பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நாக. இளங்கோவன் அறிமுகம்

நாக. இளங்கோவன் - அறிமுகம்

தமிழில் கலப்பின்றி பேசுவதும் எழுதுவதும் கூட கிண்டலாகிப் போன இன்றைய தமிழ்ச்சூழலில் தனித்தமிழின் அவசியம் மற்றும் தனித்தமிழின் சிறப்பு பற்றி சிந்திக்கவும் அது தொடர்பான கருத்தியல்களைத் தொடர்ந்து மன ஊக்கத்தோடு வெளிப்படுத்தவும் தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாத குணநலனாகும்.

அத்தகைய குணநலன் கொண்ட தனித் தமிழார்வலரும் மரபுக் கவிதைகளில் ஆர்வம் கொண்டவருமான நாக.இளங்கோவனை இவ்வார நட்சத்திரமாக அறிமுகப்படுத்துவதில் பண்புடன் பெருமை கொள்கிறது.

ஆரம்ப காலத்திலிருந்தே இணையத்தில் தனித்தமிழ்குறித்து எழுதி வரும் இவர், சென்னையில் இணையம் சார்ந்து செயல்படும் 'தமிழம்' என்ற அமைப்பு உருவாகவும், தருமபுரி மாணவியர் எரித்துக் கொல்லப்பட்ட சமயத்தில் அவர்களுக்காக தமிழ் இணைய அன்பர்கள் வழங்கிய நன்கொடையை நெறிப்படுத்தி இறந்த மாணவியர் பெயரில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நினைவுத்தொகை உருவாக்கப்பட சிறப்பாகப் பணியாற்றியவர்.


நயனம் என்ற வலைப்பூ தொடங்கி அதில் தமிழ் சார்ந்த சிந்தனைகளையும் தமிழக அரசியல் குறித்த தனது உறுதியான நிலைப்பாடுகளையும் தெளிவாக எழுதி வரும் இளங்கோவன் சிலப்பதிகாரத்தை அழகு தமிழில் 'சிலம்பு மடல்கள்' என்ற பெயரில் ஆரம்பத்தில் தமிழ் இணையத்தில் தொடராகவும் பின்னர் அதனையே அச்சில் புத்தகமாகவும் கொண்டு வந்தார்.

சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் தற்போது சவுதி அரேபியத் தலைநகரான இரியாதில் பணியாற்றி வருகிறார்.

0 பின்னூட்டங்கள்: