பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 5

பாலினமாதல், சொர்க்கம், நிறம், கனவு, விளையாட்டு
- ஈரானிய திரைப் படங்களை முன்வைத்து
- ஜமாலன் (20-03-2008)


ஈரானியக் கலைப்படங்களில் (இப்படி பிரிப்பதில் உடன்பாடில்லை என்றாலும்) சில்ரன்ஸ் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைஸ், ஆப்பிள், பாரன் மற்றும் அம்மாவின் விருந்தினன் ஆகிய இப்படங்களில் ஒரு பொதுத்தன்மை உண்டு. அவற்றில் முக்கிய பாத்திரங்கள் சிறுவர்கள் அல்லது சிறுமியர்கள். ஈரானியப் படங்கள் அழுத்தமாக வாழ்வை அதன் அவலத்தைச் சொல்லக் கூடியவை. ஈரானிய கலாச்சாரத் தனித் தன்மைகளையும் உலகு பற்றிய மனிதார்த்த சிந்தனைகளையும் உள்ளடக்கியவை. இப்படங்கள் குறித்த பரவலாக்கத்திற்கும் ஏற்படத்தப்படும் விழிப்புணர்விற்கும் உலக அரசியல் போக்குகளுடன் உள்ள உறவு பிறிதொரு ஆய்விற்கு உரியது.

குறிப்பாக பாரன் சவுதி அரேபியாவில் உள்ள ஆப்கானிகளின் அனுபவத்துடன் ஒப்பிடவைத்த ஒன்று. ஆப்கானிய ஆண்கள் அகதியாக கார் கழுவுதல் துவங்கி செருப்பு தைப்பது வரையும், பெண்கள் சாலைகளில் பிளாஸ்டிக் பூ விற்பது, சிறுவர்கள் சூயிங்-கம் விற்பது என பார்க்கவே மனம் சங்கடப்படும் காட்சிகள் அவை. சில ஆப்கானியர்கள் கார்பெட் கடைகள் மற்றும் உணவுச்சாலைகள் வைத்து நடத்திய போதிலும் பரவலாக அவர்களது நிலை என்பது பாரனில் வரும் அடையாள அட்டை இல்லாமல் பணிபுரியும் "நித்தியக் கண்டம் நீண்ட ஆயுசு" சிக்கலுடன் உறவு கொண்டதே. அமேரிக்க ரஷியப் பனிப்போரின் கோர முகத்தை அவர்களது கண்களில் வழியும் சோகம் சொல்லிக் கொண்டே இருக்கும். போதைப் பொருளாதாரத்தாலும், போர் பதற்றங்களாலும் அரைப் பைத்தியநிலைக்கு ஆளான ஆப்கானியர்கள் ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியலின் கொடூரத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பாரன் படம் போர் பற்றி நேரடியாக சொல்லாவிட்டாலும் போரின் வன்முறையை நமக்கு அற்புதமாக உணர்த்தி விடுகிறது. அதாவது போர் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகள் அதாவது எல்லைகடந்து வாழும் அகதிகளின் பிரச்சனை என்பது இதன் பின்புலம்.

பாரன் போரின் விளைவுடன் பாலினமாதல் என்கிற அரசியல் பிரச்சனையையும் முன்வைக்கும் ஒருபடம். அதேபோல் ஆப்கானியப் படமான "ஒஸாமா"-வும். இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை குடும்பத்தை காக்க ஆப்கானிய சிறுமிகள் ஆண்வேடமிட்டு வேலைக்கு செல்வது. ஏகாதிபத்திய வேட்டைக் காடுகளாக்கப்பட்ட காபுல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பற்றிய கதைகள். போர் நிகழும் காலங்களைவிட முடிந்தபிறகான காலங்களில் ஏற்படுத்தம் பாதிப்புகள்தான் அதிகம். பாரனில் ஆப்கான் எல்லையைத் தாண்டி ஈரானில் பணிபுரியும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் ஆப்கானிய சிறுமி, ஒஸாமாவில் அதே போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிற்குள்ளேயே பணிபுரியும் ஆப்கானிய சிறுமி. இரண்டுமே இஸ்லாமிய நாட்டில் அதன் சமூகப் பின்னணியில் நடைபெறுகிறது.

இவை இரண்டிற்கும் இத்தாலிய இயக்குநர் பியார் பாவ்லோ பசோலினியின் "1001 அரேபிய இரவுகளி"-ல் வரும் ஒரு கிளைக்கதையான "நூருல்தீன் ஜமாரூத் கதை"-க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அக்கதையில் ஜமாரூத் ஒரு அழகான அறிவுள்ள அடிமை. "அரேபிய இரவுகளி"-ல் வரும் ஆண்களைவிட பெண்கள் அறிவாற்றலும் சாமர்த்தியமும் மிகுந்தவர்கள். பெண்ணரசியல் பேசும் கதைகள் அவை என்று கூறலாம். நூருல்தீன் என்கிற வேலையற்ற இளைஞன் மீதான கவர்ச்சிக் காரணமாக ஜமாரூத் தனது சம்பாத்தியத்தில் சேர்த்த பணத்தை தந்து தன்னையே ஏலத்தில் எடுக்கச் சொல்வாள். அந்த அடிமையின் அறிவாற்றலால் அவள் எஜமானன் அவள் விரும்பும் நபருக்கே தன்னை விற்றுக்கொள்ளும் உரிமையைக் கொடுத்திருப்பான். அவ்வூரின் வயதான செல்வந்தனிடம் ஏலத்தில் போக விரும்பாமல் நூருல்தீன் வழியாக தன்னை அவள் விடுதலை செய்துகொள்வாள். அந்த செல்வந்தனுக்கு நீலநிறக் கண்கொண்ட ஒரு "கிறித்துவ" வேலையாள் (கதையில் இப்படித்தான் குறிக்கப்படுகிறது) இருப்பான். அவன் அவளை கடத்திச் சென்றுவிட, அவள் தப்பிச்செல்ல... ஆண்வேடமணிந்து அவள் ஒரு நகரை நோக்கிச் செல்ல, நகர்வாயிலில் காத்திருக்கும் அந்நகர் மக்கள் அவளை முடிசூட்டி அரசனாக ஆக்கிவிடுவார்கள். காரணம் அந்த நகரின் மன்னன் இறந்துவிட அந்நாட்டு வழக்கப்படி யார் வெளியிலிருந்து நகருக்கு முதலில் வருகிறார்களோ அவர்களே அந்த நாட்டின் இளவரசியையும் மணந்து அரசனாக வேண்டு்ம். ஆண் வேடமணிந்த ஜமாரூத் அரசனாகி இளவரசியை மணப்பாள். பெண்ணை ஆண் வேடமிட்ட பெண் மணந்து கொள்வது என்பதாக கதைபோகும்.

இதனை பாலியல் புனைவு நுட்பத்துடன் அருமையான ஒரு செவ்வியல் படமாக எடுத்திருக்கிறார். இத்தாலிய இயக்கநர் பியார் பாவ்லோ பசோலினி உடலரசியல் பற்றிய பல நுட்பமான கருத்தாக்கங்களைக் கொண்ட படங்களை எடுத்துள்ளவர். ஆக, இந்தக் கதையும் பாலினமாதல் அரசியலுடன் உறவுகொண்ட ஒருகதை. இந்த 3 கதைகளிலும் பெண் ஆண் உடையில் வந்து ஆணாக வாழ்கிறார்கள் தனது இருத்தலுக்காக. இது எல்லாம் இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள்தான் நடைபெறுகிறது என்பது முக்கியம். பாத்திமா மெர்னசி என்கிற மொராக்கோவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணியலாளர் கூறும் கருத்துடன் இதனை ஒப்பு நோக்கலாம். இஸ்லாமிய அல்லத அரேபியக் கலாச்சாரத்தி்ல் பெண் குறித்த ஒரு பேரச்சம் உள்ளது என்கிறார் இவ்வாய்வாளர். இதன் ஒருவிளைவே பெண்ணை ஒடுக்கும் பல நுட்பங்கள் இம்மதங்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

The Color of Paradise 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது. சினமாவிற்கும் நாவலுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் அக உலகை முன்வைப்பதில் உள்ள பிரச்சனைதான். நாவல் அக உலகை குரல்கள் அல்லது விவரணைகள் வழியாக சொல்லிவிடக்கூடிய சாத்தியங்களைக் கொண்டது. சினிமாவில் அப்படி எதுவும் செய்ய வாய்ப்பில்லை. பழைய பாலசந்தர் படங்களில் வரும் சூத்ரதாரி போனறு துருத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை பயன்படுத்துவது யதார்த்த சினிமாவிற்கு பொருந்தாது. இயக்குநர் தனது காட்சி அமைப்புகள் வழியேதான் இதனை உணர்த்த முடியும். அவற்றின் குறிப்புபொருள் தொல்காப்பியத் தமிழில் "இறைச்சி" அல்லது பானினியத்தின் 'த்வனிப்'பொருள் முக்கியமானது. இதழியலில் ஒரு பாலபாடம் உண்டு. யானை நடந்தால் செய்தி இல்லை, விழுந்தால்தான் செய்தி என்பது. வாழ்க்கையை அப்படியே காட்டுவது கலையாகிவிடாது. வாழ்க்கையின் நுட்பமான கட்டமைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவதும் அதனை கட்டுடைப்பதுமே தற்போதைய கலையின் முக்கிய பணியாக உள்ளது. அவ்வாறு சொர்க்கம் என்கிற மதங்கள் முன்வைக்கும் பெரும்புனைவை கட்டுடைக்க முயலும் ஒரு படமே கலர் ஆஃப் பேரடைஸ்.

இப்படம் முன்வைக்கும் ஒரு முக்கிய கேள்வி மதங்கள் குறிப்பாக இஸ்லாம் முன்வைக்கும் சொர்க்கம் என்பது குறித்த வர்ணனைகளில் உள்ள சிக்கலை கேள்விக்கு உட்படுத்துகிறது. இப்பூமியில் கண் தெரியாத ஒருவனுக்கு வண்ணமயமான சொர்க்கத்தின் வர்ணத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும், கண் தெரியாத ஒருவருக்கு நிறம் என்பது குறித்து என்ன உணர்வு அல்லது படிமம் இருக்கும். அதாவது கண் தெரியாத ஒருவன் தனது கனவை விளக்குவதாகக் கொள்வோம் அதில் நிறம் பற்றிய என்ன உணர்வை அவன் வெளிப்படுத்துவான். கனவுக்கு நிறம் உண்டா?என்கிற வாதம் ஒன்று உள்ளது. இதனை அடிப்படை படிமமாகக் கொண்டு ல.ச.ரா. என்கிற எழுத்தாளார் பச்சைக்கனவு என்கிற கதையை எழுதியுள்ளார். பள்ளிப்பருவத்தில் படித்தது கதை நினைவில் இல்லை. கதையின் கரு கனவின் நிறம் என்ன? கருப்பு வெள்ளையா? வண்ணமா? உங்கள் கனவின் நிறம் என்ன?

இப்படத்தில் நான் புரிந்து கொண்டது இதுதான். சொர்க்கத்தில் மதுவும் கூரிய கண்களுடைய (ஈருல்-ஹைன்) பெண்களும், எண்ணற்ற பெண்களை அனுபவிப்பதற்கான கட்டற்ற ஆற்றலும் உண்டு என்பதாக சொர்க்கம் பற்றிய ஒரு மிகப்பெரிய புனைவு இஸ்லாத்தில் உள்ளது. (பெண்ணுக்கு எண்ணற்ற ஆண்கள் சொர்க்கத்தில் உண்டா? என்கிற இஸ்லாமிய பெண்ணியலாளரின் பாத்திமா மொ்னஸியின் கேள்வி ஒன்றும் உள்ளது.) பரவலாக இந்த "உன்னதம்" பற்றிய புனைவு எல்லா மத சொர்க்கங்களிலும் உண்டு. இங்கு உள்ள பிரச்சனை இங்கு அதனை அனுபவிக்காதவனுக்கு சொர்க்கத்தில் அது கிடைப்பதன் மூலம் அதனை எப்படி அனுபவமாக உணரமுடியும் என்பதுதான். இதனை நிறத்தின் மூலம் விளக்க முயல்கிறது இப்படம்.

ஒரு கண்பார்வையற்றவனுக்கு வண்ணமயமான சொர்க்கம் என்ன அர்த்தத்தை அல்லது அழகை தரமுடியும். இதில் நிறம் என்பது ஒரு குறியீடு. அது அடைய முடியாததின் குறியீடு. இச்சமூகத்தில் வறுமை என்பது நிறம் உணர முடியாதவாறு ஒரு மக்கள் கூட்டத்தை பிறதொரு மக்கள் கூட்டம் வைத்திருக்கும் ஒரு குருட்டு நிலைதான். ஒருவன் கண்பார்வையற்றவனாக இருப்பதற்கு கடவுளை காரணம் காட்டலாம். ஆனால் ஏழையாக இருப்பதற்கு இந்த சமூக அமைப்பே காரணம். இந்த இரண்டும் பயனிக்கும் ஒரு தளம்தான் காட்சிகளாக விரிகிறது படத்தில் முகமதும் அவனது தந்தையுமாக.

கடவுளுக்கு பிரியமான நெருக்கமான கண்பார்வையற்றவனைக்கூட இந்த லெளகீக உலகில் வைத்துக் கொள்ள அவனது தந்தைக்கு பொருளாதாரம் தேவைப்படுகிறது. ஒருவன் இறைவனால் பார்வை பறிக்கப்பட்டவன் மற்றவனோ புதிய கடவுளான பணமில்லாததால் குருடாக்கப்பட்டவன். இருவருக்குமே சொர்க்கம் என்பது நிறமற்றதுதான். இவ்வுலகில் குருடாக இருத்தல் என்பது மதங்களின் அறங்களைப் பின்பற்றிச் செல்வதுதான். இந்த அறங்களை பின்பற்றியவன் சுவர்க்கத்தில் தரப்படும் கட்டற்ற திறந்த உலகில் எதை அனுபிவிக்க முடியும் என்பதுதான் இப்படம் எழுப்பும் கேள்வி. இப்படத்தில் அருவியல் தவறி விழுந்துவிடும் மகனை காப்பாற்ற முடியாமை என்பது ஒருவகையில் கடவுளுக்கு தரப்படும் பலிச்சடங்குதான். அம்மகனின் இறப்பை நிகழ்த்துவது அவனது உள்மன வேட்கையே.

சுவர்க்கம் பற்றி மற்றொரு கேள்வியுடன் வந்த இவரது முந்தைய படமான "சில்ரன்ஸ் ஆப் ஹெவன்" படத்தில் உலகமயமாதல், நுகர்வு வெறி மற்றும் வெற்றி்க்கொள்ளும் வேட்கை என்கிற நுட்பமான அரசியல் விமர்சனங்கள் உண்டு. வெற்றி என்பது என்ன? மனிதகுலத்தின் வெற்றி குறித்து வெறியை, வேட்கையை நுட்பமாக விமர்சிக்கும் அப்படம் தனது தளத்தை உலகமயமாக்கல் வரை விரித்து சொல்லக்கூடிய அரசிலைக் கொண்டிருக்கிறது. போட்டி என்றால் என்ன? போட்டி எப்படி பார்வையாளனை சார்பு நிலை எடுத்து ஆட்ட விதிகளுக்குள் இழுத்து விடுகிறது என்கிற பலவற்றைப் பேசிய படம். விளையாட்டின் விதி வெற்றிக்கான உந்துதலே தவிர வெற்றியடைந்தே தீர்வேன் என்கிற வெறி அல்ல. காரணம் வெற்றி என்பது ஏற்படுத்தும் மகிழ்வு என்பது மதிப்பு மிக்கதாக கட்டமைக்கப்பட்ட சமூக விதியால் வருவதே.

இப்படத்தில் தனது தங்கை ஷீ-வை தொலைத்துவிட்ட ஒரு அண்ணன் அவளுக்கு ஷீ வாங்கித் தருவதற்காக ஒரு ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வான். அப்போட்டியல் அவன் கலந்துகொள்ள காரணமே அதில் இரண்டாவது பரிசாக உள்ள ஷீ தான். கடுமையான பயிற்சிக்குப் பிறகு அப்போட்டியல் ஓடும்போது மிகவும் சுயகட்டுப்பாட்டுன் முதலாவதாக வரக்கூடாது என்பதற்காகவும் இரண்டாவதாக வருவதற்காகவும் தனது ஒட்டத்தை கட்டுப்படுத்தி ஓடுவான். அவன் ஒவ்வொருமுறை பின் தங்கும்போதும் அவனது தங்கையின் முகம் நினைவில் வர ஓடுவான். இறுதியில் அவன் பின் தங்கிவிடும் நிலையில் அவனது பள்ளியைச் செர்ந்தவர்களின் ஆர்ப்பாட்டம் அவனையும் தொற்றிக்கொண்டு தன்னையறியாமல் முதலில் ஓடிவந்து மயங்கிவிடுவான். மயக்கமடைந்த அவன் விழித்தவுடன் முதலில் கேட்பது தான் இரண்டாவதுதானே என்பதுதான். அவன் முதலாவதாக வந்ததற்கு பாராட்டுகள் நடக்கும். அவனைத் தூக்கி கொண்டாடுவார்கள். அவன் முதலாதாக வந்ததையே வெறுத்து அந்த வெற்றி அவனுக்கு அர்த்தமற்றதாகி தங்கையிடம் மன்னிப்பு கேட்பான். அவளும் ஷீ இல்லாமல் வெற்றிக்கோப்பையுடன் வந்த அவனை முகச்சுழிப்புடன் பார்த்துவிட்டு அகலுவால். கால்களின் கொப்பளங்களின் வலி ஷீ கிடைக்காத வேதனை குணிந்த தலையுடன் அவனை உட்கார வைத்தவிட்டதுடன் முடியும்படம், திரையைவிட்டு நமது அக உலகிற்குள் ஓடத்துவங்கிவிடுகிறது. இறுதிக் காட்சியில் அவர்களது தந்தை குழந்தைகளுக்கு ஷீ வாங்கி வருவது என்பார்வையில் அதிகப்படியான ஒரு காட்சியே.

இதுதான் குழந்தைகளின் சுவர்க்கம். இந்த உலகில் கிடைக்காத சொர்க்கம் வேறு உலகில் கிடைப்பதால் பயன் என்ன? இதில் அவனது வெற்றி மறுஉலகிற்கான குறியீட்டைக் கொண்டுவிடுகிறது. இங்கு வறுமை உனக்கு, கடவுளிடமோ சொர்க்கம் என்கிற விதிவாதம் இங்கு கேள்விக் குறியாகிறது. "ஏழைகளின் சிரிப்பில் இறைவன்" என்கிற ஏமாற்று வேலைதான் அவனுக்கு கிடைத்த வெற்றி என்பது. அவனுக்கு தேவை வெற்றியல்ல வாழ்க்கை. தனது தங்கையுடன் கூடிக்களிப்பதற்கான வாழ்க்கை. அதை அந்த போட்டி தரவில்லை. உலகம் மகிழ அவனுக்க கிடைத்தது வெற்றிவீரன் என்கிற பட்டம். அது சொர்க்கமல்ல அந்த குழந்தைகளுக்கு.

இதுதான் உண்மையான விளையாட்டு. இப்படம் இன்றைய அனைத்த வெற்றி, வெறி, ஏன் போர், தன்முனைப்பு அத்தனையும் கேள்விக்குட்படுத்தம் ஒரு படம். இங்கு வெற்றி என்பதை எப்படி அளவிடுவது? தனக்கு மகிழ்வை தராத வெற்றியின் பொருள் என்ன? இக்கேள்வியை நாம் இன்று நட்சத்திர விளையாட்டாக தொலைக்காட்சிகள் மற்றும் ஊடக உலகத்தால் மாற்றப்பட்டுள்ள கிரிக்கெட்டை முன்வைத்து கேட்பது அவசியமான ஒரு அரசியல் நடவடிக்கை ஆகும். 50 டாலர் தினப்படியில் கவாஸ்கர் காலத்தில் விளையாடப்பட்டுக் கொண்டிருந்த கிரிக்கெட், இன்றைய டெண்டல்கர் காலத்தில் மில்லியன் கணக்கில் வருமானம் உள்ள ஒன்றாக மாறியுள்ளதற்கு யார் காரணம்? கிரிகெட்டில் கிடைக்கும் வெற்றி என்பது எது? அது யாருக்கு சாதகாமானது? அதில் யார் பயனடைகிறார்கள்? அதுதரும் மகழ்வின் எச்சமாக நமது மன அமைப்பில் கட்டப்படும் அரசியல் எது? என்பதும் இதனுடன் தொடர்புடைய கேள்விகள்தான்.

0 பின்னூட்டங்கள்: