரைப்படத்தின் வசனகர்த்தா. (இந்தப் படத்தைப் பற்றிய என் பார்வையை பிறகு எழுதுகிறேன்) துர்வாசர் என்கிற பெயரில் இவர் துக்ளக்கில் எழுதிய பல கட்டுரைகள் ஆக்ரோஷமானவை. திருநெல்வேலி மண்ணின் மணம் இவரது படைப்புகளில் இயல்பாக கமழ்வதை நுகர இயலும்.

இவர் படைத்ததில் எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று

உள்ளும் புறமும்

O

ஓரு குடும்பத்தலைவி தன் கணவனை சரமாரியாக திட்டுகிற மங்கலகரமான ஓசையுடன் (?!) இந்தக் கதை ஆரம்பிக்கிறது.

'என்ன, நான் சொல்லுறது காதுல விழுந்திச்சா என்ன? .... ஒங்களுக்குப் பொழுது விடிஞ்சா பேப்பருக்குள்ள தலையைப் பூத்துக்கிடதுக்குத்தான் நேரம் சரியா இருக்குது. ... ரெண்டு நாளா பிள்ளை கண்ணு முழிக்க முடியாமக் கெடக்குது......
.... நான் என்னத்தக் கத்தி என்ன பண்ண? ஒங்க காதுல விழவா போகுது? பொழுதன்னிக்கும் பேப்பரு! பேப்பரு! அந்த மாயப் பேப்பருல என்னதான் இருக்கோ?..

என்று அந்த மனைவியின் ஆற்றாமையுடன் கூடிய வசவு ஒரு பெரிய பத்தி அளவிற்கு நீள்கிறது. ஆனால் இதுவே இந்த சிறுகதைக்கு ஒரு சுவாரசியமான ஆரம்பத்தைக் கொடுப்பதை பார்க்கலாம். யார் அவள், எதற்காக தன் கணவனை திட்டுகிறாள் என்கிற ஆர்வத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.

ஆனால் அந்த உரையாடலை தொடர்ந்து கவனிக்கும் போது நமக்குள் அந்த கணவரைப் பற்றிய ஒரு பிம்பம் மனதிற்குள் உருவாகிறது. இந்த மாதிரிப் பிரகஸ்பதிகளை பல வீடுகளில் பார்க்க முடியும். வெங்காயம் என்று சொல்லி முடிப்பதற்குள், உப்புமாக்கு அரியணுமா? குழம்புக்கா? என்று அருவாள்மனையுடன் ரெடியாகும் கணவன்மார்களுக்கு மாறாக, வீட்டில் பிரளயமே நடந்தாலும், ஜப்பானில் நடந்த பூகம்பத்தைப் பற்றி பேப்பருக்குள் தலையை நுழைத்துக் கொண்டு படிப்பவர்கள் இவர்கள். ஜார்ஜ் புஷ்ஷின் பெட்ரோல் ஆசையை கண்டித்து பக்கத்து வீட்டுக்காரருடன் காரசாரமாக பேசும் இவர்களுக்கு வீட்டில் மண்¦ண்ணைய் தீர்ந்து போய் இரண்டு நாட்களாகியிருக்கும் விஷயம் தெரியாது.

அதையும் கதாசிரியரே தன் கதையின் ஊடாக சொல்கிறார்.

......யோசித்துப் பார்த்தால் நீலா கோபப்படுவதிலும் தவறு இல்லையென்றுதான் அவனுக்குத் தோன்றியது. அவன் பொறுப்பில்லாமல்தான் இருக்கிறான். வீட்டில் என்ன நடக்கிறது என்றே அவனுக்குத் தெரியாது. கடைக்குப் போய் ஒரு சாமான் வாங்கி அறிய மாட்டான். சம்பளத்தை அவள் கையில் கொடுப்பதோடு சரி. அவனுக்கு முன்னாள் பிரதமரின் தவறுகளைப் பற்றித் தெரியும். இந்நாள் பிரதமரின் அரசியல் பலமின்மையைப் பற்றித் தெரியும். சத்யஜித்ரேயின் படங்களை ரசிக்கத் தெரியும். எவ்வளவு காலமானாலும் கு.பா.ரா.வின் 'அகலிகையை' மறக்க முடியாதிருக்க முடிகிறது. ஆனால் வீட்டைத்தான் கவனிக்க முடியாமல் போய்விட்டது. குடும்பப் பொறுப்பு தெரியாமல் போய்விட்டது. தான் ஏன் இப்படியானோம் என்று அவனுக்கே புரியவில்லை. சமயங்களில், தான் ரொம்பச் சுயநலமானவனோ என்று தோன்றும். ......

கதையின் போக்கிலேயே அவன் ஒரு பத்திரிகையாளன் என்று வாசகனுக்கு தெரிவிக்கப்படுகிறது. சாயந்திரம் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்வான் என்று எதிர்பார்க்கிற அவளுக்கு, வீட்டுக்காரரின் தொலைபேசி மூலம், ஒரு ரிப்போர்டிங்குக்காக அவன் வெளியூருக்கு போக வேண்டிய செய்தி சொல்லப்படுகிறது.

எப்பவும் நடப்பதுதான் என்று அவளுக்குப் புரிந்தாலும், தன் எதிர்ப்பை தெரிவிக்க அவனுடன் பேசாதிருக்க முயல்கிறாள். சமையலுக்கு நடுவில் அழுகிற குழந்தையை அவன் சமாதானப் படுத்தவரும் போது கூட அந்த உதவியை உதாசீனப்படுத்துகிறாள்.

ஊடல் இல்லாவிட்டால் என்ன அது கணவன், மனைவி உறவு? அந்த நிலையிலும் அவளை ரசித்துப் பார்க்கிறான்.

..... குழந்தையைத் தூக்கி கொண்டு அவள் நின்ற விதம் ரொம்பப்பிடித்திருந்தது. அவளுடைய பின்புற பிடரி மயிர்ச் சுருள் ஜன்னல் பக்கமிருந்து வீசிய காற்றில் சுருண்டு பார்க்க அழகாக இருந்தது. அவள் நின்றிருந்த விதம் ஏதோ ஒரு ஓவியம் போலிருந்தது. ....

O

பத்திரிகை வேலை அவனுக்குப் பிடிக்கவில்லை. தானே சரியில்லாத போது வேறு எவனையோ விமர்சனம் செய்ய என்ன உரிமை இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறான். என்றாலும் போயாகணுமே? அலுவலகத்திற்கு நேரமாக, குளிக்க கிளம்புகிறான். லோயர் மிடில்கிளாஸ் வீடுகளின் குளியலறைகளும், அவர்களும் மனோபாவங்களும் தனிதான்.

.... பாத்ரூம் கதவைச சாத்திக் கொண்டு போட நேரமாகியது. அந்தக் கொண்டி தகரக் கதவோடு சேர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கும். பல மாதங்களாக இப்படித்தான் இருக்கிறது. பாத்ரூமில் குளிக்கிற எல்லோருமே இந்தக் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். அந்த நட்டை முறுக்கினால் போதும். அது அசையாமல் நின்றுவிடும். தானே அதைச் செய்ய வேண்டுமென்று பல நாள் நினைத்திருக்கிறான். ஆனால், செய்ததில்லை. அவனிடம் ஒருவிதமான கூச்சம் உண்டு. அவன் அந்த நட்டை முறுக்குவதை அகெளவரமாக நினைக்கவில்லை. அவன் அதைச் செய்யும் போது யாரும் பார்க்கக்கூடாது என்று நினைத்தான். குறிப்பாகப் பெண்கள் பார்த்துவிடக்கூடாது. ஞாயிற்றுக் கிழமை சாயந்தரம் எல்லோரும் டி.வி. பார்க்கிற நேரத்தில் அந்தக் கொண்டியைக் கதவோடு சேர்த்து முறுக்கி விடலாம் என்று அதற்கு ஒரு மார்க்கங்கூட கண்டுபிடித்து வைத்திருந்தான். ஆனால் காரணம் சொல்ல முடியாமலே அந்தக் காரியம் நழுவிக் கொண்டிருந்தது.......

குளித்து முடித்து தன் போர்ஷனுக்குள் நுழைபவனுக்கு, டிபன் பரிமாறப்பட்டு தயாராக வைத்திருப்பதை காண முடிகிறது. குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கிறது. மனைவியை கூப்பிட்டுப் பார்த்தவன் அவள் இல்லாததை உணரவே, எப்பவாவது வரும் அந்தப் பயம் வருகிறது. கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு போய்விட்டாளா என்று அசட்டுத்தனமாக யோசிக்கிறான். பிறகுதான் கீழ்வீட்டுக்காரர் மூலம் தெரியவருகிறது, இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிளகாய்பொடிக்கு எண்ணைய் இல்லாததால் அவசரமாக வாங்கிவரப் போயிருக்கிறாள் என்று.

கதை இவ்வாறு முடிகிறது.

... உள்ளே வந்து சாப்பிடுவதற்காகப் பெஞ்சில் உட்கார்ந்தான். அப்போதுதான் தட்டின் ஒரு ஒரத்தில் எண்ணெய் விடுவதற்குத் தயாராக, நீலா மிளகாய்ப் பொடியைக் குழித்து வைத்திருப்பதைப் பார்த்தான். எதிரே எண்ணெய் பாட்டிலுடன் நீலா அவசர அவசரமாக வந்து கொண்டிருந்தாள்.

O

முணுக்கென்றால் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் மேலை நாடுகளைப் போலலல்லாமல் இந்தியக் குடும்பங்கள் காலங்காலமாக வெற்றிகரமாக விளங்குவதற்கு இந்தமாதிரியான சகிப்புத்தன்மை உடைய பெண்களின் மனோபாவமே காரணம். ஆண்கள் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு வெளியில் உலாவருவது, பெண்கள் தலையைக் குனிந்து கொண்டு செல்வதால்தான் சாத்தியமாகிறது. ஆனால் இதைச் சொல்லியே பல காலம் அவர்களை அடிமைப்படுத்தி வைத்துவிட்டோம் என்கிற குற்ற உணர்வையும் தவிர்க்க இயலவில்லை.

இந்தக் கதையின் ஆதாரமே அந்த கணவன், மனைவியின் அடிப்படை காதல்தான். எந்த சச்சரவுகள் இருந்தாலும் இந்த இழை அறுந்து போகாமலிருக்கும் வரை குடும்ப அமைப்பின் அஸ்திவாரம் மிக பலமாகவே இருக்கும். ஆனால் நாம் அந்த அன்பை வெளிப்படையாக தெரிவிக்கிறோமா என்றால் இல்லை. அன்போ, பாசமோ, ஆண்களின் அழுகையோ மனதிற்குள்ளேயே பூட்டிக் கொண்டு வைத்திருப்பதே நம் மரபாக இருக்கிறது. பெற்றோருக்கு பயந்து கொண்டு, மனைவியின் முகத்தை சரியாக பார்க்காமலேயே எட்டுப்பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் பலர் அக்காலத்தில் இருந்துள்ளனர்.

மனைவியின் மீது அன்பை வெளிப்படுத்தினால், அவள் தனக்கு பணிந்து நடக்கமாட்டாள் என்றுகூட சில பிற்போக்குவாதிகள் யோசிக்கிறார்கள்.

மேற்கூறியவற்றின் ஆதார கருத்தை எந்த சேதமுமில்லாமல் இந்தக் கதை வெளிப்படுத்துவதினாலேயே இது எனக்கு பிடித்த கதைகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: