பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 6 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 6
- ஹரன் பிரசன்னா


அனுவிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. 'இன்னும் அரைமணி நேரத்துல போயிடும்' என்று எல்லாரும் பேசிக்கொள்வது அவள் காதில் விழுந்தது. அவளுக்கு வாய் விட்டுக் கதறவேண்டும் போல இருந்தது. வார்த்தை வரவில்லை. கன்னித் தெய்வத்தை வேண்டிக்கொண்டாள். தான் பட்டது போதும் என்றும் தான் இன்னும் வாழவேண்டும் என்றும் ஒரே நேரத்தில் நினைத்துக்கொண்டாள்.

அம்மாவிடம் பேசினாள். அது மானசீகமான உரையாடல். அம்மாவிற்கு என்னென்னவோ நன்றிகள் சொன்னாள். தலைமுதல் கால் வரை முத்தங்களிட்டாள். அம்மாவின் மீது அன்பு பொங்கி வழிவது குறித்து அவளுக்கே சந்தோஷமாக இருந்தது. இந்த அன்பு களங்கமற்றது.

அப்பாவை நினைத்துக்கொண்டாள். இப்போது அவளுக்கு அப்பாவைப் பற்றி மிச்சமிருக்கும் ஒரே பிம்பம், பாவம் வயதான ஜீவன். அவர் கஷ்டப்படாமல் கடைசி காலத்தில் நன்றாக இருக்கட்டும் என நினைத்துக்கொண்டாள். இப்போதைய அனுவிற்கு அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவளே இப்படி அவளை அறிந்ததில்லை. அவளுக்கே அவளை நினைத்து சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.

தனக்காக வராமல் போன ஆண்மேல் மட்டும் கொஞ்சம் கோபமிருந்தது. பின்னர் மீண்டும், அவனும்தான் என்ன செய்வான் தான் இப்படி இருக்கும்போது என நினைத்துக்கொண்டு அவன் மீதும் அன்பைப் பொழிந்தாள். தனக்காக வரன் பார்த்த ராவிற்கு நன்றி சொல்லிக்கொண்டாள்.

தன் உடலை விட்டு உயிர் பிரிகிறது என்பதையும் உணரத் தொடங்கினாள். இனி கால்கள் இல்லை என்கிற குமைச்சல் இல்லை. தான் கருப்பாக இருக்கிறோம் என்கிற தாழ்வு மனப்பான்மை இல்லை. தன் பாவாடை விலகினால் தன் கால்களைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ஆண்களை இனி காணவேண்டியதில்லை. அவளே வலிய சென்றாலும், எழுந்து ஓடும் ஆண் தரும் அவமானங்கள் இல்லை. யாரேனும் எங்கேயும் ஓடிப்போனால் அவர்கள் இரவில் என்ன செய்வார்கள் என யோசித்து மருகவேண்டியதில்லை. தன் உயிர் பிரியும் தருணம் மிகச் சிறப்பானது என நினைத்துக்கொண்டாள் அனு.

அவளது உயிர் அவளது உறுப்பு வழியாகப் பிரிந்தது. தன் உறுப்பின் வழியே இரத்தம் வழிவதை உணர்ந்த கணத்தில் அனு மரணமடைந்தாள்.

விஜயலக்ஷ்மியின் ஓலம் காற்றில் கரைந்தது. சீனிவாசன் அழுதுகொண்டே தன் கால்களை நீவிக்கொண்டார்.

அன்றைய கொடுங்கனவு முடிந்து, அணில்கள் தலைமாட்டில் ஓடிக்கொண்டிருக்க, மறுநாள் எப்போதும் போலவே விடிந்தது.

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo-

0 பின்னூட்டங்கள்: