பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - புதியமாதவி - 3

அடையாளங்கள்
- புதியமாதவி


"என்னடா குறுந்தாடி செட்டப் எல்லாம்!'

" உனக்கு இந்த வெள்ளாடு மாதிரி தாடி வச்சிருக்கிற பேர்வழிகளைத் தானே ப்டிக்கும்னு சொன்னே! ப்ராணாப், சேகர்கபூர்னு நீ ரசிக்கிறவனுக்கெல்லாம் இருக்குதே இந்த தாடி.."

"அடப்பாவி நான் தாடியை மட்டுமாடா ரசிச்சேன்! உன்னை...."
அவனை நோக்கி கையை ஓங்கி நீட்டினாள்
"தாடி வச்சிருக்கவன் புத்திசாலித்தனத்தை ரசிச்சேண்டா..
உன் மரமண்டைக்கு அதெல்லாம் எங்கே புரியப்போவது?"
தலையில் அடித்துக் கொண்டாள். செல்லமாக அவன் குறுந்தாடியைப் பிடித்து இழுத்தாள்.

"ஏய் வலிக்குதுடி.. விடு ..விடு...ப்ளீஸ்.." அவன் கத்தினான்.

அவன் தோள்மீது தலைச்சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
அவள் களைத்துப்போட்ட தாடியை தன் விரல்களால் கோதி சரி செய்துக்கொண்டான் அமீர்.

"கல்யாணத்தைப் பற்றி என்ன முடிவு செய்திருக்கே" உஷாவிடம் கேட்டான்.
"என் முடிவில் எந்த மாற்றமும் இல்லைடா"
குரலில் சலனமில்லாமல் உறுதியுடன் அந்த தருணத்திலும் அவள் குரல்
அவனைச் சுற்றி வளையமிட்டது.

எங்கள் முறைப்படி பள்ளிவாசலில் வைத்து திருமணம் செய்து கொள்ள நீ இசுலாமுக்கு
வரவேண்டும். அது முடியாது, தேவையில்லை என்கிறாய்.
எதற்கு மத அடையாளம் என்பதில் ரொம்பவும் தெளிவாக இருக்கிறாய்.

சரி நான் இந்துவாக மாறிக்கொள்கிறேன் என்றால் "ஏன்பா.. நாட் நேசஸரி.."
என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிடுகிறாய்.
எப்படி நான் மதம் மாறுவதில் எனக்கு உடன்பாடில்லையோ அது போலவே நீயும் மதம்
மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் என் சுயமரியாதையை மதிப்பதாகவும்
என் சைடிலிருந்தும் பேசுகிறாய். நீ பேசும் போது எல்லாமே சரியாகவே
சொல்றமாதிரிதான் இருக்கு. ஆனா தனியா இருந்து யோசித்துப் பார்த்தால்
நடைமுறையில் இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம்னு தோனுது.
உங்கிட்டே சொன்னா மீண்டும் என்னை என் பயங்களை பெரிதாக்கி
கேலிக்குட்படுத்துவாய்..." அமீர் ஸ்கூட்டரில் வேகமாகப் போய்க்கொண்டே
ஓவ்வொரு உரையாடல்களையும் மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தான்.

இப்படித்தான் அவனுடைய வாப்பாவின் நண்பர் ஒருவர் அந்தக் காலத்திலேயே
தன்னுடன் வேலைப்பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
உ.பிக்கார பெண். அவள் இந்து. அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை. அவன் +2 படிக்கும்போது
தீடீரென மூளைக்காய்ச்சல் வந்து இறந்துப்போனான். அவன் இறந்தப் பின்
அவனைப் புதைக்கவோ அவன் இறுதிச்சடங்கைச் செய்யவோ பள்ளிவாசலில்
இருந்து யாரும் முன்வரவில்லை. மகன் இறந்த சோகம் ஒருபக்கம். அந்த உடலை
எந்த மயானத்தில் வைப்பது என்ற பிரச்சனையில் அவரும் அவர் மனைவியும் பட்ட
வேதனைகளும் அனுபவங்களும் அவர்கள் அதுவரை வாழ்ந்த செக்குலர் ஸ்டேட்டஸ்
வாழ்க்கையை அதன் முகத்திரையைக் கிழித்துப் போட்டது. அடிக்கடி அவனுடைய
வாப்பா தன் நண்பனின் இந்தக் கதையை தன் பிள்ளைகளிடம் சொல்லி
ஒரு வேலியைப் போட்டு வைத்திருந்தார்.

இந்தச் செய்தியை உஷாவிடம் சொன்னபோது ஒரு வினாடி மவுனமும் அதன் பின்
அவளுக்கே உரிய சிரிப்பும் அவனைக் கேலி செய்தது.
"அடப்பாவி.. எப்படிடா இப்படி எல்லாம் கதைகளைச் சேகரித்து வருகிறாய்னு"
அவன் தலைமுடியைக் கைகளில் பிடித்து அவனை அசைத்துப் பார்த்தாள்.

"உஷா..ப்ப்பி சீரியஸ் யா..ப்பி பிராக்க்டிகல்.. " அவன் கோபத்தில் தலையைச் சிலுப்பிக்
கொண்டு எழுந்திருச்சான்.

அவனுக்கு மறந்துப் போய்விட்டது அதன் பின் அவன் வாப்பாவின் நண்பரின் கதை.
அவரைப் பற்றி எதையும் அவன் அதன் பின் விசாரிக்கவில்லை. ஒருநாள் உஷாதான்
உனக்கு வேண்டிய ஒருவர் இறந்துவிட்டார்கள், வா போய் அதில் கலந்து
கொண்டு ஆறுதல் சொல்லிவிட்டு வருவோம் என்றாள்:.

"எனக்கு வேண்டியவரா.." குழப்பத்திலேயே அவள் பின்னால் எதுவும் கேட்காமல்
அவள் சொல்கிற வழியில் ஸ்கூட்டரை ஓட்டினான்.
அந்த அபார்ட்மெண்டில் ஒரு அழகான மேல்மாடி த்தெரஸ் ப்ஃ:ளாட்டில் அவர்கள்
போகும்வரை அவன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.
அதன் பின் தான் அவள் அழைத்து வந்திருக்கும் இடம் தன் வாப்பாவின் நண்பரின் இல்லம்
என்பதும் இறந்துப் போனது அவர்தான் என்பதும் தெரியவந்தது.
வீட்டில் அவரது மனைவியைத் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரே எழுந்துப் போய்
அவர்கள் இருவருக்கும் குடிப்பதற்கு தண்ணீர்க் கொண்டுவந்து கொடுத்தார்.
அப்போது தான் வேலைக்காரப் பெண்மணி வந்து விட்டுப் போயிருப்பதாகவும்
அவர்களுக்கு "சாய் வேண்டுமா" என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
வீட்டுத்தரையில் தண்ணீரில் துடைத்து எடுத்த ஈரம் இன்னும் வற்றவில்லை.
அந்த வீட்டில் அன்றுதான் அவள் கணவரின் இறுதிச்சடங்கு நடந்து முடிந்திருப்பதற்கான
எந்த அடையாளமும் இல்லை.
அவள் குளித்து தலையை உலர்த்தி இருந்தாள். ஒரு காட்டன் புடவை..
அணிந்திருக்கும் கண்ணாடி அவர் கண்களின் சோகத்தை மறைத்திருந்தது.
அடிக்கடி கண்ணாடியைக் கழட்டி அவர் தன் சேலைத்தலைப்பால் துடைத்துக் கொள்வதும்
தளர்வான அந்தப் பெண்மணியின் நடையும் அவர் இழப்பின் வலியைக் காட்டத்தான்
செய்தன.

"பத்திரிகையில் பார்த்தேன்..ப்ரெபஸரின் மறைவுச் செய்தியை. உங்களைப் பற்றி ஏற்கனவே அமீர் சொல்லியிருக்கிறான்..
அதுதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்" உஷா தங்கள் இருவரையும் அவளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள்:.

"என்ன செய்தது.. ப்ரபொசருக்கு" என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான் அமீர்.

'உடம்புக்கு முடியாமல் தானிருந்தார்.. ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனேன்..." அந்தப் பெண்ணின் கண்கள்
மேசையில் வைத்திருந்த அவர் புகைப்படத்தில் பதிந்தன,.
நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து வந்தது. "ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை
எங்களுக்காக வாழ்ந்தோம்" அதைச் சொல்லும் போது அந்த தருணத்திலும் அவள் குரலின்
கம்பீரம் உஷாவுக்குப் பிடித்திருந்தது.
ஏற்கனவே நாங்கள் முடிவு செய்திருந்தப் படி அவர் கண்களைத் தானம் செய்துவிட்டோம்.
அவர் உடலை மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக கொடுத்துவிட்டேன்."

ஒரு நிமிடம் அந்தச் செய்தியின் உண்மையும் அதன் அதிர்வுகளும் அமீரைப் புரட்டிப் போட்டது.
அடுத்தக் கணம் இந்தச் செய்தியைப் பற்றி எதுவுமே பேசிக்கொள்ளாத தன் வாப்பாவும்
வாப்பா போட்டு வைத்திருக்கும் வட்டமும் வேலியும் கண்கள் முன்னே விரிந்தன.

எத்தனையோ எதிர்ப்புகளுக்குப் பின் அமீர் உஷாவைப் பதிவு திருமணம் செய்து கொண்டான்.
அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு வந்து புதுவாழ்க்கையைத் தொடர்ந்தான்.
குஜராத்தைப் போலில்லை மும்பை. இது ஒரு காஸ்மொபாலிட்டன் சிட்டி.
இரண்டு பிள்ளைகள்.. சந்தோஷமாக இருந்தது ஒவ்வொரு நாட்களும்.
ஆனால் இப்போதெல்லாம் என்னவோ விவரித்து சொல்ல முடியாத ஒரு
பயம் அவனைக் கொஞ்ச காலம் விரட்டிக்கொண்டிருந்தது.
அதுவும் அந்த நிகழ்வுக்குப் பின்...
ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் அவர்களுக்கு முன்.
அதுவும் அவன் தோற்றமும் குறுந்தாடியும் வெள்ளை ஜிப்பாவும் அவர்களுக்கு
வேண்டாத அடையாளங்களாக இருந்திருக்க வேண்டும்.
''
ஏய் இறங்குடா.. கூட்டம் கத்தியது.. பயத்தில் அவனுக்கு ரத்தநாளங்கள் பனிக்கட்டியாக
உறைந்துப் போனது. பார்த்தா தெரியலே.. போடு.. இவனுகளை எல்லாம் பாகிஸ்தானுக்கு
விரட்டனும் ' கத்தினான் கூட்டத்திலிருந்து ஒருவன்.

'ஏய் பேண்டைக் கழட்டுடா.. பாக்கட்டும் நீ யாருங்கறதை" கத்தினான் இன்னொருத்தன்.

பேண்டைக் கழட்டி தன் அடையாளத்தைக் காட்டினால் என்ன நடக்கும் எந்த பயத்திலெயே
அவன் கைகள் உஷாவை இறுகப்பிடித்துக் கொண்டன. மரணபயம்.. அவன் ப்டியில்.
உஷா தன் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை தோளகளில் போட்டுக்கொண்டே
அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தாள்.

"அவள் நெற்றியிலிருந்தக் குங்குமம், அவள் கழுத்திலிருந்த கறுப்புமணி தாலி" அந்தக் கூட்டத்தை
நோக்கி வீசப்பட்ட பாதுகாப்பு அஸ்திரமாக இருந்தது.
"ம்மி ஆஷா. மேரா பதி சுனில் " என்று அவர்களிடம் தங்களைப் பற்றி அவள் சொல்லவும்
'அச்சோ சலோ சலோ .. ஏய் ரோட்சே ஸீதா ஜாவ்.. பாஞ்ச் ரஸ்தா ஷே லெப்ட் மார்க்கே ஜாவ்.
ரைட் சைட்ஷே மத் ஜானா. உதர் முஸல்மான்க்கா மோர்ச்சா சல்ரே"

இதே ரோட்டில் இன்னொரு இடத்தில் முஸ்லீம்களின் மோர்ச்சா அங்கேயும் இந்த மாதிரி
அமீர் சுனில் ஆனது போல சுனில்கள் அமீர்களாக மாறிக்கொண்டிருக்கலாம்..

அதன் பின் ஒவ்வொரு நிகழ்வும் அவனை ரொம்பவும் பாதித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
உஷாவுக்கு ரொம்பவும் ப்டித்தமான தன் குறுந்தாடியை எடுத்துவிட்டு நீட்டா க்ளீஸ் ஷேவ் செய்து
கொண்டு உஷா முன்னால் போய் நின்றான். அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கும், சண்டை போடக்கூடும்
என்று நினைத்தான்.
அவனைப் பார்த்தவுடன் அவள்,

" ஏய்.. என்னடா இது .. ஷாருக்கான் மாதிரி க்ளீன்ஷேவ்.. ல.. யு ஆர் லுக்கிங் ஹாட்யா" என்று
சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்ட போது அவனுக்கு அவள் அவனிலிருந்து அந்நியப்பட்டது
மாதிரி இருந்தது.

பல சமயங்களில் குறுந்தாடி இல்லாத அவன் முகத்தைக் கண்ணாடியில்
பார்க்கும் போது அந்த முகம் தன்னுடையதாக என்றுமே அவனுக்குத் தோன்றியதில்லை.
யாரையோ ஒரு அந்நியனைப் பார்ப்பது போலவே இருக்கும். அடிக்கடி அவன் கைகள்
அவன் தாடையைத் தடவிப் பார்த்துக் கொள்ளும்.

அவன் வீடு வாங்கும் விசயத்திலும் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி வந்தது.
அவனுக்குத்தான் அவன் வேலைப்பார்க்கும் அலுவலகத்தில் 2% வீட்டு லோன் கிடைக்கும்.
அவன் லோன் எடுத்தால் வீடு அவன் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்/. அதிலும் சிக்கல்
வரும் என்று நண்பர்கள் பயமுறுத்தினார்கள். நல்ல லோகஷனில் அந்த அபார்ட்மெண்ட்
கட்டிடம் அமைந்திருந்தது. அதை விட்டு விடவும் மனசு வரவில்லை.
வீட்டைக் கடைசியாக உஷாவின் பெயரில் வாங்கி ஐசிஐசிஅய் வங்கியில்
கொள்ளை வட்டிக்கு கடன் வாங்கினார்கள். வயித்தெரிச்சலாக இருந்தது.
இதில் எதுவுமே தன்னைப் பாதிக்காத மாதிரி எப்போதும் போல சிரித்துக்
கொண்டு தன் பிள்ளைகளுடன் வலம் வந்துக் கொண்டிருந்தாள் உஷா.

எப்போதாவது இந்தப் பிரச்சனைகளை தன் மன உளைச்சலை பயத்தைப் பற்றி
அவளுடன் மனம் விட்டு பேச வேண்டும் என்று இந்த டாபிக்கை எடுத்தாலே
போதும்..

":ப்பி ப்பிராக்டிக்கல் யா.. நீ, நான், நம்ம பிள்ளைகங்க.. அவுங்க எதிர்காலம்..
அவுங்க ஷேப்டி..இதுக்கு ஏற்ற மாதிரி நம்மை மாத்திக்கொள்வது தானே
புத்திசாலித்தனம்.."

அவளை அவளுடைய புத்திசாலிதனத்திற்காகவே காதலித்து கல்யாணம் செய்து
கொண்ட வாழ்ந்து கொண்டிருக்கும் அமீருக்கு உஷாவின் இந்தப் புத்திசாலித்தனம்
எரிச்சல் தந்தது.
இப்போதெல்லாம் அவனுக்கு அடிக்கடி வாப்பாவின் ஞாபகம் வருகிறது.
கண்களை மூடிக்கொண்டான்..
தலையில் தொப்பியை வைத்துக் கொண்டு வெள்ளை நிற நீண்ட ஜிப்பாவை
அணிந்து கொண்டு தொழுகைக்காக வாப்பாவுடன் மசூதிக்குப் போகிறான் அவன்..
அந்த முகத்தில் அவனைப் பார்க்க பார்க்க அவனுக்குள் சந்தோஷம் பூரித்தது.
எப்படியும் இந்த வருஷம் உஷாவும் குழந்தைகளும் வராவிட்டாலும் பரவாயில்லை
தான் மட்டுமாவது ரம்லானுக்கு அப்பாவிடம் போய்விட வேண்டும்.. என்ற
நினைப்பில் எழுந்து போய் விளக்குகளை அணைத்துவிட்டு
நிம்மதியாக படுக்கப்போனான அவன்.

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/

0 பின்னூட்டங்கள்: