இதயம் வட சொல்லா?
நாக.இளங்கோவன்
(இதயம் என்ற சொல் பற்றி ஒரு குழுவில் நடந்த
உரையாடலின் எனது பகுதி
இதயம் என்ற சொல் வடசொல் அல்ல.
அது இறையம் என்பதன் மரூவு ஆக இருக்கலாம் என்று அறியமுடிகிறது.
இறையம் --> இதையம் --> இருதயம் என்று மாறி
வடமொழிக்குப் போய் பின்னர் அங்கிருந்து
நமக்கே வந்திருக்கிறது
திருமந்திரச் செய்யுள் ஒன்று நமக்கு சான்று சொல்கிறது.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
...திருமந்திரம்:த1:யாக்கைநிலையாமை:பாடல்148
"இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டுவிட்டு
எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு,
இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு
அப்படியே போய்ட்டாரு" என்று நாம் அடிக்கடி
கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது.
இதில் "இடப்பக்கமே இறை நொந்தது"
என்ற சொற்கள் கவனிக்கப் படவேண்டியவை.
இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான்.
இறைவனே உயிர்களின் இயக்கம். அந்த இயக்கம்
நடைபெறுவது இறையத்தில். அந்த இறையம் நின்றால்
அதாவது இறைவன் வெளியேறினால் அது வெறும் உடலாகி விடுகிறது.
இறைவன் எங்கு குடியிருக்கிறான் என்றால்
எல்லோரும் "நெஞ்சில் குடியிருக்கிறான்" என்றுதான்
சொல்வார்கள்.
இன்னொரு பொருளும் இதற்கு ஏதுவாகவே இருக்கிறது. இறைத்தல் என்றால் நீரை அள்ளி அல்லது முகந்து இறைப்பது/வீசுவது.
இறை என்ற கருவி செய்யும் வேலையும் அதே. குருதியை இழுத்து/அள்ளி பல இடங்களுக்கும் தள்ளி/வீசி விடுவதே அதன் தொழில்.
ஆகவே, இறை யோடு, அம் விகுதி சேர்ந்து
இறையம் ஆகிறது.
இறை என்றால் முக்கியமான, உயர்ந்த என்ற பொருள்களும் உண்டு. உடல் உறுப்புகளில் இறை
என்பது ஒரு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த
உயர்ந்த உறுப்பு.
ஆகவே திருமூலர் சொல்லே மிகச் சரியாக இருக்கிறது. இதயம் என்பது நமது சொல்.
இதன் மருவலை நீக்கி இறையம் என்று புழங்க வேண்டும். வடமொழிக்கு தமிழ் தந்த கொடைகளில் இதுவும் ஒன்று என்று கருத அடிப்படை
இருக்கிறது. மேலும் இது அகழ்ந்து பார்க்க வேண்டிய ஒன்று.
அடசல் என்பது சோற்றைக் குறிக்கும் அருமையான சொல். இதன் புழக்கம் இன்றும் நாம் கேள்விப் பட்டுவருகிறோம்.
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நாக. இளங்கோவன் 4
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment