பண்புடன் ஆண்டு விழா - செப்டம்பர் & அக்டோபர் போட்டி - பரிசுக்கான படைப்பு - 2

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம்
- ஷைலஜா


உலகத்தின் பாதுகாப்பு கவசங்கள் ஒவ்வொன்றையும் நாம் அகற்றிக்கொண்டிருக்கிறோம்.
ஆம் காற்றை மாசுபடுத்தி பிராணவாயுவை அழித்துவருகிறோம்.

காடுகளை பெரும்பாலும் அழித்து கரைகளை அகற்றி நதிப்போர்வை இழந்து ,மா(வா)னம்
பார்த்துக்காத்திருக்கும் பூமியின்மனமெனும் மணலைக்கொள்ளை அடிக்கிறோம்.

ஆழ்துளையிட்டு நிலத்தடி நீரை உறிஞ்சிவருகிறோம்;

வனவிலங்குகளைப்பேண வகையின்றி கொலையும் செய்கின்றோம்.

பஞ்சபூதங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் சொத்துக்கள் அவற்றை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை.

சுற்றுச்சூழல்பற்றி ஒரு சிறுமி எழுதிய கவிதை இது,,

எத்தனை மலர்கள் எத்தனை இலைகள்!
எத்தனைபறவைகள் எத்தனை உயிர்கள்!
மரங்கள் இருந்தால்..?

என்று முடித்தபோது நெஞ்சுகனத்துத்தான் போகிறது.

சுற்றுச்சூழல் எனும்போதே நம்மனக்கண்முன் விரியும் பசுமையான காட்சிகள் எல்லாம் இனி நம்மோடேயே அழிந்துபோய்விடுமா வரும் சந்ததியினருக்கு அவைகளை நாம்
புகைப்படத்திலும் ஒளிப்படத்திலும்தான் காட்டப்போகிறோமா என்கிற கவலை எழுகிறது.

பல நூற்றாண்டுகளாய் எந்தையும் தாயும் அவர்களின் தாய்தந்தையர்களும் அனுபவித்த இயற்கைபரிசுகளை நம் குழந்தைகளுக்கு சீதனமாய் நாம் வழங்கப்போகிறோமா என யோசித்தால் அதற்கான விடை'இல்லை'தான்.


பூமியில் உள்ளமொத்தநீரில் உப்புநீர் 97.5சதவீதம் என்றும் நல்லநீர் 2.5 சதவீதம் என்றும் இந்த நல்லநீரிலும் 70சதவீத நீர் அண்டார்டிகா கிரீன்லாந்து ஆகிய குளிர்ப் பிரதேசங்களில் பனிக்கட்டிகளாகவும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஐபிசிசி (INTER GOVERMENTAL PANEL ON CLIMATE CHANGE) என்று ஒரு அமைப்பு இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் தட்வெப்ப மாற்றத்தால் எவ்வாறுபாதிப்பு அடையப்போகின்றன என்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

2100ஆம் ஆண்டில் உலகம் , வெப்பமுறல் காரணமாக கடல்மட்டம் இருக்கும் நிலையிலிருந்து 40செ.மீ அதிகமாக உயரும். இதன்காரணமாக குறிப்பாக தெற்காசிய நாடுகளின் கடற்பகுதிகள் கடலுக்குள்போய்விடும் பெரிய நகரங்களும் நிறையகிராமங்களும் கடல்நீருக்குள் சென்றுவிடும் .


ஆசியாவின் கடல்சூழலைப்பெரிதும் காப்பாற்றிவரும் பவளப்பாறைகள் 88சதவீதம் அழிவுக்குள்ளாகும். அதிக வெப்பம் காரணமாக 2035ஆம் ஆண்டுக்குள் இமயமலைப்பகுதியில் பனிபாறைகள் பெரிதும் உருகிவிடும்.வற்றாத ஜீவ நதிகளான கங்கை,பிரம்மபுத்ரா போன்ற நதிகள் பருவங்களில்மட்டுமே ஓடுகின்ற நதிகளாகமாறிவிடும்,
நிலத்தடி நீர்த்தட்டுப்பாடு அதிகமாகும், நோய் நொடி இதனால்பெருகும்.

கேட்கக் கேட்க நெஞ்சுபதறுகிறது இதற்குக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் அது அல்ல தீர்வு . சுற்றுச்சூழல்பாதுகாப்புக்கு நாம் என்ன செய்யவேண்டும்?

மரங்களைவெட்டாமல் பதுகாப்பது நமது முதல் செயல்பாடாக இருக்கவேண்டும். காட்டுச்செல்வங்களை அழிக்காமல் உலகின் பறவை விலங்கினங்கள் மறையாமல் காப்பாற்றவேண்டும்.

'க்லூரோஃப்ளூரோ கார்பன்' என்னும் ரசாயனபுகையை நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் ஏசி, ஃப்ரிட்ஜ் புகையூட்டும்கருவிகள் இன்னபிற சாதனங்கள் வெளிவிடுவதால் இது விண்வெளியை அடைந்து ஓசோனைப்பெரிதும் அழித்துக்கொண்டிருக்கிறது
ஆகவே முடிந்தவரை சிக்கனமாக வாழ்க்கை நடத்துவோம் , எரிபொருளைவீணாக்காமல் நீரை சேமிக்கக் கற்போம் !பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடைகொடுப்போம்.

மணற்கொள்ளையத்தடுப்போம்.

ஓசோனில் விழுந்திருக்கும் ஓட்டையை தனது இதயத்தில் விழுந்த ஓட்டையாக மனிதன் நினைத்துக்கொண்டால் இந்தப்பூவுலகத்தை
இயல்பாய் வாழவைக்க வகை செய்வது அதுவேயாகும்.

பசுமையும் வளமும் கொண்ட சுற்றுப்புற சூழ்நிலைதான் நாம் நமது வருங்காலசந்ததியினருக்கு சேர்த்துவைக்கப்போகும் அரும்பெரும் சொத்து ஆகும்.

0 பின்னூட்டங்கள்: