பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 5 - ஹரன் பிரசன்னா

திறப்பு - 5
- ஹரன் பிரசன்னா


இன்னும் ஒரு வாரம் இருக்கவேண்டியிருக்கும் என்று டாக்டர் சொல்லிவிட்டுப் போனார். அனுவை என்னென்னவோ உடற்பயிற்சிகள் செய்யச் சொன்னார்கள். இதெல்லாம் செய்தால் கல்யாணம் ஆகுமா என்று ஒருதடவை யோசித்து, சிரித்துக்கொண்டாள். ராவ் அவளைப் பார்த்து 'என்னம்மா தானா சிரிக்கிற' என்றார். அவள் பதில் சொல்லவில்லை. அவரும் சீனிவாசனும் வெளியில் போனார்கள். இப்போதெல்லாம் ராவ் சொல்லாமல் சீனிவாசன் எதையும் செய்வதில்லை. அவருக்கு ராவ் மீது பெரிய மரியாதை இருந்தது. சீனிவாசனும் ராவும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள். ராவ் அப்படியே வெளியில் நின்றார். உள்ளே வந்த சீனிவாசன், 'ராவ்க்கு தெரிஞ்ச ஒரு வரன் இருக்காம். அத சொல்லிக்கிட்டு இருந்தார்' என்றார். அனுவிற்கு ராவின் மீது சட்டென மரியாதை வந்தது. அவர் வந்ததும் அவரைப் பார்த்து சிரிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டாள். சீனிவாசன், 'நானும் அவரும் கொஞ்ச நேரம் வெளியில போயிட்டு வர்றோம்' என்று சொல்லிவிட்டுப் போனார்.

வெளியில் போயிருந்த ராவும் சீனிவாசனும் சற்றைக்கெல்லாம் திரும்ப வந்துவிட்டனர். அனு ராவைப் பார்த்து வலிய சிரித்தாள். சீனிவாசன் விஜயலக்ஷ்மியிடம் தான் பார்த்ததை சொல்லத் தொடங்கினார்.

'ஸ்ரீதர் செத்துட்டாண்டி. தற்கொலையாம். என்ன ஒரு இருபத்தி அஞ்சு வயசு இருக்குமா? தாமரைக் குளத்துல மொதக்கிறான். ஏன் என்னான்னு தெரியலை' என்றார். விஜயலக்ஷ்மிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீதர் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று அவளுக்குப் பிடிபடவில்லை. இவனும் ரமணாவைப் போல யாரையாவது காதலித்துத் தொலைத்திருக்கலாம் என நினைத்துக்கொண்டாள். 'பாக்கவே சகிக்கலைடி. ஒட்டுத்துணியில்லை உடம்புல. ஊதிப்போய் மிதக்குது. நம்ம வீட்டுல வந்து ரசம் ஊத்துங்கன்னு சொல்லி சாப்பிட்டதுதான் நினைவுக்கு வந்தது. பாவம் அவன் அம்மா' என்றார்.

அனுவிற்கு ஸ்ரீதரை நினைத்தும் கோபமே வந்தது. அவன் வந்து ரசம் கேட்டுக் குடித்த பல தினங்களில் ஒரு தினம் அவன் அங்கேயே உறங்கினான். திடீரென கண்விழித்துப் பார்த்த அனுவிற்கு, அருகில் ஸ்ரீதர் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதேதோ எண்ணங்கள் உதித்ததன. மெல்ல புரண்டு அவன் அருகில் படுத்துக்கொண்டாள். அவன் கைகளைத் தன் மேல் எடுத்து வைத்துக்கொண்டாள். அனுவிற்கு பயமாக இருந்தது. அதே சமயம் அவனைவிட்டு விலகவும் முடியவில்லை. மெல்ல நெருங்கி அவனை அணைக்க முயன்றாள். அவன் திமிறி எழுந்து ஓடினான். அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவளுக்கு அவமானமாக இருந்தது. மறுநாள்முதல் அவன் வீட்டிற்கு வருவதில்லை. இவள் கண்ணில் படாமலேயே நழுவுவான்.

இப்படி ஒரு குளத்தில் ஊதிப் போய் சாகப்போகிற ஒருவன் அன்றைக்கு தன்னைக் கொஞ்சம் சந்தோஷப்படுத்தியிருக்கலாம். ஒருவேளை அவனுக்குத் தேவையான பெண் அழகானவளாகவும் சிவப்பாகவும் கால்கள் நல்ல நிலையிலும் உள்ளவளாகவும் இருக்கவேண்டுமோ என்னவோ. தன்மேல் பட்ட ஒரே ஆணின் கை அவனது கை. அதுவும் அவன் அறியாமலேயே நடந்ததுதான். ஆனாலும் அவள் மேல் ஒரு ஆணின் கை பட்டிருக்கிறது என்கிற நினைப்பைத் தந்தது ஸ்ரீதர்தான்.

அனுவிற்கு ஸ்ரீதரின் மரணம் வருத்தத்தைத் தந்தது.

சீனிவாசன் சொன்னார். 'வாய் பொளந்து செத்துக் கிடக்கான். வாய் வழியா உயிர் போயிடுச்சு போல இருக்கு. பாவம்.'

உயிர் பிரிவது பற்றி அவளும் கேட்டிருக்கிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழியாக உயிர் பிரிகிறது. ஸ்ரீதருக்கு வாய் வழியே. தன் வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்த ஒரு மாமாவுக்கு மூக்கின் வழியே. அவர் இறந்ததும் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்ததாகச் சொன்னார்கள். மூன்றாம் வீட்டிலிருந்த இன்னொரு மாமி இறந்ததைப் பற்றி அவளது மருமகள் சொன்ன கதை வேறு மாதிரியானது.

'எப்படியும் போயிடுவான்னு தெரியும். திடீரெனு டர்ர்ர்ர்ன்னு குசு விடற சத்தம். மாமிதான். முகத்தை நெறிக்கிறா. அவ்ளோதான் சட்டுன்னு போயிட்டா. வீடெல்லாம் ஒரே நாத்தம். மாமி போட்ட குசுதான்னு நினைச்சோம். செண்ட் எல்லாம் வாங்கி அடிச்சோம். அப்புறம் அவளைக் குளிப்பாட்டறப்பதான் பார்த்தோம், பின்னாடியெல்லாம் ஒரே நரகல். ஐயோ நினைச்சாலே கொமட்டறது. அதான் அவ்ளோ நாத்தம். அப்புறம் எல்லாரும் சொன்னா, மாமிக்கு பின்னாடி வழியா உயிர் போயிடுத்துன்னு...'

அனுவிற்கு அன்றிரவு பெருங்கனவு சூழ்ந்துகொண்டது.


(தொடரும்)

0 பின்னூட்டங்கள்: