பண்புடன் ஆண்டு விழா - செப்டம்பர் & அக்டோபர் போட்டி - பரிசுக்கான படைப்பு - 3

ஒரு சிறுநகரத்தின் பகல் தூக்கம்
- வே.பாலமுருகன்



என் அன்பு மனைவி வசந்தாவிற்காக ஒரு கவிதை
பெருநகரத்துப் பெண்ணே
உன்னை விழுங்கிக் கொள்கிறது
என் சிறுநகரம்
என் வீட்டில் சேமித்து வைத்திருக்கிறேன்
உனக்கான நகரத்தை

இப்பொழுதெல்லாம் மின்னஞ்சல் வசதியிருப்பதால் உடனுக்குடனேயே எதையாவது சொல்லி வைக்க முடிகிறது. கடந்த 6 மாதங்களாகவே நீயும் நானும் இந்த மின்னஞ்சல் தரக்கூடிய இடைவெளி போதையின் வழி சொற்களின் மீது சல்லாபம் கொண்டு வருகிறோம். சொற்களால் காதல் செய்கிறோம், சொற்களால் சந்தித்துக் கொள்கிறோம். தொழில்நுட்பமும் மொழிநுட்பமும் நம் காதலை வளர்த்து வருகின்றன. என்ன ஆச்சரியம்?


சரி வசந்தா. இப்படி மின்னஞ்சலில் பெயரைப் போட்டு அழைப்பதுகூட அபாயமானதாகக் கருதப்படும் சூழலில் நான் உன்னுடன் சில அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். தற்போதைக்கு மனித அந்தரங்கள் பறிபோகும் இடம் இந்த மாதிரியான வலைப் பின்னலுடைய கணினியின் முன்தான் போல. web cam இல்லாதவரை மனம் கொஞ்சம் திருப்திக் கொள்கிறது. உலகத்தையே தன் வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகச் சிலர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். இதிலென்ன விஷேசம் வசந்தா? ஒரு குறுகலான வீட்டுக்குள் பெரிய உலகத்தையே அடக்கிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சிதான் வரவேண்டும்.

வசந்தா, நம் திருமணத்திற்கு இன்னமும் 4 மாதங்கள்தான் உள்ளன. மகிழ்ச்சியாக உன் வருகைகாகக் காத்திருக்கிறேன். எங்கேயோ பிறந்து வளர்ந்து ஒரு வரலாற்றுப் பின்னனியைக் கொண்டிருக்கும் வசந்தா என்ற பெண் நான் வாழும் இந்தச் சிறுநகரத்திற்கு வருவது பற்றி எனக்குப் பலநாட்களாக நெருடலாகவே இருக்கிறது. உன் காலப் பின்னனியில் நீ சேமித்து வைத்திருக்கும் அனுபவங்களுக்குப் பலவகையில் முரண்பட்டுப் போன ஒரு வாழ்க்கைச் சூழல்தான் எனக்கான சிறுநகரம். வேறு மாநிலத்திலிருந்து வேலைக்காகவும் படிப்பதற்காகவும் இங்கு வந்து இருந்துவிட்டுப் போனவர்களை நீ எங்காவது சந்திக்க நேர்ந்தால், அவர்கள் சொல்வதை அனைத்தையுமே முழுவதுமாக நம்பு. அவர்களின் சொற்களில் என் சிறுநகரமும் அந்த நகரத்தில் வாழக்கூடிய மனிதர்களைப் பற்றிய குறிப்புகளும் இருக்கும்.

மலேசியாவில் பலநகரங்கள் பாதி வளர்ச்சியடைந்துவிட்டு மீதியில் பழுதடைந்துவிட்ட நாகரிகத்திலேயே உலர்ந்து கிடக்கின்றன. இங்கு பழுதடைந்த நாகரிகம் என்று நான் குறிப்பிட்டிருப்பதை நீ அவ்வளவாகக் கவனிக்காமல் கடந்துவிடலாம். என் சொற்களை வாசிப்பதில் தயவு செய்து அவசரம் காட்டாதே. 4 மாதங்கள் இருக்கின்றன. நிதானமாகவே படிக்கலாம். பழுதடைந்த நாகரிகம் கொண்ட நகரத்தில் 26 வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன் என்றால் எனக்கும் அந்த நகரம் சார்ந்த மனப்பிறழ்வு இருக்கும் என்பதில் எந்தப் புதிரும் இல்லை.

என்னாடா இவன் ஏதேதோ பேசறான். . மனப்பிறழ்வுனு சொல்றான். . சிறுநகரம்னு சொல்றான் என்று நீ முனகுவது கேட்கிறது. வேலை அலைச்சலில் ஒருசில சமயங்களில் கடுமையான வெயிலினூடே எங்காவது சிக்னல் ஓரங்களில் மோட்டாருடன் காத்திருக்கும்போது எனக்குப் பலமுறை மனப்பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றி பக்கத்திலிருப்பவர்களுக்குக்கூட தெரிய வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு மிகவும் நுட்பமான நகரம் சார்ந்த மனப்பிறழ்வு. அது எப்படி இருக்கும் என்று நீ கேட்கக்கூடும். பயப்படாதே! சட்டையைக் கிழித்துக் கொண்டு சாலையில் ஓடாத குறை, சிக்னலில் நின்று கொண்டு சாலையில் ஓடும் வாகனங்களுக்குப் பாதை காட்டாத குறை, சுயமாக உரையாடிக் கொண்டே அலையாத குறை என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதையெல்லாம் தவிர்த்த ஒர் இயந்திரகதி பைத்தியக்காரத்தனம். முதலில் இந்த நகரத்தில் அடிக்கக்கூடிய வெயிலுக்கும் மனப்பிறழ்வுதான் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ பைத்தியக்கார வெயில். உச்சந்தலையில் இறங்கி உணர்வுகளை உறிஞ்சித் தள்ளி நம்மைச் சாகடித்துவிடும். ஆதலால் நான் உனக்குக் கூறும் முதல் ஆலோசனை உனக்கு வெயிலைப் பிடித்திருக்குமாயின், தயவு செய்து வெயிலை வெறுக்கப் பழகிக் கொள்.

இயற்கையைப் பழிக்கிறானே என்று என்னை விமர்சனம் செய்துவிடாதே! சிறுநகரத்தில் மழையில்லா காலங்களில் இருக்கக்கூடிய சராசரி மதிய உணர்வுகளின் உச்சத்தில் இருந்தவர்களில் நானும் ஒருவன் என்ற பட்சத்தில் கொஞ்சம் தைரியமாகவே இதையெல்லாம் பேசுகிறேன். உங்கள் இடத்தில்(பெருநகரத்தில்) எல்லாம் மின்சார இரயில் என்பதால் சராசரி சாமான்யர்கள்கூட குளிரூட்டும் கண்ணாடி பேழைக்குள் அடைப்பட்டே பயணப்பட்டுக் கொண்டிருக்கலாம். அங்கு வெயிலும் அவ்வளவாக இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வசந்தா, இரவில் நீ வீட்டின் கருப்புக் கண்ணாடிகள் பொருந்திய மொட்டை மாடியில் இருந்து கொண்டே வானத்தின் அழகைப் பார்த்து இரசிக்கக்கூடியவளாக இருக்கலாம். அல்லது பட்டன் தட்டினால் திறந்து மூடும் இயக்கிகள் கொடுக்கும் பாதுகாப்பில் நாள் முழுக்க இரவை வீட்டினுள் இருந்து கொண்டே பார்த்தவளாக இருக்கலாம். ஆனால், என் சிறுநகரத்தில் இரவுகள் எப்படி வரும், கழியும் என்பதைப் பற்றி உனக்குத் தெரியுமா? என் வீட்டுப் பக்கத்திலேயே பெரிய சாலை என்பதால் அந்தச் சாலைக்குப் பக்கத்தில் போடப்படும் கொய்த்தியோ(சீனர்களின் உணவு) வாசனைதான் முதலில் இரவு வந்துவிட்டதற்கான தேசிய அறிகுறி. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கொய்த்தியோவிற்காக அலைமோதும் இரைச்சல் பெருகத்துவங்கும் கணத்தில்தான் எனக்கான இரவு முழுவதுமாக வந்துவிட்டிருக்கும். சீன மொழியில் சண்டைகளும் சச்சரவுகளும் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் எங்கேயாவது தமிழையும் கேட்கலாம். இரவில் பெரும்பாலும் இங்குள்ளவர்களுக்குப் பிடித்தமான உணவு, சட்டியைத் தூக்கிப் பிடித்து, பறக்கவிட்டு நெருப்புடன் சாகசம் செய்து போராடும் சீனன் தயாரித்துக் கொடுக்கும் கொய்த்தியோதான். அவசரமில்லாமல் நன்றாக முகர்ந்து பார்த்தால், அந்த உணவில் நெருப்பின் வாடை இருக்கும்.

ஆதலால் உனக்குக் கொய்த்தியோ என்கிற உணவுவகை பிடிக்கவில்லையென்றாலோ அல்லது நீ சாப்பிட்டதில்லையென்றாலோ தயவு செய்து அதை ஆத்மார்த்தமாகச் சாப்பிடக் கற்றுக் கொள். அதன் வாசனையை இப்பொழுதே பழகிக் கொள். இது நான் உனக்குக் கூறும் இரண்டாவது ஆலோசனை.

வசந்தா, இந்தச் சிறுநகரத்திலிருக்கக்கூடிய ஆண்களைப் பற்றி நான் கண்டிப்பாக உன்னிடம் சொல்லிவிட வேண்டும். ஆச்சரியம் கொள்ளாமல் இருந்தால் சரி. இல்லையென்றால் இப்பொழுது நான் சொல்லக்கூடிய அனைத்து அவதானிப்புகளும் உன்னை ஆச்சரியப்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்கள் இல்லாத நகரம் எப்பொழுதுமே உயிரிழந்த வர்ணத்தைப் போல வெறுமையாகிவிடும் என்கிற புரிதலுக்கேற்ப ஆண்கள் வகைவகையாக நகரத்தை நிரப்பி முழுமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பெண்களின் பிட்டத்தை வெட்கமில்லாமல் உற்றுப் பார்க்கக்கூடிய ஆண்கள் தொடங்கி கூட்டத்தில் நகரும்போது பெண்களின் மார்பகங்களின் அளவைப் பரிசோதித்துப் பார்க்கும் சாகச ஆண்கள்வரை இந்த நகரம் ஆண்களின் காமத்தில் சிலிர்த்துக் கொண்டேயிருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்.

ஆதலால், நகரத்தில் ஒரு பெண் நடக்கும்போது(முக்கியமாக கூட்ட நெரிசலில்) சுற்றியுள்ளவர்களின் அசைவுகளையும் நெருக்குதல்களையும் நுணுக்கமாக உணர்ந்து கொள்வதோடு எப்பொழுதும் கூட்டத்திலிருந்து விலகியே நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். காமுகர்களின் பிடியிலிருந்து தப்பிக்க ஒரே வழி கூட்டத்திலிருந்து விலகி தனியாக நடப்பதுதான் வசந்தா. கூட்டத்தில் சிக்கி நடப்பதைப் பற்றி உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இங்கு மின்சாரக் கட்டணம் முதல் வங்கியில் பணம் எடுப்பதுவரை எல்லாமே கூட்டத்தோடு போராடித்தான் நிகழ்த்திக் கொள்ள முடியும்.

பெரும்பாலும் நகரத்தின் பகல்வேளையில் பங்களாடேஷ் அல்லது இந்தோனேசியா ஆண்களைத்தான் நீ நகரத்தில் பார்க்கக்கூடும். வரிசையாகப் பேருந்து நிலையத்திலும் மலிவு சாப்பாட்டுக் கடைகளின் வாசலிலும் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் பார்வைதான் சராசரி ஒரு பெண்ணுக்குப் பெரிதும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும். வசந்தா, பகல்வேளையில் இவர்களைப் பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், இரவில் ஒருவேளை நகரத்தில் நீ நடக்க நேர்ந்தால் முதலில் இவர்களிடமிருந்துதான் விலகி இருக்க வேண்டும். இவர்களின் காமம் இரவில்தான் விழித்துக் கொள்ளும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உனக்கு நான் கூறும் 3ஆவது ஆலோசனை நகரத்தின் பகலிலோ இரவிலோ விலகுதல் என்பதும் விலகி இருத்தல் என்பதும் பாதுகாப்பின் அம்சங்கள்.
அப்பனா ஒரு பெண்ணுக்கு அங்குச் சுதந்திரமே இல்லையாங்க? என்று நீ கேட்கக்கூடும். தயவு செய்து உன்னை நான் positiveness அடக்குமுறையைக் கையாண்டு நகரம் குறித்த செயற்கை பீதியின் துணையுடன் என் ஆண்தனத்தை நிறைவேற்றிக் கொள்கிறேன் என்று நினைத்துவிடாதே. ஒருநாள் உன்னை நான் தனியாகப் பகல்வேளையில் நகரத்தைச் சுற்றிவர அனுமதிக்கிறேன். என் நகரத்தின் பகல்வேளையைக் கொஞ்சம் அனுபவித்துப் பார்.

வசந்தா அடுத்து நீ முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது நகரத்தில் இருக்கக்கூடிய கெட்ட வார்த்தைகளையும் ஆபாசக் குறியீடுகளையும்தான். இதையெல்லாம் நீ ஆங்கில சினிமாவில் எப்பொழுதாவது பார்த்திருக்கக்கூடும். இங்கு நகரத்தில் நீ இரண்டு தடவைக்கு மேற்பட்டே அதையெல்லாம் சராசரி சொற்களாகவே கேட்டுப் பழகலாம். உதாரணமாக சிக்னலுக்காகக் காத்திருக்கும் வேளையில் இரு மோட்டாரோட்டிகள் தூரமாக இருந்துகொண்டே ஆபாசமாகக் கத்துவார்கள். அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு நீ மயங்கவும் வாய்ப்புண்டு. இந்த நகரத்தில் மட்டுமே இப்படிப் பச்சையாகப் பலர் முன்னிலையிலும் ஆபாசமாகப் பேசிக் கொள்பவர்களை நீ பார்க்கலாம். இப்படிக் கேட்டுக் கேட்டே யாராவது என்னைக் கெட்ட வார்த்தைகளில் திட்டினால்கூட எனக்கு உறைப்பதில்லை. இங்குப் பலரின் பொழுது போக்கே இப்படி ஆபாசமாகப் பேசி தன் சுதந்திரத்தை மிகைப்படுத்திக் காட்டிக் கொள்வதுதான்.

மேலும், சாப்பாட்டுக் கடைகளில் அமர்ந்திருக்கும் நண்பர்கள் நாகரிகம் கருதி வார்த்தைகளால் இல்லாமல் ஆபாசக் குறியீடுகளை விரல்களால் காட்டித் திட்டிக் கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு கூட்டத்தை நீ எங்காவது பார்க்க நேரிடும். அவர்களைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் சமநாகரிகத்தைக் கடைபிடிப்பதே உத்தமம். அல்லது இவர்களிடமிருந்து நீ தப்பித்து வந்தாலும் சாலையின் ஓரமாக நடந்து கொண்டிருக்கும் பைத்தியக்காரன்கூட பைத்தியக்காரத்தனம் மேலோங்கிவிட்டால் முதலில் உபயோகிப்பது கெட்ட வார்த்தைகள்தான். அந்தப் பக்கமாகப் போகும் யாராக இருந்தாலும் அவனுடைய கெட்ட வார்த்தைகளைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கொச்ச வார்த்தையில் கதறும் பைத்தியக்காரர்களை நீ அடிக்கடி சந்திக்க நேரும். அப்படியொரு மூன்று பைத்தியக்காரக் கோமாளிகள் என் நகரத்தில் எப்பொழுதும் உலாவிக் கொண்டிருப்பார்கள். முதலில் அவர்களை நீ சகித்துக் கொள்ள வேண்டும். வியர்வை நெடியில் சூழ்ந்திருக்கும் அவர்களின் கறுத்த உடல் பகல்பொழுதின் வெயிலில் கரைந்து நகரத்தின் சிறந்த அடையாளமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் அக்குள்களை நீ பார்த்துவிட்டால் மூன்று நாட்களுக்கு உன்னால் சாப்பிட முடியாது. ஆதலால், நான்காவதாக நான் உனக்குக் கூறும் ஆலோசனை இங்கு நகரத்தில் பல நாகரிகப் பைத்தியக்கார்களும் நிஜமான பைத்தியக்காரர்களும் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். ஆபாச வார்த்தைகளைக் கேட்டு முகம் சுளித்துக் கொள்வதை நீ கைவிட வேண்டும்.

இங்குப் பெரும்பாலும் பகல்வேளையில் நீ வீட்டிலிருக்க ஆசைப்பட்டால், பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அக்கறை காட்டிக் கொள்ளக்கூடாது. வெளியே நின்று நீ பகலில் வீட்டிலிருப்பதையும் காட்டிக் கொள்ளக்கூடாது. நகரமே பகல் தூக்கத்தில் சுவரில் வடியும் காமத்துடன் நிசப்தம் கொண்டிருக்கும்போது நீ வீட்டிலிருப்பதைக் காட்டிக் கொள்வது உனக்குத்தான் ஆபத்து. சாலையில் வெறுமனே நடந்து கொண்டிருப்பவர்கள் முதல் பக்கத்து வீட்டிற்குத் திருட வந்திருக்கும் ஆசாமிவரை எல்லோரின் உடலிலும் பகல்பொழுதின் காமம் வெளியேறியபடியேதான் இருக்கும். எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர்கள் நம் வீட்டு வேலியைக் கடந்து வரக்கூடும் என்பதை நன்றாக உணர்ந்து கொள். பெரும்பான்மையான நகரத்தில் பெண்களுக்குப் பகல்பொழுதிலும் பாதுகாப்பு இல்லை. (நான் ஏற்கனவே சொன்ன விஷயம் என்று சலித்துக் கொள்ளாதே, முதலில் இதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்)
ஆதலால், மற்றுமொரு ஆலோசனை, பகலில் நீ வீட்டிலிருந்தால் அறையைப் பூட்டிக் கொண்டு உள்ளே பகல் தூக்கத்தில் கரைந்து கொள்ள வேண்டும். பகல் தூக்கம் எப்படி இருக்குமென்று தெரியுமா? இங்கு உன்னுடன் வெயிலும் படுத்திருக்கும். சன்னலை எப்படிச் சாத்தினாலும் அறையினுள் வெயில் இருக்கும். மேலும் கொஞ்சமாகக் கதகதப்பை ஏற்படுத்தி, நீ தூங்கும்போது உடலிலிருந்து வியர்வைக் கொட்டும்வரை வெயில் உள்ளே இருக்கும். மறுபடியும் நீ பகல் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது உன் வாயிலிருந்து வானீர் ஒழுகியிருக்கும். இதற்கு முன் உனக்கு அப்படியொரு பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். கவலைப்படாதே. இந்த நகரம் கொடுக்கக்கூடிய முதல் பழக்கம் இதுதான். ஆதலால், நீ பகல் தூக்கத்தை வெறுத்துவிடாதே.
அடுத்தப்படியாக என் அப்பாவைப் பற்றி நான் கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும் வசந்தா. அவரும் ஒரு நகர ஆசாமிதான். முன்பெல்லாம் அவரிடமிருந்து அதிகமான நகரத்துச் சொற்கள் வெளிப்படும். எவனோ பேசி அவருக்குக் கற்றுக் கொடுத்த கெட்ட வார்த்தைகளை என் அம்மாவிடம் உபயோகிப்பார். இப்பொழுதும்கூட தூக்கத்தில் எவனையோ கொடூரமாக ஆபாச வார்த்தையில் திட்டிக் கொண்டிருப்பார். உறங்கும்போது அவருடைய குரட்டை ஒலி பழுதடைந்த இயந்திரத்தின் கதறலைப் போன்று ஒலிக்கும். ஏதோ முரட்டு மிருகம் உள்ளே நுழைந்துவிட்டது என்று நீ அச்சம் கொள்ளத் தேவையில்லை. பக்கத்திலிருந்தால்கூட சத்தமாகத்தான் பேசுவார். நாகரிகம் தொலைந்த நகரத்தில் அப்பா இப்படிச் சத்தமாகப் பேசுவது அப்படியொன்றும் பாவமில்லையென்றாலும் உனக்கு இது விசித்திரமாக இருக்கலாம். அம்மாவை அதட்டியே காலத்தைக் கடத்திவிட்டார். அதட்டிப் பேசுவது நகர மனிதர்களின் சுபாவம் போல. ஆதலால், அந்தப் பைத்தியக்காரர்களுக்கு அடுத்து நீ சகித்துக் கொள்ள வேண்டியது என் அப்பாவைத்தான்.
இறுதியாக, அண்மையில் நகரத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும் வசந்தா. அவற்றை சர்யலீச முறையில் சொல்ல ஆசைப்படுகிறேன். காரணம் ஒவ்வொரு சம்பவத்திற்கும் விளக்கமளிக்க என்னிடம் சொற்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன. ஆதலால், சர்யலீச முறையினை நீ இங்கிருந்து பழகிக் கொள்ளலாம். இதுவும் நகரம் கொடுக்கக்கூடிய காட்சிப் பிசகல் என்று நினைத்துக் கொள்.

சாக்கடையில் ஒரு பெண்ணின் சடலத்தை மீட்கும் காவல்துறையினர், உடல் உறுவும் நிலையத்திலிருந்து 5 பெண்களை நிர்வாணமாகப் பிடித்து வரிசையாக அமர வைக்கிறார்கள், ஒர் ஆண் புதருக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு மோட்டாரில் ஏறி தப்பிக்கிறான், ஒரு சீனச் சாப்பாட்டுக் கடைக்காரன் கொதிக்கும் எண்ணெயை வாடிக்கையாளர் ஒருவர் மீது ஊற்றுகிறான், நகரம் விடியும் தருணத்தில் அலிகள் மெல்ல மறைகிறார்கள், பிறந்த சிசுவைச் சுமந்திருக்கும் பெண், கருப்புப் பாலித்தினைத் தேடிக் கொண்டிருக்கிறாள், பள்ளி மாணவி ஒருத்தி தொலைபேசியில் தனது நிர்வாணப் புகைப்படத்தைச் சக நண்பனுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறாள், குப்பைத்தொட்டியில் சிசு கதறும் சத்தம் கேட்டு மீனாட்சி அக்காள் ஓடுகிறாள், தொழிற்சாலையை இழுத்து மூடுகிறார்கள், பேரணி நடந்து கலவரம் ஏற்படுகிறது, நகரம் மெல்ல பகல் தூக்கத்தில் கிடக்கிறது.

மன்னிக்கவும் வசந்தா. பிறகு எழுதுகிறேன். இரவு வேலைக்கு நேரமாகிவிட்டது. சீக்கிரம் போகவில்லையென்றால், முதலாளி கெட்ட வார்த்தையிலேயே திட்டுவான். அதிகாலை வேலை முடிந்ததும் உடல் அசதியாக இருக்கிறது. நகரத்தில் வெளிநாட்டுப் பெண்களை வைத்து நடத்தும் massage centres அதிகமாக இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றிற்குப் போய் உடலைப் பறிகொடுக்க வேண்டும் என்று பலநாட்களாகத் தோன்றியபடியே இருக்கின்றன. நகரத்தில் இப்படிப்பட்ட தீராத ஆசைகளுடன் அலைவது பொது ஒழுக்கத்திற்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உன் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன் வசந்தா. நகரத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஏதோ ஒரு கதறல் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இது எந்தவகையான மனப்பிறழ்வு?

இப்படிக்கு
வருங்கால சிறுநகரத்து கணவன்.

0 பின்னூட்டங்கள்: