பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - செந்தமிழ் மாரி - 1

கவிஞர் செந்தமிழ் மாரி - அறிமுகம்

கவிஞர் செந்தமிழ் மாரி விழுப்புரம் மாவட்டம் கீழ் எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர். எம். ஏ தமிழ் இலக்கியம் படித்திருக்கும் இவர் பனிக்குடம் இதழின் இணையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

வாழ்வின் வலிகள் ஏற்படுத்தும் காயங்களை கவிதைகளாக மாற்றுவதாகக்கூறும் இவர் தொடர்ச்சியாக அனைத்து சிற்றிதழ்களிலும் கவிதைகள், கட்டுரைகள் என இயங்கி வருபவர். இவரின் கவிதைத்தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.


சுவை கூடும் தேநீர்

முதன்முதலாக ஒரு
தேநீரைத் தயாரிப்பதற்கு
எத்தனை பிரயத்தனம்?
தீஞ்சுவைப் பாலின் அளவு சிறிதே மிஞ்சி
சுவையைக் குறைத்திடாமல்
மலைராணியின் மேனியில் துளிர்த்து
துகளாகி வந்தவளை
மென்கசப்போடு நிற்கவைத்து
கனிச்சாற்றில் விளைந்த
இனிப்பானின் அளவை
திகட்டிடாமல் இருக்கச் செய்து
மென்பூவின் இதழொன்றை
படிமங்களாகப் பிரித்த
ஆடை விரவிப் பரவிடாமல்...
ஒருவாறு பழகுதலில் சமாளித்து
உன் கைத்தாங்கும் பதமறிந்து
சீராக ஆற்றி
கைகளில் தந்து
நிலைகொள்ளும் மனம்.
நீ சாவகாசமாய் அமர்ந்து
துளித்துளியாய் ரசித்து
உறிஞ்சுகையில்
மிதமாய் நிறைகிறது
உள்ளெங்கும்
பருகி முடித்து
வாய் துடைத்து செல்லும் நீ
வேறு எங்கெங்கோ
வகைவகையாய்த் தேடி
பருகிப் பார்த்து
அளவோடு கலக்கப்பட்டு
பருகிய முதல் தேநீர் நாவில் நிற்க
மீண்டு வருகிறாய்
இல்லம் நோக்கி
நானும் தயாரிக்கத்தான் யத்தனமாகிறேன்.

0 பின்னூட்டங்கள்: