பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 4 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 4
- ஹரன் பிரசன்னா


அனுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு பொறாமையாகவும் இருந்தது. அவளுக்குத் தெரிந்து ரமணனை சிறிய பையனாகப் பார்த்திருக்கிறாள். இன்று அவன் ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று அறிந்தபோது அவளால் அதை நம்பவே முடியவில்லை. ஓர் ஆணாய்ப் பிறந்திருக்கவேண்டியதின் அவசியத்தை மீண்டும் உணர்ந்தாள்.

ரமணனிடம் எதைப் பார்த்து மயங்கி ஒருத்தி ஓடினாள் என்று தெரியவில்லை. ரமணன் படித்துக்கொண்டிருக்கிறான். ஓடிப்போனால் மறுவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்திரவாதமில்லை. ரமணன் மிகப்பெரிய அழகனுமில்லை. ஆறடி உயரத்தில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்னும் தோற்றத்தில் இருப்பான். அவன் முகத்திலேயே மூக்கு ஒன்றுதான் இருக்கும். இவனை நம்பி எப்படி ஒரு பெண் ஓடினாள்? ஆனால் ரமணனுக்கு இரண்டு கால்களும் இருக்கின்றன. ஓடிய பெண்ணுக்கும் நிச்சயம் இரண்டு கால்களும் இருந்திருக்கும்.

அன்று இரவு முழுவதும் ரமணனைத் தேடினார்கள். ரமணன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. ஓடிய பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்கள் ரமணனின் அப்பாவை மிரட்டிவிட்டுப் போனதாக விஜயலக்ஷ்மி சொன்னாள். அன்று இரவு ரமணன் எங்கே தங்கியிருப்பான்? எப்படியும் அன்றிரவு ரமணனும் அப்பெண்ணும் உறவு கொண்டிருப்பார்கள். இப்படி நினைத்தபோதே அனுவிற்கும் பொறாமையும் ஏக்கமும் ஒரு சேர எழுந்தன. தனக்குத் திருமணம் ஆகாதது குறித்து பெரும் வேதனைகள் அவளுக்கு இருந்தன. தன் திருமணத்தைப் பற்றி யாரும் சிந்திக்கிறார்களா என்பதுகூட அவளுக்குத் தெரியவில்லை. அம்மாவிடம் சொன்னால் அவள் தான் பார்த்த வரன்களைச் சொல்லி, 'எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கோம், ஒண்ணும் அமையலை' என்று சொல்லக்கூடும்.

அம்மாவிடம் திடீரென்று தன் கல்யாணம் பற்றிக் கேட்டாள். 'பார்த்துக்கிட்டுதான இருக்கிறோம். சனிக்கிழமை சனிக்கிழமை நவக்கிரகத்துக்கு பூஜை செய்யறேன். நிச்சயம் உனக்கு இந்த வருஷத்துல வரன் அமைஞ்சிடும்' என்றாள். அனுவிற்கு எரிச்சலும் கோபமும் மண்டிக்கொண்டு வந்தது. நிதானம் இழக்கத் தொடங்கினாள்.

அனு நிதானம் இழந்தால் எப்படிப் பேசுவாள் என்பதை விஜயலக்ஷ்மி அறிந்தவள்தான். இதேபோல முன்பொருமுறை தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது குறித்து என்னவெல்லாமோ பேசத் தொடங்கினாள் அனு. அவளுக்கு அறிவுரை சொல்ல வந்த அனுவின் ஒன்றுவிட்ட தங்கையை அனு கேட்டகேள்விகள் விஜயலக்ஷ்மியையே அதிர வைத்தன. 'உனக்கு என்ன வயசு? என்னவிட ரெண்டு வயசு சின்னவதானே? உனக்கு ரெண்டு குழந்தைங்க. உனக்கு தோணினப்பல்லாம் உன் புருஷனோட படுத்துக்கலாம்ல?' வந்த பெண் கேவலமாக உணர்ந்தாள். விஜயலக்ஷ்மியிடம் 'ரொம்ப கேவலமா பேசறா. கல்யாணத்துக்காக அலையறா. பார்த்துக்கோங்க' என்று சொல்லிவிட்டுப் போனாள். உள்ளேயிருந்து அனு கத்தினாள். 'எவ அலயறா. நீ அலஞ்ச கதை எனக்குத் தெரியாதாடி முண்ட. இனிமே எனக்கு அத சொல்றேன் இத சொல்றேன்னு இங்க வா, தட்டுவாணி பல்ல ஒடைக்கிறேன். உன் புருஷன் செத்தா தெரியும்டி உனக்கு அலயறதுன்னா என்னான்னு.' விஜயலக்ஷ்மிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அனு கத்திக்கொண்டிருக்க, விஜயலக்ஷ்மி வீட்டின் கதவை அடைத்துவிட்டு கோவிலுக்குப் போனாள்.

எதாவது சொல்லி, அனு மீண்டும் அதேபோல் கத்தத் தொடங்கினால் ஆஸ்பத்திரியில் எல்லார் முன்னும் மானம் போய்விடும் எனப் பயந்து, அனுவோடு பேச்சைத் தொடராமல் ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் போனாள். வெளியில் ரமணாவின் அப்பா வந்துகொண்டிருந்தார். அவர் நடையில் ஒரு வேகம் இருந்தது. விஜயலக்ஷ்மியிடம் 'சீனிவாசன் இல்லியா' என்றார். 'வெளிய போயிருக்கார்' என்றாள். 'வந்தா சொல்லுங்க ரமணன் கிடைச்சிட்டான். அந்த பொண்ணை அவங்க வீட்டுலயே விட்டாச்சு. நாலு நாள் சோத்துக்கு இல்லாம அலஞ்சி வேற வழியில்லாம அவனே வந்துட்டான்...' என்றார். விஜயலக்ஷ்மி தான் இதை தன் கணவனிடம் சொல்லிவிடுவதாகவும் குழந்தையைப் பார்த்துக்கோங்க என்றும் சொல்லி அனுப்பினாள்.

ஆஸ்பத்திரிக்குள்ளே வந்து அனுவிடம் பேச்சு கொடுத்தாள். ரமணா பற்றிச் சொன்னாள். அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது. '19 வயசுல என்ன கல்யாணம்' என்றாள். ஆனாலும் நான்கு நாள் இரவுகளில் ரமணனும் அப்பெண்ணும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டாள். அவளை ஏக்கமும் காமும் சூழ்ந்தன.

விஜயலக்ஷ்மி அனுவின் கட்டிலுக்குக் கீழே ஒரு பாயை விரித்து படுத்துக்கொண்டாள். அனுவை பலவிதமான எண்ணங்கள் ஓடின. தனக்கு கால் இல்லாமல் போனது குறித்து தன் வாழ்க்கையில் லட்சத்து ஓராவது முறையாக வருந்தினாள். தான் கொஞ்சம் சிவப்பாகவாவது இருந்திருந்தால் தன் உடலைக்காட்டி யாரையாவது மயக்கியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள். காலை மெல்ல வருடினாள். முழங்காலில் காய் காய்த்து சிறிய சிறிய தோல் உருண்டைகள் காய்த்துத் தொங்க, அவளுக்கே அருவருப்பாக இருந்தது. அதற்குக் கீழே கால் சூம்பித் தொங்கியது. இந்தக் கால்களுக்கு இடையில் படுத்துக்கொள்ள எவன் வருவான் என்று தோன்றியது அவளுக்கு. அவளது பெருமூச்சில் அவளது மார்பு ஒருமுறை விம்மி அடங்கியது. விஜயலக்ஷ்மி அழுவது போலத் தோன்றியது அனுவிற்கு. 'அம்மா' என்று அழைத்தாள். பதிலில்லை. மீண்டும் அனு அழைக்காமல் எதையோ யோசிக்கத் தொடங்கினாள்.

(தொடரும்)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 4

குற்றங்களின் ஊற்றுக்கண் இந்துமதம்!
- லக்கிலுக்


ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த தசரதனையும், ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலியையும் குற்றவாளி என்றுதானே சொல்லவேண்டும்? சிவனுக்கு ரெண்டு, முருகனுக்கு ரெண்டு என்று ஆரம்பித்து எல்லா கடவுளருக்கு ஆளுக்கேற்ற மாதிரி மனைவிகளின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கிறது.

வெண்ணை திருடிய குட்டி கிருஷ்ணனை சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டாமா?கோபியர்களின் சேலையை மறைத்து அவர்களை ஆடையில்லாமல் அலையவிட்ட கிருஷ்ணனை ஈவ்டீஸிங் கேஸில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டாமா? ஆற்றுக்குள் அதுபாட்டுக்கு போய்க்கொண்டிருந்த பாம்பை கொன்ற கிருஷ்ணன் மிருகவதை சட்டத்தின் படி குற்றவாளிதானே?

போர் செய்துகொண்டிருந்தபோது வாலியை மறைந்திருந்து பேடித்தனமாக கொலைசெய்த ராமனை தூக்கில் போட்டிருக்க வேண்டாமா? இராவணனிடமிருந்து மீண்டு வந்த சீதையை சிதையிறங்க சொன்ன ராமனை பெண்கள் சிறப்பு காவல்நிலையத்தில் புகார் செய்து முட்டிக்கு முட்டி தட்டியிருக்க வேண்டாமா?

உலகை சுற்றிவரும் போட்டியென்று அறிவித்துவிட்டு உலகை சுற்றிவந்த முருகனுக்கு பரிசு தராமல், சிவன் பார்வதியை சுற்றிவந்து குறுக்குவழியில் விநாயகன் பரிசினை தட்டிச் சென்றது ஊழலல்லவா? அந்த ஊழலுக்கு துணைபோன நீதிபதியல்லவா சிவன்?

அகலிகை மீது மோகம் கொண்டு அவரது கணவர் போல வேடம்புரிந்து அகலிகையை கற்பழித்த தேவேந்திரனை கற்பழிப்பு குற்றத்தில் உள்ளே தள்ளி காயடித்திருக்க வேண்டாம்? ரம்பை, மேனகை, ஊர்வசி என்று சூப்பர் பிகர்களை தன் அவையில் வைத்திருந்த இந்திரன் கன்னட பிரசாத்துக்கு ஒப்பானவனா இல்லையா?

திருவிளையாடல் என்று கூறி பலவேடங்கள் போட்டு பூமிக்கு வந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்த சிவனை மோசடி வழக்கில் கைது செய்திருக்க வேண்டாம்? பொருட்குற்றம் கண்டறிந்த நக்கீரனை கொலைசெய்த கொலைகாரனல்லவா சிவன்?

தவம் கிடந்த விசுவாமித்திரனை உறவுக்கு அழைத்த மேனகை மீது விபச்சார வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?

சொல்லிக்கொண்டே போகலாம்...

இவ்வாறாக இந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் குற்றங்களும், ஊழலும், விபச்சாரமும், கற்பழிப்பும், கொலையும், கொள்ளையும் நியாயப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இவற்றை வாசித்தும், கேட்டும் வளரும் சமூகத்தில் குற்றங்கள் மலிந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்? கடவுளர்களே செய்திருக்கிறார்கள், நாங்கள் செய்வதற்கு என்ன? என்ற மனோபாவம் தானே மக்கள் மத்தியில் இருக்கும்? புராணங்களிலும், இதிகாசங்களிலும் இவ்வாறெல்லாம் இருப்பதால் அவை பெரிய குற்றமல்ல என்று அம்மதம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இயல்பிலேயே ஊறிவிடுகிறது.

தர்மம், நெறி, நியாயம் இவற்றையெல்லாம் மனிதருக்கு ஒன்று, கடவுளருக்கு ஒன்று என்று சித்தரித்திருப்பதே இந்து மதத்தில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை. இம்மதத்தை பொந்து மதம் என்றழைப்பதே சாலப்பொருத்தம்.

பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 3 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 3
- ஹரன் பிரசன்னா


விஜயலக்ஷ்மிக்கு கதை கேட்பது போலிருந்தது. சீனிவாசனின் சின்ன தாத்தா தனது நடுங்கும் குரலில் சொன்னதையெல்லாம் கேட்கும்போது அதிக பயமும் கொஞ்சம் ஆர்வமும் இருந்தன. ஆனால் அவளால் அதைக் கேட்காமல் இருக்கவோ நம்பாமல் இருக்கவோ முடியவில்லை.

'நிறைமாச கர்ப்பிணி. தூக்கிக்கிட்டு ஓடினாங்க. மாட்டுவண்டிலதான் கொண்டு போனாங்களாம். மாட்டை அடி அடின்னு அடிச்சான் மாட்டுவண்டிக்காரன். மாடுங்க பயந்து வெறிபிடிச்சு ஓடிச்சுங்க. அவ உள்ள இருந்து வலி தாங்காம கத்துறா. முதல்நாள் நல்ல மழை வேற. அப்பல்லாம் கரண்ட்டு வேற கிடையாது. பிரசவம் பாக்க பக்கத்துக்கு ஊருக்குத் தூக்கிக்கிட்டு ஓடணும். போற வழியெல்லாம் தண்ணி, மேடு பள்ளம். கொண்டு போறதுக்குள்ள உயிர் போயிடும்னுதான் பயந்திருக்காங்க. பனிக்குடமும் உடைஞ்சிடுச்சு போல. கூட இருந்த அவ அம்மா வேண்டாத தெய்வம் பாக்கியில்ல. பக்கத்து கிராமத்துல மருத்துவச்சி வீட்டுக்கு கொண்டு போகும்போது அவளுக்கு நினைப்பே இல்லை. எப்படியோ குழந்தை பொறந்தது. அவ தன் குழந்தையைப் பார்க்காமயே மயங்கிட்டா. பெண் குழந்தை. அதைப் பார்த்தவங்க பயந்து போயிட்டாங்க. அப்படி ஒரு விகாரமான முகம். இதை எப்படி இவ வளர்க்கப்போறான்னு பயம். மெல்ல ஊருக்குள்ள சாமி குத்தம்தான் அப்படி பொறந்திருக்குன்னு பேச்சு பரவிப்போச்சு. பெத்தவனுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. ஆனா ஒரு மணி நேரத்துல அந்தக் குழந்தை செத்துப்போச்சு. அதை வீட்டுக்குப் பின்னாடியே பொதைச்சிட்டாங்களாம். அந்த இடத்துலேர்ந்து ஒரு கல்லை எடுத்து வெச்சி கும்பிட ஆரம்பிச்சாங்களாம். என்ன சாமி குத்தம் இருந்தாலும் மன்னிச்சுக்கோமான்னு சொல்லி அதையே கும்பிட ஆரம்பிச்சாங்களாம். அதுதான் கன்னி தெய்வம். இதெல்லாம் முன்னூறு நானூறு வருசத்துக் கதை. அது கல்லுதான். ஆனா நினைச்ச உருவத்துல வரும். சிவப்புப் பாவாடை காட்டிக்கிட்டு சின்ன பொண்ணா நானே பார்த்திருக்கேன்.' அவர் உடல் விக்கித்துப்போய் இருந்தது.

பின்னாலிருக்கும் புளியமரமும் கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக அங்கிருக்கிறது என்ற ஒரு கதையைக் கேட்டிருக்கிறாள். இரவுகளில் கருப்பசாமி அங்கே வந்துவிட்டுப் போகும் என்றும் ஒரு கதை உண்டு. சிலர் அதைப் பொய் என்று மறுத்தார்கள். 'எப்படி கன்னித் தெய்வம் இருக்கிறப்ப கருப்பசாமி வரும்' என்பது அவர்கள் கேள்வி. இரண்டு காவல்தெய்வங்கள் தங்கள் எல்லைகளை மீறுவதில்லை என்று நம்பினார்கள். இதுபோன்று பல கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் விஜயலக்ஷ்மி. இந்தக் கதைகளுக்குப் பின்னர் கன்னித் தெய்வத்தின் மீது அவளுக்கு ஒரு பயம் வந்தது. தன் மாமியார் விடாமல் கன்னித் தெய்வத்துக்கு செய்து வந்த பூஜையை அவளும் செய்யத் தொடங்கினாள்.

ஆஸ்பத்திரியில் விஜயலக்ஷ்மி அனுவின் அருகில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். டாக்டர்கள் அனுவின் இடுப்பெலும்பு பலமிழந்து போய்விட்டதாகச் சொன்னார்கள். அவள் கைகளை ஊன்றி நடப்பதால் உடலின் எடை முழுவதும் இடுப்பெலும்பில் இறங்கி, இடுப்பெலும்பு நொறுங்கிவிட்டது என்றார்கள். தலையில் அடி பட்டால் எப்படி இடுப்பெலும்பு தேயும் என்று விஜயலக்ஷ்மி ஒன்றும் புரியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அனு இரண்டு கைகளையும் குறுக்கக் கட்டிப் படுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சீனிவாசன் வெளியே யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பெயர் ராமச்சந்திர ராவ். விரை வீங்கிப்போய் ஆபரேஷனுக்காக முதல்நாள்தான் அட்மிட் ஆகியிருந்தார். எதிர் படுக்கையில் கொஞ்சிக்கொண்டிருந்த ஜோடிகள் டிஸ்ஜார்ஜ் ஆன அன்று சீனிவாசன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

வெளியில் ராவும் சீனிவாசனும் பேசிக்கொண்டிருந்தார்கள். ராவுக்குத் தெரியாத விஷயங்களே இருக்காதோ என்று அதிசயப்பட்டுப் போனார் சீனிவாசன். எதைச் சொன்னாலும் அதிலிருக்கும் நியாய, அநியாயங்களை ராவ் பிரித்தெடுத்து வைத்து, இரண்டுக்குமான காரணங்களை அடுக்கியபோது அவன் ஒரு மகான் என்று கூட நினைத்துக்கொண்டார். ஒரு மகானுக்கு ஏன் ஓதம் தள்ளவேண்டும் என்றும் நினைத்தார். ஆனால் உடனே அந்த நினைப்பைப் போக்கிகொண்டார். என்ன இருந்தாலும் அவரும் ஒரு மாத்வர்.

ராவ் ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கையுள்ளவர் என்பது அவர் பேசிய இரண்டொரு நிமிடங்களில் தெரிந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் ஒரு ஜோசியம் சொன்னார். காரணங்கள் சொன்னார். சீனிவாசனின் பிறந்த நாள் தேதியைக் கேட்டுவிட்டு, அந்த எண்ணைக் கூட்டி என்னவோ மனதில் நினைத்துக்கொண்டு, 'நீங்க பிறந்த தேதி சரியில்லை, வேற தேதியில பிறந்திருக்கணும்' என்றார். நியூமரலாஜியும் அவருக்குத் தெரியும். சீனிவாசனும் விஜயலக்ஷ்மியும் தாலி கட்டிக்கொண்ட நாள் சரியில்லை என்றும், அதற்கு பிராயசித்தமாக மறுதாலி கட்டவேண்டும் என்றும் சொன்னார் ராவ். தனது எழுபதாவது வயதில் மறுதாலி கட்டி என்ன ஆகப்போகிறது என்று யோசித்தார் சீனிவாசன். 'கொழந்தைங்களுக்கு நல்லது இல்லையா' என்றார் ராவ். ராவ் சொன்னதிலும் விஷயம் உண்டு என்று எண்ணிக்கொண்டார் சீனிவாசன்.

பேச்சு சீனிவாசனின் பெற்றோர்கள் பக்கம் திரும்பியது. சீனிவாசன் தன் கதைகளை எல்லாம், தன்மீது தவறில்லாதவாறு சொன்னார். அனுவின் நிலைமையையும் அதற்கான தன் வருத்தங்களையும் சொன்னார். சட்டென்று கேட்டார் ராவ். 'பித்ருக்கள் காரியமெல்லாம் செய்றீங்கள்ல?' சீனிவாசன் உதட்டைப் பிதுக்கினார். தனது தந்தைக்கும் பித்ருக்களுக்குக் காரியம் செய்யும் வழக்கமில்லை என்றார். உடனே பிடித்துக்கொண்டார் ராவ். எல்லாவற்றிற்கும் பித்ருக்கள் சாபமே காரணம் என்றார். ஏழு குழந்தைகள் பிறந்து இறந்ததும், எட்டாவது குழந்தை நன்றாகப் பிறந்தும் கால் சரியில்லாமல் போனதும் என எல்லாமே பித்ருக்கள் சாபம் என்றார். 'நாம நல்லது செஞ்சா அது எப்படி நம்ம சந்ததிக்கு வருதோ நம்ம பாவங்களும் அப்படியே அவங்களுக்குத்தான் வருது. வண்டி வண்டியா பாவம் செஞ்சு வெச்சிருக்கிறீங்க. உடனே காரியமெல்லாம் செய்ங்க' என்றார். சீனிவாசனின் தாய் தந்தை இறந்த திதிக்களைக் கண்டுபிடித்து, எந்த எந்த நாளில் திதி செய்யவேண்டும் என எழுதிக்கொடுத்தார். தனக்கு இந்த வயதில் இப்படி ஒரு நண்பரா என ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டுப் போனார் சீனிவாசன். இப்படி ஒருத்தன் தன் வயசுக்காலத்திலேயே இருந்திருந்தால் தனக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டார்.

ராவ் தனக்குத் தெரிந்த ஐயரையே ஏற்பாடு செய்துகொடுத்தார். அனுவைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி, விஜயலக்ஷ்மியையும் சீனிவாசனையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். வீட்டில் ஹோமங்கள் வளர்த்து, மந்திரங்கள் சொல்லி, பிண்டம் வைத்தார் சீனிவாசன். தனது அம்மாவையும் அப்பாவையும் மானசீகமாக வணங்கினார். அம்மாவிடம் பலவாறாக மன்னிப்புக் கேட்டார். கன்னித் தெய்வம் குளிர குளிர அன்றும் மழை பெய்தது.

(தொடரும்)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 3

சென்னை‍ பை நைட்!
- லக்கிலுக்


'பாரிஸ் பை நைட்' என்பார்கள். அந்த லெவலுக்கெல்லாம் சென்னை எப்போதும் இருந்ததில்லை, எதிர்காலத்தில் மாறலாம். பத்து, பதினைந்து ஆண்டுகளாக சென்னையின் இரவுகளை உன்னிப்பாக கவனித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. சென்னைவாசிகளுக்கு தூக்கம் முக்கியம். பத்து மணி ஆனாலே அலாரம் அடித்தது மாதிரி தூங்கப் போய்விடுகிறார்கள் அல்லது சன் டிவியில் பத்தரை மணிக்கு படம் பார்க்கத் தொடங்குகிறார்கள். கால் சென்டர்களிலும், பிபிஓக்களிலும், பத்திரிகைகளிலும், சினிமாக்களிலும், விளம்பரத்துறையிலும், அச்சுத்துறையிலும், இன்னும் சில துறைகளில் பணிபுரியும் கோட்டான்கள் தவிர்த்து மீதி அனைவருமே தூக்கப் பிரியர்கள். செக்யூரிட்டிகளும், காவலாளிகளும் கூட உட்கார்ந்த இடத்திலேயே இங்கு தூங்கிப் பழகியவர்கள்.

ஓவராக குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வழி தெரியாதவர்களும், வானமே கூரையாய் வாழ்பவர்களும் பிளாட்பாரங்களில் ஒதுங்கி வாழ்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலை பிளாட்பார தூங்குமூஞ்சிகளை நிறைய கண்டிருக்க முடியும். 'சென்னை ஈஸ் எ காஸ்மோபாலிட்டன் சிட்டி, நேஸ்ட்டி அக்லி சிடிசன்ஸ்' என்று முகஞ்சுளித்தவர்கள் புண்ணியத்தால் இப்போது அண்ணாசாலை பிளாட்பார்ம்கள் வெறிச்சோடிப் போயிருக்கிறது. கே.கே.நகர், வடபழனி பிளாட்ஃபார்ம்கள் பரபரப்பாகியிருக்கிறது.

தினமலரில் பணிபுரிந்த‌ காலத்தில் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் கால‌ அண்ணாசாலை பரபரப்புக்கும், இப்போதிருக்கும் அண்ணாசாலை பரபரப்புக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அப்போதும் சரி, இப்போதும் சரி ஸ்பென்சர்ஸ்க்கு எதிரில் இருக்கும் காவல்நிலையத்தை தாண்டுவது அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். அப்போதாவது பரவாயில்லை "ப்ரெஸ்சுங்க" என்று மிதப்பாக சொன்னால் சலாம் விட்டு அனுப்பி வைப்பார்கள். இப்போது "ப்ரெஸ்" என்று சொன்னாலும் டவுசரைக் கயட்டி செக் செய்து தான் அனுப்புகிறார்கள். பேருந்து நிலையம் கோயம்பேடுக்கு போய்விட்டதால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை, மைக்கேல் ஜாக்சனை உச்சபட்ச ஒலியில் அலறவிட்டுப் பறக்கும் நவீனரக கார்கள் வெற்றிகரமாக நிரப்புகின்றன. இரவுகளில் டூவீலர் மாதவன்கள் லேன் மாறி ஓட்டுவது உயிருக்கு ஆபத்து.

பிலால் இருந்தவரை நைட்டு ஒரு மணிக்கெல்லாம் கூட பிரியாணி சுடச்சுட கிடைக்கும். பிலால் இல்லாத குறையை அண்ணாசாலை மசூதிக்கு எதிரிலிருக்கும் ஒரு ஹோட்டல் சரிகட்டுகிறது. மதுரையில் அதிகாலை ஒரு மணிக்கு கூட இட்லி கிடைக்கும் என்பார்கள். சென்னையில் பொதுவாக பதினொன்று, பதினொன்றைக்கு மேல் உணவு கிடைப்பது சிரமம். பாண்டிபாஜார் டீலக்ஸை மட்டும் நம்பிப் போகலாம். தெருவோர பிரியாணி கடைகளும், கையேந்தி பவன்களும் கூட குடிகாரர்கள் தொல்லையாலும், போலிஸின் அதிகாரத்தாலும் பத்தரை மணிக்கே மூட்டை கட்டிவிடுகிறார்கள்.

கமிஷனர் சேகர் பதவி ஏற்றாலும் ஏற்றார், பலராம் நாயுடுவுக்கு வந்த சிக்கல்கள் மாதிரி சிக்கலோ சிக்கல். பிரஸ்மீட்களில் கம்பீரமாக முழங்கினாலும் சைக்கோ கொலைக்காரன் தண்ணி காட்டினான். போதாக்குறைக்கு பெங்களூர், ஆமதாபாத் குண்டுவெடிப்புகள் போலிசாருக்கும், சென்னைவாசிகளுக்கும் பீதியையும், பேதியையும் சமவிகிதத்தில் கொடுத்திருக்கிறது. பெண் போலிசாரை நைட் ரவுண்ட்ஸில் முன்பெல்லாம் காணமுடியாது. ஆள் பற்றாக்குறை போலிருக்கிறது. பெண் போலிசாரும் ஆங்காங்கே "வாயை ஊது!" என்று சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பையை நோண்டி டிபன்பாக்ஸை திறந்து பார்க்கிறார்கள். குண்டுகள் கடத்த டிபன்பாக்ஸ் தான் சவுகரியம் போலிருக்கிறது.

சில‌ நாட்கள் முன்பு நீண்டநாள் கழித்து சென்னையை இருசக்கர வாகனத்தில் ஒரு ரவுண்டு அடிக்க முடிந்தது. சைக்கோ பீதி, வெடிகுண்டு பயம் இதையெல்லாம் நேரில் காணும் ஆவல். பண்ணிரண்டரை மணிவாக்கில் தேவி தியேட்டருக்கு அருகிலிருந்து கிளம்பியவன் அண்ணாசாலை காவல்நிலையத்தை தவிர்க்க வேண்டி (வாயை ஊத சொல்லிட்டாங்கன்னா சங்காச்சே?) லெப்ட் அடித்து மணிகூண்டை அடைந்தேன். இடதுபுறம் திரும்பி ராயப்பேட்டை மருத்துவமனை வழியாக போயிருக்க வேண்டும். அங்கிருக்கும் ராயப்பேட்டை காவல்நிலையத்தை தாண்டிச் செல்லவேண்டுமென்ற விதி இருந்ததால் நேராக திருவல்லிக்கேணிக்கு வண்டியை விட்டேன். ராயப்பேட்டையில் மாட்டினால் உடனடியாக ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று டிரிங் & ட்ரைவ் சர்ட்டிபிகேட் வாங்கிவிடுவார்கள். பீச் ரோட்டில் பொதுவாக ஓவர்ஸ்பீடாக வருகிறானா என்றுதான் பார்ப்பார்கள், நார்மல் ஸ்பீடில் செல்பவனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் பீச் ரோடை தேர்ந்தெடுத்தேன்.

முன்பெல்லாம் இரவுகளில் பீச் ரோட்டில் ஆட்டோ ரேஸ் நடக்கும். போலிஸ்காரர்களின் நெருக்கடியால் பீச் ரோட்டில் நடந்த ரேஸ் இப்போது சாந்தோமில் இருந்து சத்யா ஸ்டுடியோ வரை நடக்கிறதாம். அதிவேக கொலைவெறி ஆட்டோக்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் சாந்தோமில் இருந்து ரைட் அடித்து மயிலைக்கு வந்தேன். மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷனை தவிர்க்க தினகரனுக்கு முன்பாக வந்த ஏதோ ஒரு சந்தில் நுழைந்து கபாலீஸ்வரர் கோயிலை தொட்டு, குளத்தை சுற்றி மந்தைவெளியை நோக்கி வண்டியை முறுக்கினேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. மேற்கு மாடவீதியும், வடக்கு மாடவீதியும் சந்திக்கும் சந்திப்பில் போலிஸ் செக்கப். ஒரு பெண் போலிஸ் சுறுசுறுப்பாக வண்டி டாக்குமெண்டுகளை டார்ச் அடித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஃபோர்டு ஐகானில் இருபதுகளில் ஆறு பேர் அதிவேகமாக வந்து பிரேக் அடித்து நின்றார்கள். 'கண்களிரண்டால்' பாட்டை சத்தமாக அதிரவிட்டிருந்தார்கள். டிரைவர் சீட்டில் இருந்தவர் காரிலிருந்தபடியே டாக்குமெண்ட்களை காட்டினார். "வாயை ஊதுங்க" என்று சொன்னதுமே "டாக்குமெண்ட்ஸ் சரியா இருக்கில்லே? அப்புறம் எதுக்கு வாயை ஊதச்சொல்றே?" என்று ஒருமையில் போலிஸ்காரரை கேட்டதுமே, கோபமடைந்த போலிஸ்காரர் வண்டிச்சாவியை பிடுங்கிக் கொண்டுப் போனார்.

பயத்தில் ஹெல்மெட்டை கழட்டாமலேயே டாக்குமெண்ட்ஸை காட்டினேன். "பாலிசி பேப்பர் வர ஒரு வாரமாகும். இன்சூரன்ஸ் ரிசீப்ட் மட்டும் இருக்கு" என்று சொல்லிவிட்டு என் கம்பெனி ஐடெண்டிகார்டை காட்டினேன். நல்ல வேளையாக அந்த பெண் போலிஸ் வாயை ஊத சொல்லவில்லை. மாணிக்சந்தையும், பாஸ் பாஸையும் சரிவிகிதத்தில் மிக்ஸ் செய்து போடுபவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவன். ஃபோர்டு ஐகான் காரரிடம் "பேரு சொல்லுங்க சார்!" என்றவாறே நகர்ந்தார் அந்த பெண் போலிஸ். "நான் அட்வகேட்" என்று ஃபோர்டு சொல்ல, "பேரை தான் கேட்டேன், ப்ரொபஷனை கேட்கலை!" என்று கடித்துக் கொண்டிருக்க நூறு ரூபாய் மிச்சமான குஷியில் வண்டியைக் கிளப்பினேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்புகூட மந்தைவெளி பஸ்ஸ்டாண்டை சுற்றி நிறையப் பேர் பிளாட்பார்ம்களில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது வெறிச்சோடியிருக்கிறது. அடையார் பிரிட்ஜ் அமைதியாக இருந்தது. வழியெங்கும் பிளாட்பார்ம் வாசிகளை எங்கேயுமே காணமுடியவில்லை. மத்திய கைலாஷை தவிர்க்கவே முடியவில்லை. சாதாரண நேரத்திலேயே அங்கே வசூல்ராஜாக்கள். இரவில் சொல்லவும் வேண்டுமா?

பத்து கார்கள், இருபது டூவீலர்கள் மடக்கப்பட்டிருந்தன. கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்தவாறே பைக்கை ஓரம் கட்டினேன். கார்களின் டிக்கிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ப்ரகாஷ்ராஜ் ஜாடையில் இருந்த போலிஸ்காரர் ஒருவர் ஹெல்மெட்டையெல்லாம் கழட்ட சொல்லவில்லை. "ஐடெண்டி கார்டு மட்டும் காட்டு, குடிச்சிருக்கியா, ஆர்சி புக் இருக்கானெல்லாம் கேட்கமாட்டேன்" என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ஐடெண்டி கார்டை காட்டியதுமே நன்றி சொல்லி அனுப்பிவைத்தார்.

சென்னையில் ஒரு பிரச்சினை. பதினொரு மணிக்கு மேல் தம் அடிப்பதற்கும், பாக்கு போடுவதற்கும் பொட்டிக்கடைகளே இருக்காது. ரெகுலர் தம்மர்கள் பாக்கெட்டாக வாங்கி ஸ்டாக் செய்துகொள்வார்கள். திருட்டு தம்மர்கள் பாடு தான் திண்டாட்டம். ஏதாவது பொட்டிக்கடை இருந்தாலாவது லூசில் வாங்கி அடிக்கமுடியும். தரமணி ரோட்டில் டிசிஎஸ் அருகே இருபத்தி நாலுமணி நேர பொட்டிக்கடை ஒன்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்குகிறது. எந்த நேரத்திலும் டீ, சமோசா, சிகரெட், பாக்கு தாராளமாக கிடைக்கிறது.
வேளச்சேரி விஜயநகரில் ஆட்டோக்காரர்களை தவிர்த்து யாரையுமே காணோம். போலிஸ் விழிப்பாக இருக்க வேண்டிய ஜங்ஷன் அது. வேளச்சேரி மேம்பாலத்தில் முன்பெல்லாம் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும், (அறிந்தும் அறியாமலும், வேட்டையாடு விளையாடு, பரட்டை (எ) அழகுசுந்தரம் etc.) இரவுகளில் பரபரப்பாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் இயங்க ஆரம்பித்தப் பிறகு சினிமாக்காரர்கள் ஏனோ அந்த மேம்பாலத்திடம் பாராமுகம் காட்டுகிறார்கள்.

மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சுடுகாட்டுக்கு அருகே இருக்கும் சொறி நாய்கள் எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் அனாயசமாக ஓடுகின்றன. டூவீலர்காரர்கள் சிகாகோ பேண்டோடு வீட்டுக்கு போகவேண்டியிருக்கிறது. ஒன்றரை மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். சென்னை மாநகர, புறநகர காவலர்களிடம் மாணிக்சந்த் உதவியால் தப்பினாலும் வீட்டில் மாட்டிக்கொள்ளும் ஆபத்து அதிகம். திக்கற்றவர்களுக்கு கொய்யா இலையே துணை. வீட்டிற்கொரு கொய்யா மரம் வளர்ப்போம்.

பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு கட்டுரை - கானா பிரபா

தீவாளி வருஷங்கள்
- கானா பிரபா


தைபொங்கல், புது வருஷப்பிறப்பு போன கையோட தீபாவளி எப்ப வருகுது எண்டு, அப்பாவின்ர கட்டிலுக்கு அங்கால இருக்கிற மெய்கண்டான் கலண்டரின்ர திகதித் துண்டுகளை விரித்து எண்ணத் தொடங்கி விடுவேன். தீபாவளிக்கான நாள் நெருங்க நெருங்க, பாரதிராஜாவின்ர பாட்டுக்களில வாற வெள்ளை உடை அக்காமார் ஸ்லோமோஷனில் வருமாப் போல நானும் அந்தரத்தில பறப்பேன்.

அப்பாவுக்கு இந்தக் காலத்து நாகரீகம் தெரியாது எண்டு என்ர அண்ணனுக்கு அப்பா எடுக்கும் துணி வகை பிடிக்காது. ரண்டு, மூண்டு கிழமைக்கு முந்தியே சித்தப்பாவைக் கொண்டு ரவுணிலை சேர்ட்டுத் துணியையும், காற்சட்டைத் துணியையும் எடுத்து விடுவோம். இணுவில் கந்தசுவாமிகோயிலடி வெங்காயச் சங்கத்துக்கு முன்னாலை இரு முஸ்லீம் ரெய்லர் கடை இருந்தது. அம்மா ரீச்சர் எண்டதாலபள்ளிக்கூடம் போற வழியில இருக்கிற அந்த ரெய்லரிட்டைத் தான் எப்பவும் சட்டை தைக்கக் குடுப்பம்.

"ரீச்சர்! தீபாவளி வருது தானே, நிறையச் சோலி இருக்கும், கொஞ்சம் சீக்கிரமாவே துணியைக் குடுத்திடுங்க" எண்டு அம்மா பள்ளிக்கூடம் போற நேரம் கடைக்குள்ளால எட்டிப்பார்த்து நினைப்பூட்டி விடுவார் ரெய்லர். துணிக்கு அளவெடுக்கிற போது ரெயிலர் மீற்றர் பட்டியை வைத்து கொலருக்கும், கையுக்கும் எண்டு அளவெடுத்து விட்டுக் என்ர காற்சட்டைக்கு அளவெடுக்கிற நேரம் பார்த்து "ரெய்லர்! கொஞ்சம் கால் நீட்டா விட்டுத் தையுங்கோ, கன காலம் வச்சுப் போடலாம்" எண்டு அம்மா கட்டளை இடவும் , பல்லால் நெருவிக்கொண்டே அம்மாவை ஒரு முறை முறைப்பேன்.

தீவாளிக்கு உடுப்புத் தாறது வீட்டுக்காரர் மட்டுமில்லை, சித்தப்பாவின் முறையும் இருக்கு. சித்தப்பாவோட யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் உடுப்பெடுக்கிறதெண்டால் பெரிய புழுகம் தான். அதுக்கும் ரண்டு காரணம். ஒண்டு அவரின்ர பஜாஜ் ஸ்கூட்டரிலை போகலாம். இன்னொண்டு, ரவுணையும் பார்த்து விட்டு வரலாம்.

தீவாளித் தினத்துக்கு கொஞ்ச நாள் முன்னமே யாழ்ப்பாணம் ரவுண் புதுமாப்பிளை போல நல்ல சந்தோசமா இருக்கும். பஸ்ராண்டுக்கு நடுவில இருக்கிற மணிக்குரல் விளம்பர சேவையில் , நிமிடத்துக்கொரு புடவைக்கடை விளம்பரம் வரும். கொடி பறக்குது படத்திலை இருந்து "சேலை கட்டும் பூவுக்கொரு வாசமுண்டு" பாட்டோட சீமாட்டி ஜவுளி மாளிகை விளம்பரம் வரும். கொடி பறக்குது, ராஜாதி ராஜா சேலைகளும், நதியா சுரிதாரும் விளம்பரங்களில் கட்டாயம் இடம்பிடிக்கும்.

புடவைக் கடைத் தட்டிகளில் அமலாவும், அம்பிகாவும் சாறி கட்டினபடி சிரித்துக் கொண்டிருப்பதை ஆவெண்டு பாத்துகொண்டு சித்தப்பாவின் கையைப் பிடிச்சுக் கொண்டே சனத்திரளுக்குள்ளால நகர்வேன். சித்தப்பாவின் கால் சொல்லிவைத்தது போல் நியூமார்க்கட்டுக்குள்ளை இருக்கிற ஹப்பி ரெக்ஸ் கடைக்குத் தான் போகும். ஊர்க்காரற்றை கடை, ஏமாத்த மாட்டாங்கள் என்று நியாயம் கற்பிப்பார். ஹப்பி ரெக்ஸ் இல் சிங்கப்பூரால வந்த சேர்ட்டுக்கள் குவிஞ்சிருக்கும். எனக்கு டிராகன் படமும் பூவும் போட்ட சிங்கப்பூர் சேர்ட்டை சித்தப்பா வாங்கித் தரவேணும் எண்டு கெதியா கண்ணை மூடி ஒருக்கால் பிள்ளையாரை வேண்டிக் கொள்வேன். பெரும்பாலும் பிள்ளையார் வரம் குடுத்து விடுவார். அங்காலை ரியூசனுக்குப் போறதெண்டு சொல்லிப் போட்டு லுமாலாவிலை பஞ்சாபி சட்டை வாங்க வந்த அக்காமாரின் பேரம் பேசலும் மும்முரமாயிருக்கும்.


வசதி குறைந்தவர்களின் அல்லது ஏழைகளின் சொர்க்கமாக பேவ்மென்ற் பாதையோரக் கடைக்காரகளின் விற்பனை இருக்கும்.

புதுச்சட்டை எல்லாம் றெடி எண்டவுடனை, அம்மா பத்திரமாக அவற்றைச் சாமி அறையில இருக்கிற அலுமாரிக்குள்ளை வச்சுப் பூட்டிப் போடுவா. சத்தம் போடாமல், அம்மாவுக்குத் தெரியாமல் சாமியறை அலுமாரியைத் திறந்து மடிச்சு வச்சிருக்கிற சேர்ட்டை ஆசையோடு தடவி விட்டு ஒருக்கால் மணந்து பார்த்தால் வாசனைக்குப் போட்டு வச்ச பூச்சி முட்டை மணமும், புதுச் சட்டையின் வாசமும் கலந்த கலவையான மணம் நாசிக்குள் நிறைக்கும்.

எப்படா விடியும் எண்டு காத்திருந்த தீவாளி நாள் வரும்.

கே.கே.எஸ் றோட்டில, தாவடிசந்தி தாண்டிக் கொக்குவில் பக்கம் போகேக்கை ஒரு மதகு வரும். அந்த மதகுக்குப் பாலம் போட்டு அங்கால் காணியில் ஒரு இறைச்சிக் கடை இருந்தது. வழக்கமா இரண்டு முழு ஆடு தோல் உரிக்கப்பட்டுக் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். கே.கே.எஸ் றோட்டில ஆராவது இறச்சிக்கடைக்காரனுக்குத் தெரிஞ்ச வாடிக்கையாளர் போகேக்கை எட்டி "அண்ணோய்! ஆட்டிறச்சி ஒரு ரண்டு கிலோ கட்டி வைய்யுங்கோ" என்று கட்டளை இட்டு விட்டுத் தம் வேலையைப் பார்க்கப் போயிடுவினம். மத்தியானம் வரைக்கும் போணியாகாத ஆட்டிறச்சியை எப்படியாவது ஒப்பேற்றி விற்று விடவேணும் எண்ட முனைப்பே இறைச்சிக்கடைக்காரனுக்கு இருக்கும்.

ஆனால் தீவாளி நாளில உதெல்லாம் நடவாது கண்டியளோ, காலமை ஆறு மணிக்கே மதகையும் தாண்டி தீவாளிக்கு இறைச்சி வாங்கவென ஒரு பெருங்கூட்டம் முண்டியடிக்கும்.

"எல்லாரும் வரிசையில நிண்டால் தான் இறைச்சி கிடைக்கும்" என்று புதுப்பணக்காரன் தோரணையில் இறைச்சிக்கடைக்காரன் மிதப்பான்.காலை எட்டுமணிக்கெல்லாம் முழு இறைச்சியும் விற்றுத் தீர்ந்து விடும்.

காலமையே முத்துலிங்க மாமாவின் உதவியில் எங்கட வீட்டுச் சாப்பாட்டுக்கான இறைச்சி வாங்கப்பட்டிருக்கும். சில ஆட்கள் ஒரு ஆட்டை வாங்கி உரித்து சொந்தக்காரருக்குள்ளையே பங்கு ஆடு இறைச்சி பிரிப்பதும் உண்டு. பனையோலையை வளைத்துச் செய்த பாத்திரத்தில் ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் தேவையான இறைச்சி பங்கிடப்படும்.

வெள்ளணக் கிணத்தடிப் பக்கம் போய் துலாவில் நீரிறைத்துக் குளியல் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டு, பிள்ளையாரடிக்கு ஆறரைப் பூசை பார்க்கக் கிளம்புவோம்.

மடத்துவாசல் பிள்ளையாருக்கும் தீபாவளி நாள் தான் நிறையப் பட்டுத் துணிகள் கிடைக்கும். பூசை முடிந்து, கடைசியில சண்டேஸ்வரர் சுவாமியைக் கும்பிடேக்கை, புதுச் சட்டையில் இருந்து ஒரு நூலைப் பவ்யமாக இழுத்தெடுத்து, அந்த நூலைச் சண்டேஸ்வரருக்குச் சார்த்தி விட்டுக் கிளம்புவோம்.

நாலைஞ்சு சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் புதுச்சட்டையைக் காட்டி விட்டு, அவையள் தாற முறுக்கு, பயற்றம் உருண்டை, அரியதரம் எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு பால் தேத்தண்ணி வாயுக்குள்ள இருக்கவே அடுத்த வீட்டுக்குப் பாய்வம். சொந்தக்காரர் வீடுகளுக்கு நடைராஜாவிலேயே பயணம் எண்டதால அவையள் தாற பலகாரச் சாப்பாடெல்லாம் பாதிவழியிலேயே செமிச்சுப் போயிடும். எல்லா வீடுகளுக்கும் ஒரு றவுண்ட் அடிச்சுப் போட்டு வீட்டை வர பகல் பன்னிரண்டை தாண்டி விடும்.

வீட்டுக்கு வரும் வழி நெடுகிலும் கடைக்கதவுகளில் பூட்டுக்கள் சிரித்துக் கொண்டிருக்கும். உள் ஒழுங்கைகளுக்காள் வரும் போது ஏற்கனவே மெண்டிஸ் சாராயவகையறாக்களை ஒரு கைபார்த்து விட்ட வயதான மது போதை மன்னர்கள் சிலர் ரோட்டோரமாகவோ, அல்லது கிடுகு வேலிகளின் கதியால் பக்கமாகவோ போதை தலைக்கேறிச் சுருண்டு படுத்திருப்பார்கள்.

"ஒளுதரும் என்னை ஒந்தும் கேட்கப் பிடாது" என்று பஞ்ச் டயலாக் வேற அவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும். ஊர்நாய்களோ, " மரியாதையா இந்த இடத்தை விட்டுப் போறியோ இல்லையோ?" என்ற தோரணையில் வாள் வாளென்று குரைப்பெடுத்துத் தர்ணாப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் புதினமாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்வோம்.

வீட்டுக்குள் நுளையும் போது ஆரோ ஆக்கள் எங்கட வீட்டுக்குப் பலகாரம் சாப்பிட வந்திருப்பினம். "எட! சோக்கான சட்டையடா" எண்டு ஒருக்கால் சீண்டிப் பார்ப்பினம். மாப்பிளை பார்க்க வந்த பொம்பிளை மாதிரி வெக்கத்திலை கீழை குனிஞ்சு கொண்டே குசினிப்பக்கம் போயிடுவன். அடுப்படியில் இருக்கும் கறிச்சட்டியை மெல்லமாத் திறந்து பார்த்தால் காலையில் பச்சையாக இருந்த ஆட்டிறச்சி கறிச்சட்டிக்குள்ளை பொன்னிறத்தில நல்லா வதக்கிக் காய்ச்சியிருக்கும். இறைச்சிக்குப் போட்ட மசாலா நொடி வயிற்றில் அமிலத்தைச் சுரக்க வைத்து விடும். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வழியனுப்பி விட்டு, அம்மா நேராகக் குசினிக்குள் வந்து விடுவா. அப்பாவுக்கும் சாப்பாட்டு நேரம் எண்டு விளங்கி விடும். குசினிக்குள்ள இருக்கிற பலகைக் கட்டையில் இருந்து அம்மா, கோப்பையில் போடும் குத்தரிசிச் சோறையும் எண்ணையாகத் திரண்ட கொழுப்பு ஆட்டம் போடும் ஆட்டிறச்சியைக் கலந்து வாயுக்குள்ளை திணித்தால் தேவாமிர்தம் தான்.

எங்கட நாட்டிலை தீபாவளி எண்டால் வெடிகளோ மத்தப்போ இல்லாத நாள் அது. தைப்பொங்கலுக்குத் தான் வெடி, மத்தாப்பு, பூந்திரி எல்லாம் இருக்கும். தீபாவளியை பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ எண்டு சொன்னால், புதுச்சட்டை போடுவம், பலகாரம் தின்னுவம், ஆட்டிறைச்சியை மூக்குப் பிடிக்க வெட்டுவம், இவை தான் முதலில் வரும். பிறகு தான் நரகாசுரனின் கதை எல்லாம்.

கொஞ்சம் வளர்ந்து விடலைப் பருவம் வந்தவுடன் நாங்களாகவே தீபாவளி உடுப்பு எடுக்க வேண்டிய பொறுப்பு வந்துவிடும். அப்பா தந்த காசில் உடுப்பு வாங்கவேண்டியது எங்கட பொறுப்பு. அந்த நாளிலை ரவுணுக்குப் போய் ஜீன்ஸ் துணி எடுத்து விட்டு, யார் நல்ல ஸ்ரைலாகத் தைப்பார்கள் எண்டு தேடுவதிலேயே பாதி உயிர் போய் விடும். நியூமார்க்கற் பேவ்மென்றையும் தாண்டிக் கொஞ்சம் சந்துக்குள்ளால் நடந்தால் முஸ்லீம் ரெய்லர்மார் நிறையப் பேர் இருப்பினம். எடுத்த ஜீன்ஸ் துணியில் எங்களுக்குப் பிடித்த விஷயத்தைக் கோடிட்டுக் காட்டினால் போதும் அவை ரோடே போட்டு விடுவினம். ஜீன்ஸ் இன் இரண்டு பொக்கற்றின் பக்கமும் விதவிதமான Pattern இல் சப்பறத்துக்குச் சோடிச்ச மாதிரி நூல் அலங்காரமும் டிசைனும் இருக்கும். காதலன் படத்திலை நீக்ரோ மாதிரி புதுசா நடிக்கவந்த பிரபுதேவா எண்டு ஆரோ கதாநாயகன் போட்ட மாதிரி தொள தொளவெண்டு ஜீன்ஸ் தச்சால் தான் பயோ (bioscience) படிக்கிற பெட்டையளும், சுண்டுக்குளி வேம்படிப் பெட்டையளும் பார்ப்பினமாம். கட்டுப்பெட்டித் தனமா உடுப்புப் போட்டால் தமிழ்க்கலைவன் பாடசாலையும் ஏறெடுத்துப் பார்க்காது.

வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால "விக்ரம் ரெய்லர்" எண்டு ஒரு ஆள் கடை வச்சிருந்தவர். தொண்ணூறுகளில் அவர் தான் தனிக்காட்டு ராசா. கொஞ்சக் காலம் பின்னால் அந்தக் கடையைக் காணவில்லை.

"எடேய்! இப்பதான்ரா உன்ர ஆள் கோயிலுக்கு வந்து போட்டுப் போகுது" கோயிலுக்கு வரும் போதே ஏஷியா சைக்கிளில் ஊன்றி கொண்டிருக்கும் நண்பன் சொல்லவும், பிள்ளையாரைப் பிறகு பார்க்கலாம் எண்டு மனசு சமாதானப்படுத்த வந்த வழியே திரும்பிச் சைக்கிள் வலிக்க, சுரிதார் அணிந்து லுமாலாவில் பறந்த கிளியைத் தேடிப் பறக்கும், அதுவரை அவ்ரோ பிளேன் கணக்காய் ஓடிய ஏஷியா அவளின் சைக்கிளை அண்மித்ததும் வேகம் தணிந்து கடைக்கண்ணால் ஏறெடுத்து அந்தப் புதுச்சட்டைக்கே பெருமை சேர்த்த பெருமாட்டியைப் பார்த்து முத்திப் பேறடையும் கணம், லுமாலாச் சைக்கிளே வெக்கத்தில் சிரிக்கும்.

தீவாளி வருஷங்களில் புதைந்த நினைவுகள் கலைய, எல்லாம் தொலைத்து எங்கோ தொலைவில் இருந்து கொண்டு , அந்த நாள் வாழ்வும் வந்திடாதோ என்று உலகப் படத்தில் சின்னப் புள்ளியாய் இருக்கும் இலங்கை போல் நம்பிக்கையின் எச்சம் மட்டும் எஞ்சி நிற்கின்றது.

படங்கள்: 2006 இல் எடுக்கப்பட்டவை

பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 2 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 2
- ஹரன் பிரசன்னா


சீனிவாசனை பெண்ணுடல் இரவும் பகலும் தூக்கமின்றி அலைய வைத்தது. விஜயலக்ஷ்மியின் சிணுங்கல்கள் அவனை போதையேற்றின. அவளின் அசட்டுத்தனங்கள் எல்லாம் இரவுகளில் காமத்தில் முடிந்தன. தான் என்ன சொன்னாலும், செய்தாலும் தன் கணவனை இரவில் வீழ்த்திவிடமுடியும் என்று நம்பினாள் விஜயலக்ஷ்மி. திருமணத்தின் ஆரம்பகால மயக்கங்கள் கடைசிவரைக்கும் நிலைக்கும் என்று அவள் நினைத்தாள். திருமண நாளன்று நடந்த பல்வேறு குளறுபடிகளையும் பற்றி சீனிவாசனின் அம்மா புலம்பியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அவன் இரவுக்காகக் காத்திருந்தான். சீனிவாசனின் அம்மா சீனிவாசனை வாயில் வந்தபடியெல்லாம் வைதாள். விஜயலக்ஷ்மி தன் மகனை முந்தானையில் முடிந்துகொண்டதாகச் சொன்னாள். விஜயலக்ஷ்மி எதுவுமே நடக்காதவாறு முந்தானையை விரித்து உதறி திரும்ப முடிந்துகொண்டாள். சீனிவாசனின் அம்மா கைகளை நெட்டிமுறித்து என் சாபம் சும்மா போகாது என்றாள்.

விஜயலக்ஷ்மி சீனிவாசனிடம் தன் அம்மா தன்னுடன் இருக்கவேண்டும் என்று கேட்டாள். அப்போது சீனிவாசன் விஜயலக்ஷ்மியின் மார்பில் தலைவைத்துப் படுத்து அவளின் திமிறும் இடையை அடக்கிக்கொண்டிருந்தான். அவள் என்ன சொன்னாலும் சரி என்றான். மறுநாளே விஜயலக்ஷ்மியின் அம்மா ஊர் வந்து சேர்ந்தாள். எடுத்த எடுப்பில் சீனிவாசனின் அம்மா தன் மகளை ரொம்பப் படுத்துகிறாள் என்று ஆரம்பித்தாள். விஜயலக்ஷ்மிக்கே தன் அம்மா இப்படி முதல்நாளிலேயே தொடங்குவது குறித்து கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் தன் இடையின்மீதும் முலையின்மீதும் பெரும் நம்பிக்கை இருந்தது. அதனால் தன் அம்மா சொல்வது சரி என்பதுபோல சீனிவாசனிடம் பேசினாள். சீனிவாசனுக்குக் கொஞ்சம் எரிச்சல் வரத் தொடங்கியது. விஜயலக்ஷ்மி சொல்வதற்கும் தன் மாமியார் சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்களை அவன் உணரத் தொடங்கினான். வீட்டின்பின்னால் இருக்கும் கன்னி தெய்வத்தின் முன்னால் உட்கார்ந்து எப்போதும் அழுதுகொண்டிருக்கும் அம்மாவைப் பார்க்கவும் கொஞ்சம் பாவமாக இருந்தது. ஒருதடவையாவது விஜயலக்ஷ்மியைக் கண்டிக்கத்தான் வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

வீட்டிற்குள் நுழைந்த சீனிவாசனின் கால்களில் சோற்றுப் பருக்கைகள் ஒட்டின. வீடெங்கும் சிதறிக் கிடக்கும் சோற்றுப் பருக்கைகளைக் கண்டவுடன் கடும் கோபம் கொண்டான். அவனது கோபத்தைக் கவனித்துவிட்ட விஜயலக்ஷ்மியின் அம்மா புலம்பத் தொடங்கினாள். சீனிவாசனின் அம்மாதான் உணவு பிடிக்கவில்லை என்று சிதறி அடித்தாள் என்றாள். இது எதுவுமே நடந்திராத மாதிரி கன்னி தெய்வத்தின் முன்பு உட்கார்ந்து விளக்கிட்டுக்கொண்டிருந்தாள் சீனிவாசனின் அம்மா. சீனிவாசனுக்கு யோசனையாக இருந்தது. விஜயலக்ஷ்மியை அழைத்தான். அவள் உறங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள் விஜயலக்ஷ்மியின் அம்மா. விளக்கேற்றும் நேரத்தில் என்ன தூக்கம் என்ற கேள்வியைக் கேட்டான். பின்னாலிருந்து அவன் அம்மா பதில் சொன்னாள். 'அது ஆம்பிளைக்கான கேள்வி. உனக்கென்ன?' என்று. அவன் கோபம் தலைக்கேறியது. கல்யாணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகியும் தன் மகள் கர்ப்பமாகவில்லை என்பதைத்தான் அவள் குத்திக்காட்டுவதாக ஆரம்பித்தாள் விஜயலக்ஷ்மியின் அம்மா. இதைக் கேட்டதும் சீனிவாசனுக்கு உடல் பதறத் தொடங்கியது. என்ன செய்வது, யாரைத் திட்டுவது எனத் தெரியாமல், ஒட்டுமொத்த கோபமும் விஜயலக்ஷ்மியின் மீது பாய, அவள் தூங்கிக்கொண்டிருக்கும் கதவை வேகமாகத் திறந்து, அவளை எட்டி உதைத்தான். அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத சமயத்தில் அவள் இடுப்பில் ஓங்கி மிதித்தான். அவள் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தாள். தன் கணவன் தன்னை மிதித்தான் என்பதை அவள் நம்பவே சில நிமிடங்கள் பிடித்தது. பெரும் சத்தமிட்டு அழுதாள். அவள் அழுதுகொண்டிருக்கும்போது விஜயலக்ஷ்மியின் அம்மா சொன்னாள், 'இந்த வீடு உருப்படுமா, ஒரு புள்ளத்தாச்சின்னு பாக்காம மிதிக்கிறானே கட்டயில போறவன்' என்று. சீனிவாசனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் தன் அம்மா சொன்னதை, தான் ஆண்மையற்றவன் என்று சொன்னதாகத் திரித்தவள் இப்போது மீண்டும் மாற்றிப் பேசுவது ஏன் என்று யோசித்தான். ஏன் தன்னிடம்கூட விஜயலக்ஷ்மி தான் கர்ப்பமுற்றதைச் சொல்லவில்லை என நினைத்தான். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆதரவாக விஜயலக்ஷ்மியை மெல்ல நெருங்கி தடவிக்கொடுத்தான். அவள் அவன் கையைத் தட்டிவிட்டு, 'நீங்க வந்ததும் சொல்லணும்னு இருந்தேன்..' என்றாள் அழுதுகொண்டே. இது எதுவும் நடக்காத மாதிரி அம்மா விளக்கேற்றினாள். இனி தன் மகன் அடிக்கடி மிதிப்பான் என்று நம்பினாள். விரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும் என நினைத்துக்கொண்டாள். சீனிவாசனின் அப்பா அவளை மிதிக்காத நாளில்லை.

தான் அப்பாவின் வாரிசு என்பதை மிக சீக்கிரத்தில் நிரூபிக்கத் துவங்கினான் சீனிவாசன். எது எதற்கு என்றில்லாமல் எல்லாவற்றிற்கும் ஏசவும் அடிக்கவும் மிதிக்கவும் தொடங்கினான் சீனிவாசன். விஜயலக்ஷ்மி வாய் திறப்பதையே நிறுத்தினாள். கல்யாணம் ஆன புதிதில் தன்னைக் கொஞ்சிக் கிடந்த கணவன் இவன் இல்லையோ என்பது போன்ற விநோதமான கற்பனைகள் அவளிடத்தில் ஏற்பட்டன. விஜயலக்ஷ்மியின் அம்மாவால் நடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. கர்ப்பிணியை ஒரு ஆண்மகன் மிதிப்பான் என்று அவளால் நினைக்கக்கூட முடியவில்லை. அவளது கணவன் அவளை அதிர்ந்து பேசியதுகூட கிடையாது. அவள் கடும் கோபம் கொண்ட ஒரு நாளில் தன் மாப்பிள்ளைக்கு சாபம் வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். 'பொம்பளையை மிதிக்கிறவன் ஆம்பளையே இல்லை. இதுக்கெல்லாம் அனுபவிப்ப... அந்தக் கன்னி தெய்வமே வரும்டா...' என்று சொல்லிவிட்டுப் படியிறங்கினாள். சீனிவாசனின் அம்மா தான் எதுவுமே செய்யாமல் இந்த நல்ல காரியம் நடந்ததை எண்ணி சந்தோஷப்பட்டாள். உள்ளூர தன் மகன் ஒரு கர்ப்பிணியை மிதித்தது பற்றிய பயமும் இருந்தது.

விஜயலக்ஷ்மி வரிசையாகப் பிள்ளைகள் பெற்றாள். ஏதோ ஒரு நோயில் எல்லாக் குழந்தையும் இறந்தன. அவளது உடல் பெருத்து, இடைகள் வீங்கி, முலைகள் சரிந்து, முகம் விரிந்து போயிருந்தது. கல்யாணத்தில் இருந்த கொடியிடைப் பெண் தானல்ல என்றே நினைத்துக்கொள்வாள் விஜயலக்ஷ்மி. சீனிவாசனின் அம்மா இறந்த பத்தாவது மாதத்திலும் அவள் குழந்தை பெற்றாள். ஊரில் இதைப் பற்றி ஓரிருவர் கிண்டலாகப் பேசினார்கள். சீனிவாசன் காதுக்கு இவையெல்லாம் விழுந்தததாகவே தெரியவில்லை. இரவில் அவளோடு படுப்பதும், பகலில் அவளை ஏசுவதும் மிதிப்பதுமன்றி அவன் எதையும் அறிந்திருக்கவில்லை. தன் கணவனைப் பற்றி நினைக்கும்போதே அவன் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மிதிக்கவரும் காட்சியே விஜயலக்ஷ்மியின் மனதில் வந்தது. அவள் கன்னி தெய்வத்துக்கு விளக்கிடும்போது மனமுருகிக் கும்பிட்டாள். 'இந்த நரகத்துலேர்ந்து என்னைக் கூப்பிட்டுக்கோ...' கன்னித் தெய்வத்தின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அந்த ஆண்டும் அவள் கர்ப்பமானாள். அது அவளுக்கு எட்டாவது கர்ப்பம். ஏழு குழந்தைகள் பிறந்து இறந்து போயிருந்தன. பிறந்த ஒரு மாதத்தில், ஐந்து மாதங்களில் என எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து போயிருந்தன. கன்னித் தெய்வத்தின் பழிதான் அது என்கிற நினைப்பு விஜயலக்ஷ்மிக்குத் தோன்றவும், கன்னித் தெய்வத்திற்கு விளக்கிட்டு கும்பிட ஆரம்பித்தாள். தன் மாமியார் கன்னி தெய்வத்திற்கு பூஜை செய்வதை அவள் பார்த்திருக்கிறாள். கைகளை நெட்டி முறித்து சாபமிடும் மாமியார் நினைப்பு வந்தது. தன் மாமியாரிடமும் மானசீகமான மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். எட்டாவது முறையாகக் கர்ப்பமானாள். காலையில் வீடு பெருக்கி, உணவு பொங்கி, உண்பதைப் போல, கர்ப்பமும் அவளுக்கு ஒரு வேலை. அதனுள்ளே இருப்பது ஓர் உயிர் என்கிற எண்ணம் அவளுக்கு வந்ததே இல்லை. தன் வேலையை ஒழுங்காகச் செய்யும் ஓர் ஊழியன்போல அவள் பிள்ளை பெற்றாள். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கருப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு அனு என்று பெயரிட்டாள். அன்று பெய்த கடும் மழையில் கன்னித் தெய்வம் முழுவதுமாக நனைந்தது. மழையில் கன்னித் தெய்வத்திற்கு விளக்கேற்ற முடியாமல் போனது குறித்து விஜயலக்ஷ்மி விசனப்பட்டாள். அதேசமயம், மழையில் கன்னித் தெய்வம் குளிர்ந்தது என்றும் நினைத்துக்கொண்டாள்.

சீனிவாசனுக்கு உள்ளூர பயம் இருந்தது, இந்தக் குழந்தையும் இறந்துவிடுமோ என்று. அவனை ஏதோ சூனியம் சூழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்தான். அவன் விஜயலக்ஷ்மியைக் கல்யாணம் செய்துகொண்ட பின்பே இப்படி ஒரு நிலையில்லாமல் அலைக்கழிக்கப்படுவதாக உணர்ந்தான். அதுமுதல் விஜயலக்ஷ்மியை அடிப்பதும் மிதிப்பதும் அதிகமாகிப் போனது. விஜயலக்ஷ்மி விடாமல் கன்னித் தெய்வத்தைப் பூஜித்தாள். ஒருநாள் அவள் கனவில் ஒரு சிறிய பெண் பட்டுப்பாவாடை உடுத்தி வந்தாள். சந்தேகமே இல்லை, அது கன்னித் தெய்வம்தான். வீட்டின் வெளியில் திண்ணையில் உட்கார்ந்திருந்த கன்னித் தெய்வம் அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் பலமுறை கன்னித் தெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தும் அக்கன்னித் தெய்வம் வீட்டிற்குள் வரவே இல்லை. கன்னித் தெய்வத்தின் கண்கள் அருள் பொங்குவதாகவும் முகம் மலர்ந்த செந்தாமரை போலவும் உடல் மென்மையாகவும் சிவந்த நிறத்திலும் இருந்தாள். யாரைப் போல் இருக்கிறாள் என்பது விஜயலக்ஷ்மிக்குப் புலப்படவே இல்லை. ஒரு சாயலில் அவளுக்கு தன் தாயைப் போலத் தெரிந்தது. இன்னொரு சாயலில் தன் மாமியார் போல இருந்தது. இன்னொரு சாயலில் தன்னைப் போலத் தெரியவும் திடுக்கிட்டு விழித்தாள். வாசலில் காற்று வீசிக்கொண்டிருந்தது. கன்னித் தெய்வத்தைக் காணவில்லை. மறுநாள் தன் கணவனிடம் கனவைச் சொன்னாள். கன்னித் தெய்வம் வீட்டிற்குள் வர மறுக்கிறது என்றால் என்னவோ பிரச்சினை இருக்கிறது என்றாள். ஏற்கெனவே சூனியம் பற்றிப் பயந்துபோயிருந்த சீனிவாசன் விஜயலக்ஷ்மி சொன்னதைக் கேட்டு இன்னும் அரண்டு போனான். உப்பு சப்பில்லாத காரணங்களுக்கு அவளை ஏசினான். ரசத்தில் புளிப்பு அதிகம் என்பதற்காக ஓங்கி மிதித்தான். குழந்தை அனு ஓடி வந்து 'அம்மாவை அடிக்காதீங்க' என்று சொல்லி, சீனிவாசனை அடித்தாள். என்ன செய்கிறோம் என்கிற நினைப்பில்லாமல் சீனிவாசன் அனுவையும் ஓங்கி மிதித்தான். வீறிட்டுக் கொண்டு தூர விழுந்த அனுவை ஓடிச் சென்று தூக்கிய விஜயலக்ஷ்மி, அழுதுகொண்டே சொன்னாள், 'பச்ச கொழந்தைய மிதிக்கிறீங்க. உங்க கால் வெளங்காமத்தான் போகும்.' தனக்கு அடிமையாக இருக்கவேண்டியவள் கொடுத்த சாபம் சீனிவாசனை மேலும் கோபம் கொள்ள வைத்தது. கைக்கு வந்தமாதிரி அவளை அடித்துவிட்டுப் போனான். மறுநாள் காலையில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த அனு திடீரென்று கீழே விழுந்தாள். ஒரு காலை அவளால் அசைக்கவே முடியவில்லை. டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். விஜயலக்ஷ்மி வாய்விட்டு அழுதாள். எல்லாவற்றிற்கும் காரணம் தன் கணவன்தான் என்றாள். அவனுக்கும் இதேபோல் ஒருநாள் கால் விளங்காமல் போகும் என்றான். இருக்கும் ஒரு குழந்தைக்கும் கால் விளங்காமல் போனது ஏன் என்று யோசிக்கத் தொடங்கினாள்.

(தொடரும்)

பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 1 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 1
- ஹரன் பிரசன்னா


அனு ஆழ்ந்த மயக்கத்திலிருப்பதாக சீனிவாச ராவும் விஜயலெக்ஷ்மியும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அனுவின் மூச்சு சீராக இயங்கிக்கொண்டிருந்தது. பெரியதாக திறந்துகிடந்த பழங்கால மருத்துவமனையின் ஓர் ஓரத்தில் உள்ள படுக்கையில், பச்சை நிறப் போர்வை மூடி, அனு செயலற்றுக் கிடந்தாள். ஜன்னல்கள் வழியே வரும் காற்று அங்கிருப்பவர்களின் எண்ணங்களைக் கலைத்துப் போட்டுக்கொண்டிருந்தது. அனுவைப் பார்க்க வருபவர்களிடமெல்லாம் சீனிவாசன் தன் மகளைப் பற்றி டாக்டர்கள் சொன்னதை கொஞ்சம் இட்டுக்கட்டி கூடுதலாகச் சொல்லிக்கொண்டிருந்தார். விஜயலெக்ஷ்மி நொடிக்கொருதடவை வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். போலியோவால் பாதிக்கப்பட்டு சூம்பிக் கிடக்கும் அனுவின் ஒரு காலை அனிச்சையாகத் தடவிக்கொண்டிருந்தாள் விஜயலெக்ஷ்மி. அனு தன் வயிற்றில் பிறந்ததே தேவையற்றது என்று பலமுறை நினைத்துக்கொண்டிருக்கிறாள். அப்போதும் அவளுக்கு அதே எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. அனுவால் தானும் தன் கணவனும் என்ன சந்தோஷப்பட்டுவிட்டோம் என்று யோசிக்கத் துவங்கினாள். இதில் ஆஸ்பத்திரியில் தங்கவேண்டியதும் இங்கேயே படுத்து உறங்கி இங்கேயே இருக்கவேண்டியிருப்பது குறித்த தீராத எரிச்சலும் விஜயலெக்ஷ்மிக்கு ஏற்பட்டிருந்தது. அனு இங்கு வந்து சேர்ந்து 5 நாள்கள் ஓடிவிட்டிருந்தது. அன்றைக்கு கக்கூஸை ஒழுங்காகக் கழுவியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருந்திருக்காது. அனு ஐயோ என்ற சத்தத்தோடு விழுந்தாள். தலையில் ரத்தம் சொட்ட அவளைத் தூக்கிக்கொண்டு இங்கு ஓடிவந்தார்கள்.

சீனிவாசனின் வாழ்க்கை அந்த அந்த நிமிடங்களின் நினைப்பிலேயே கழிந்துவிடும். அப்போது அந்த நிமிடத்தில் ஜன்னலில் அங்குமிங்கும் ஓடும் அணிலைப் பார்த்துக்கொண்டிருந்தார். தன் கையில் பணமில்லாதது பற்றியோ, அனுவிற்கு அந்த மருத்துவமனையில் அளிக்கப்படும் மோசமான சிகிச்சை பற்றியோ அவர் யோசிக்கவில்லை. இப்படி அனுவைப் பார்த்துக்கொண்டு, அணிலைப் பார்த்துக்கொண்டு, சதா அழுகை முகத்தோடு எங்கேயோ வெறித்துக்கொண்டிருக்கும் விஜயலெக்ஷ்மியைப் பார்த்துக்கொண்டு இருப்பது அவருக்கு பெரும் எரிச்சல் தந்தது. அந்த எரிச்சல் பழக்கப்பட்டும் விட்டது. எதிர் படுக்கையிலிருந்த சிறுமியுடன் தங்கியிருக்கும் அவளது அம்மாவும் அப்பாவும் ரொம்ப அன்னியோன்யமாக இருந்தது காரணமில்லாமல் அவருக்கு எரிச்சலைத் தந்தது. எப்போது இந்த ஆஸ்பத்திரியை விட்டுப் போவோம் என்றிருந்தது.

அனு அவளைச் சுற்றி நடப்பதையெல்லாம் உணர்ந்துகொண்டிருந்தாள். தலைமாட்டில் அணில் ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன் அம்மா தன் காலைத் தடவிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தாள். தான் பிறந்த முப்பந்தைந்து வருடத்தில் அவள் தன் சூம்பிப் போன காலைத் தடவியதாக நினைவில்லை. அதனால் தன் அம்மா இப்போது தன் காலைத் தடவிக்கொண்டிருப்பது பற்றி ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷப்படவேண்டுமா என்று யோசித்தாள் ஏதேனும் வேறு நினைவில் அவள் காலைத் தடவிக்கொண்டிருக்கலாம் என்றும் நினைத்தாள். எதிர் படுக்கையிலிருக்கும் சிறுமியின் அப்பாவும் அம்மாவும் இப்போதும்கூட ஏதேனும் பேசி சிரித்துக்கொண்டிருப்பார்களோ என்று எண்ணம் ஓடியது. டாக்டர் வந்து ஊசி போடும்போது 'இன்னும் எத்தன நாள் இப்படி' என்று கேட்க நினைத்தது நினைவுக்கு வந்தது. ஒரு காலை ஊன்றி, இன்னொரு காலை இழுத்துக்கொண்டு நடக்கும்போது, ஒரு கால் வழுகிவிட்டால் இப்படித்தான் விழவேண்டியிருக்கும். விழுந்து விழுந்து நடை பழகி, பின்பு நடக்கும்போதெல்லாம் விழுவதைப் பழக்கமாக்கிக் கொண்டவள். வயதுக்கு வந்த மறுநாள் திடீரென தான் ஒரே நாளில் பெரிய மனுஷியாகிவிட்ட தோரணையில், இந்த உலகமே சுருங்கிப் போய் சாதாரண விஷயமான நினைப்பில் நடந்துகொண்டிருந்தபோது, பஸ் ஸ்டாண்டில் அவளையொத்த சிறுவர்கள் முன்னிலையில் திடீரெனக் கீழே விழுந்தாள். அவள் கட்டியிருந்த பாவாடையும் மேலேயேறி சூம்பிப் போன காலும் கன்னங் கரேலென தொடையும் வெளியில் தெரிந்தபோது, எத்தனை நாளானாலும் தான் பெரிய மனுஷியாகமுடியாது என்கிற எண்ணம் வந்தது. இப்போதும் நினைத்துக்கொண்டாள், தான் பெரிய மனுஷியில்லை. பெரிய மனுஷி என்றால், கல்யாணம் ஆகியிருக்கவேண்டும். குழந்தை இருக்கவேண்டும். அதட்டவும் திட்டு வாங்கவும் திட்டவும் கணவன் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் நல்ல காலாவது இருக்கவேண்டும்.

கக்கூஸைக் கழுவி விடச் சொல்லிச் சொல்லி அனு அலுத்த நாளில்தான் நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். 'கால் முடியாது, சரி. அதுக்காக சின்ன சின்ன வேலையயும் பாக்கக்கூடாதா? ஒரு பொண்ணுக்கு இது நல்லதில்லம்மா' என்கிற அம்மாவின் ஜபத்தின் எரிச்சலில் வேகமாக நடந்தபோதுதான் விழுந்தாள். காலில்லை என்கிற சலுகையே எரிச்சலாக மாறிப்போன வீட்டில் இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அனுவிற்கு அவள் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு நிரந்தரமாகப் போகும் நேரமே வாய்க்கவில்லை.

சூம்பிப் போன கால்களுக்கு மேல் பெருத்துப்போன தொடைகளுடன் பெருத்துப்போன உடலுடன் கன்னங் கரிய நிறந்த்தில் லட்சமணற்ற தனது முகத்திற்கு திருமணம் நடக்காது என்பதை அனு மெல்லவே புரிந்துகொண்டாள். உடலைத் தூக்கி நடக்கமுடியாத நேரத்தில், சோம்பேறித் தனத்தில் அப்படியே அவள் தவழும்போது, சீனிவாசன் தலையில் அடித்துக்கொண்டு, 'கொட்டிக்காத, கொஞ்சமா தின்னுன்னா புத்தி இருக்குதா. இப்ப பாரு, ஒடம்பு பெருத்துப் போய் இருக்கிற ஒரு கால வெச்சும் நடக்க முடியல' என்று சலித்துக்கொள்வார். "நானாதான இழுத்துக்கறேன், உன்ன கூப்பிடலயே." "வாய்க்கு ஒண்ணும் கம்மியில்ல, இன்னும் கொஞ்சம் உடம்பு பெருத்துச்சுன்னா, நாந்தான் அள்ளிப் போடணும்." இரண்டு கைகளைச் சேர்த்து சைகையில் காண்பித்தபடியே சொன்னார். அனுவிற்கு இப்படி உடம்பை இழுத்துக்கொண்டு போவதைக் காட்டிலும், படுக்கையில் விழுந்துவிட்டால்கூட நல்லது என்று தோன்றியது.

தன் கால்மாட்டில் அம்மாவின் பேச்சுச் சத்தம் கேட்டது. மெல்ல கண்களை திறக்க எத்தனித்தாள். எத்தனை முயன்றும் அவளால் கண்களைத் திறக்கமுடியவில்லை. அம்மாவின் பேச்சிலிருந்து, பக்கத்து வீட்டுப் பையன்கள் வந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது. இந்த உலகத்தில் பிரச்சினையில்லாதது ஆண்களாகப் பிறந்துவிடுவது. அனுவிற்கு தான் பெண்ணாகப் பிற்ந்ததுகுறித்த பெருத்த அவமானம் எப்போதும் இருந்தது. அதிலும் அழகான கால்களுடன், சிவப்புத் தோலுடன், எடுப்பான மார்போடு கர்வத்துடன் நடக்கும் பெண்களைக் கண்டுவிட்டால், அவளுக்கு தன் பிறப்பைப் பற்றிய அவமானம் பிடுங்கித் தின்றுவிடும். ஆனால் ஆண்களாகப் பிறந்துவிட்டால் அசிங்கமாக இருந்தாலும் பிரச்சினையில்லை. காலில்லாவிட்டால் கூட பிரச்சினையில்லை. ஆண்களை இந்த உலகம் கண்டிப்பதில்லை. அவன் வயசுக்கேற்ற விஷயங்களை அவன் செய்துகொண்டிருக்கலாம். வயசுக்கு ஒத்துவராத விஷயங்களைக் கூடச் செய்யலாம். யாரும் கேட்கப்போவதில்லை. தன் 35 வயதில், முழு நிர்வாணமாக ஓர் ஆணின் படத்தைக்கூட அவள் பார்த்ததில்லை. ஆனால் அன்றொருநாள் தற்செயலாக பக்கத்துவிட்டு ஜன்னல் வழிப் பார்த்தபோது, பையன்கள் உட்கார்ந்து டிவியில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். படத்தில் யார் உடலிலும் ஒட்டுத்துணி கூட இல்லை. அவளுக்கு அங்கேயே நிற்பதா, போய்விடுவதா என்கிற எண்ணம் ஒரு நிமிடம் எழுந்தது. அதற்குள் ஒரு பையன் வந்து திறந்திருந்த ஜன்னலை மூடி விட்டுச் சென்றான். சட்டென அந்த இடத்தில் இருந்து விலகி வீட்டிற்கு வந்தாள். அந்த ஒரு நிமிடத்தில் கண்ணில் பட்ட காட்சி அன்று முழுவதும் அனுவை அலைக்கழித்தது. ஆண்களாகப் பிறந்திருந்தால் இந்த அலைச்சல் இல்லை. எப்படியும் குறைந்தது ஒரு பெண்ணையாவது அவன் அனுபவிக்கலாம். இப்படி ஆண் வாசனை என்ன என்றே அறியாமல், கண்ணில் பட்ட ஒரு காட்சியை காலம் முழுவதும் மனதில் இருத்தி கற்பனை செய்துகொண்டிருக்கவேண்டியதில்லை. திடீரென வாசலில் சத்தமும் சண்டையும் கேட்டது. பக்கத்து வீட்டுப் பையனின் அண்ணன் அவன் தம்பியை ஓங்கி செவிட்டில் அறைந்தான். மற்ற பையன்கள் அவமானம் பிடுங்கித் தின்ன அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அன்று அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது.

பையன்கள் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படுவது தெரிந்தது. ஆண்களாகப் பிறந்தால், எந்த அவமானம் நேர்ந்தாலும் அடுத்து ஒன்றுமே நடக்காததுபோல் இருக்கலாம். அவளுக்கு அப்போதும் தான் ஏன் ஓர் ஆணாகப் பிறக்காமல் போனோம் என்று தோன்றியது. பெண்ணாகப் பிறந்ததில் கூட பிசகில்லை, கால் நன்றாக இருந்திருந்தால், ஒரு கல்யாணமாவது ஆகியிருந்திருக்கலாம்.

இருபது வயதாக இருக்கும்போது எப்படியும் தனக்கு கல்யாணம் நடக்கும் என்றே நம்பினாள் அனு. 35 வயதில் அந்த நம்பிக்கை மறைந்து, காண்போரிடமெல்லாம் அது எரிச்சலாக வந்து விழ ஆரம்பித்து, உலகத்தில் அவளுக்கு யாரையும் பிடிக்காமல் போனது. தன்னையும் யாருக்கும் பிடிக்காது என்றே நினைத்தாள்.

பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் சில வருடங்களுக்கு முன்யு ஒருநாள் பேசிக்கொண்டிருந்தாள். உடல் பெருத்துப் போயிருப்பதால் நடக்கமுடியவில்லை. முதுகு வலிக்கிறது. வயிற்றின் கீழ்ப்பகுதியில் எப்போதும் ஒருவித வலி இருக்கிறது. இரவு படுத்தால் தூக்கம் வருவதில்லை. இப்படி பல வியாதிகள் அவளுக்கு இருப்பதாக அவள் சொல்லிக்கொண்டாள். அதைக் கேட்டுக்கொண்ட அந்த பக்கத்து வீட்டுப் பெண், 'காலா காலத்துல கல்யாணம் ஆயிட்டா இந்த நோயெல்லாம் வராது' என்றாள். அனுவிற்குக் கேட்கவே சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. 'அப்படியா சொல்ற? கல்யாணம் ஆயிட்டா சரியாயிடுமா?' 'பின்ன. நைட் ஒழுங்கா தூக்கம் வரும். இந்த மத்த பிரச்சினையெல்லாம் வராது. சீக்கிரம் உங்க வீட்டுல கல்யாணம் பண்ணச் சொல்லு.' இப்படி பேசியதிலிருந்து தன் பிரச்சினைகளுக்கான மிக எளிய வைத்தியமான திருமணத்தை ஏன் தன் வீட்டார்கள் சிரமேற்கொண்டு செய்வதில்லை என்கிற எரிச்சலும் அனுவிற்குச் சேர்ந்துகொண்டது. பக்கத்துவீட்டுப் பெண் கல்யாணமாகி, கர்ப்பமாகி, குழந்தை பெற்று, இரண்டாவது கர்ப்பமாகி... அவளைப் பார்க்கப்போவதையே தவிர்த்துவிட்டாள் அனு.

டாக்டர் ஊசி போடுவது தெரிந்தது. அணில்களும் பையன்களும் பக்கத்துவீட்டுப் பையன்களும் மெல்ல அவள் நினைவிலிருந்து மறைந்தார்கள்.

(தொடரும்)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 1

ஆணாதிக்கம்!
- லக்கிலுக்


'ஆணாதிக்கம்' என்ற சொல் பயன்படுத்த எளியதாக இருக்கிறது. யாரையாவது திட்டவேண்டுமானால் என்னைப் போன்ற விளிம்புநிலைவாதிகள் (இப்படி ஒரு சொல் இருக்கிறதா?) சென்னைப் பாஷையில் திட்டப்பட வேண்டியவனின் அம்மாவை திட்டிவிடுவோம். அறிவுஜீவிகள் வட்டாரத்திலோ 'அவன் ஒரு ஆணாதிக்கவாதி' என்று சொன்னால் போதும். திட்டப்பட்டவரின் தரம் பாதாளத்துக்கு கீழே போய்விடும்.

பெண்களை மலரென்றும், நிலவென்றும் வர்ணிப்பவனெல்லாம் ஆணாதிக்கவாதியென்றால் உலகின் ஒரு கவிஞனும் இந்த பட்டியலில் இருந்து தப்பிக்க முடியாது. சங்ககால புலவனிடமெல்லாம் சண்டைபோட வேண்டிவரும். விமனைசர் என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய ஒரு சொல் இருக்கிறது. காணும் பெண்களிடமெல்லாம் காமம் கொள்ளுபவனை சொல்லுவார்கள். அவன் ஆணாதிக்கவாதியா? விவாதம் செய்தால் அவன் கூட பெண்களை ஆராதிப்பவன் என்று விவாதிக்க முடியும். இரண்டு மூன்று பெண்களை திருமணம் செய்துகொண்டவர்களை ஆணாதிக்கவாதி என்று சொல்லலாமா? ம்ஹூம்.. இரண்டு மூன்று பெண்களுக்கு வாழ்வு கொடுத்தவர் என்றும் சொல்லலாம்.

ஆணாதிக்கவாதிகள் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம் பெண்ணியவாதிகளா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பெண்ணியவாதிகள் பெரும்பாலும் பெண்களாக இருப்பது பெருங்கொடுமை. எனக்குத் தெரிந்த பெண்ணியவாதிகள் பலரும் வரதட்சணைக்கு எதிராக குமுதத்தில் கதை எழுதுகிறார்கள். நான்கைந்து பேராக சேர்ந்துக் கொண்டு சேரிக்குழந்தைகளுக்கு முடிவெட்டுகிறார்கள். மங்கையர் மலரிலும், அவள் விகடனிலும் சமையல் குறிப்பு வரைகிறார்கள். ஆண்களை விலங்குகளாக சித்தரித்து ஓவியக்கண்காட்சி நடத்துகிறார்கள். அவ்வப்போது கூடி காபியோடு, ஜாங்கிரி சாப்பிட்டு ஆணாதிக்கத்தை ஒழிக்க திட்டம் தீட்டுகிறார்கள். மாதர்சங்கங்களில் 'ஆண்கள் ஒழிக!' முழக்கமிட்டுவிட்டு மாமனாருக்கு மாத்திரை கொடுக்க ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். யாரெல்லாம் பெண்ணியவாதிகள் என்பதிலேயே எனக்கு குழப்பம் இருக்கிறது.

பாருங்கள், ஆணாதிக்கம் - பெண்ணியம் போன்ற சொற்களுக்கு சரியான பொருள்கூட தெரியாத நானெல்லாம் இதைப்பற்றி எழுதிக் கிழிக்க வேண்டியிருக்கிறது, அதையும் நீங்கள் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. என்ன கொடுமை சார் இதெல்லாம்? காலத்தின் கோலம்.

தேவ அடியாள் - தெய்வங்களுக்கு அடியாள் என்று வியாக்கியானம் சொன்னார்கள். தாசி இனத்தைச் சேர்ந்தப் பெண்களை நம் சமூகத்தில் இவ்வார்த்தைகளில் அழைத்தார்கள். இது பின்னர் கொச்சையாக 'தேவடியா' ஆக்கப்பட்டது. ஊர்ப் பண்ணையார்கள், கோயில் அர்ச்சகர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்களின் காமப்பசியை போக்க வற்புறுத்தப்பட்டவர்கள் தெய்வங்களுக்கு அடியார்களாம். தமிழில் ஒருவனை மிகத்தரக்குறைவாக திட்டுவதென்றால் 'தேவடியா மகனே!' என்று திட்டுகிறார்கள். தமிழ்சமூகத்தின் அப்பட்டமான ஆணாதிக்கத்துக்கு இது தக்க உதாரணம். திட்டவேண்டியவனை கூட திட்டாமல் அவனது தாயை திட்டச்சொல்லி நம்மை மொழி வற்புறுத்துகிறது. பல பேருக்கு முந்தி விரித்தவளின் மகனே என்பது அச்சொல்லுக்கு சரியான பொருள். தேவடியா என்ற சொல் பெண்பாலை இழிவுபடுத்துகிறதே? இதற்கு இணையாக ஆண்பாலில் திட்ட ஏதாவது சொல்லிருக்கிறதா? ஒரு மொழியே ஆணாதிக்கத்தை வற்புறுத்துகிறது என்றால் அந்த மொழியைப் பேசும் சமூகம் எவ்வளவு கீழ்த்தரமானதாக இருக்க வேண்டும்? பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதில் என்ன தவறு?

சரி, மற்ற மொழிகளில் இதுபோன்ற குறைபாடுகள் இல்லையா? உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் 'Bastard' என்ற சொல்லும் இருக்கிறதே என்று எதிர்வினைக்காக யாராவது கேட்கலாம். Bastard என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் 'The illegitimate offspring of unmarried parents' என்ற பொருளைத் தருகிறது. தேவடியா மகனுக்கும், Bastardக்கும் இடையில் இருக்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறதா? Bastard என்ற சொல் திட்டப்படுபவனின் தாயை மட்டுமன்றி, தந்தையையும் சேர்த்து குறிக்கிறது இல்லையா? உடனே யாராவது Bitch என்ற சொல்லை நினைவுறுத்தலாம். Bitch என்ற சொல்லுக்கும் Female of any member of the dog family என்றே பொருள் இருக்கிறது. அதாவது பெண்ணை திட்டமட்டும் இச்சொல்லை பயன்படுத்தலாம். நாயே என்று திட்டுகிறோம் இல்லையா? பெண்ணை நாய் என்று திட்ட Bitch என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலம் தமிழைவிட உயர்ந்தது என்று சொல்லுவதற்காக இந்த உதாரணங்களை இங்கே பட்டியலிடவில்லை. ஆங்கிலம் பேசி வளர்ந்த சமூகம் திட்டுவதில் கூட ஆண்-பெண் சமநிலையை கடைப்பிடித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே நம் நோக்கம்.

நம் சமூகமும், மொழியும் ஆணாதிக்கவாதிகளாகவே நம்மை வளர்த்தெடுத்து வருகிறது. இங்கே 'நம்மை' என்று சொல்லுவது பெண்களையும் சேர்த்தே. பெண்களும் ஆணாதிக்கவாதிகளாக தான் வளருகிறார்கள், வாழ்கிறார்கள். தங்கள் தந்தைக்கும், கணவனுக்கும், மகனுக்கும் வக்காலத்து வாங்கியே காலத்தை ஓட்டுகிறார்கள். அம்மாவை, தங்கையை, மகளை கேவலப்படுத்துகிறார்கள். 'ஆம்பளைப்புள்ள மாதிரி என்னடி ஆட்டம்?' என்று மகளை மிரட்டுபவர்கள் அம்மாக்கள் தான். குழந்தை பிறந்தால் 'பொட்டப்புள்ள பொறந்திருக்கு' என்று வருத்தத்தோடு பேசிக்கொள்ளுபவர்கள் வீட்டில் இருக்கும் கிழவிகள் தான். 'பொட்ட' என்ற பெண்பால் சொல் கூட ஆண் ஒருவனை கேவலப்படுத்தச் சொல்லப்படும் சொல்லாக மாறிவிட்டது. என்ன கொடுமை பாருங்கள். இக்கட்டுரையில் அடிக்கடி 'திட்டுவது' பற்றியே பேசிக்கொண்டிருப்பது ஏன் என்று நீங்கள் கேட்கக்கூடும். திட்டுவது மாதிரியான லுச்சா மேட்டரில் கூட இவ்வளவு ஆணாதிக்கம் இருக்கிறதென்றால், மற்ற விஷயங்களில் எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்பதற்காகத் தான் இவ்வளவு மெனக்கெடுகிறேன்.

கணவனை இழந்தவளை விதவை என்கிறோம். விதவைக்கு ஆண் பாலென்ன? மனைவியை இழந்தவனை என்ன சொல்லி கூப்பிடுவது? அடப்பாவிகளா.. ஆண்களுக்கு இதில் கூடவா சலுகை தருவீர்கள்? கணவனை இழந்தவள் பொட்டு வைக்கக்கூடாது, பூவைக்கக் கூடாது, சிங்காரித்துக் கொள்ளக்கூடாது. மறுமணமா? அதைப்பற்றி நினைத்தாலே அடுத்த ஜென்மத்தில் சோறு கூட கிடைக்காது. மனைவியை இழந்தவனோ எப்போதும் போல இருக்கலாம், தன் குழந்தைக்கொரு தாய் தேவையென்று இன்னொருவளை கட்டிக் கொள்ளலாம். அவளை சல்லாபித்துக் கொள்ளலாம். இங்கே பிறந்த ஒவ்வொருவரும் "த்தூ.." என்று மல்லாக்கப் படுத்துக் கொண்டு, எச்சிலைக் கூட்டி, கொத்தாக காறியுமிழுங்கள். நம் முகத்திலேயே எச்சில் தெறிக்கட்டும்.

பராசக்தி சிவாஜி மாதிரி பத்தி பத்தியாக பேசுகிறாயே, நீ மட்டும் பெண்ணியவாதியா என்று யாராவது கேட்பீர்கள். இல்லை. குறைந்தபட்சம் நான் ஒரு ஆணாதிக்கவாதி என்பதை மட்டுமாவது உணர்ந்திருக்கிறேன். நான் ஒரு மொள்ளமாறியாக, முடிச்சவிக்கியாக வாழ்கிறேன் என்றால் 'நான் ஒரு மொள்ளமாறி, முடிச்சவிக்கி' என்பதை உணர்ந்திட வேண்டும். என் அப்பாவுக்கு இந்த உணர்தல் கூட இருந்ததில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கை இயல்பானது, சமமானது என்று தீவிரமாக நம்பியே செத்துப்போனார். என் தலைமுறையில் சிலர் ஓரளவுக்கு 'நாம் ஆணாதிக்கவாதிகள்' என்றாவது உணர்ந்திருக்கிறோம். பெண்களும் கூட தாங்கள் ஆணாதிக்கவாதிகளாக வளர்த்தெடுக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பெண்ணாக பிறந்துவிட்டால் மட்டும் பெண்ணியவாதியாகி விட முடியாது. அடுத்தடுத்த தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாகவாவது மேம்பட்டு இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளிலோ, இரண்டாயிரம் ஆண்டுகளிலோ தமிழ் குமுகாயம் ஆண் - பெண் சமநிலையை அடைந்துவிடும் என்று ஆணித்தரமாக நம்புவோம்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - அறிமுகம்

இனிய உறவுகளுக்கு
தீபாவளி நல்வாழ்த்துகள்!!


தீபாவளி என்றால் 'தௌசண்டவாலா' இல்லாமலா?
'தௌசண்டவாலா' என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. கிராமங்களில் சரவெடி என்று சொல்வார்கள். அந்த சரவெடிகளில் சாதாரணமாக 100 அல்லது 200 வெடிகள் மட்டுமே ஒன்றாகக் கோர்த்து இணைக்கப்பட்டிருக்கும். 'தௌசண்ட்வாலாவில் 1000 வெடிகள் ஒன்றாக வெடித்துச் சிதறும். மிகப் பெரும் ஆரவாரமும் உற்சாகமும் பொங்குமிடங்களில் இந்த வெடியை வெடித்துக்கொண்டாடுவது நடைமுறை.

வலையுலகிலும் ஒரு சரவெடி இருக்கிறது - அதன் பெயர்தான் லக்கிலுக்
'நான் சுஜாதாவோ பாலகுமாரனோ இல்லை' என்று தனனைப்பற்றி எளீமையாகச் சொல்லிக் கொள்ளும் லக்கியின் எழுத்துலகம் எளிமையையும் சுவாரஸ்யத்தையும் மட்டுமே முன்னிறுத்திச் செல்வது. வாசகனை விட்டு விலகி நின்று பேசாமல் அவனோடு தோழமையுடன் கதைக்கும் வெகுஜன எழுத்து உத்தியை இலகுவாகக் கையாளும் லக்கிலுக்கை சரவெடிகளின் காலமான தீபாவளியின் போது பண்புடன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இதோ..இனி லக்கிலுக்கின் வார்த்தைகளிலேயே அவரது அறிமுகம்.

லக்கிலுக் - அறிமுகம்!

வணக்கம் தோழர்களே!

'தோழர்' என்று விளிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது. 'அநீதியை கண்டு உனக்கு ஆத்திரம் வருகிறதா? நீயும் என் தோழன்' என்று சேகுவேரா சொன்னாராம். அநீதியை கண்டு உங்களுக்கு ஆத்திரம் வராவிட்டாலும் கூட உங்களையும் தோழர் என்று அழைப்பதில் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை.

பண்புடன் குழுமம் என்னை தீபாவளிவார நட்சத்திரமாக தேர்ந்தெடுப்பதில் வருத்தம் கொள்கிறேன். காட்சிக்கு நட்சத்திரம் மிகச்சிறியதாக மினுக் மினுக்கென்றிருக்கும். என்னை இவ்வார நிலவாகவோ, சூரியனாகவோ தேர்ந்தெடுத்திருந்தால் மகிழ்ச்சி கொள்வதில் அர்த்தம் இருந்திருக்கும். நிலவும், சூரியனும் உலகத்துக்கு தெரியும் வானை ஆக்கிரமிக்கும் வஸ்துக்கள் என்பதால் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.

உள்ளாடை வாங்கக் கூட கடைப்பெண்ணிடம் பேச வெட்கப்படுவேன் என்பதால், அப்பா என்னை அடிக்கடி 'சபக்கோழை' என்று திட்டுவார். இந்த வார்த்தைக்கு சரியான பொருள் எனக்கு தெரியாது. ஆனாலும் புதியதாக அறிமுகமாகிறவர்களிடம் சகஜமாகப் பேச வெட்கப்படுவேன் என்ற அர்த்தத்தில் திட்டுகிறார் என்ற அளவுக்கு புரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு விபத்தாக இங்கே நான் ஏற்கனவே உறுப்பினர் என்றாலும் இந்தக் குழுமத்தை எனக்குத் தெரியாது. இந்தக் குழுமம் என்றில்லை, எந்த கடிதக்குழுமமும் எனக்கு பரிச்சயமில்லாதது. குழுமம் என்ற வடிவு என்னைக் கவராதது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இங்கு யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள் என்றும் தெரியாது. ஆசிப் அண்ணாச்சி, நந்தா, கென், பிரேம்குமார், அண்ணன் என்.சுரேஷ், மோகன் தாஸ் என்று எனக்கு வலையுலகிலும், நேரிலும் அறிமுகமான சிலர் இங்கிருக்கிறீர்கள் என்றளவுக்கு தான் தெரியும். பெரும்பாலானவர்களை தெரியாது என்பதால் புதியதாக என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்வதில் எனக்கு கொஞ்சம் சங்கோஜம் இருக்கிறது.

எனவே என்னை அறிந்த சில தோழர்களே என்னைப் பற்றிய அறிமுகத்தை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ (கடவுள் நம்பிக்கையைப் போலவே நல்லது கெட்டது என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை) மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் மனமகிழ்வேன். இவ்வாரத்தில் முடிந்தவரை என் அறிவுக்குட்பட்ட எனது எழுத்தாற்றலை இங்கே முயற்சித்துப் பார்க்க களம் அமைத்து தந்தவர்களுக்கு நன்றி!

குறிப்பு : இந்த முதல் கடிதத்திலேயே 'எனக்கு', '...றேன்', 'வேன்', 'என்', 'என்னை' என்று ஏகப்பட்ட தனிமனித விளிப்புகள் இருக்கிறதே என்று சலித்துக் கொள்ள வேண்டாம். இன்னமும் 'நான்' என்ற அகந்தையில் இருந்து வெளியே வருமளவுக்கு சித்தனாக 'நான்' மாறிவிடவில்லை என்பதால் குறைகளை பொறுத்தருளவும்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 7

காலநதிக்கரையும் காத்திருப்பும்
- தமிழ்நதி


விதைகள் எல்லாம் முளைப்பதில்லை
விண்மீன் யாவும் ஒளிர்வதில்லை
விடிந்தும் சில நாள் வெளிச்சமில்லை-விழி
கலப்பார் வழிகள் இணைவதில்லை

கால நதிக்கரையோரத்திலே இரு
கால்கள் நனைத்தொரு நாள் நடந்தேன்
ஆழத்திலே ஒரு குரல் கேட்டேன்-மனம்
மீளத் துளிர்த்திட நடை போட்டேன்
(விதைகள் எல்லாம்)

தூர நிலத்தினில் நீயிருந்தாய்-என்
துயரமெல்லாம் உன் தோள் சுமந்தாய்
ஈரவிழியிலே கனவானாய் பின்னோர்
இலையுதிர்காலத்தில் சருகானாய்
(விதைகள் எல்லாம்)

ஆழத்திலே ஓடிடும் நீரானாய்-எந்தன்
அடிமனசுள் நிகழ் போரானாய்
ஊருக்கு உன் முகம் தெரியாது-நம்
உறவெனும் கவிதையும் புரியாது
(விதைகள் எல்லாம்)

ஆயிரம் ஆயிரம் சாத்திரங்கள் -அன்பை
அழித்திட எழுதிய சூத்திரங்கள்
தீயினில் கருகியே போய் விடுமா?-நீ
திரும்பி வரும் ஒரு நாள் வருமா?

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 6

அங்காடி நாய் அலைச்சல்
- தமிழ்நதி


அலைதலின்போது நிலைத்த இருப்பிற்கும், நிலைகொள்ளும்போது அலைதலுக்குமாக
அங்காடி நாய்போல ஓடித்திரியும் முரண்மனநிலையைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி திடீரென அதைப் பாதியிலேயே
மூடிவைத்துவிட்டு ஒரு பயணம் கிளம்பிப்போய் மீண்டும் சில மாதங்கள் கழித்து
அதை வந்து தொடும்போது குற்றவுணர்வாக இருக்கிறது. வேரிலிருந்து
பலவந்தமாகப் பிடுங்கியெறியப்பட்டதன் பின்விளைவுகளிலொன்றே இதுவென, செலவு
குறித்த விசனம் மிகும்போதெல்லாம் சமாதானம் கொள்கிறேன். உறவுகள் மீதான
நம்பிக்கை நீர்த்துப்போகும்போது, அலைதலின் வழியாக சிதறிய சுயத்தைச்
சேகரிக்கிறேன் என்ற நெஞ்சறிந்த பொய்யையும் முயற்சித்துப் பார்த்ததுண்டு.
எது எவ்வாறு இருப்பினும், மனித நடத்தைகளின் விசித்திரங்களுக்கு நதிமூலம்
இருக்கவேண்டுமென்பதில்லையே.


கனடா அழகாகவும் சுத்தமாகவும் அமைதியாகவும் பெருந்தன்மையுடனும்
நாசூக்குடைய மனிதர்களுடனும் இருந்தது. போய்ச்சேர்ந்த காலமோ இளவேனில்.
சாலையோரங்களில் பூக்கள் நிறங்களை அவிழ்த்திருந்தன. செழித்தடர்ந்த
மரங்களின் பச்சைக்கு ஒப்புவமையில்லை. யாராவது தண்ணீர் தெளித்து
அமர்த்திச் சோறு போட்டால் மறுப்பின்றிச் சாப்பிட்டுவிடக்கூடிய அளவிற்கு
சாலைகள் சுத்தமாயிருந்தன. சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் மாலை நடைக்காக
மட்டுமே நடந்த மனிதர்களையன்றி வேறெவரையும் காணேன். இலங்கை, இந்தியா என்று
ஐந்தாண்டுகளைக் கழித்துவிட்டுச் சென்ற நான், நண்பர்களையும், சாலைகளையும்
கட்டிடங்களையும் மீள்கண்டுபிடிக்க வேண்டியவளாக இருந்தேன். காலநிலையும்
ஒப்பீட்டளவில் தோலுக்கு இதமாயிருந்தது. எனினும் என்ன…சென்றதிலிருந்து
நிலைகொள்ளவில்லை. ஐந்து நட்சத்திர விடுதியின் பிரமாண்டத்தோடும்
பகட்டோடும் பளபளக்கும் மனிதர்களோடும் ஒட்டமுடியாத கிராமத்தவன்
புழுதிபடிந்த தெருக்களுக்குத் திரும்ப ஏங்குவதை ஒத்திருந்தது மனம். ஒரு
சொல்லைத்தானும் வாசிக்க முடியவில்லை.


கண்ணாடிக் கட்டிடங்களில் நெளிநிழல் படர்த்தி வாகனங்கள் விரையும்
வேகநெடுஞ்சாலையைப் பார்த்தபடி எத்தனை நேரம்தான் அமர்ந்திருப்பது?
குற்றவுலகொன்றினுள் வாழ்ந்துகொண்டிருப்பதாக அச்சுறுத்தும், அடுத்தவர்
அந்தரங்கங்களில் கிளுகிளுக்கும், போரின் குருதி கொப்பளித்து
வரவேற்பறையில் வழியும் தொலைக்காட்சியைத் திறக்கவே அச்சமாக இருந்தது. சில
நாட்கள் முன்னர்தான் தாயொருத்தி தன் குழந்தைகள் இரண்டைக் கொன்றிருந்தாள்.
தோழியின் கார்த் தரிப்பிடத்தில் ஒரு கறுப்பினச் சிறுவன் சுடப்பட்டு
இறந்து கிடந்தான். நள்ளிரவு கடந்து போதையில் திரும்புவதை காலைக்கடன் போல
தவறாது செய்துகொண்டிருந்த கணவனை விவாகரத்து செய்யவிருப்பதை
உறவுக்காரியொருத்தி அழுகையோடு தொலைபேசியூடாகச் சொல்லியபடியிருந்தாள்.
மாதக் கணக்கில் நேரத்தையும் கோடிக்கணக்கில் பணத்தையும் செலவழித்து
வாங்கிய வீடுகள் வேலைகளிலிருந்து திரும்பும் மனிதர்களுக்காக இருள்
வெறித்துத் தவமிருந்தன. வார விடுமுறைகளுக்காக வாழ்க்கை
காத்துக்கிடப்பதைக் காணச்சகிக்கவில்லை. வசதிகள் நிறைந்ததெனினும்
வாழிடத்தை அந்நியமாக உணரத்தொடங்கும்போது இயக்கம் நின்றுபோய்விடுகிறது.


ஓட்டாத மண்ணை உதறிக் கடந்தோடும் வாய்ப்பும் திமிரும் சாத்தியமும்
உள்ளவர்களில் ஒருத்தியாயிருப்பதில் நிறைவே. எனினும், தொடர்மாடிக்
குடியிருப்பொன்றை சிறுகச் சிறுக 'வீடு'ஆக்கியபின் வெளியேறுவதில்
உள்ளுக்குள் சின்ன வருத்தம் இருக்கவே செய்தது. ஆடம்பரப் பொருட்கள்
நிறைந்த, குளிரூட்டப்பட்ட வசதியான வீட்டுச்சிறைகளைத் துறப்பதற்கான துணிவை
தனிமையன்றி வேறெதனால் அளிக்கவியலும்? அங்காடி நாய் தூக்கத்திலிருந்து
விழித்துக்கொண்டுவிட்டது. பயணப்பொதிகளை அயர்ச்சியோடு அடுக்கும்போதெல்லாம்
அதை (அங்காடி நாயை) நஞ்சூட்டிக் கொன்றுவிடலாம் போலிருக்கிறது.


உலவும் வெளிகள் விரிய விரிய, பழகும் மனிதர்கள் பெருகப் பெருக
பாதுகாப்பற்றதும் சுயநலம் மிக்கதுமான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற எண்ணம் உறுதிப்படுகிறது. அதிலும் போர் நடந்துகொண்டிருக்கும் ஒரு
நாட்டில் (அது சொந்த மண்ணே ஆனாலும்) தற்காலிகமாகப் போய்த் தங்க
நேரும்போது பயம் நிழல்போல தொடர்ந்துகொண்டேயிருப்பதை அவதானிக்க முடிகிறது.
கொழும்பின் காலி வீதியிலுள்ள சோதனைச் சாவடிகளைக்
கடந்துசெல்லும்போதெல்லாம் 'நிறுத்திவிடக்கூடாதே' என்ற பதட்டம் பரவியது.
முன்பாவது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு என்பதற்கு ஒரு மரியாதை (அநாவசியமான)
இருந்தது. அவசரகாலச் சட்டம் கடுமையாக்கப்பட்ட பிற்பாடு கடவுச்சீட்டாவது
கத்தரிக்காயாவது! சனக்கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்குப் போவதைத்
தவிர்க்குமாறு நண்பர்கள் சொன்னார்கள். எங்கே எப்போது குண்டு வெடித்து
சதைத் துண்டுகளாவோமோ என்ற பீதி நிலவுகிறது. வீதிகளில்
அலறியடித்துக்கொண்டு போகும் 'அம்புலன்ஸ்'வண்டிகளின் சத்தத்தைக்
கேட்கும்போது, 'எங்கே? எத்தனை?'என்று நம்மையறியாமல் கேட்டுவிடுகிறோம்.
உயிர்களின் மதிப்பு வெறும் இலக்கமாகிவிட்டிருக்கிறது. இறப்பின் எண்ணிக்கை
நம்மைப் பாதிப்பதும் இனம்சார்ந்த விசயமாயிருக்கிறது.


அடையாள அட்டை கையில் இல்லாமல் தெருவில் இறங்குபவர்கள் இல்லாமற்
போகிறார்கள். சில சமயங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும்கூட.
தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனொருவன் திடீரெனக் காணாமல் போனான்.
அந்தக் குடும்பம் காவல் நிலையங்களில் காவல் கிடந்தது. தெஹிவளைக்
கடற்கரையில் பிணமொன்று கிடப்பதாகவும் வந்து உறுதிப்படுத்தும்படியும்
தகவல் வர ஓடினார்கள். அந்தப் பிணம் அவனுடையதல்ல என்று தெரிந்து தெளிந்த
பிறகு, சிறையில் எனினும் உயிருடன் இருந்தால் போதுமென்று
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


விமான நிலையத்திலிருந்து வெளிவந்ததும் சென்னையின் போக்குவரத்து
மூச்சுமுட்டுகிறது. ஒலிப்பான்கள் காதைக் கிழிக்கின்றன. வெக்கை 'வந்தாயா
வா'என்று முகத்தில் அறைகிறது. உயிரே போவதைப் போன்ற அவசரத்தில் சாலையைக்
கடக்கும் மனிதர்கள் மாநகரம் மாநகரம் என முரசறைகிறார்கள். எனின் என்ன… வாழ
அழைக்கிறது என்னறை. எழுது மேசையின் வழி தெரியும் பூவரசு மஞ்சள் பூவோடு
காற்றில் இழைகிறது. மழை இருந்திருந்து 'வரட்டுமா… வரட்டுமா'என்று செல்லம்
பொழிகிறது. அங்காடி நாய் தற்காலிகமாகத் தூங்கவாரம்பித்திருக்கிறது. அது
எழுந்திருந்தால்தான் என்ன… அநிச்சயத்தினால்தானே வாழ்வு அழகும் பொருளும்
பொருந்தியதாயிருக்கிறது?


நன்றி: உயிரோசை இணைய இதழ்

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 5

நிலம் மற்றுமோர் நிலா
- தமிழ்நதி


இருபுறமும் வேகமாகப் பின்னகரும் காடுகள், கண்ணிவெடி குறித்த அபாய
அறிவிப்புப் பலகைகள், நிர்விசாரமாக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள்,
சோதனைச்சாவடிகள்… இவை தாண்டி வவுனியாவிலிருந்து 'ஏ ஒன்பது' வீதியில்
விரைந்துகொண்டிருந்தபோது, கனவின் சாலையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவே
உணர்ந்தேன். காரினுள் ஒலித்த பாடல்கள் வேறு, என்னைக் காலங்களுள் மாற்றி
மாற்றி எறிந்துகொண்டிருந்தன. எக்கணமும் விழி தளும்பிச் சிந்திவிடுவேன் என
அஞ்சினேன்.

முன்னொருபோதில், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பேருந்தொன்று சில
மாதங்களுக்கொரு தடவை இரணைமடுச் சந்தியில் என்னை உதிர்த்துவிட்டுப்
போகும். திருவையாறு நோக்கிச் செல்லும் பாதையில் மெலிந்ததோர் சிறுபெண்ணாய்
களைப்போடு நடந்துபோவேன். அப்போது திருநெல்வேலிப் பல்கலைக்கழகத்திற்கு
அருகில் வாடகைக்கு அறையெடுத்து நாங்கள் நால்வர் தங்கியிருந்தோம்.
விடுமுறை நாட்களில் எல்லோரையும் முந்திக்கொண்டு ஆரவாரமாக நான்
கிளிநொச்சிக்குக் கிளம்பிப் போவதற்கு அப்பா-அம்மாவைத் தவிர்ந்த காரணங்கள்
சிலவும் இருந்தன. வயல்வெளி நடுவில் அமைந்த குடிசையின் முன் குருவிகள்
தத்தி நடை பழகும். சாணத்தால் மெழுகிய வாசலிலே 'எனக்கு இதைவிட்டால் வேறு
வேலையில்லை' என்ற பாவனையில் மயிலொன்று வந்து ஆடிவிட்டு தானியம்
கொறித்துவிட்டுப் போகும். அதன் கழுத்து நொடிப்பும் தோகை விசிறலும்
வித்துவக்கர்வமும் கைதேர்ந்த நாட்டியக்காரிக்குத் துளியும் குறைந்தனவல்ல.
காற்றடிக்க வயல் சிலிர்த்தடங்கும் மாலைப்பொழுதுகள், என்றோ எங்கோ
கடல்கடந்துபோனவனின் ஞாபகக்கணப்பை ஊதித் துன்பம் கிளர்த்திய நாட்கள் அவை.
இவையெல்லாவற்றையும் விட மேலதிக காரணமாய் நிலாவும் தோழிகளும்
இருந்தார்கள்.

கிழக்கில் ஏதோவொரு கிராமத்தில் படித்துக்கொண்டிருந்த நிலா வடபுலத்தை
வந்தடைந்த காரணம் அநேக தமிழர்களுக்கு நிகழ்ந்ததும் அவர்களுக்குப்
பழகிப்போனதுமான கதைதான். சம்பவங்கள் வேறுபடலாம். வலி ஒன்றுதான். எப்படியோ
அவள் எங்கள் வீட்டோடு ஒட்டிக்கொண்டாள். நிலா நல்ல உயரம். பலசாலியும்கூட.
துப்பாக்கியைத் தோளில் கொழுவிக்கொண்டு சீருடையின் கால்களை
மடித்துவிட்டபடி வயல் வரப்பிலேறி நடக்கும்போது நான் கூட கூட ஓட
வேண்டியிருக்கும். என்னைவிட இரண்டே வயது இளையவள். என்னை 'நித்திலா'என்றே
அழைத்தாள். 'அம்மா…!'என்றழைத்தபடி அந்தக் குடிசையினுள் தலையைத்
தாழ்த்திக்கொண்டு அவள் நுழையும்போது எனக்குள் ஒரு பரவச அலையடிக்கும்.
அவள் என்னால் நிகழ்த்த முடியாததையெல்லாம் நிகழ்த்திக்
காட்டுபவளாயிருந்தாள். அவளை நான் வியப்பின் கண்களால்
தொடர்ந்தவாறிருந்தேன்.

"அம்மா! நீங்கள் வைக்கிற கத்தரிக்காய்க் குழம்பு நல்லாயிருக்கு" என்று
அவர்களில் யாராவது சொல்வார்கள். அம்மாவின் கண்கள் கலங்கும். தனது சமையல்
நன்றாயிருப்பதாக யாராவது சொல்லக் கேட்பதுதான் அம்மாவின் உச்சபட்ச
சந்தோசமோ என்று நினைக்கும்படியாக நெகிழ்ந்துபோவார்.

"யார் பெத்த பிள்ளையளோ…"என்ற வார்த்தைகளைத் தொடரும் பெருமூச்சை பலதடவைகள்
நான் அவதானித்திருக்கிறேன்.

அந்தப் பெண் போராளிகளை அவர்களறியாதபடி நான் கவனிப்பதுண்டு. யாழினியையும்
அமுதாவையும் தனித்துக் காணவியலாது. அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும்
அழுதழுது சமாதானமாவதும் வழக்கமாயிருந்தது. ஆழியாளுக்கு மோட்டார்
சைக்கிளில் ஏறி காற்றினைக் கிழித்துப் பறப்பதில் ஆனந்தம். அதற்காக
பொறுப்பாளரிடம் அடிக்கடி தண்டனையும் பெறுவாள். ஆனால் மறுபடி மோட்டார்
சைக்கிளில் ஏறியமரும் வரைதான் அது ஞாபகத்திலிருக்கும். அமுதா நன்றாகச்
சாப்பிடுவாள். அவள் வயிற்றுக்குள் பூதம் இருப்பதாக தோழிகளிடையே ஒரு
பரிகாசக் கதை உலவியது. நிலமகள் நன்றாகக் கவிதை எழுதுவாள். அதிகம்
பேசமாட்டாள். மௌனமும் சிரிப்பும்தான் பெரும்பாலும் அவளது மொழி. அடித்துப்
பிடித்து அவர்கள் பழகுவதும் சிரிப்பதும் இழப்புச் செய்திகள் வரும்போது
விக்கித்து துக்கித்துக் கிடப்பதும்.. பின் தெளிவதும்… அவர்களாக நான்
இருக்கமுடியாமற் போனதில் உள்ளுக்குள் எனக்கு வருத்தந்தான்.

"வீட்டை விட்டிட்டு இருக்கிறது கஷ்டமா இல்லையா நிலா"

அவள் சிரிப்பாள். பார்வையைத் தொலைவனுப்பி சில கணங்கள் மௌனமாக இருப்பாள்.
கண்களில் நீர் மெலிதாகத் திரையிடுவதாகத் தோன்றுவது என் கற்பனையாகவும்
இருக்கலாம். தேவதைகள் அழக்கூடுமா என்ன…?

"எனக்கு நீங்கள் எல்லாரும் இல்லையா…?"

"எண்டாலும்…."

அந்நாட்களில் நான் உடலும் மனமும் நொய்மையான நோஞ்சானாயிருந்தேன். அவர்கள்
இலாவகமாகச் சுமந்துசெல்லும் துப்பாக்கியை ஐந்து நிமிடங்களுக்கு மேல்
என்னால் தூக்கி வைத்திருக்கவியலாது. நிலாவிடம் கேட்டால் 'அதெல்லாம்
பயிற்சியும் பழக்கமும்'என்பாள்.

ஒரு தடவை விடுமுறையைக் கழிக்கவும்-களிக்கவும் வீடு சென்றிருந்தபோது
அவர்களில் எவருமே வரவில்லை. அம்மாவின் வழக்கமான பாராயணங்கள்,
முறைப்பாடுகள் எதனையும் காணோம். எதிர்பார்ப்பு மங்கித்தேய்ந்த இரவில்
அரிக்கன் லாம்பின் திரியை இழுத்து அணைத்துவிட்டு இருளில் கிடந்தேன்.
மெல்லிய விசும்பல் ஒலி… அம்மா அழுதுகொண்டிருந்தா.

"அம்மா! ஏன் அழுகிறீங்கள்?"

"அந்தப் பிள்ளை நல்லாச் சாப்பிடும். கேட்டுக் கேட்டுச்
சாப்பிடும்…மீன்குழம்பெண்டால் சரியான விருப்பம் அதுக்கு"விசும்பல்
அழுகையாக வெடித்தது.

"சண்டைக்கெண்டு மன்னாருக்குப் போன இடத்திலை வயித்திலையும் நெஞ்சிலையும்
குண்டு பாய்ஞ்சு….. உடம்பை நேரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு
போய்ட்டினமாம்… அங்கைதான் தாய்தேப்பன் இருக்கினம்"

"அமுதா…!" அதிர்ந்தது வயிறு. காற்று கூரையை உசுப்பி உசுப்பி ஊளையிட்டது.
எழுந்து வெளியில் வந்தேன். அன்றைக்கும் இரவு அழகாகத்தானிருந்தது.
காட்டிற்குள்ளிருந்து ஏதோவொரு பறவை இடைவிடாமல் கூப்பிட்டது.
விநாடிக்கணக்கு பிசகாமல் இன்னொரு பறவை பதிலளித்துக்கொண்டிருந்தது.

"யாழினி…! நீ எவ்வளவு அழுதிருப்பாய்? தனித்துத் திரியும் அன்றில் பறவையானாயடி…!"

"ஏய்!அமுதான்ரை வயித்துக்குள்ளை பூதம் இருக்குமோ…"

அதைக் கேட்டு அவள் சிரிப்பாள். நெருக்கி நெருக்கி அமைந்த பற்கள் தெரிய
அழகிய வெள்ளந்தியான சிரிப்பு அது! அநேக கறுப்பு நிறமானவர்களுக்கு
எப்படியோ அழகிய பற்கள் வாய்த்துவிடுகின்றன என்று நான் அடிக்கடி
நினைத்துக்கொள்வதுண்டு.

நான்கைந்து நாட்கள் கழித்து, நன்றாக இருட்டியபிறகு நிலா மட்டும்
சோர்ந்துபோய் வந்தாள். மற்றவர்கள் எங்கேயென்றதற்கு 'யாழ்ப்பாணத்தில்'
என்றாள். அமுதாவின் உடலை விதைகுழியில் இறக்கியபோது யாழினி
மயங்கிவிழுந்துவிட்டதைச் சொன்னாள். சாப்பிடும்போது உள்ளிருந்து ஒரு கேவல்
வெடித்தது. பாதியில் எழுந்துவிட்டாள். எனக்கும் அழுகை வந்தது. அன்றைக்கு
வயல் வரப்பில் அமர்ந்து 'என்னை நினைத்து யாரும் கலங்கக்கூடாது'என்ற பாடலை
உரத்துப் பாடினாள். அவள் பாடிய விதம் முகம் தெரியாதவர்களிடம் சூளுரைப்பது
மாதிரியிருந்தது. குரலைக் கத்தியாக்கி சண்டை போடுகிற மாதிரியுமிருந்தது.
இந்த நேரம் ஏனிவள் பாடுகிறாள் என்று உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகக்கூட
இருந்தது. அந்தக் குரலில் நெஞ்சு பதைத்தது.

"இனி இஞ்சை வரக்கிடைக்குதோ தெரியாது நித்திலா"

"ஏன்…?"

"எங்கடை குறூப்பை மன்னாரிலை போய் நிக்கச் சொல்லியிருக்கு"

நெருங்கி என்னை இறுக அணைத்தாள். அந்தக் கரடுமுரடான ஆடைகளில் புல் வாசனை
வீசியது. அப்பா வயலைச் சுற்றிவரப் போயிருந்தார். அம்மாவைக் கட்டியணைத்து
விடைபெற்றுக் கிளம்பிவிட்டாள். வயல் வரப்பில் அவள் வேகமாக நடந்து
கோட்டுச் சித்திரமென இருளுள் கரைந்தது இன்றைக்கும் நினைவிலிருக்கிறது.

அதன்பிறகு கிளிநொச்சிக்குப் போவதைக் குறைத்துக்கொண்டேன். ஏதோவொரு பயம்
என்னைப் பின்னின்று இழுத்தது. அப்பாவும் அம்மாவும் எப்போதாவது வந்து
பார்த்துவிட்டுப் போனார்கள். வாழ்வு அநிச்சயத்தில் கழியும் நிலை வர வரத்
தீவிரமடைந்தது. ஊர் பயத்தில் உறைந்து கிடந்தது. இன்றைக்கு எந்த
வீட்டிலிருந்து ஒப்பாரிச்சத்தம் கேட்குமோ என்றஞ்சிக் கண்விழிக்கும்படியாக
காலைகள் பதட்டத்துடன் விடிந்தன. தெரிந்த பல இளைஞர்களை சடலங்களாகப்
பார்க்க நேரிட்டது. சில பெண்களையும். என்னோடு படித்தவர்களில் ஒருத்தி
கால்களில் குருதி ஒழுக மார்பில் பற்தடங்கள் பதிந்திருக்க விழிகள் வானம்
பார்த்து நிலைத்திருக்கக் கிடந்தாள். படிப்பு பாதியில் நின்றது. நான்
கொழும்பிற்குப் போனேன். பிறகு கனடாவிற்குப் போனேன். அப்பா-அம்மா
கொழும்புவாசிகளானார்கள். மாரிகளில் மழை ஒழுகும் இடங்களுக்கு ஓடி ஓடிச்
சட்டி வைத்து வாழ்ந்த அந்த வயல் நடுவிலான குடிசையைக் காலம் தின்றது.

ஞாபகங்களைத் தின்னும் சக்தி மட்டும் காலத்திற்கு இருந்திருந்தால் நிலாவை
நான் மறந்திருப்பேன்.

அன்றிரவு அவள் பாடியது… கடவுளே! அது என்ன குரல்! தனிமையை கோபத்தை
ஆற்றாமையை துயரத்தை ஊற்றி நெய்த குரலது!

நிலா இன்னமும் வன்னியில்தானிருப்பதாக நண்பர்களில் ஒருவர் சொல்லத்
தெரிந்துகொண்டேன். இயக்கத்தில் பெரிய பொறுப்பொன்றில் இருக்கும் ஒருவரை
மணந்துகொண்டதாகவும் அவரே சொன்னார்.

வரப்புகளில் சறுக்காமல் வேகநடை நடக்கும் நிலா… 'நித்திலா…
நித்திலா…'என்று நிமிடத்திற்கொரு தடவை பெயர் சொல்லியழைத்தே பேசும்
நிலா…தனது துப்பாக்கியை எந்நேரமும் துடைத்துத் துடைத்துப்
பளபளப்பாக்கிக்கொண்டிருந்த நிலா… இப்போது எப்படி இருப்பாள்…?

இரணைமடுச் சந்தியில் காரை நிறுத்தச் சொன்னேன். ஏதேதோ ஞாபகங்கள்
குளிர்மேகங்களைப் போல கடந்துபோயின. திருவையாறு செல்லும் பாதையில்
நடந்துபோய்க்கொண்டிருந்த மெலிந்த சிறு பெண்ணில் வாஞ்சை பெருகியது. அவள்
இறந்தகாலத்தைய என்னை ஒத்திருந்தாள். ஓடிப்போய்க் கைகளைப் பற்றிக்கொள்ள
வேண்டும் போலிருந்தது. நாகரிகமான பைத்தியம் போலிருக்கிறது என்று அவள்
நினைத்துக்கொள்ளக்கூடும்.

கிளிநொச்சி நிறையவே மாறியிருந்தது. ஒரு மாதிரிநகரம் போலிருந்தது.
காய்ச்சல் காய்ந்த பிறகு வரும் புதுத்தோலும் பொலிவுமாய் நிமிர்ந்திருந்தன
கட்டிடங்கள். வெயில் மட்டும் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தது. நிலாவின்
கணவனை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. வழிசொல்லியவர்களின் கண்களில்
சந்தேகம் மின்னியது. ஒரு இளைஞன் எங்களைப் பின்தொடர்ந்தவாறிருந்ததையும்
அவதானிக்க முடிந்தது. மேடும் பள்ளமுமான அந்த வீதி வழியாக கார்
விழுந்தெழும்பிப் போயிற்று. அந்த வீட்டின் முன் கார் நின்றபோது ஆறு வயது
மதிக்கத்தக்க பெண் குழந்தையொன்று ஓடோடிவந்து பார்த்துவிட்டு உள்ளே
ஓடிற்று. நிலா வெளியில் வந்தாள். ஒருகணம் திகைப்பில் வாய்பொத்தினாள்.
மறுகணம் கைகளைப் பிடித்துக்கொண்டு அழவாரம்பித்து விட்டாள். சீருடையிலேயே
பார்த்துப் பழகியிருந்த என் கண்களுக்கு அவள் தோற்றம் முற்றிலும்
புதிதாயிருந்தது.

"இப்பதான் நினைவு வந்ததா…"என்ற கேள்வியை பத்துத் தடவையாகிலும் கேட்டிருப்பாள்.

"நிறத்து உடம்பு வைச்சு… அடையாளமே கண்டுபிடிக்க முடியேல்லை… நித்திலா நீ…
நீ எண்டு கூப்பிடலாமோ…"

"வேறை எப்பிடிக் கூப்பிடுறது… நீ மட்டுமென்ன… சட்டையில வேறை ஆரோ
மாதிரியிருக்கிறாய்"

நான் சிரித்துக்கொண்டிருந்தேன். கண்களில் நீர் தன்னிச்சையாக
வழிந்துகொண்டிருந்தது. இருபதின் தொடக்கத்தில் இருந்த இளம் பெண்ணொருத்தி
உள்ளிருந்து வந்தாள். அவளது இடுப்பில் இருந்த குழந்தை 'அம்மா'என்றபடி
நிலாவிடம் தாவியது. புதியவர்களைக் கண்ட மிரட்சியில் அவள் தோள்களில் முகம்
புதைத்தது.

"இது ரெண்டாவது சூரன்… சரியா அப்பா மாதிரி"

"அது என்ரை தங்கச்சி" அறிமுகப்படுத்தப்பட்டவள் சின்ன நிலா போலிருந்தாள்.
வந்தவர்களுக்குத் தேநீர் வைக்கவென்று உள்ளே போனாள்.

நான் நிலாவை வியப்போடு பார்த்தேன். அதுவரை எங்கள் இருவரையும் மாறி மாறிப்
பார்த்தபடி திண்ணையிலிருந்து குதிப்பதும் ஏறுவதுமாயிருந்த பெண் குழந்தையை
இழுத்து நிறுத்தினாள்.

"இது எங்கடை மூத்தது வானதி… நல்லாச் சித்திரம் வரைவா… ஒரு இடத்திலை
சும்மா இருக்கமாட்டா.. முதலாம் வகுப்புப் படிக்கிறா"

"இவரைத் தெரியுந்தானே உனக்கு…"அவள் தன் கணவனைப் பற்றிப் பேசத்
தொடங்கினாள். நான் வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தேன். அவள் கழுத்தில்
மஞ்சள் கயிறொன்று மட்டுமிருந்தது. வேறு நகைகளில்லை. பேச்சினிடையில்
அமுதாவின் பெயர் வந்தது. தேங்காய் துருவுவதை நிறுத்திவிட்டு
'ஞாபகமிருக்கா…?'என்றாள்.

"அமுதாவின்ரை சிரிப்புக் கூட நல்லா நினைவிருக்கு"என்றேன்.

"கொஞ்ச நாளிலை யாழினியும் கரும்புலியா பெயர்பதிஞ்சு போயிட்டா. ஆழியாள்
கடற்சமரிலை வீரச்சாவு. நிலமகள் திருகோணமலையில இருக்கிறதாக்
கேள்விப்பட்டன். புதுப் புதுப் பிள்ளையள் நிறையப் பேர் வந்திருக்கினம்"

நிலாவின் மகள் வானதி கையில் ஒரு பொருளோடு வந்து நின்றாள். உற்றுக்
கவனிக்க ரவைக்கூடு எனத் தெரிந்தது. குண்டுகள் அடங்கிய அதை விளையாட்டுப்
பொருள்போல கையில் வைத்துச் சுழற்றிக்கொண்டிருந்தாள். எனக்குள் வினோதமான
பயமொன்று பரவியது.

"அந்த அறைக்குள்ளை போகவேண்டாமெண்டெல்லோ சொன்னனான்"அதட்டினாள். வானதியோ
இன்னும் உசாரடைந்தவளாக ஓடிப்போய் தூக்கமாட்டாமல் இன்னொரு பொருளைத்
தூக்கிவந்தாள். நான் பதறினேன். நிலா யாரையோ விளித்து சாவதானமாகச்
சொன்னாள்.

"நிலவன்! அந்த அறையை ஒருக்காப் பூட்டிவிடுங்கோ"

இளம்வயதுப் போராளியொருவன் வந்து வானதியைத் தூக்கி உயரத்தில் எறிந்து
விளையாட்டுக் காட்டி அதை நைச்சியமாக வாங்கிக்கொண்டு போனான்.

"வானதி எண்டொரு அக்கா நல்லா கவிதை எழுதுவா. ஆரம்பகாலப் போராளிகளிலை
ஒராள். நீயும் கேள்விப்பட்டிருப்பாய்… அவவின்ரை ஞாபகத்திலை இவளுக்குப்
பெயர் வைச்சது… சரியான வால்… துறுதுறுவெண்டு எந்தநேரமும்"

ஆட்டிற்குக் குழை வைக்கவென்று எழுந்துபோனாள் நிலா. சீருடையும்
துப்பாக்கியுமாக நான் பார்த்த நிலா இல்லை இவள் என்று தோன்றியது. கண்கள்
மின்ன அன்றிரா சன்னதங்கொண்டவளாகப் பாடிய நிலாவை நான் எதிர்பார்த்து
வந்தேனா… கொஞ்சம் ஏமாற்றமாகக்கூட இருந்தது. கணவன்… பிள்ளைகள்… சமையல்…
ஆடு… தேவதைகளின் பாதங்கள் மண்ணைத் தொடுவதை சாதாரணர்கள் சகிப்பதில்லை.

சாப்பிட்டுவிட்டுப் பிள்ளைகள் தூங்கிவிட்டார்கள். 'ங்…..'என்ற
இராகமிழுத்தலோடு வயதான குரலொன்று பக்கத்து வீட்டில்
தாலாட்டிக்கொண்டிருந்தது. முற்றம் முழுவதும் ரோஜாவும் மல்லிகையுமாய்
சொரிந்திருந்தன. நட்சத்திரங்களின் ஒளி படர்ந்திருந்த அந்த நிலம்
அவ்விரவில் உன்னதக் கனவொன்றின் சாயலில் பொலிந்தது.

"எத்தினை மணிக்கு அவர் வருவார்?"நான் கேட்டேன்.

"அவர் இஞ்சை இல்லை நித்திலா… மட்டக்களப்புக்குப் போட்டார்… அங்கை சண்டை
இப்ப மும்முரம்"

"எப்ப வருவார்…?"

"மாசக்கணக்கிலை ஆகும்"

நான் வியப்போடு அவளைப் பார்த்தேன். அவள் நட்சத்திரங்களைப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.

"உனக்குப் பயமா இல்லையா நிலா…"தணிந்த குரலில் கேட்டேன். இருந்தும் எனது
குரல் மௌனத்தின் அழகைச் சிதைக்கவே செய்தது.

"வேறை வழியில்லை நித்திலா… எத்தினை பிள்ளையள் செத்துப்போச்சுதுகள். என்ரை
மடியிலையே நாலைஞ்சு உயிர் போயிருக்கு. அக்கா அக்கா எண்டு எனக்குப்
பின்னாலை திரியும் ஒரு பிள்ளை. மிதிலா எண்டு பேர். அதின்ரை உடம்பைக் கூட
முழுசா எடுக்க முடியேல்லை. ஒரு கை மட்டும் கிடைச்சுது… அந்தப்
பிள்ளையின்ரை அண்ணாவும் ஒரு மாவீரன். அந்தத் தாய் என்னைக்
கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுத அழுகை… இப்ப நினைச்சாலும் இதெல்லாம்
விட்டுப்போட்டு எழும்பி ஓடச் சொல்லுது.. ஆனா…"நிலாவின் கைகள் மடியில்
கிடந்த மகனின் தலையைக் கோதின. விரல்கள் வழி தாய்மை சொட்டுவதைப்
பார்த்தபடியிருந்தேன்.

பக்கத்து வீட்டில் தாலாட்டின் சுநாதம் நின்றிருந்தது. தென்னோலைகள் விர்
விர்ரென ஒன்றுடன் ஒன்று உராயும் ஓசை கேட்டது.

"இவனுக்கு மூண்டு வயசாகட்டுமெண்டு பாத்துக்கொண்டிருக்கிறன். பிறகு அம்மா
வந்திருந்து பாத்துக்கொள்ளுவா."

உணர்ச்சிகளின் கண்ணாடியாகிய அந்த விழிகள் ஈரத்தில் மினுங்குவதைப்
பார்த்தேன். எனக்குள் அமுதா,யாழினி,நிலமகள்,ஆழியாள்…. சற்றுமுன்னரே
அறிமுகமான மிதிலா எல்லோரது ஞாபகமும் படம்போல வந்துபோயிற்று. சற்றுமுன்
இவளைப் பற்றி நான் என்ன நினைத்துக்கொண்டிருந்தேன் என்பது நினைவில்
வந்தது. விம்மி விம்மி அந்த இரவை நனைத்து அழவேண்டும் போலிருந்தது.
நிலாவின் விரல்களைப் பற்றிக்கொண்டு வெப்பியாரம் வழியும் குரலில் ஒன்றை
மட்டுமே சொல்ல முடிந்தது.

"எனக்கு என்னைப் போலை ஆக்களை நினைக்க வெக்கமா இருக்கு நிலா"

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 4

ஞாபக மழை
- தமிழ்நதி


இங்கு மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. சிறுதுளியாய் தொடங்கி பெருமழையாய்
பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. இடியும் மின்னலுமாய் வானம்
அதகளப்படுகிறது. நீர்க்குழந்தையாய் செல்லம் கொண்டாடி உள்ளே குதித்த மழையை
யன்னல், கதவுகளைப் பூட்டி நிறுத்திவிட்டேன். எதைப் பூட்டி உன் நினைவுகளை
வெளியில் அனுப்புவது என்று தெரியவில்லை. பெருகிப் பெருகி வழிகிறது.
விடிந்ததும் வடிந்துவிடும் வெள்ளம்போல பிரிந்ததும் ஞாபகங்களும்
மறந்துபோனால் எவ்வளவு நன்றாகவிருக்கும். ஒளிவாளால் வானைப் பிளக்கும்
மின்னலென பளிச்சென்று பதறி ஓடுகிறது உன் நினைவு.

அந்தக் கட்டிடத்தின் வராந்தாவில் நானும் நீயும் மழை வெளிக்கக்
காத்திருக்கிறோம். உன்னோடு தனித்திருக்கும் ஒரு நிமிடத்தையும் இழக்க
விரும்பாமல் நான் 'போவோம் போவோம்'என்கிறேன். நீயோ எனக்கு காய்ச்சல்
வந்துவிடும் என்கிறாய். 'காதலைவிடப் பெரிய காய்ச்சல் இருக்கிறதா
என்ன?'என்று மனசுக்குள் நினைத்துக்கொள்கிறேன். மழை அன்றைக்கென
அடம்பிடித்துப் பொழிகிறது. அரை மணிக்குள் சாலைகள் நதிகளாகிவிட்டன. பகல்
இருட்டிவிட்டதாய் பாவனை பண்ணுகிறது. ஈற்றில் நனைந்தபடி அறையை அடைகிறோம்.
விடுதியறை விளிம்புகளில் அமர்ந்து வட்டக் கருமணிக் கண்களை உருட்டி
உருட்டி புறாக்கள் சிறகுலர்த்துகின்றன. ஒன்றின் சிறகினுள் மற்றது
தலைவைத்து குளிர்காய்கிறது. யன்னல் வழி தெரிந்த ஈரச்சாலையில் தலைகீழாக
நெளிந்தோடுகின்றன வாகனங்கள். நாமிருவரும் அன்று புறாக்களாயிருக்க
ஆசைப்பட்டோம்.

விரையும் பேருந்தின் கண்ணாடிகள் மீது அவசரமாய் மழை
எழுதிக்கொண்டிருக்கிறது. வழுக்கி வழுக்கிச் செல்லும் தண்ணீர்ப் பாம்புகளை
நினைவுறுத்துவதாக நான் உன்னிடம் சொல்கிறேன். கடலினுள் விழும் மழையைச்
சற்றுநேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எழுதுதாள் கேட்கிறாய் என்னிடம்.
'நீ பெரிய கவிஞனாக்கும்'என்று நான் வழக்கம்போல உன்னைக் கேலி செய்கிறேன்.
'நீ மட்டுமென்ன…?'என்ற உன் விழிகளுள் இறங்கிக் காணாமல் போய்விடவேண்டும்
போலிருந்தது.

அன்றொருநாள் இரவு எனது வீட்டின் படிகளில் நீ இறங்கிச் சென்றபோதும் மழை
பொழிந்துகொண்டிருந்தது. கையசைத்துவிட்டு காரில் ஏறுகிறாய். பல்கனியில்
நின்று மற்றவரறியாதபடி உன் கண்களைப் பார்க்கிறேன். நீண்ட விழிகளின்
கரையூறிய ஈரம் மழைத்துளிதான் என்று என்னை நான் தேற்றிக்கொண்டேன்.
தொலைபேசியில் உன் கண்ணீரை ஒப்புக்கொண்டாய். ஆண்கள் அழக்கூடாதென
இவர்களெல்லாம் சொல்லும் விதியை அடிக்கடி முறிப்பவன் நீயாகத்தானிருக்கும்.

இருபுறமும் மரங்கள் தலை வளைத்து முத்தமிடும் சாலையில் காரில்
விரைந்துகொண்டிருக்கிறோம். அடை மழை. வெளிப்புறத்தை மறைக்கிறது கனத்த
நீர்த்திரை. வயல்கள், மரங்கள், நீர்நிலைகள் எல்லாம் மறைந்து நிறமழிகிறது
உலகு. அன்றைக்குப்போல் என்றும் அத்தனை விரைவாய் அந்நகரைச்
சென்றடைந்ததில்லை என்று நாம் பிறகு பேசிக்கொண்டோம்.

அங்கே மழை பொழிகிறதா? அடிக்கடி என்னை நினைத்துக்கொள்கிறாயா? அந்தப் பாலை
வெளியிலும் புறாக்கள் தத்தித் திரிகின்றனவா? அவற்றின் ரோஜா நிறத் தந்தக்
கால்களை கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போலிருப்பதாக நாம்
பேசிக்கொண்டதுன் நினைவில் வருமே…! மழை மண்ணைக் கிளர்த்துவதுபோல மனசையும்
கிளர்த்துகிறது. நம்வரையில் மழை என்பது மழை மட்டுமில்லை. பிரிவும்
அப்படித்தான் இல்லையா என் அன்பே!

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 3

புத்தக வாசனை
- தமிழ்நதி


அப்பாவின் வேலை காரணமாக, பன்னிரண்டாம் வகுப்புவரை நான் பதினொரு
பள்ளிக்கூடங்களில் படிக்க நேர்ந்தது. நாங்கள் வீடு மாறி வேறு
ஊர்களுக்குச் செல்லும்போதெல்லாம் தளபாடங்களுக்கு அடுத்தபடியாக
அழிச்சாட்டியமாக இடத்தைப் பிடித்துக்கொண்டு கனமான மலத்தியோன் பெட்டிகளும்
விடாப்பிடியாக வரும். 'அப்பாவின் புத்தகங்கள்'என்பதன்றி அதற்கு
முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அலைந்து திரிவது சிறுவயதிலிருந்தே எனக்கு
விதிக்கப்பட்டுவிட்டதோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. வீட்டுச்
சாமான்களுக்கு நடுவில் அந்தப் பெட்டிகள் மீது ஒய்யாரமாய் அமர்ந்து வேறூர்
சென்ற நாட்களில் எனது கவலையெல்லாம் புதிதாகக் குடியமரப் போகும் வீட்டில்
மரங்கள் இருக்குமா என்பதுதான். சின்ன வயதிலிருந்தே மரங்கள் மீது
அப்படியொரு ஆசை. இயற்கையின் மீதான விருப்புத்தான் வாசிப்பிற்கும்
எழுத்திற்கும் ஒருவகையில் உந்து கருவியாக இருந்திருக்க வேண்டும்.
இப்போதும் மரங்களற்ற வீடுகளை உயிரற்றவையாகவே உணரமுடிகிறது.

விருத்தெரிந்த காலத்தில் மலத்தியோன் பெட்டிகளுள் மனிதர்கள் இருப்பதைக்
கண்டுபிடித்தேன். காகிதங்களில் வரிவடிவில் இருந்த அவர்கள் அழுதார்கள்@
சிரித்தார்கள்@ காதலித்தார்கள்@ வஞ்சித்தார்கள்@ நேர்மையாயிருந்து
வறுமையில் வாடினார்கள்@ கொலைகளும் தற்கொலைகளும் செய்தார்கள்.
பூரணி-அரவிந்தனும்(குறிஞ்சி மலர்) வந்தியதேவன்-குந்தவையும் (பொன்னியின்
செல்வன்), வேதா-நச்சியும் (ஜீவகீதம்), தாரணி-சூர்யாவும்(அலையோசை),
தியாகு-ஸ்வப்னா(தாயுமானவன்) என்னோடு வாழத்தொடங்கினார்கள். அது வேறொரு
உலகம். நான் கதைமாந்தர்களைப் போல வாழ ஆசைப்பட்டேன். கனவு செறிந்த
கண்களுடன் சுற்றியிருப்பவர்களை விட்டு விலகியிருக்க ஆரம்பித்தேன்.
சிறுவயதில் வாசிப்புடன் தர்க்கிக்கப் போதிய அறிவு இருக்காது. ஆதலால்
வாசிப்பினால் மனிதர்கள் கட்டமைக்கப்படுவது தவிர்க்கவியலாததாகிறது. பொய்யே
பேசாத, இரக்கமே உருவான, அறிவின் சுடரொளி கண்கூசவைக்குமொரு பெண்ணாயெனைக்
கற்பனித்ததுண்டு.

அந்நாட்களில், புத்தகத்தைத் திறந்தால் புறவுலகு மூடிக்கொள்ளுமளவிற்கு
இறகின் மென்மையாயிருந்தன பொழுதுகள். சாப்பிடவோ கடைக்கு அனுப்பவோ
அழைக்கும் குரல்கள் எனையெட்டும் முன்னரே கரைந்துபோகலாகாதா எனப்
பரிதவிப்பேன். ஒரு புத்தகத்தை வலுக்கட்டாயமாக மூடி, மீண்டும்
கையிலெடுக்கும்வரை அந்தப் பாத்திரங்களின் குரல்கள் உள்ளே
ஒலித்துக்கொண்டிருந்தன. தெருவில் நடந்துபோகும்போது அவர்களும் என்னுடன்
கூடவே வருவார்கள். அவர்கள் அடுத்து உதிர்க்கப்போகும் வார்த்தைகள் எனது
சின்ன மனதின் கற்பனையில் சிக்காதனவாக இருந்தன. கனவுகளின் இழையறுக்க
கையில் கத்தியோடு வந்தது யதார்த்தம். வாசித்த புனைவுகளுக்கும்
யதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளி நினைத்ததைக் காட்டிலும் மிகப்பெரிதாக
இருந்தது. விழிகளில் திரையிட்டிருந்த கனவுப்புகை கலைந்து
'மனிதர்கள்'தெளிவாயினர்.

ஆனாலும், நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் மாயவசீகரம் இன்னதென்று
இன்னுந்தான் புலப்படவில்லை. புத்தகத்தைக் கையிலெடுத்து புரட்டவோ ஒரு வரி
வாசிக்கவோ கூட வேண்டியதில்லை. மின்விசிறிகள் மட்டும்
அனத்திக்கொண்டிருக்கும் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர
அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித்
திரிதலே போதுமாயிருக்கும். மூக்குக் கண்ணாடிக்கப்பால் தூக்கம்
வழிந்தோடிக்கொண்டிருக்க, தன் வீட்டுப் பொருளை யாரோ திருடிக்கொண்டு போக
அனுமதி கேட்பதான எரிச்சலோடிருக்கும் நூலகர்கள் சிரிப்பதேயில்லையோ என
சின்னவயதில் நினைத்திருக்கிறேன். அவர்களின் சிடுமூஞ்சித்தனத்தையும்
பொறுத்துக்கொள்ளவைத்தது புத்தகங்கள் மீதான காதலே.

உங்களில் பலருக்கு 1980களின் தொடக்க காலம் நினைவிருக்கலாம்.
மும்முரமாகவும் புதிது புதிதாகவும் இயக்கங்கள் தோன்றி தீவிரமாக
'இயங்கிய'காலமது. அந்நாட்களில் புதிய வாசிப்புக்குப் பழக்கப்பட்டோம்
அன்றேல் பழக்கப்படுத்தப்பட்டோம். இலங்கை அரசின் அடக்குமுறைக்கெதிரான
வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் இரவோடிரவாக சுவர்களில் முளைத்திருக்கக்
கண்டோம். அவற்றுட் சில கவித்துவமிக்க வரிகளோடிருந்ததாக ஞாபகம். அதைவிட
'துண்டுப் பிரசுரங்கள்'என்று சொல்லப்பட்ட சிறு கையடக்கப் புத்தகங்கள்
இரகசியமாக விநியோகிக்கப்பட்டன. அவை பெரும்பாலும் கறுப்பு,சிவப்பு இரண்டு
மைகளாலும் மாறி மாறி எழுதப்பட்டிருக்கும். எழுச்சிமிகு அவற்றின்
வாசகங்களால் ஈர்க்கப்பட்டுப் போராடப் போனவர்கள் அநேகர். மேலும்,
'மரணத்துள் வாழ்வோம்'போன்ற கவிதைத் தொகுப்புகளும் வாசிக்கக் கிடைத்தன.
சமாதான காலமென அவ்வப்போது தலைகாட்டிச் செல்லும் காலங்களில் அப்பேர்ப்பட்ட
புத்தகங்களுக்கும் விடுதலை. அவற்றைப் பகிரங்கமாக வாசிக்க முடிந்தது.
ஆனால், இரகசியமாக வாசிக்கும்போதிருந்த குறுகுறுப்பை அவை தரத்தவறின.
துரதிர்ஷ்டவசமாக 'சமாதான'காலங்களும் அடிக்கடி வருவதில்லை. ஆகவே நாங்கள்
அத்தகைய புத்தகங்களை வீட்டுச் செத்தைகளுக்குள் ஒளித்துவைக்க
வேண்டியிருந்தது. எரியூட்டவும் நேர்ந்தது. நெருப்புத் தின்னக் கொடுக்க
மனம் வராதோர் 'பொலித்தீன்'பைகளில் இட்டு கிடங்கு கிண்டிப் புதைத்தனர்.
எங்கள் நிலங்களுள் கண்ணிவெடிகள் மட்டுமல்லாமல் புத்தகங்கள், நகைகள்,
எலும்புகள், போராளிகளின் புகைப்படங்களும் புதைக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவை புதையலாகலாம்.

இந்தியப் படைப்புகள் இலங்கைக்குள் வாராது நின்றிருந்த ஒரு காலத்தில்
வீரகேசரிப் பிரசுரத்தினூடாக கணிசமான நாவல்கள் வெளிவந்தன. செங்கை
ஆழியானின் 'கங்கைக் கரையோரம்'வாசித்துவிட்டு இரவிரவாக விம்மி வெடித்து
அழுதது நினைவிருக்கிறது. இன்றெனில் யாரோ இழந்த காதலுக்காக கண்ணீரை
இறைத்திருக்கமாட்டேன் என்றே தோன்றுகிறது. 'காட்டாறு'ம் அப்படித்தான்.
செங்கை ஆழியான் எப்போதும் ஒரு வாக்கியத்தில் என்னை ஏங்கியழச் செய்பவராக
இருந்தார். பாலமனோகரனின் 'நிலக்கிளி'பதஞ்சலி கற்பனைக் கதாபாத்திரம் என்று
நினைக்கமுடியாதபடி உயிரோட்டமாயிருந்தாள். அவள் தண்ணீரூற்றில் இன்னமும்
வாழ்ந்துகொண்டிருப்பாள் என்ற நினைவு(முட்டாள்தனமான)மாறாதிருக்கிறது.

நமதெல்லோருக்குமான வாசிப்புத்தளம் இப்போது மாறிவிட்டது. அம்புலி
மாமா-கல்கி-அகிலன்-லஷ்மி-சிவசங்கரி-செங்கை ஆழியான்-
பாலகுமாரன்-சுஜாதா-தி.ஜானகிராமன்-ஜெயகாந்தன்-லா.சா.ரா.-அசோகமித்திரன் - எஸ்.பொ. -பிரபஞ்சன் - அம்பை - ராஜம் கிருஷ்ணன் - ஆ.மாதவன் - சுந்தர ராமசாமி - ஜி.நாகராஜன், கோணங்கி - ஜெயமோகன் -அ.முத்துலிங்கம் - எஸ்.ராமகிருஷ்ணன் - நாஞ்சில் நாடன் என நீள்கிறது. புத்தகச் சந்தையில் குறிப்பிட்ட பெயர்களைக் கண்டால், நீரில் துள்ளும்
மீனைப் பாய்ந்து கவ்வும் கொக்கினைப்போல கையில் எடுப்பதுண்டு. வாங்கும்
வேகம் வாசிப்பதில் இருப்பதில்லை.

"மோகித்து ஒருமுறை சுகித்தபின்
முகம் திருப்பிக் கடக்கிற
நெஞ்சின் அதிர்வை நினைவுறுத்துகின்றன
கட்டிலில் காத்திருக்கும் புத்தகங்கள்"

என்ற வரிகளுக்கிணங்க புத்தகங்கள் ஆண்டாண்டுகளாகக் காத்திருக்கின்றன. அவை
தூண்டும் குற்றவுணர்வோ அபரிமிதமானது. ஆனாலும், அவற்றை இழக்கவும் மனம்
ஒப்புவதில்லை. என்றோ வரப்போகும் ஓய்விற்காக வாசிப்பினை
ஒத்திப்போட்டுக்கொண்டிருப்பதே நீள்கிறது. நம் உள்மனசுக்குத் தெரியும்@
வாசிக்க, எழுத முடியாமைக்கான காரணங்களைச் சிருஷ்டிக்கும் தந்திரங்கள்.
வீட்டின் எல்லா அறைகளிலும், அலமாரியிலும், ஆரம்பித்து முடிக்க முடியாமல்
மூலை மடித்த புத்தகங்கள் நூற்றுக்கு மேலுண்டு. புதுப் புத்தகங்களுக்கென
ஒரு வாசனை உண்டு. காகித வாசனையோ… மை வாசனையோ… பிரித்தவுடன் மண்மணம் போல் நாசிக்குள் மணம்பரவும். முதலில் இடையிடையே பிரித்துப் படித்தபின்தான்
முழுவாசிப்பிற்கென அமர்வது. முன்னுரைகளை முதலில் கண்ணெடுத்தும்
பார்ப்பதில்லை. 'இந்த மலர் இப்படித்தான் மணக்கும்'என்று மூன்றாமவர்
சொல்வதைப் போலொரு உணர்வு. நாமே நுகர்வதே நல்லது. 'நாவல்களென்ன
கிரந்தத்திலா எழுதப்பட்டிருக்கின்றன முன்னுரை படித்து உள்நுழைய?' என்பது
மேதாவிகளுக்கு உவப்பளிக்கத் தவறலாம். முன்னுரையே எப்போதும் என்வரையில்
பின்னுரையாயிருந்திருக்கிறது. நாமொரு பக்கம் வாசிக்க நமக்குள்ளிருக்கும்
'சட்டாம்பிள்ளை'யும் தன் வேலையைத் தொடங்கிவிடும். தர்க்கிக்குமொரு குரல்
கண்களின் கூடக் கூடப் போய்க்கொண்டிருக்கும். யார் வெல்வது என்பதைப்
புத்தகத்தினதும் வாசகனதும் தரமே தீர்மானிக்கின்றது. முன்முடிவில்
உறுதியாயிருக்கும் குரலின் நச்சரிப்பு தாங்காமல் மூடிவைத்து
எழுந்ததுமுண்டு. குரலை 'சும்மா கிட நாயே'என அதட்டி தன்னோடு கூட்டிப்போன
புத்தகங்கள் நிறையவுண்டு.

எனதுடமை எனதுடமை என உறவு, நகை, பொருளை மட்டும் இறுக்கிக்கொள்வதில்லை.
புத்தகங்களும் அதில் அடக்கம். இரவல் கொடுப்பது -அதிலும் புத்தகங்களை
இரவல் கொடுப்பது இழப்பதற்கு ஈடான துக்கமாகத்தானிருந்தது. 'நீங்கள் அறிவை
மறுக்கிறீர்கள்'என்றொரு நண்பர் சொன்னதைக் கேட்டபிறகு யார் கேட்டாலும்
எழுதி வைத்துக்கொண்டு தூக்கிக்கொடுத்து விடுவதே வழக்கம். என்றாலும்
திரும்பி வருமா என்ற பதைப்பையும் சேர்த்தே கொடுக்கிறேன். பிள்ளையை
சிறுவர் காப்பகத்தில் விட்டுக் கையுதறி வேலைக்கு ஓடும் தாயின்
மனமாயிருக்கலாம் அது.

நிச்சய இருப்பு மறுக்கப்பட்டலையும் எங்களைப்போன்றவர்களுக்கு புத்தக
சேகரிப்பும் புலிப்பால்தான். ரொறன்ரோவின் நிலக்கீழ் அறையொன்றில் குளிருள்
நடுங்கியபடி இன்னமும் காத்திருக்கின்றன என்னுடைய புத்தகங்கள். இன்னுஞ்
சில ஈழத்தில் பூட்டப்பட்ட தூசிபடிந்த அறையொன்றின் அலமாரியுள்
சிறையுண்டிருக்கின்றன. கடவுச்சீட்டின் பெரும்பாலான பக்கங்களை
நிறைத்திருக்கும் இந்திய விசா இனிவருங்காலம் மறுக்கப்படில், இத்தனை
புத்தகங்களையும் எங்கு, எப்படிக் காவிச்செல்வது என்பதே தலையுடைக்கும்
இப்போதைய தலையாய கேள்வி. ஒத்திவைக்கப்பட்டிருக்கும் வாசிப்பு ஒருக்காலும்
நிறைவேறாமற் போகவும் சாத்தியங்களுள்ளனதாம்.

உயிரின் ஒரு நுனியை இவ்வுலகிலிருந்து அறுத்துவிட்டுப் போகமுடியாமல்
அங்குமிங்குமாக ஊசலாடிச் சேடமிழுத்தபடி கிடக்கும் வயோதிபர்கள் சிலரின்
வாயில் பொன்னைக் கரைத்தூற்றி 'போ'வெனச் சொல்வதுண்டாம். சிலருக்கு மண்ணே
கடைசிச் சொட்டாம். அவ்வாறு நேரின், என்னைப் போன்றோர்க்கு புத்தகம்
பொசுக்கிய சாம்பல் கரைத்தூற்றாது போகாது உயிர்க்காற்று.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - ஆதவன் தீட்சண்யா - 2

கடவுளும் கந்தசாமிப் பறையன் உள்ளிட்ட வகையறாக்களும்
- ஆதவன் தீட்சண்யா


வா மகனே வா
வந்தாயே இப்பவாவது துணிஞ்சு
உள்ளே வர எனக்குத்தான் தடை
வெளியே வந்து பார்க்க உனக்கென்ன கேடு?

கோபம் நியாயந்தான் ஆனா
அவங்க கட்டுக்காவலை மீறி எப்படி நான் வரமுடியும்?
நாம சந்திச்சிடக்கூடாதுன்னு தான்
உள்ளே வெளியேன்னு பிரிச்சு வச்சிருக்கானுங்க

பிரிச்சு வைக்கிறதுதானே அவனுங்க குணம்
உம்புத்தி எங்கே பீ திங்கப்போச்சு
எம்புள்ளைங்களப் பாக்கறதைத் தடுக்க
உனக்கென்னடா அதிகாரம்னு
உதைச்சி வீசிட்டு வரவேண்டியதுதானே

தூபப் புகையில கண்ணவிஞ்சு
மந்திர இரைச்சல்ல காதடைஞ்சு
ஊதுபத்தி நெடியில மூர்ச்சையாகி
உன் கால்பட்ட கணத்தில்தான் மீண்டெழுந்தேன்
இனி இங்கே வேண்டாம் எனக் கிளம்பினார் அவனோடு

இப்போதெல்லாம் கடவுள்
கோயில்பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை
தன்பெயரால் நடந்த குற்றங்களுக்கு கழுவாயாய்
மோளமடிக்கவும் முட்டுத்துணி அலசவும்
மாடறுக்கவும் மயானங்காக்கவும் மலமள்ளவும்
நியமம் தவறாமல் போய்க்கொண்டிருக்கிறார்
இன்னமும் கோயிலில் கேட்கிற காண்டாமணிச்சத்தம்
யாருக்காகவென்று குழம்பியபடி.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 2

நதியறியும் கரைவிரிவு
- தமிழ்நதி


விழிப்பதற்கும் எழுவதற்குமிடையிலான
வெறுமைசூழ் வெளிநிரப்பும்
பட்டியல்களிடம்
என் நாளை
இனியும் தோற்பதற்கில்லை.

இன்று
மழை பெய்து
உலகை மலர்த்தலாம்
ஒரு அழைப்பில்
என் தொலைபேசி உயிர்க்கலாம்.
என்னாலேயே மறக்கப்பட்ட (வெறுக்கப்பட்ட)
வரிகளைச் சிலாகித்து
இன்று எவருடையவோ
மின்னஞ்சல் வரக்கூடும்.

அன்பின் யாசகத் தட்டேந்தி
எவரெவரோ பின்னலைந்து பெற்றதெல்லாம்
செல்லாத நாணயங்களே!

கண்களால் கடல் குடித்தபடி
செவிகளில் இசை குளிர
நடப்பதற்கீடில்லை
ஈரப்பசையற்ற எவனொருவனின் முத்தமும்.

வாழ்க்கை ஒரு கண்ணீர்த்துளியாய்
சிந்திவிட்டதென்று
எத்தனை காலந்தான் எழுதுவது?

"மயிரே போச்சு!"

நதியொன்றே அறியும்
தான் நடக்கும்
கரை விரிவு!

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 1

புதைந்த கனவு
- தமிழ்நதி


சவுக்கு மரங்கள் தலைசுழற்றியாடுகின்றன. அந்தக் கல்லறைத் தோட்டத்துள்
புதைந்திருக்கும் அனைவருக்குமான அமானுஷ்யமான ஒற்றைப்புலம்பலாய் காற்று
ஊளையிடும் ஓசை. அதை விடுத்து பேரமைதி…! நகரத்தின் கிராதகங்களிலிருந்து
தப்பித்த நிம்மதி அவ்விடமெங்கும் பொலிகிறது. செவ்வலரி மரமொன்று
நிறமூட்டப்பட்ட கண்ணீர்த்துளிகளாக பூக்களை உதிர்த்தபடியிருக்கிறது. கோடை
எரித்ததுபோக எஞ்சிய வேர்கள் அப்போதுதான் பெய்த மழையில் பச்சைத் தலை
நீட்டியிருக்கின்றன.

சுற்றவர இளம்புல் போர்த்திய கற்படுக்கையின் கீழ்
உறங்கிக்கொண்டிருக்கிறாள் அவள். கண்ணிமைகளை மண் அரித்திருக்கும்.
உறங்குவதற்கு இமைகள் மட்டும் போதுமானதில்லை.

அவன் வருகிறான். அகன்ற தோள்கள். கருணை விரவிய கண்கள். தோற்றத்தில் அழகன்.
மலர்க்கொத்தை உள்ளே படுத்திருப்பவளின் கால்களில் உத்தேசமாக வைக்கிறான்.
ஞாபகங்கள் கண்கள் வழியாகப் பெருக்கெடுக்கின்றன. அவளோடு கூட நடந்த
தெருக்களில் இப்போது நடந்துகொண்டிருக்கிறான். சட்டென மறைகின்றன அவளது
பாதங்கள். தனிமையின் வழி குரூரமானது.

"என்னை மன்னித்துவிடு… நீ உயிரோடு இருந்தபோது தனிமை என்னும் முட்களைத்
தந்தேன். பிரிந்த பிறகு மலர்களோடு வந்திருக்கிறேன்."

முதுகுப்பரப்பு குலுங்க, ஞாபகத்தின் காலடியில் சரிந்திருக்கிறான் சில
நிமிடங்கள். கனக்கும் இதயத்தைத் தாங்கியபடி எழுந்திருக்கிறான். சற்று
தள்ளியிருக்கும் மரத்தினடியில் போய் அமர்கிறான். இலைகளிலிருந்து
சொட்டிக்கொண்டிருக்கிறது நேற்றைய மழை.

பறவைகளின் சிறகுகோதலைச் சிதைக்கிறது மேலுமொரு சோடிப் பாதங்களின் காலடி
ஓசை. இப்போது வந்திருப்பவன் முன்னையவனிலும் இளையவன். நீண்ட விழிகள்
கலங்கிச் சிவந்திருக்கின்றன. கரிய தாடி அவன் நிறத்தை மிகைப்படுத்துகிறது.
கல்லறையில் வைத்த ஒற்றைச் சிவப்பு ரோஜாவில் பனித்துளியோ அவன்
விழித்துளியோ ஒட்டியிருக்கிறது. செல்லரித்த பாதங்களை மானசீகமாக தன்
நெஞ்சிலே பொருத்துகிறான். கால் விரலிடுக்குகளிடையில்
சொரியவாரம்பிக்கின்றன கண்கள். இதயம் முழுவதும் கண்ணீராகித் ததும்புகிறது.

"என்னை விட்டு ஏன் போனாய் என் அன்பே?"

கல்லறைகளில் மோதி மோதி எதிரொலிக்கிறது அவன் கதறல். மரங்கள்
சிலிர்த்துக்கொள்கின்றன. கண்கிறங்கி சிறகுகோதிக்கொண்டிருந்த பறவைகளின்
மணிக்கண்கள் பயத்தில் உருள்கின்றன.

"தொலைவையே சகியாமல் பாலையில் பித்துப் பிடித்துப் பிதற்றியலைந்தவன் நான்.
உன் பிரிவை எப்படித் தாங்குவேன்? காதல் என்ற அற்புதத்தை என் வாழ்வில்
நிகழ்த்தி என்னை நெகிழ்த்தினாய். நான் உன்னோடு கூட இருக்க முடியாத கோபம்
உன்னை எரித்ததா… என் கனவு மலரே! வாக்குறுதிகளுக்காக என் வானவில்லை
இழந்தேன்"

எழுந்தான். அதுவரை தன்னை உற்றுப் பார்த்திருந்தவனின் கண்களைக் கண்டான்.
இருவரது கண்களிலும் இருந்த நீரினுள் அவளே கலங்கித் தெரிந்தாள். அவன் ஏதோ
பேச உன்னுகிறான். உதடுகள் அசைந்ததன்றி ஓசையில்லை. இவன் சொற்களைத்
தேடுகிறான். இதய நரம்புகளுள் சிக்கிக்கொண்டுவிட்ட சொற்களை விடுவிக்க
இயலவில்லை.

மௌனம். மகா மௌனம்!

குற்றவுணர்வில் தலைதாழ்த்தியபடி அவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

அவளது புன்னகையின் ஒளி கல்லறைகளில் படர்ந்துகொண்டிருக்கிறது. அவள்
உறங்கிக்கொண்டிருக்கிறாள். வாழும்போது புறக்கணிக்கப்பட்டவளை மரணம்
கையேந்திக்கொண்டது. உறங்குவதற்கு இமைகள் தேவையென்று எவர் சொன்னது?

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - அறிமுகம்

தமிழ்நதி - அறிமுகம்

என்னைப் பற்றி என்ன சொல்வது? என் பெயர் தமிழ்நதி என்று எழுதவே விருப்பம்.
'என் பெயர் அகதி'என்றே எப்போதும் எழுதிச் செல்கின்றன விரல்கள். சொந்த
மண்ணைப் பிரிந்து எங்கெங்கோ சிதறி வாழ்ந்துகொண்டிருக்கும் இலட்சக்கணக்கான
ஈழத்தமிழர்களில் ஒருத்தி. பொழுது புலர்ந்துகொண்டிருக்கிறது போர் நடக்கும்
பூமியில் உள்ளவர்களை மட்டும் விட்டுவிட்டு. எப்போதாவது நாடு திரும்பலாம்
என்ற நம்பிக்கைச் செடியை வாடாமல் வைத்திருப்பதே பெரிய பாடாக இருக்கிறது.


எழுத்து… ஆரம்பத்தில் என் ஆதர்சத்திற்குரியவர்கள் தங்களது எழுத்துக்களால்
என்னைப் பாதித்துக்கொண்டிருந்தார்கள். பழிக்குப் பழியாக நானும்
ஆரம்பித்திருக்கிறேன் பாதிக்கிறேனா… வாசிப்பவர்களைச் சோதிக்கிறேனா
என்பது எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒரு முகம் தெரியாதவர் என்னுடைய
எழுத்தை வாசிக்கிறார் என்பதொன்றே திருப்தி. தமிழ்மணத்தின் வாயிலாக இணையப்
பெரு நீரோட்டத்தில் ஒரு துளியாகவேனும் இணைந்திருக்கிறேன் என்பதில்
பெருமிதம். பண்புடனில் அன்புடன் எழுத அழைத்தார்கள். நிறைவாக எழுத
நேரமில்லை. பொருள்வயப்பட்ட இவ்வுலகில் எழுத்தொன்றே இப்போதைக்கு இருள்
விரட்டும் ஒளிப்பொட்டு என்பது எனது டிஸ்கி. சிலவேளைகளில் இப்படியெல்லாம்
எழுதி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது இல்லையா 'பண்புடன்'
நண்பர்களே!

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - 7

எனக்கு வராத காதல் கடிதம்
- இளவஞ்சி


உங்களுக்கு ரெட்டைஜடை குமுதாவை தெரியுமா? என்னது தெரியாதா? அதானே! அதெப்படி உங்களுக்கு தெரிந்திருக்கமுடியும்? அவதான் என்னோடு +1 படிச்சவளாச்சே! (நறநறப்பவர்களுக்கு, எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாததால இப்படி.. ஹிஹி ). ஒல்லியா, முகம் மட்டும் பூசின்னாப்படி, கொஞ்சம் மாநிறத்துக்கும் மேல, நடுவகிடு எடுத்து எப்பவும் ரெட்டை ஜடையோடவும், அதோட முனைல சிவப்புலயோ பச்சைலயோ ஒரு ரிப்பனோடவும், ஒரு சைடுல இருந்து பார்த்தா கோபிகா சாயல்ல இருப்பான்னு வச்சிக்கங்களேன்! இப்படி இல்லைனா நான் ஏன் இவளை பார்த்திருக்கபோறேன்?! எங்க 11C தமிழ்மீடியம் வகுப்புலயே இவதான் கொஞ்சம் பாக்கறமாதிரி இருப்பா! அவபேரு R.குமுதான்னாலும் நாங்க அவளை ரெட்டைஜடை குமுதான்னுதான் சொல்லுவோம். அந்த காலத்துல சைட் அடிக்கறதுன்னா ஒரு பொண்ணைபார்த்து ஓரு கண்ணைமட்டும் மூடிக்காட்டறதுன்னு நம்பிய அரைவேக்காட்டுப்பய நான். அதுனால இதுக்குமேல அவளை வர்ணிக்கற அளவுக்கு அன்றைக்கு அவளை கலைநோக்கோடு பார்த்ததில்லை. ஆனா ஒரு ஈர்ப்பான கவர்ச்சி அவமேல இருந்ததுங்க. இந்த வயசுல பொண்ணுங்க ஒரு மாதிரி தினுசா புரிந்தும் புரியாத அழகோடத்தான் இருப்பாங்க போல. பருவம் வந்தா பன்னிகுட்டியும் பத்துபைசா பெறும் சும்மாவா சொன்னாங்க? ஆனா இந்த விடலைபருவத்துல பசங்களை பார்க்கசகியாது. நொள்ளையும் நோஞ்சானுமா மொகமெல்லாம் ஒருமாதிரி ஒடுங்கி திருதிருனு அலையற கண்களோட, பருக்கள் எட்டிப்பார்க்கும் கன்னங்களோட, மொசைக் தரைல கரித்துணிய தேய்ச்சாப்புல அரைப்பரவலா மீசையோட கன்றாவியா இருக்கும். சந்தேகம் இருந்தா உங்க பழய போட்டோவ எடுத்துப்பாருங்களேன்!


வகுப்புல நாந்தான் லீடர்னாலும் அதையும் மிஞ்சி ஒரு கெத்து எனக்கு இருந்ததென்றால் அது குமுதா எங்க வீட்டுல இருந்து 6 வீடு தள்ளி இருந்ததாலதான். எனக்கு இருக்கற ஆளுமைத்திறனுக்கும் உடம்புக்கும் வாங்குன மார்க்குக்கும் நான் எப்படி லீடர் ஆனேன்னுதானே கேக்கறீங்க? அது ஒரு விபத்துங்க. எப்பவும் நான் 10வதுல லீடரா இருந்த செந்தில்குமார் கிட்டதான் உட்காருவேன். கறி தின்னே வளத்த உடம்பு அவனுது. வாரத்துல 4 நாளைக்கு அவன் டிபன்பாக்சுல கோழிவருவல் இருக்கும். மேலே நான் சொன்ன பசங்களோட சமுத்திரிகாலச்சணங்களில் இருந்து அவன் ரொம்பவும் மாறுபட்டவனில்லைனாலும் ஆளு சும்மா கருப்பு தேக்கு கட்டைல செஞ்ச அலமாரி மாதிரி இருப்பான். எனக்குத்தான் படம்போட ஒரு திறமையும் இல்லாததால ஒரு அள்ளக்கைமாதிரியே அவனோடதிரிவேன். +1 வந்தப்பறம் வாத்தியார் இந்த வருசத்துக்கு யாரு புதுலீடர்னு கேட்டப்ப என்சட்டைய கொத்தாபுடிச்சி தூக்கிவிட்டுட்டான். வாத்தியார் உட்பட எல்லார் முகத்துலயும் லயன்கிங் ரோல்ல ஒரு கொரங்கு நடிக்க வந்தாப்புல ஒரு அதிர்ச்சி! வாத்தியார் நெஜமாவே நீயாடா லீடரா இருக்கப்போறன்னு கேக்க நான் பயத்துல பேந்த பேந்த முழிக்க, அவர் ஒரு நிமிசம் யோசிச்சிட்டு சரி இந்த வேலையாவது ஒழுங்காபாருன்னு விட்டுட்டார். மொத்த வகுப்புக்கும் குசுகுசுன்னு சிரிப்புதாங்கல. என் லீடர் பொழப்பும் அவங்க சிரிக்கரமாதிரிதான் இருந்ததுன்னுவைங்களேன். ஒருத்தருக்கும் என்னைகண்டா பயம் கிடையாது. அந்த காலத்துல "பதவிய வச்சி ஏதாவது வித்தை காட்டுன... வெட்டிடுவேன்!" அப்படின்னு ஒரு ஃபேமசான மக்கள் என் பக்கம் படத்துல சத்தியராஜ் சொல்லற வசனம் இருந்தது. வகுப்புல வாத்தியார் இல்லாதபோது பேசறவங்க பேர எழுதிவச்சாலும் இந்த வசனத்தை சொல்லியே மெரட்டுவாங்க. ஏதோ செந்தில் துணைலதான் ஒப்பேத்தி போய்கிட்டு இருந்தது.

படிச்சது என்னவோ +1 ன்னாலும் அந்தகாலத்துல இப்ப இருக்கற பசங்க மாதிரி 24மணி நேரமும் படிப்பு படிப்புன்னு சுத்துனது கிடையாது. முடியலைங்கறது வேறவிசயம்!. லீவுநாள்ள கிரிக்கெட்தான் தூள்பரக்கும். காலைல 9 மணிக்கு ரப்பர்பால் பெட்மேட்ச் போட்டா சயந்தரம் 7 மணி வரைக்கும் 3 மேச்சாவது நடக்கும். செந்தில் வேற ஏரியான்னாலும் மேட்ச் நடக்கும் போதெல்லாம் எங்க ஏரியால தான் இருப்பான். மத்தியானம் எங்க வீட்டுலயே சாப்பிட்டுட்டு திரும்பவும் வெளையாட போயிடுவோம். எங்க தெரு தள்ளி ரயில்வே ட்ராக்கை ஒட்டினாப்புல இருந்த பீக்காடுதான் எங்க கிரவுண்டு. இந்த கிரவுண்டை ஒட்டினாப்புல போற ரோடுலதான் எங்க கணக்கு வாத்தியார் வீடு இருந்தது. எங்க தெருவுல இருந்து வாத்தியார் வீட்டுக்கு டியுசன் படிக்க போகனும்னா இந்த கிரவுண்டை ஒட்டிய ரோட்டுலதான் போகனும். நம்ப குமுதா வகுப்புல முதல் 5 ரேங்க்குக்குள்ள எடுத்தாலும் கணக்குக்கு மட்டும் டியூசன் போனா. எனக்குத்தான் வகுப்புலயே எல்லா பாடங்களும் படிச்சி கிழிச்சுறதுனால டியூசன் எல்லாம் போனதில்லை. எல்லாம் +2ல போய்க்கிலாம்னு வீட்டுலயும் சொல்லீட்டாங்க. தினமும் சாயந்தரம் நாங்க விளைய்யடும்போது குமுதா அந்த ரோட்டுல ஒரு ஆறு மணிக்கா டியூசன் போவா. பசங்கெல்லாம் ஒருமாதிரி அமைதியாகி யாரும் பாக்காதமாதிரி அவளை பார்த்தபடி அவள் வீதிமுனையை தாண்டறவரைக்கும் ஒரு நாடகம் நடிப்பானுங்க. அடுத்தவன் பாக்கறது தெரிஞ்சிட்டா ஒரு மாதிரி வழிவானுங்க. சிலநாள் பேச்சுவாக்குல அவளைபத்தி என்கிட்ட விசாரிப்பானுங்க. அப்பெல்லாம் ஒரு பொண்ணைப்பத்தி பேசறதே ஒரு இனம் புரியாத கிக்கா இருக்கும். நானும் அவளைப்பத்தி எனக்கு தெரிஞ்சதையெல்லாம் ஒரே பீலாவா விட்டு என் இமேஜை ஏத்திக்குவேன்.

இப்பதான் பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒண்னுமண்னா பழகறாங்க. எங்க காலத்துல சும்மா ரெண்டு வார்த்தை பேசுனாலே பெரிய விசயம். அந்த ரெண்டு வார்த்தை பேசரதுக்குள்ளயே பசங்களுக்கு நாக்கு தட்டிடும். அதுக்கே புள்ளைங்க கெக்கேபிக்கேன்னு சிரிப்பாளுங்க. இந்த மேட்டரும் வாத்தியாருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவருக்கு அடிச்சும் நமக்கு அடிவாங்கியுமே கை பழுத்துரும். இந்த நேரத்துலதான் செந்தில் அந்த வேலைய ஆரம்பிச்சான். வகுப்புல அப்பப்ப யாரும் பாக்காதப்ப குமுதாவ பார்த்துக்கிட்டே இருப்பான். இண்டர்வெல்ல தண்ணி குடிக்க போகும்போதும், மத்தியானம் டிபன்பாக்ஸ் கழுவும்போதும் அவ பின்னாடியே போய் சிரிக்க ஆரம்பிச்சான். இதை கூட இருந்து பாக்க ஒரே வயித்தெரிச்சலா இருந்தது எனக்கு. அவ இவனை பாத்தாளா இல்லை சிரிச்சாளானேன்னே எனக்கு புரியலை. ஆனா அவ இவனை கண்டுக்காதமாதிரிதான் இருந்தது. இருந்தாலும் செந்தில் இப்படி செய்ய ஆரம்பிச்சதை என்னால தாங்கிக்க முடியலை. இவன் இப்படி செய்யறதனால பசங்க முன்னைப்போல அவளைப்பத்தி என்கிட்ட கேக்கறதுகொறைஞ்சதும் என் பொறாமைக்கு காரணமா இருந்திருக்கலாம். தினமும் சாயந்தரம் கிரிக்கெட் விளையாடும்போதும் அவ டியூசன் போகும்போது பின்னாலேயே போயிட்டு திரும்ப வருவான். டியூசன் முடிஞ்சி வர்றவரைக்கும் இருட்டுல கிரவுண்டுல இருப்பான். அப்படியே அவகூடவே பின்னால எங்க வீட்டுவரைக்கும் வந்துட்டு அவன் வீட்டுக்கு போயிடுவான். இதைப்பாத்து காதெல்லாம் பொகையா சுத்திகிட்டு இருந்த நான் மெல்ல அவங்க அப்பா பத்தி அவன்கிட்ட சொல்லி அவனை பயமுறுத்த ஆரம்பிச்சேன். ஆனா அவன் அதுக்கெல்லாம் மசியறமாதிரி தெரியலை.

ஒருநாள் இப்படிதாங்க நாங்க விளையாட்டு முடிச்சு வீட்டுக்கு வரவும் செந்தில் குமுதா பின்னாடியே டியூசன்மாஸ்டர் வீட்டு வரைக்கும் போகவும் இருக்க எதிர்தாப்புல குமுதாவோட அப்பா வந்துகிட்டு இருந்தார். எனக்கு என்ன தோணுச்சோ படக்குன்னு அவரை நிறுத்தி, "சார், குமுதாவ யாரோ ஒருபையன் தெனமும் டியூசன்வரைக்கும் பாலோ பன்னறான்"னு பத்தவச்சிட்டேன்! அவர் முகமெல்லாம் மாறி ஒடனே ஸ்கூட்டற திருப்பிகிட்டு அந்தவழியா போனார். எனக்கு உடம்பெல்லாம் படபடங்குது. நெஞ்சு அடிச்சுக்குது. என்ன நடக்குமோன்ற அந்த பயத்துலயும் அவனை மாட்டிவிட்டுட்டமேன்ற இனம்புரியாத ஒரு இன்பம் எனக்குள்ள. தாங்கமுடியாம ஒரு 5 நிமிசம் கழிச்சி என்சைக்கிளை எடுத்துகிட்டு அங்க போனா கிரவுண்டை ஒட்டிபோற ரோட்டுமுக்குல சின்ன கூட்டம். குமுதா ஒரு ஓரமா தலையகுனிஞ்சிகிட்டு பயத்தோட தேம்பி தேம்பி அழுதுகிட்டு நிக்கறா. அவங்கப்பா கைல ஒரு பேப்பர வச்சிகிட்டு செந்தில் சட்டைய புடிச்சு வச்சி கன்னத்துலயும் முதுகுலயும் அறைஞ்சிக்கிட்டு இருந்தார். சுத்திநிக்கறவங்க "இந்த வயசுல லெட்டர் குடுக்கறான் பாருங்க.. நல்லா போடுங்க சார்"னு ஏத்திவிடுறாங்க. செந்தில பாக்கவே பாவமா இருந்தது. நான் ஒன்னும் பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன். விசயம் எங்க வீட்டு வரைக்கும் வந்து எனக்கும் இந்த மாதிரி பையன்கூடவா சேருவேன்னு ரெண்டு விழுந்தது. அன்னைக்கு நைட்டு எனக்கு தூக்கமே இல்லை. அதுக்கு அடுத்தநாள் அவனை ஸ்கூல்ல அவன் அப்பாவோட பார்த்ததுதான் கடைசி. குமுதாவோட அப்பா ஸ்கூலுக்கு வந்து ஹெட்மாஸ்டர் வரைக்கும் விசயத்தை கொண்டுபோய் கையபுடிச்சி இழுத்ததா ஊதி பெருசுபண்ணி அவனுக்கு TC குடுத்து அனுப்பிச்சிட்டாங்க. பிரேயர்ல வேற இதை சொல்லி அத்தனைபேருக்கும் எச்சரிக்கை விட்டாரு HM. அதுக்கு அப்பறம் அவன் திருப்பூர்ல Polytechnic Civil சேர்ந்துட்டதா தெரியவந்துச்சி.

ஒரு அஞ்சாறு வருவம் போயிருக்குங்க. BE படிச்சிட்டு வேலைதேடி சென்னை வந்து கேம்பஸ்ல TCSல சேர்ந்த ஃபிரண்டு கூட திருவல்லிக்கேணி மேன்சன்ல இருந்தேன். ஞாயித்துகிழமை மதியம் 4 மணிக்கா காலேஜ்ல படிச்சவனுங்க எல்லாம் மெரீனா பீச்சுல பாத்துக்கறது வழக்கம். Walkin interview, apptitude testனு கெடச்ச தகவல்களை பீச்சுல ஃபிகர் பார்த்த நேரம்போக பரிமாறிக்குவோம். திடீர்னு முதுகுல பளார்னு ஒரு அடி விழுந்தது. பயந்துபோய் திரும்பி பார்த்தா ஓங்குதாங்க கருவேல மரம் மாதிரி அதே வெள்ளைப்பற்கள் ஈறுவரைக்கும் தெரிய சிரித்தபடி செந்தில்! எனக்கு ஒரு நிமிசம் அப்படியே ஆடிப்போயிட்டது. அப்பறமா அவன்கூட போய் பீச்சுலயே உக்கார்ந்து என்கதைய சொல்லி அவன் கதைய கேட்டதுல அவன் Civil diploma முடிச்சி L&Tல சைட் இஞ்சினியரா இருக்கறதும், SK மேன்சன்ல இருக்கறதும் தெரிஞ்சது. அம்மா அப்பா பத்தியெல்லாம் ரொம்ப விசாரிச்சான். எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சுடும்னும் நம்பிக்கையா சொன்னான். கற்பகம் மெஸ்சுல டோக்கன் மீல்ஸ் சாப்டுட்டு முக்கு கடைல பாதாம் பால் குடிச்சிட்டு அவன் ரூமுக்கு போனோம். வாச்மேன் கிட்ட கெஸ்ட் என்ட்ரி போட்டுட்டு அன்னைக்கு அவன்கூடவே இருக்கனும்னு கூட்டிகிட்டு வந்துட்டான். எதையெதையோ பேசி கடைசில நான் இதுவரைக்கும் பேசக்கூடாதுன்னு நினைச்ச அந்த விசயம் வந்தது. அன்னைக்கு அடிவாங்குனதுக்கு அப்பறம் நான் அவன்கூட பேசாம போயிட்டத பத்தி வருத்ததோட சிரிச்சிகிட்டே சொன்னான். குமுதா டாக்டருக்கு படிக்கறதையும் என்கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டான். "உன்கிட்ட ஒன்னு காட்டனும்டா மாப்ள"ன்னு கட்டிலுக்கு அடியில இருந்து ஒரு சூட்கேச இழுத்து அதுல இருந்து ஒரு பெரிய காக்கி கவர எடுத்தான். அது புல்லா அவன் சேர்த்து வச்சிருந்த ஆட்டோகிராப் புக்கும், வாழ்த்து அட்டைகளும் சின்ன சின்ன கிப்ட்களுமா இருந்துச்சு. அதுல இருந்து ஒரு மஞ்சள் கலர் பேப்பர்ல எழுதுன லெட்டரை தேடி எடுத்து சிரிச்சிக்கிட்டே படிக்க சொன்னான்.

"Love is GOD. God is Love.

Dear செந்தில்,

Many more kisses. காலையில் உன்னை ப்ரேயரில் பார்த்துபோது நீ என்னை பார்த்தும் பார்க்காததுமாதிரி போனது மனசுக்கு மிகவும் வருத்தமாகஇருந்தது. ஆனால் நீ சயின்ஸ் க்ளாஸ்போது திரும்பி என்னைபாத்து சிரிச்சது மிகவும் சந்தோசமாக இருந்தது, நன்றிகள் பல. எப்பவும் நீ இதேபோல் சந்தோசமாக சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் உன்னை என் உயிரினும் மேலாக காதலிக்கிறேன். நீயும் என்னை உன் உயிர் உள்ளவரை என்னை மட்டுமே காதலிக்கவேண்டும். எனக்காக நீ டியூசன்மாஸ்டர் வீட்டுவரைக்கும் வருவது எனக்கு ஒரு God's gift. உனக்கு கஸ்டம்தான் என்றாலும் I'm very very happy. இருந்தாலும் யாராவது பார்த்துருவாங்களோன்னு பயமா இருக்கு. இனிமேல் நீ வரவேண்டாம். நாம் ஸ்கூலிலேயே மதியம் வகுப்பில் letter கொடுத்துக்கொள்ளளாம். மற்றவை நாளை கடிதத்தில். Tons of Kisses.

Ever yours,

S. Kumutha"

ஏனோ எனக்கு கண்ணுல தண்ணி தழும்பிருச்சுங்க. அவனுக்கு தெரியாம தொடச்சுக்கிட்டேன். ஒரு ரெண்டு நிமிசம் அந்த லெட்டரையே பார்த்துகிட்டிருந்தவன் என்னநினைச்சானோ சிரிச்சுகிட்டே கிழிச்சு கசக்கி மூலைல எறிஞ்சிட்டான். அன்னைக்கு நைட்டும் எனக்கு தூக்கமே வரலைங்க.