பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 7

காகமும் ஊர்க்குருவியும் - மனுசங்கடா? நாங்க மனுசங்கடா?
- ஜமாலன்
மதுரை உத்தப்புரத்தில் தலித்துகளையும் உயர் சாதியையும் பிரிக்க உயர் சாதி கட்டிய சுவர் முதல் சமீபத்தில் நடந்த சென்னை அம்பேத்கர் சட்டக்க்லலூரி மேதால்கள் வரை தீ்டாமை என்கிற மனிதவிரோத செயல் சாதிய ஆதிக்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருவதையே காணமுடிகிறது. தீண்டாமை நிலவுடமை செறிந்துள்ள தஞ்சையில் மட்டுமல்ல மதுரை நெல்லை என்று தமிழகம் ஏன் இந்தியாவெங்கும் ஒரு சமூகத் தீங்காக உள்ளது. தலித்துகள் முகத்தில் விழிப்பதுக்கூட பாவம் என்று மனுவாதத்தையும் தாண்டிய கொடுமை இது. மீண்டும் மீண்டும் தலித் மக்களை மனிதர்களாக மதிக்காத உயர்சாதி திமிரும், அவர்களுக்கு கர்மப்பலன் கூறி சொர்க்கத்திற்கு இடம் போட்டு வைக்கும் மனுவாதத்தின் அடிப்படையும் அதனை கட்டிக்காக்கும் இந்துத்துவா வியாதிகளும், இந்த சாதிய புனித உடலை காப்பதில் தீவிரமாய் உள்ள பார்ப்பனிய கருத்தியலும் இந்திய சமூக அடிப்படையாக கட்டமைக்கப் பட்டுள்ளதை தெளிவுபடுத்துவதாக உள்ளன.

1950-ல் இந்திய அரசு தீண்டாமை என்பதை சட்டவிரோதமாக அறிவித்தது. 58 ஆண்டுகள் ஆகியும் நிலமை தனது மனச்சுவற்றின் ஒரு புறவடிவக் குறியீடாக சுவரெழுப்பி வெளிப்படுத்துவதும், தான் படிக்கும் கல்லூரியின் பெயரை உச்சரிப்பதற்க கூட தயாரற்ற சாதியத் திமிரை வெளிப்படுத்தும் கோர வடிவத்தை எடுத்துள்ளது. பார்ப்பனிய மன்னராட்சிக் காலங்களில்கூட இத்தகைய நடைமுறைகள் இருந்ததாக வரலாற்றில் படித்ததில்லை. இன்று தீண்டாமை என்பது மறைமுகமாக பல வடிவங்களை எடுத்துள்ளது. ஒரு காலத்தில் "தீண்டத்தகாதவர்கள்" எச்சில் துப்பி நிலத்தை "தீட்டாக" ஆக்கிவிடக்கூடாது என கழுத்தில் கலயத்தை கட்டியும், பெண்கள் மேற்சட்டை அணிவதை தடைசெய்தும் பல வன்கொடுமைகளை நேரடியாக செய்துவந்த உயர்சாதியினர் இன்று 80-ற்கும் மேலான பல நடைமுறைகளை கையாளத் துவங்கியுள்ளனர். அவற்றின் உச்சகட்ட வடிவமே 500-மீட்டர் நீளமுள்ள இந்த தீண்டாமைப் பெருஞ்சுவர். சாதியத்தின் ஆணிவேராக விளங்கும் இந்த தீண்டாமை எனகிற வன்கொடுமையின் ஒரு அகங்கார வெளிப்பாடு இது.

ஆலன் டாண்டிஸ் என்கிற மானுடவியல் ஆய்வாளர் இத்தீண்டாமைக் குறித்து இந்திய நாட்டப் புறக்கதைகளின் அடிப்படையாகக் கொண்டு பிராய்டிய அடிப்படையில் ஆய்வு ஒன்றை செய்துள்ளார் தனது "Two Tales of Crow and Sparrow:A Freudian Folkloristic Essay on Caste and untouchability" என்கிற நூலில். அதில் "சாதியும், தீண்டாமையின் மூலம் மனித உடலினுள் உள்ளது" என்கிறார். தலையில் (வாயில்) பிறந்த பார்ப்பனர்கள் உயர்சாதி என்பது வாய் என்கிற உயிர்ப்புடன் சேர்ந்த புனிதக் குறியீடாகவும், காலில் பிறந்தவர்கள் தூய்மையற்ற நிலத்துடன் இணைவதால் சாவு மற்றும் குதம் மற்றும் மலத்துடன் இணைந்த தூய்மையற்றதாகவும் குறியிடப்பட்டுள்ள ஒரு மனப்படிவு ஆகும் என்கிறார். அவர் காகம் மற்றும் ஊர்க்குருவி பற்றிய காஷ்மிர் முதல் கன்யாக்குமரி வரை நிலவி வரும் இரண்டு நாட்டார் வாய்மொழிக் கதைகளை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மானுடவியல் மற்றும் நாட்டுப்புறக்கதை ஆய்வியல் அடிப்படையில் செய்து வாசித்துக் காட்டியுள்ளார். இங்கு இதனை சுட்ட நேர்ந்தது வாய்மொழி மற்றும் குதவழி பண்புகள் (anal and oral traits) என்பது பிராய்டியம் முன்வைக்கும் மிகமுக்கிய குழந்தமை உளவியல் கருத்தாக்கங்கள் ஆகும். கால்வழியாக பிறந்தவர்களை தீண்டத்தகாதவர்களாகவும் முகம்வழியாகப் பிறந்தவர்களை உயர்ந்தவர்களாகவும் குறியிடும் மதவாதப் பிரதிகளை நாட்டார் கதையடிப்படையில் மீள்வாசிப்பது ஒரு முக்கிய கருதுகோளாகும். தீண்டாமை என்பது மலம் என்கிற "அசிங்கத்துடன்" அதாவது தூய்மையற்றதானதாகவும் அதனால் அது புணிதமற்றதாகவும் ஆழ்மனதில் கட்டமைக்கப்பட்டவையே இந்த நாட்டார்கதைகள்.

தலைப்பில் உள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்பது கவிஞர் இன்குலாப் அவர்களால் கீழ்வென்மணியில் 47 தலித்துகளை உயிருடன் கொழுத்திய நிலவுடமை பயங்கரத்தினை கண்டு கொதித்து எழுதப்பட்ட பாடலின் தலைப்பு. அப்பாடல் 80-களில் தமிழக நக்சல்பாரி மற்றும் மார்க்சிய-லெனினிய இயக்கங்களின் மந்திரப்பாடலாக இருந்தது. அப்பாடலை பாடி பல இரவுகள் எங்கள் மாணவர் சங்க கலைக்குழு பல கிராமப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளது. அப்பொழுது நேரடி அனுபவங்களாக கிடைத்த தீண்டாமைக் கொடுமைகள் எண்ணற்றவை.

ஒரத்தநாடு பகுதிகளில் 85-ல் எனது மாணவப் பருவத்தில் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் எங்களது மாணவர் சங்கம் சார்பாக 10 முதல் 15 நாட்களுக்கு village campaign என்கிற கிராம பிரச்சாரத்திற்கு போவோம். அந்த வருடம் ஒரத்தநாட்டு தோழர்களின் ஏற்பாடால்.. நாங்கள் பாப்பாநாடு, கண்ணந்தங்குடி துவங்கி மேலையூர் கீழையூர் ஆம்லாப்பட்டு (எனது நினைவு சரியாக இருந்தால்.. களப்பால் குப்புவின் சமாதி உள்ள அக்கிராமத்தில் அவரது சமாதி முன்பு வீரவணக்கப் பாடல்கள் பாடியுள்ளோம்.) என சுற்றி பிரச்சாரம் செய்திருக்கிறோம். பெரும்பாலும் தங்குவது தலித் தோழர்கள் வீட்டில் அல்லது பொது இடமான கோவில் சமூகக் கூடங்களில். சாப்பாடு கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நபராக அழைத்துச் சென்ற உங்கள் வீட்டில் உள்ளதை சாப்பிடத் தாருங்கள் என பார்க்க வந்தவர்களிடம் அறிவித்து விடுவோம். அவர்களும் நாங்கள் 10 முதல் 15 பேர்கள் என்பதால் ஒவ்வொருவராக அழைத்துச் சென்று விடுவார்கள். இரவு விளக்கு கம்பங்களில் அல்லது அரிக்கேன் விளக்கின் ஒளியில் அரசியல் வகுப்புகள், பட்டி மன்றம் நடத்துவோம்.

ஒருமுறை ஒரு கிராமத்திற்கு பிரச்சாரம் செய்யப்போகும்போது (எங்கள் தோழர்களில் பெரும்பாலும் தலித்துகள் என்றாலும் தலித்தல்லாதோரும் இருந்தனார்.)அங்கிருந்த இடைநிலைச்சாதியினர் ஊருக்குள் எங்களை விடாமல் வாயிலிலேயே வழிமறித்து விட்டனர். எங்களை அழைத்த தோழர் அவர் அந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அனுமதிக்கவில்லை. காரணம் தலித்தகளிடம் தங்கி அவர்களுக்கு ஆதரவாக கூலிப்பிரச்சனையில் நாங்கள் பிரச்சாரம் செய்ததே. அன்று அங்கு பல பகுதிகளில் இரட்டைக் குவளைமுறை இருந்ததை தோழர்கள் அழைத்துப் போய் காட்டியுள்ளார்கள். ஒவ்வொருநாள் மாலையிலும் ஒரு கிராமம் விட்டு மற்றறொரு கிராமத்திற்கு பயணம். நடந்துதான். பாப்பாநாட்டிலிருந்து கண்ணந்தங்குடிக்கும். கண்ணந்தங்கடியிலிருந்து மேலையூர் இப்படி. பல கிராம பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால், சாதியம் என்பது கீழைத் தஞ்சை பகுதியில் அதிலும் கள்ளர்கள் மற்றம் தலித் முரண்கள் நிறைந்தே காணப்படுவதை அனுபபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக எங்களை சாப்பிட அழைத்தச் செல்பவர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான். சாதி தெரியாத எங்களை அழைத்துச் செல்ல அந்த இடைநிலை சாதியினருக்கு மனம் ஒப்பவில்லை போலும்.

தீண்டாமை ஒரு பாவச்செயல் என்றார் காந்தி. அதனை புனிதமான செயலாக பாவிக்கின்றன இன்றைய சாதிகள். தெல்லஸ்-கொத்தாரி கூறும் "becoming minor' (சிறுபான்மையாக இருத்தல்) என்பதைப்போல "becoming untouchable" (தீண்டத்தகாதவராக இருத்தல்) என்பதை விடுதலைக்கான வாழ்நிலையாக மாற்றி, உயர் சாதியினரை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி அவர்களின் இருத்தலையும் மாற்ற வேண்டும் போலிருக்கிறது. லெனின் கூறியதுபோல " அரசியல் என்பது இரத்தம் சிந்தும் யுத்தம்"-தான் போலிருக்கிறது. எவன் ஒருவன் தன்னைத் "தீண்டத்தகாதவனாக" உணர்கிறானோ அவனே இன்றைய சாதிகளை எதிர்த்து போரிடமுடியும் என்று தோன்றுகிறது. அதனால்தான் காந்தி தன்னை ஒரு சூத்திரனாக அறிவித்துக் கொண்டார் போலிருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: