பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - கானா பிரபா 1

"அண்ணை றைற்"
- கானா பிரபா



கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு பகுதியூடாகச் செல்லும் பஸ்களும் அவற்றின் இலக்கத்தைத் தாங்கி நிறைவுத் தரிப்பிடப் பெயர் கொண்டு நிற்க, அவற்றின் பக்கத்தில் நிற்கும் அந்தந்த பஸ் கண்டக்ரர்கள் ஆட்களைக் கூவிக் கூவி அழைக்கின்றார்கள். ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி சுற்றுப் போய் மீண்டும் வரலாம் என்ற அல்ப ஆசை என் அடிமனத்தில் அப்போது தோன்றினாலும் அடக்கிக்கொண்டு, கையிலிருந்த போன புகைப்படக்கருவி மூலம் அக்காட்சியை ஒளிப்படமாக அடக்குகின்றேன்.


எம்மூரில் ஒவ்வொரு தொழிலையும் தம் தம் எல்லைகளுக்கு உட்பட்டு அவற்றை அனுபவித்துச் செய்பவர்களை காய்கறிக்கடைக்காரர், கமக்காரரிலிருந்து பஸ் ஓட்டுனர்கள் வரை நாம் தரிசித்திருக்கிறோம். நான் புலம் பெயரமுன்னர் கிளாலிப் பயணம் ஊடாக வவுனியா வரும் பயணத்தில் மினிபஸ் பயணமும் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்தது. வாகன ஓட்டுனர் தன் பங்கிற்குப் பாடல் தெரிவில் ஈடுபட (பெரும்பாலும் நெய்தல், உதயம் போன்ற எழுச்சிப் பாடல்கள் அப்போது) , துணையாகப் பணச்சேகரிப்பில் ஒருவரும், இன்னொரு இளைஞர் (கைத்தடி!) பயணிகளின் பொதிகளை இறக்கும் உதவியாளனாகவும் இருப்பார்கள். பயணிக்கும் வயசாளிகளைச் சீண்டிப்பார்ப்ப்பது. ஏதோ நகைச்சுவை ஒன்றை விவேக் ரேஞ்சிற்குச் சொல்லிவிட்டு இளம் பெண்களை ஓரக்கண்ணால் எறிந்து, அவர்கள் தனது நகைச்சுவைக்கு எந்தவிதமான முக பாவத்தைக் காட்டினார்கள் என்று உறுதிப்படுத்துவது, வாகனச்சாரதி தவிர்ந்த மற்ற இரண்டு பேரின் உப வேலை. அதைப் பற்றி சொல்ல இன்னொரு பதிவு வேண்டும்.



தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. தனியே ஒலி வடிவத்தையும் தராது அதை எழுத்துப் பிரதியாக்கியும் தருகின்றேன். நானறிந்த வரை " அண்ணை றைற்' என்ற இந்தத் தனி நடிப்பு எழுத்துப் பிரதியாக முன்னர் வரவில்லை. எழுத்துப் பிரதியாக நான் இதை அளிக்கக் காரணம், இந்தப் படைப்பின் பிரதேச வழக்கை மற்றைய ஈழத்துப் பிரதேச வாசிகள், மற்றும் தமிழக நண்பர்கள் பார்க்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும். யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கில் அமைந்திருக்கும் இப்படைப்பு மூலம் சில பிரதேச வழக்குச் சொற்களையும் நீங்கள் கண்டுணர ஒரு வாய்ப்பு. தமிழக நண்பர்களுக்கு மட்டும் ஒரு செய்தி, இந்த கே.எஸ்.பாலச்சந்திரனின் படைப்பான "வாத்தியார் வீட்டில்" நாடக ஒலிச்சித்திரம் தான் நடிகர் கமலஹாசனுக்கு தெனாலி படக் குரல் ஒத்திகைக்குப் பயன்பட்டது.



நான் எதேச்சையாக இலங்கை வானொலியின் பண்பட்ட கலைஞர் லண்டன் கந்தையா புகழ் சானா என்ற சண்முக நாதனின் நினைவு மலர் மற்றும் பரியாரி பரமர் உரைச்சித்திரம் தாங்கிய நூலைப் புரட்டியபோது, கே.எஸ்.பாலச்சந்திரன் அந்நூலில் வழங்கிய நினைவுக்குறிப்பில் இப்படிச் சொல்கின்றார்.

"தனிப்பாத்திரங்களை நகைச்சுவையாக அறிமுகம் செய்யும் வகையிலே, "பரியாரி பரமர்" போன்ற நடைச்சித்திரங்களை சானா' அவர்கள் எழுதியிருக்கின்றார். மிகவும் சுவையான இந்தக் காலப்பதிவுகள் நூல் வடிவில் கொண்டுவரப்படல் வேண்டும்"

இதைத் தான் "அண்ணை றைற்" மூலம் ஒரு அணிலாக என் பங்களிப்பைச் செய்திருக்கின்றேன் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு.



" அண்ணை றைற்" தனி நடிப்பு, எழுபதுகளில் ஆரம்பித்து எண்பதுகளின் நடுப்பகுதி வரை பாடசாலைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் ஒரு சிறப்பானதொரு படையலாகக் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் பெருவாரியான ரசிகர் வட்டத்தை அவருக்கு வளர்த்துவிட்டது. சென்ற பதிவில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களைப் பற்றி நான் எழுதியதை வாசித்துப் பின்னூட்டம் மட்டுமல்ல தனிப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் மூலமும் பல நண்பர்கள் அதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். ஒரு நண்பர் சின்னப் பிள்ளையாக மாறி ரொம்பவே அதைச் சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னொருவர் அடிக்கடி கோயில் திருவிழாக்களின் தணணீர்ப்பந்தல்களில் ஒலிபெருக்கியில் பாடல்கள் தவழவேண்டிய வேளைகளில் "அண்ணை றைற்" ஐத் திரும்பத்திரும்பப் போட்டதை நினைவுபடுத்தினார். "அண்ணை றைற்" கேட்டுக்கொண்டே தண்ணீர்ப் பந்தலில் சக்கரைத் தண்ணீரை மெது மெதுவாகக் குடித்ததை மறக்கமுடியுமா?



ஒரு பஸ் கொண்டக்ரர் தான் சந்திக்கும் மனிதர்களின் (தன்னையும் கூட) குணாதிசயங்களை நகைச்சுவையாகச் சொல்வதினூடே நம் தாயகத்து வெள்ளாந்தி மனிதரிகளின் சுபாவங்கள் எங்கோ கேட்ட, பார்த்த விஷயமாக இருக்கிறேதே என்று யோசித்தால், அது நமக்கும் நேர்ந்த அனுபவம் என்று தானாகவே உணரலாம். அதாவது நமது அன்றாட அசட்டுத் தனமான அல்லது வேடிக்கையான செயல்களை மற்றவர்கள் இன்னொருவரைக் குறிப்பொருளாகக் காட்டிச் சொல்லும் போது நமக்கு அது நகைச்சுவையாக இருக்கின்றது.



ஒரு பஸ்ஸில் வந்து போகும் பாத்திரங்கள் ஒன்றையும் தவறவிடாது அனைவரையும் இவர் விட்டுவைக்கவில்லை. கிழவியாகட்டும் , இளம் பெண்ணோ , இளம் பையனோவாகட்டும் அவர்களில் குரலாகவும் மாற்றி கே.எஸ்.பாலச்சந்திரன் நடித்திருப்பது இந்தத் தனி நடிப்பின் மகுடம். சரி இனி உங்களிடமேயே விட்டுவிடுகின்றேன். ஒலியைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்



உங்கள் அபிமானத்துக்குரிய கலைஞர், தனிநடிப்புப் புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் வழங்கும்

"அண்ணை றைற்"
http://www.eelavision.com/audio/anna_right_drama.ram


நெல்லியடி, அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர்,
நீர்வேலி கோப்பாய், யாழ்ப்பாணம் எல்லாம் ஏறு
அண்ணை கொஞ்சம் பின்னாலை எடுத்து விடுங்கோண்ணை.

அண்ணை றைற் அண்ணை றைற்

அவசரப்படாதேங்கோ எல்லாரையும் ஏத்திக்கொண்டுதான் போவன்
ஒருத்தரையும் விட்டுட்டுப் போக மாட்டன்.
தம்பீ ஏன் அந்தப் பொம்பிளைப்பிள்ளையளுக்கை நுளையிறீர்
கொஞ்சம் இஞ்சாலை வாருமன்.
நீர் என்ன அக்கா தங்கச்சியோட கூடப் பிறக்கேல்லையே?
நீர் என்னும் சரியான ஹொட்டல்லை சாப்பிடேல்லை போல கிடக்கு
கொஞ்சம் இஞ்சாலை அரக்கி நில்லும்.


ஆச்சீ!! பொடியனுக்கு எத்தினை வயசு?
இருவத்தஞ்சு வயசிருக்கும், புட்போல் விளையார்ற வயசில
இடுப்பிலை வச்சுக்கொண்டு நாரி முறிய முறிய நிக்கிறாய்
டிக்கற் எடுக்கவேணும் எண்ட பயமோ
இறக்கிவிடணை பெடியனை

(ஆச்சி தனக்குள்) அறுவான்

என்ன சொன்னீ? அறுவானோ? பார்த்தியே? முன்னாலை போணை.

தம்பீ அதிலை என்ன எழுதியிருக்கு தெரியுமே?
புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது, ஆஆ
ஆரோ காதல் விலக்கப்பட்டுள்ளது எண்டு மாத்திப்போட்டு போட்டான்
முந்தியிருந்தது புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது.
நீரென்ன சிமெந்து பக்ட்றி புகை போக்கி மாதிரி
புக்கு புக்கெண்டு விட்டுக்கொண்டிருக்கிறீர்?

யன்னலுக்குள்ளால இறியும் கொள்ளிக்கட்டையை
இல்லையெண்டால் நான் உம்மை எறிஞ்சுபோட்டு போடுவன் யன்னலுக்குள்ளாலை.

இந்தக்காலத்துப் பெடியள் பாருங்கோ வலு பொல்லாதவங்கள்
கண்டபடி கொழுவக்கூடாது
அண்டைக்கு இப்பிடித்தான் பாருங்கோ ஒருதனோடை கொழுவிப் போட்டு நான் வந்து ஸ்ரைலா
வந்து புட்போர்ட்டிலை நிண்டனான்.
அவன் இறங்கிப் போகேக்கை எட்டிக் குட்டிப் போட்டு ஓடீட்டான்
அண்டையில இருந்து பாருங்கோ கொழுவிற நாட்கள்ள
புட்போட்டிலை நிக்கிறதில்லை, புட்போட்டிலை நிக்கவேணுமெண்டால் நான் கொழுவிறதில்லை
வலு அவதானம்.

அண்ணை எடுங்கோண்ணை, அண்ணை றைற்.....

ஒருத்தரும் புட்போட்டிலை நிக்கக்கூடாது,
எல்லாரும் உள்ளுக்கை ஏறுங்கோ அல்லாட்டா இறங்கோணும்
ஒருத்தரும் புட்போட்டிலை நிக்கவிடமாட்டன் இண்டைக்கு
முந்திப் பாருங்கோ இப்பிடிப் புட்போட்டில கனபேர் நிண்டால்
ஒரு வேலை செய்யிறனான் இப்ப செய்யிறதில்லை
முந்திக் கனபேர் புட்போட்டிலை நிண்டால்
ஒரு வேலை செய்யிறனான் என்னண்டாப் பாருங்கோ
எல்லாரும் உள்ளுக்கை ஏறவேணும் இல்லாட்டா இறங்கவேணும்
இல்லாட்டா பஸ் போகாது எண்டு சொல்லிப் போட்டு
நான் கீழ... நிலத்தில இறங்கி நிக்கிறனான்
இப்ப அப்பிடிச் செய்றேல்லை

அண்டைக்கு இப்பிடித் தான் பாருங்கோ கனபேர் புட்போட்டிலை நிண்டாங்கள்,
நான் சொல்லி அலுத்துப் போய் கீழ இற்ங்கி நிலத்தில நிண்டண்
உள்ளுக்கை நிண்ட படுபாவி ஆரோ மணி அடிச்சு விட்டுட்டான்
மணியண்ணருக்குத் தெரியாது நான் கீழை இறங்கி நிண்ட விஷயம்
ரண்டரைக் கட்டை தூரம் துரத்து துரத்தெண்டு துரத்திப் போய்
ஒண்டரைக் கட்டை தூரம் ரக்சியில போயெல்லே பஸ்ஸைப் பிடிச்சனான்.
அண்டையில இருந்து உந்த விளையாட்டு விர்றேல்லை.


அப்பூ! அந்தக் கொட்டனை விட்டுட்டுப் போணை,
அது பத்திரமா நிற்கும், விழாது.
ஏதோ தூண் பிடிச்ச மாதிரி இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறீர்.
தம்பீ! முன்னாலை இருக்கிற அய்யாவோட கோபமே? ஒட்டப் பயப்பிர்றீர்.
தள்ளி முன்னுக்கு கிட்டக் கிட்ட நில்லுங்கோ.

நான் சொன்னால் நம்ப மாட்டியள் முன்னால இரண்டு பேர் நிக்கினம்
என்ன கதைக்கினம் எண்டு பாருங்கோ
வீட்டில சொல்லிப் போட்டுவாறது பள்ளிக்கூடத்துக்குப் போறன்
படிக்கப் போறன் டியூசனுக்குப் போறன் எண்டு, என்ன கதைக்கினம் எண்டு பாருங்கோ

பெண்குரல் : "இஞ்சருங்கோ அண்டைக்கு வாறன் எண்டு சொல்லிப் போட்டுப் பிறகேன் வரேல்லை"

ஆண்: நான் எப்பிடி வாறது? நான் வரேக்கை உங்கட கொப்பர் கொட்டனோட நிக்கிறார்.

நான் பயத்திலை விட்டுட்டு ஓடியந்துட்டன்

பெண்குரல்: என்ன சொன்னாலும் உங்களுக்கு என்னிலை விருப்பமில்லை என்ன?



தம்பீ கொஞ்சம் முன்னாலை அரக்கி நில்லும்,
தங்கச்சி கொஞ்சம் இஞ்சாலை அரக்கி வாணை.
அண்ணை கொஞ்சம் இறுக்கிப் பிடியண்ணை,
இது வலு ஆபத்தா வரும் போல கிடக்கு.


உதார் மணியடிச்சது?
அப்பூ ! உதென்ன குடை கொழுவுற கம்பியெண்டு இனைச்சீரே?
மணியடிக்கிற கம்பீல குடையைக் கொழுவிப்போட்டு தொங்கிப்பிடிச்சுக்கொண்டு நிக்கிறார்
கழட்டும் காணும் குடையை
என்னது மான் மார்க் குடையோ?ஓம் மான் மார்க் குடை
எ எ என்ன என்ன என்ன? ஒழுகாதோ?
இப்ப மணியடிக்கிற கம்பீல குடையைக் கொழுவிப் போட்டு
மான் மார்க் குடை ஒழுகாது எண்டு சொல்லிக்கொண்டு நிக்கிறீர்
கழட்டும் காணும் குடையை.

அண்ணை எடுங்கோண்ணை......அண்ணை றைற்

தம்பீ! தாறன் பொறுமன் அந்தரிக்கிறீர்
பொறுமன் ஒரு அஞ்சியேத்து மிச்சக்காசுக்கு
அண்ணை அண்ணையெண்டிருக்கிறீர்
உங்களுக்குத் தான் சொல்லுறன் ரகசியம்
ஆராவது மிச்சகாசு தாங்களாக் கேட்டாலொழிய, நான் குடுக்க மாட்டன்

அப்பிடியும் மிச்சக்காசு கொடுக்கிறதுக்கு ஒரு வழி இருக்குப் பாருங்கோ என்னட்டை.

அண்ணையண்ணை மிச்சக்காசு.....அண்ணையண்ணை மிச்சக்காசு எண்டு சுறண்டு சுறண்டெண்டு சுறண்டி

என்ர யூனிபோர்ம் கிழிஞ்சு, யூனிபோர்முக்கை இருக்கிற சேர்ட்டுக் கிழிஞ்சு, சேர்ட்டுக்கை இருக்கிற பெனியன் கிழிஞ்சு உடம்பில சுறண்டுமட்டும்

நான் திரும்பியும் பார்க்கமாட்டன்.
அப்பிடியும் மிச்சக்காசு கேட்கிறவங்கள் இருக்கிறாங்கள் பாருங்கோ.
தப்பித் தவறி அப்பிடி மிச்சக்காசு என்னட்டைக் கேட்டினமெண்டால்
பத்துரூவா தந்திட்டு ரண்டு ரூபா போக
எட்டு ரூபா காசு மிச்சம் குடுக்கவேணுமெண்டால் ஒரு வேலை செய்வன்
இருவத்தாஞ்சு அம்பேசம் குத்தியாக் குடுத்திடுவன்
அவர் கை நிறையக் காசை வாங்கிக் கொண்டு
மேலையும் பிடிக்கமாட்டார், கீழையும் பிடிக்க மாட்டார்
கையில கிளிக்குஞ்சு பொத்திப் பிடிச்சது மாதிரிப் பொத்திப் பிடிச்சுக்கொண்டு நிற்பார்.
எப்படா இறங்குவம், இறங்கிக் இந்தக் கையை விரிச்சுக்
காசை எண்ணுவம் எண்டு காத்துக் கொண்டு நிற்பார்.
நான் மணியடிப்பன், மணியண்ணன் அடுத்த கோல்டிலை தான்
பஸ்ஸைக் கொண்டுபோய் நிற்பாட்டுவார்.


இறங்கி, நிலத்தில காலை ஊண்டிக் ,கையை விரிச்சு எண்ணிப்பாப்பார்,
ரண்டு மூண்டு ரூபாய் குறைஞ்சிருக்கும். பஸ் பறந்திருக்கும்.
எனி உந்த பஸ்ஸைத் துரத்திக்கொண்டு நான் ரக்சி பிடிச்சுக்கொண்டு
போறதோண்டு என்னைத் திட்டித் திட்டி வீட்டை போயிடுவார்.


இன்னுமொரு புதினம் பாருங்கோ.
பஸ்ஸுக்குள்ள தங்கச்சிமார் கனபேர் இருந்தால்
தம்பிமார் மிச்சம் கேளாயினம்.
இருபத்தைஞ்சு அம்பேசம் மிச்சம் கேளாயினம் வெட்கத்திலை.
தூர இருந்துகொண்டு மெல்லிசாக் கையைக் காட்டிக் கொண்டே கேட்பினம்
" அண்ணோய், ருவன்றி பைப் சென்ற்ஸ்"

" அண்ணோய், ருவன்றி பைப் சென்ற்ஸ்"

நான் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டன்.



உதார் மணியடிச்சது?
ஆறு பேர் இறங்கிறதுக்கு ஆறு தரம் மணியடிக்கிறீரே?
டாங்க் டாங்க் டாங்க் எண்டு
ஆறு தரம் அடிச்சால் பஸ் நிக்காது காணும்.
நிண்டு நிண்டு போகும்.
கண்டறியாத ஒரு மீசையோட முழுசிறீர்.


அண்ணை எடுங்கோண்ணை......அண்ணை றைற்

தம்பி கொஞ்சம் அரக்கி நில்லுங்கோவன்.
எல்லாரும் கொஞ்சம் முன்னுக்குப் போங்கோவன்.
உங்களுக்குச் சொன்னா என்னப் பாருங்கோ
இந்த உலகத்திலை எல்லாரும் முன்னுக்குப் போகவேணுமெண்டு
நினைக்கிற ஒரெயொரு சீவன் நான் தான்.


அண்ணை கோல்ட் ஓன்.

அண்டைக்கு இப்பிடித் தான் ஒருத்தர் இன்ரவியூவுக்குப்
போகவெண்டு என்ர பஸ்ஸில வந்தார்.
படுபாவிக்கு ரை கட்டத் தெரியேல்லை.
ஆராவது தெரிஞ்சாளைக் கேட்டுக் கட்டியிருக்கலாம்.
இவன் தானே ரை கட்டிப் பழகியிருக்கிறான், சுருகு தளமாக் கட்டி.
சுருகுதளமாக் கட்டிக்கொண்டு இவர் வலு ஸ்ரைலா வந்து நிண்டார் பஸ்ஸுக்குள்ள.
பக்கத்திலை ஒரு கட்டைக் கிழவன் நிண்டது.
மணியண்ணன் மாடொன்றைக் கண்டுட்டுச் சடன் பிறேக் போட
பக்கத்திலை நிண்ட கட்டைக் கிழவன் பார்த்திருக்கு
எல்லா பாறிலயும் ஒவ்வொருதனும் தொங்கீனம்
நான் பிடிக்க ஒரு பாறில்லையே எண்டு ஏங்கின கிழவன்
இவற்றை ரைடயைக் கண்டிட்டுது.
பாஞ்செட்டி ரையைப் பிடிக்க சுருகுதளம் இறுகு அவர் இப்பிடி நிக்கிறார் மேலை.
எமலோகத்துக்கு இன்ரவியூவுக்குப் போக ஆயித்தம்.
நான் பக்கத்திலை இருந்த மனிசனிட்ட நல்ல காலம்
சின்ன வில்லுகத்தியொண்டு இருந்த படியால் டக்கெண்டு வேண்டி ரையை அறுத்திருக்காவிட்டால் அவர் மேலை எமலோகத்துக்குப் போய் இன்ரவியூவுக்கு நிண்டிருப்பார்.


அண்டைக்கொரு பெடியன் கைநிறையப் புத்தகத்தோட வந்து பஸ்ஸுக்க நிண்டான்.
நான் கேட்டன், "தம்பி எப்பிடி நீர் நல்ல கெட்டிக்காரனோ" எண்டு".
ஓம் எண்டு சொன்னான்.
நான் உடன கேட்டன், சரித்திரத்தில ஒரு கேள்வி.
தம்பீ? கண்டி மன்னன், கடைசி மன்னன் விக்கிரமராசசிங்கனுக்கு கடைசியில ஏற்பட்ட கதி என்ன?
டக்கெண்டு நான் கேட்டன்.
பொடியனும் உடன டக்கெண்டு மறுமொழி சொல்லிப்போட்டான்.
பொடியன் உடன சொன்னான்.
"அதோ கதி தான் " எண்டு.
பெடியள் வலு விண்ணன்கள்.


மணியண்ணர் ஓடுரார் பாருங்கோ ஓட்டம், என்ன
மணியண்ணனுக்கு சந்தோஷம் வரவேணும் பாருங்கோ
சந்தோஷம் எப்பிடி வரவேணும் எண்டு கேட்கிறியள்?
தலை நிறையப் பூ வச்சு, சாந்துப் பொட்டுக் கம கமக்க
காஞ்சிபுரம் சாறி சர சரக்க மணியண்ணையின்ரை சீற்றுக்குப் பின்னால்
சீற்றில வந்து இருக்க வேணும்.
மணியண்ணன் சாடையாக் கண்ணாடியைத் துடைச்சுப் போட்டு
ஒரு பார்வை பார்த்துப் போட்டு ஓடுவார் பாருங்கோ ஓட்டம்.


அண்டைக்கு இப்பிடித் தான் பாருங்கோ
ஒரு சந்தோஷம் வந்து மணியண்ணற்ற சீற்றுக்குப் பின்னால இருந்திது.
மணியண்ணர் கண்ணடியில பார்த்துப் போட்டு ஒட்டினார் பாருங்கோ ஓட்டம்
றோட்டில சனம் சாதியில்லை.
ஞாயிற்றுக்கிழமை இல்லை, நல்ல வேர்க்கிங் டே.
றோட்டில சனம் சாதியில்லை.
சைக்கிள்ள வந்த வேலாயுதச் சட்டம்பியார்
சைக்கிளைக் கானுக்கிள்ள போட்டுட்டு
மதிலாலை ஏறிக்குதிச்சிட்டார். அந்தளவு ஓட்டம்
மாலி சந்தையடியில வரேக்க பாருங்கோ
மாடொண்டு குறுக்கை வந்துது
மணியண்ணர் வெட்டினார் ஒரு வெட்டு
பஸ் எங்கை நிண்டது தெரியுமே?
பக்கத்து பாண் பேக்கரிக்கை நிக்குது.
மணியண்ணரைக் காணேல்லை.

"ஐயோ மணியண்ணை,

இருபது இருபத்தஞ்சு வருசம் என்னோட வேலைசெய்த மணியண்ணை
எங்கையண்ணை போட்டியள்" எண்டு நான்
கத்தி, விசிலடிச்சுக் கூக்காட்டிப் போட்டுப் பார்க்கிறன்.
மணியண்ணன் பேக்கரிக் கூரேல்லை நிண்டு ரற்றா காட்டுறார்.
நான் எங்கை இருந்தனான் எண்டு கேக்கேல்லை?
பெரியாஸ்பத்திரியில வேலை செய்யிற பெரிய சைஸ் நேர்சம்மா
ஒராள் இருந்தவ, அவோன்ர மடியில பத்திரமா பக்குவமா இருந்தன்.

அண்ணை கோல்ட் ஓன்.

யாழ்ப்பாணம் வந்ததும் தெரியேல்லை. நான் கதைச்சுக் கொண்டு நிண்டிட்டன்.
அண்ணை கொஞ்சம் பின்னாலை அடிச்சு விடுங்கோண்ணை
நான் ஒருக்கா ரைம் கீப்பரிட்டை போட்டுவாறன்.

அண்ணை றைற்.....அண்ணை றைற்..... அண்ணை கோல்ட் ஓன்.

0 பின்னூட்டங்கள்: