அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
சிறையில் நேரும் அனுபவங்களைப் பற்றி, இதற்கு முன்னர் நான் படித்திருந்த புத்தகம் 'சிறை அனுபவங்கள்.' (அகல் வெளியீடு.) அது இந்திய விடுதலைக்கு முன்னர் உள்ள சிறை சார்ந்த விஷயங்களைச் சொல்லியது. மலேசிய சிறைகளில் நிகழும் கொடுமைகளைப் பற்றி நாளிதழ்களில், வார இதழ்களிலும், அக்கொடுமையை அனுபவித்தவர்கள் கொடுத்த நேர்காணலை வாசித்திருக்கிறேன். 'சோளகர் தொட்டி' நாவலில் சிறை போன்றதொரு அமைப்பில் கைதிகள் படும் அவஸ்தை பற்றிய, உயிர் கொல்லும் வர்ணனை உள்ளது. உயிர்மை வெளியிட்டிருக்கும், சாரு நிவேதிதாவின் புத்தகம் ஒன்றிலும் (தப்புத் தாளங்கள்) சிறை அனுபவங்கள் பற்றி வாசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் அப்பாவிகளின் குமுறல் என வகைப்படுத்தலாம். ஒரு அரசியல் அடியாளாக இருந்த ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படிப்பது இதுவே முதல்முறை.
ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த ஜோதி நரசிம்மன் அக்கட்சியின் அடியாளாக இருக்கிறார். அக்கட்சிக்காக ஒரு அடிதடி வழக்கில் கைதாகிச் சிறை செல்லுகிறார். சிறை என்றால் தண்டனையாக அல்ல, விசாரணைக் கைதியாக. பத்திலிருந்து பதினைந்து நாள்கள் சிறையில் காணும் விஷயங்களைப் பற்றியும், அங்கே உள்ள கைதிகளைப் பற்றியும் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். பிணைவிடுதலை (ஜாமீன்) கிடைத்து வெளியில் வரும் அடியாள் அரசியலில் ஆர்வம் கொள்கிறார். தமிழர் தேசிய இயக்கத்தில் சேர்கிறார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 26 பேருக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கிறது. அதை எதிர்த்து நடந்த பேரணியில், பழ. நெடுமாறன் தலைமையில் கலந்துகொள்கிறார். தடையை மீறி பேரணி என்பதற்காக, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட எல்லோரும் கைதாகிறார்கள். இவரும் கைதாகிறார். மீண்டும் சிறை. மீண்டும அனுபவங்கள். அரசியல் கைதியாக அவர் சிறை செல்லும்போது, நெடுமாறன், வைகோவைப் பற்றிச் சொல்கிறார். வைகோவை ஆயுள்தண்டனைக் கைதிகள் கெரோ செய்வது போன்ற சுவாரஸ்யமான விவரங்கள் வருகின்றன. முதல் வழக்கில் கைதானதற்கும் இவ்வழக்கில் கைதானதற்கும் உள்ள வித்தியாசங்களை நினைத்துப் பார்க்கிறார். இன்னும் முதல் வழக்கே முடியாத நிலையில் அடுத்த வாய்தாவை எதிர்நோக்கியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.
தான் குற்றம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒருவர் பார்வையில் சிறையின் அனுபவங்கள் விவரிக்கப்படுவது முக்கியமானது. அரசியல் அடியாளாக ஜோதி மாறியது, நெருக்கடியால் அல்ல, தேவையற்ற சகவாசங்களாலேயே என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். நல்ல குடும்பம், நல்ல தந்தை, தாய் என அவருக்கு அமைந்திருந்தாலும், அந்த அரசியல் அடியாள் என்கிற போர்வையிலிருந்து அவரால் வெளிவரமுடியவில்லை. ஆனால் சிறையிலிருந்து வெளிவரும் அவர் அரசியல் அடியாளாகத் தொடர விரும்பவில்லை. சிறையில் அவர் படிக்கும் புத்தகங்கள் அவரைப் புரட்டிப் போடுகிறது. அரசியலுக்குச் செல்கிறார். அவர் கொள்கைக்காகச் சிறை செல்வது பிடித்திருக்கிறது.
சிறையில் ஜோதி சந்திக்கும் சிறைக்கம்பிகள் கூட தனக்கென கதையை வைத்துள்ளன. கைதிகள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்கள். தவறாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களிலிருந்து, கொலை, கொள்ளையைச் செய்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு கதையும் காரணமும் இருக்கிறது.
சிறையில் எளிதாக தொலைபேசி கிடைக்கிறது. சிறையிலில்லாமல் பொதுவில் வாழும் மனிதர்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தைவிட சிறையில் பணப்புழக்கம் அதிகம் இருக்குமோ என்ற யோசிக்க வைக்கிறது ஜோதி விவரிக்கும் சம்பவங்கள். நாடெங்கும் ஊழல், சிறையெங்கும் ஊழல். சிறையில் இருக்கும் ஒருவர் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் பேசமுடிகிறது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை. சிறைக்கைதிகளை நேர்காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தரும் பணம் இதற்குப் பெரிதும் உதவுகிறது. ஜோதியின் சிறை விவரணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'மகாநதி' திரைப்படம் மட்டுமே யதார்த்தத்தோடு ஒட்டிப்போகிறது. அதேபோல் 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் வரும், கருணாஸ் பாடும் கானாப்பாட்டு. சிறையில் இரவுகளில் ஏதேனும் ஒரு அறையிலிருந்து எப்படியும் ஒரு கானாப்பாட்டு கேட்கும் என்கிறார் ஜோதி நரசிம்மன்.
சிறையில் ஜோதி அரசியல் கைதிகள் என்றில்லாமல், ஒரு 'ஆன்மிகக் கைதியையும்' சந்திக்கிறார். பிரேமானந்தா. பல்வேறு கைதிகள் மனிதாபிமானம் மிக்கவர்களாக ஜோதிக்கு அறிமுகமாவது போல, பிரேமானந்தா பற்றியும் உயர்வான கருத்துகளே ஜோதியால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் எடுக்க வசதியில்லாத பல விசாரணை கைதிகளுக்கு, பிரேமானந்தா உதவியதாகச் சொல்கிறார் ஜோதி.
விசாரணைக் கைதிகளின் முக முக்கியப் பிரச்சினை சாப்பாடு. ஜோதியின் விவரணையில் சாப்பாட்டிற்கு மிக முக்கிய இடம் உள்ளது. வீட்டில் வேண்டியதைக் கேட்டுச் சாப்பிடும் சுதந்தரம் முதல்நாளே சிறையில் பறிபோகிறது. நாக்கைப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. கைதிகளுக்கு அசைவ உணவு அந்தச் சமயத்தில் இல்லை என்பதால், பெருச்சாளியை சமைத்து உண்கிறார்கள். இப்போது அரசு கைதிகளுக்கு வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்குகிறது.
சிறையில் இருக்கும் கைதிகளின் மீதான அணுகுமுறையில் கொஞ்சம் விவாதம் தேவைப்படுகிறது. சிறைக்கதிகள் அப்பாவிகள் அல்ல என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களுக்குத் தரப்படும் அடிப்படை வசதியைப் பற்றி அரசு விவாதிக்கவேண்டியது தேவையான ஒன்றே. இப்புத்தகத்தைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனை இதுவே.
இந்தப் புத்தகத்தின் குறைகளாக்ச் சில விஷயங்களைச் சொல்லலாம். ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார். அதில் எவ்வித வலியும் தெரிவதில்லை. மாறாக, பார்த்தவற்றைச் சொல்கிறார் என்கிற எண்ணமே மேலோங்குகிறது. மேலும் 'ஒப்புதல் வாக்குமூலம்' என்று சொல்லும் ஜோதி, சிறையில் இருந்ததே மொத்தம் பத்திலிருந்து இருபது நாள்களுக்குளேதான் இருக்கும். அதுவும், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட விசாரணைக் கைதியாக மட்டுமே. மேலும் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லுமளவிற்கு ஜோதியின் வாழ்க்கை அப்படி சம்பவங்களால் நிறைந்து வழியவில்லை, அல்லது அவர் சொல்லவில்லை. ஒருமுறை கூட காவல்துறையினரால் அடிக்கப்படவில்லை. கொடூரமாக தண்டனை கொடுக்கப்படவில்லை. இப்படி எவ்வித அனுபவமும் இல்லாமல் இவர் பார்த்தவற்றை மட்டும் விவரிக்கும்போது, அதை இவர் கண்டவற்றைச் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடிகிறதே ஒழிய, 'ஒப்புதல் வாக்குமூலமாக' உணரமுடியவில்லை. நிறைய இடங்களில் இது தன் வாழ்க்கையைச் சொல்லுதல் என்கிற இடத்திலிருந்து விலகி, கதை சொல்லும் பாணியைப் பற்றிக்கொள்கிறது. இதனால் தீவிரத்தின் முனை மழுங்கடிக்கப்படுகிறது.
இப்புத்தகத்தில் கால அறிவு சுத்தமாக இல்லை. எந்த நேரத்தில் எது நடைபெறுகிறது என்கிற விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிகழ்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால், விஷயங்களை வைத்து அது எப்போது நடந்தது என்பதனை யோசித்து, அக்காலகட்டத்தின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளை நினைவிற்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து யாரேனும் இப்புத்தகத்தைப் படித்தால் குழப்பமே மிஞ்சும்.
ஒப்புதல் வாக்குமூலம் என்கிற வார்த்தைக்கு பலம் சேர்க்கும் வகையில், ஜோதி எக்கட்சியைச் சேர்ந்தவர், ஆளும் கட்சி எது, எதிர்க்கட்சி எது என்பன போன்ற விவரங்களைச் சொல்லியிருந்தால், அது உண்மையில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக ஆகியிருந்திருக்கும். எக்கட்சியிலும் அடியாள்கள் இல்லாமல் இருக்கமுடியாது என்கிற உண்மை எல்லோரும் அறிந்திருக்கிற நிலையில், இதை வெளியில் சொல்வதால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. இதைச் சொல்லாததற்கு ஜோதிக்கும் வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.
இது போன்ற புத்தகங்கள் கைதிகளுக்கு ஒருவித புனித பிம்பத்தைக் கட்டமைக்க வாய்ப்பளிக்கின்றன. ஜோதிக்கும் இது நிகழ்கிறது. ஆனால் ஜோதி பெரிய குற்றவாளியாகவோ, கொலையாளியாகவோ இல்லாததால், இது அதிகம் உறுத்தவில்லை. இல்லையென்றால், ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் இங்கே ஒரு புனிதப்பிம்பம் ஏற்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் இவருக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
ஜோதியை அவர் வாசித்த புத்தகங்கள் மாற்றுகின்றன என்று வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது. எனி இந்தியனில் இருந்தபோது ஒரு கைதியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரங்கள் என்கிற புத்தகத்தைக் கேட்டிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர் விசாரணைக் கைதியா, தண்டனைக் கைதியா என்கிற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புத்தகம் ஒரு கைதியை இன்னுமொருமுறை மாற்றக்கூடும்.
இன்னும் வழக்கு முடியாத நிலையில் ஜோதியை அரசியல் அணைக்காமல் இருந்து, அவர் விரும்பும் அவர் மகள் தமிழினி அணைக்கட்டும்.
(அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம், ஜோதி நரசிம்மன், 70 ரூபாய், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.)
நன்றி: உயிரோசை.காம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 1
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment