பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - புதியமாதவி - 4

நட்புமண்டலம்
- புதியமாதவி



(சூர்யா@ நட்புமண்டலம் உரைவீச்சின்
சிறுதுளி.. உங்களுக்காக)


சூர்யா..
உன் கவிதையின் நெருப்பு மலர்கள்
என் வாசலுக்கு வரும்போது மட்டும்
நீரில் நனைந்த கட்டை விறகுகளாய்
ஏன் புகைந்து போய்விடுகின்றன.?
எதை எல்லாமோ
எழுதிய உன் எழுதுகோல்
நம் நட்பு மண்டலத்தை மட்டும்
எனக்காக இட ஒதுக்கீடு செய்துவிட்டதா?

வானத்தின் சூர்ய மண்டலத்தை
நவக்கிரகங்கள் சுற்றிக்கொண்டிருக்கும் போது
இந்த ஒன்பது விடியல்களிலும்
நான் நம் நட்பு மண்டலத்தைச் சுற்றி சுற்றி வந்திருக்கின்றேன்.

என் சுற்றல் உன் அறிவுமொழியில் சொல்லப்போனால் புலம்பல்
என் உணர்வு மொழியில் சொல்லப்போனால் நம் உயிர்ப்பூ

இது உணர்வுகளின் இதழ்களை மெதுவாக எடுத்து அதன் மெல்லிய இதழ்கள் வலிக்காமல்
வார்த்தைகளில் தொடுத்த அனுபவம்.

நம் புஞ்சைக்காட்டின் முள்செடிகளில் பூக்கும் சின்னச் சின்ன வெள்ளைப் பூக்களைக் கூட
அதன் காம்புகள் கசங்காமல் கட்டி வைத்திருக்கின்றேன் பார்த்தாயா..!

சொன்னது துளி..
அனைத்தையும் சொல்ல நினைத்தால்
பதிவுகள் பசிபிக் கடலைச் சின்னதாக்கி விடும் ..

அதன் பின்.. பதிவுகளின் பக்கங்கள் எல்லாம்
நீயும் நானும் மட்டுமே பேசிக்கொண்டிருப்போம்..

இதைப் பதிவுச் செய்ததில் பரமதிருப்தியா என்றுதானே கேட்கின்றாய்?
என் பதில் என்னவாக இருக்கும் என்பது உனக்குத் தெரியாதா?
இது இன்னும் முற்றுப் பெறவில்லை.
உனக்கான .. உன் பக்கங்கள்..
இன்னும் காலியாகவே இருக்கின்றன.

உன் எழுதுகோலின் தரிசனத்திற்காக தவமிருக்கின்றன.
இந்த தவத்தில் இன்னும் எத்தனை எத்தனைக் காலங்கள் கழியுமோ
ஊழிகள் முடியுமோ
உடல் மறைந்து உயிர் கரைந்து உன் தோட்டத்து காற்றில் வந்து
உன் காலடி ஓசைக்காக காத்திருக்குமோ..
இல்லை உதிர்ந்த இலைகளின் நடுவில் விழுந்து
நீ அடையாளம் காணும்முன்னே உன் காலடியில்
நொறுங்கி.. மீண்டும் உன் மண்ணில் உரமாகி.. ..
உயிர் வாழப் போராடுமோ..

சூர்யா..
நம் மெளனங்கள் இனி உடையப் போவதில்லை.
பனிக்கட்டிகளாக பாறைகளாக..
எதையும் உடைக்கும் .. உடைத்து எறியும் மலைகளாக
மாறிவிட்டது..

சூரியா.. உன் கதிர்களின் நேரடிப் பார்வையில் நானில்லை.
நான் பூமத்திய ரேகையை விட்டு வந்து பலகாலமாகிவிட்டது.
துருவங்களில் தான் என் வாசம் என்பது இனி மாற்ற முடியாது..

துருவங்களில் வரும் உன் கதிர்களின் சொற்ப நேர தரிசனத்திற்காக
என் பனிமலை வீடுகள் காத்திருக்கின்றன.

உன் கதிர்கள் என் மலைகளை உருக்கி நதிகளாக்கும் என்ற
நம்பிக்கை .. இன்று இல்லைதான்..
ஆனால் உன் கதிர்கள் தரும் வினாடி நேர வெளிச்சத்தில்
என் இருட்டுக்கு கூட விழிகள் ...
ஆமாம்... இருட்டில் மட்டுமே பார்க்கப் பழகிப்போன விழிகள்..

சூர்யா..
இருட்டிலும் வேட்டையாடும் இதயமற்றவர்கள் சொல்கின்றார்கள்..
ஒருநாள் சூரியன்கூட சிறைவைக்கப் படும் என்று..
அவர்களிடம் சொன்னேன் ..
அந்த நாளில் எங்கள் நட்பு மண்டலத்தின்
நட்சத்திரம் ஒன்று
சூரியனாகி
இந்தப் பூமியைச் சுற்றும் என்று.

சூர்யா..
உதயத்திற்கும் மறைவிற்கும்
காலதேவன் சூரியனுக்கு கணக்கு கெடு வைத்திருக்கின்றான்.
சூரியன் அவன் கணக்கை எழுதும் வெறும் கணக்குப்பிள்ளைதான்.

நட்பு மண்டலத்தில்
இதை எழுத வேண்டும்
இப்படித்தான் எழுத வேண்டும் என்று
கணக்கு எழுதிவைக்க காலதேவனில்லை.

இது வகுப்பறை இல்லை.
கற்றலும் கற்பித்தலும் இல்லை.
உணர்தல் மட்டுமே உண்மை.
உணர்ந்ததைப் பாசாங்கு இல்லாமல்
ஒத்துக்கொள்வது மட்டுமே
நட்புக்கு நாம் செய்யும் மரியாதை.

நட்பு மண்டலத்தின் நட்சத்திரங்களுக்கு
நாம் போட்டு வைத்திருக்கும்
புதியப் பாதை.
இந்தப் பாதையை நீதான்
கற்களும் முட்களும் அகற்றி
உன் கைகளைக் காயப் படுத்திக்கொண்டாய்.

மனிதக் காட்டில்
அந்தச் செம்மண் புழுதியை
தண்ணீர் ஊற்றி ஊற்றி கட்டியாக்கி..
என் கிணறும் காய்ந்து விட்டது..

ஊரும் உறவுகளும்
கிணற்றைப் பார்த்து
என்னைக் கண்டித்தார்கள்..

கிணற்றை தூரெடுக்க
துப்பு இல்லாதவர்கள்..
வானத்தை நம்பாத மேகங்களிடம் நான் என்ன சொல்லிப் புரியவைப்பேன்?

நாளை வானம் பொழியும்..
அப்போது நம் ஊமைக்காயங்கள் அதில் மறந்து போய்விடும்.
கிணறுகள் கூட நிரம்பி வழியும்..
ஊரும் உறவுகளும்..
என் பாத்திரங்களிலும் தண்ணீர் நிரப்பும்.

இந்த நினைவுகளே சுகமாக ..

இந்த சுகானுபவத்தில்..
எல்லா சுகங்களும் இரவல் சுகமாகிவிடுகின்றன.

உடல் கூட்டில் உயிர்ப்பறவை இருக்கும்வரை தானே மற்ற சுகங்கள் எல்லாம்..
நம் நினைவுகள் தரும் சுகம் அப்படி அல்லவே..
உதிரத்தில் கலந்த பிள்ளையும்
உயிரணுவில் கலந்த துணைவனும்
உயிர் இருக்கும் வரைதானே..

உடலுக்கும் உயிருக்கும் உறவு இருக்குவரை தான்
இந்த உறவுகள் எல்லாம்..
நமக்கான உறவு..
உடலும் உயிரும் உறவு கொள்ளும் முன்பே
உயிர்த்த உயிர்ப்பூ..

தாய்-மகன்
தந்தை-மகள்
இந்த உன்னத உறவில் கூட எட்டிப் பார்க்கும் பாலியல் சுரப்பிகள்
நம் உறவில் மட்டும்
சரணடைந்துவிட்டன.

பின்பக்கமாக பார்ப்பவனின் பார்வையில் இருக்கும் காமத்தைக்கூட கண்டுபிடிக்கும்
என் விழிகள்
உன் தோள்களில் மட்டும்
என்றும் நிம்மதியாய்..
நித்திரையில்..

ஒடி ஓடி உழைத்தோம்
எதை எதையோ நாடினோம்
யார் யாருக்காகவோ ஒடினோம்
இந்த ஓட்டத்தில்
நாம் சேர்த்த சேமிப்புக்கிடங்கில்
நமக்கானப் பங்கு எதுவுமில்லை.

நாம் என்றும்
நட்புக்கு மட்டுமே
பங்குதாரர்கள்.

இங்கே-
உன் கடன்
என் கடனாவதும்
என் கடன்
உன் கடனாவதும்
என்றும் சாத்தியம்..

ஒன்பது விடியல்கள்
உன்னுடன் நான்..
என் ஒன்பது பிறவிகளின்
ஒவ்வொரு பக்கம்..
அவ்வளவுதான்.

உனக்கு இதெல்லாம் நினைவிருக்கின்றதா?

வால்கா நதிக்கரையில்
வானவில் தேடி ஓடியது நினைவிருக்கின்றதா?

நைல் நதிக்கரையில்
நம் மணல்வீடு மரப்பாச்சி
மறந்துவிட்டதா?

ப·றுளி ஆற்றின் பாலத்தில்
என் பக்கமிருந்து
பின்னலைப் பிடித்திழுத்தாயே

சிந்துவில் தானே
நம் சண்டைகள் ஆரம்பமானது?

கங்கையில் தானே
என் கண்ணீரைத்துடைத்து
சமாதானப்படுத்தினாய்..

கோதாவரியில்
குதிக்கச்சொல்லி
தள்ளி விட்டாயே

கிருஷ்ணாவில்
கீழே தள்ளி
விழுந்தால் தான்
எழுந்திருப்பாய்
என்று தத்துவம் பேசினாயே..
நினைவிருக்கின்றதா?

காவேரியின் குடகுமலையில்
நம் முற்றங்கள்
பிரிக்கப்படாமல்
ஒரே புள்ளிக்கோலத்தில்
இணைந்து கிடந்ததே..
அந்தக் கோலவரிசை
நினைவிருக்கின்றதா?

நேற்று-
வைகையில்
உன் காதலி மீனாட்சி
உனக்காக காத்திருக்க
இந்த
தாமிரபரணியைத் தேடி
பொதிகைக்கு
புறப்பட்டு வந்தாயே..

நாம் நட்பின் ஜீவநதிகளாடா..
இந்த நதிகள் வற்றாது..

பூமியின் நதிகள்தான்
அணைகளில் சிறைப்படும்

இந்த
நட்பு மண்டலத்தின்
ஜீவநதிகள்
எந்த அணைகளாலும்
சிறைவைக்கப்படாது.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/

0 பின்னூட்டங்கள்: