பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - மு. ஹரிகிருஷ்ணன்

மு.ஹரிகிருஷ்ணன் - அறிமுகம்

மின்னஞ்சல் முகவரி : manalveedu@gmail.com

ஹரி கிருஷ்ணன், சேலம் மாவட்டம், ஏர்வாடியைச்சேர்ந்தவர்.

மயில் ராவணன் சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர், சிறந்த சிறுகதையாளர், இறக்கை சிற்றிதழின் இணையாசிரியராக பணியாற்றியவர், மணல் வீடு சிற்றிதழின் ஆசிரியர், கூத்துக்கலைக்காக , கூத்துக்கலைஞர்களுக்கான உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வருபவர்.


நாயி வாயிச்சீல
- மு.ஹரி கிருஷ்ணன்

(அகாலமாக மரணத்தை தழுவிய அபிராமிக்கு இந்தக் கதை சமர்ப்பணம்)

தெரட்டி* முடிஞ்சதும் பொறப்படலாம்னா எங்க முடியிது? சொணையான* இன்னுமே வரிக்கல*. மணி பதனொன்னாவுதோ ! பன்னண்டாவுதோ தெரில. ஆட்டத்துக்கும் போயிக்கிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா? கயிட்டத்தப்பாத்தா காச கண்ல காங்கிறத்தெப்பிடி? நாமக் கைத்தொட்ட காரியமாறதெப்பிடி?


எரநூறு வருதோ முன்னூறு வருதோ நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ம தொந்தரவுக்கு போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத* கீதப்போட்டுக்கிட்டு வந்திட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.


பொட்டைங்கன்னு* அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகச்சனம் முச்சூட்டுமே எளக்காரந்தான்.பெறத்தியார ஏஞ்சொல்லனும்? பெத்தவெளே நம்ம தலமேல கொலாய வச்சித்தேக்கிறா. அபிராமி புள்ள இருந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர பேசப்புடிக்க பக்கத்தொணையாயிருந்தா அவளத்தான் அனாமுத்தா மண்ணுக்கு வாரிக்கொடுத்திட்டமே.


பொம்பளயா பொறக்க வேண்டியவ ஆம்பிளயா பொறந்த அவ அடைஞ்ச சிறும கொஞ்சமா? நஞ்சமா?பொன்ன உருக்கி பூமில வாத்தாப்பிடி , தங்கத்தை உருக்கி தரையில வாத்தாப்பிடி! தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய பாத்தா கண்லு பசியாறும். பாதியில போறதுக்குதாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ!


சாவுற வயசா சண்டாளிக்கி?


ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும் அவளக்காப்பாத்துல , பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டு கும்பிட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன்! அவனும் அவளக் காப்பாத்தல. ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான்* நானும் அவளும் கூத்துப் படிச்சம். கூத்துப்படிச்சமில்ல அதுக்கு மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட* கைப்போட்டு* பச்சச்சீலக்கட்டி போத்திராசி* மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்பிட்டு வந்திட்டா.


பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்த ஒரு மண்டலமும் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும் , மண்ணும் உருகும்.


அப்பன், ஆயா, பெத்து, பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு,துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடி, பூக்கார ஆயா சாமாத்துல * சேந்து, பைட்டேண்டுக்கு பைட்டேண்டு, வீதிக்கு வீதி , சந்துக்கு சந்து,அல்லெடுத்து அங்கேயிருக்கிற பொட்டைங்களுக்கு அல்லாம் ஒரு வருசம், ஆறு மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.


ஊழியஞ்செஞ்சவளுக்கு கைப்போட்டுத் துப்பரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க பேச்சு சுத்தமா இருக்கனுமா வேண்டாமா?


இன்னைக்கி, நாளக்கின்னு சாக்குப்போக்கு சொல்றாங்களே தவிர ஒவ்வொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கிலாமுன்னு இவளிருக்க, மறுபடியொமொரு மூணுமாசம் இழுத்தடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு கூட்டிக்கிட்டு வந்தவிங்க ஒரு மாசஞ் சும்மாவே குந்த வெச்சிருந்தாங்க.


குந்த வெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம,


கோத்தியாவே* திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க. இல்ல முடியிலியா பம்பாயிக்கு தாட்டி விடுங்க வழுது சாமத்த அண்டி எனக்கானத நானேப் பாத்திக்கறேன்னு கேக்க, கேட்டவளுக்கு "ஊக்கியில குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கிற சங்கதியா இது? கைப்போட்டு பொம்பளயாறதுன்னு உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் , நீ செத்த பொறுமையா இருடி தாயி"ன்னு தேறுதல சொல்லி ஆத்தூருக்கு கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க. ஆறாம் நாளு நெறஞ்ச வெள்ளிக்கிழம அன்னக்கி அந்தியோட ஆயாமாருங்க* சேலாமாருங்க* எல்லாரும் ஒரேத்துருவா கடவீதிக்குப் போனாங்க.


போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கிறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கு வாங்கி கொடுத்துத் திங்கடிச்சாங்க.


திங்கடிச்சிப்புட்டு அன்ன ராவு மொதாட்டஞ் சினிமாவுக்கும் கூப்பிட்டுப் போனாங்க. போயிட்டு வந்து , கண்ணாறத் தூங்கு மவளே ! இன்னைக்கு விடியறதுக்குள்ள உனுக்கு உறுதியா கைப்பொடறமின்னுச் சொன்னாங்க.சொன்னவங்க சொன்ன மாதிரி ரெண்டு மணி சுமாருக்கு இவளையெழுப்பிச் சுத்தப்பத்தம் பண்டி, சுனிக்கு சரட்லச்சுருக்கு வெச்சி, அதைச்சுத்தியும் வெள்ளத்துணி சுத்தி சுத்திவுட்டாங்க. சுத்திவுட்டவுங்க அதும்பொற வொரோ அரச்சணங்க் கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.


விடிகாலம் நாலு மணிக்கெல்லாம் பாத்துக்க, ச்சும்மா தட புடலா மாதாளுக்கு முப்பூசயாவுது. பூச ஆவதுக்குள்ளேயே சாமிக்கு மின்ன நெறம்மணம்மா இவள நிக்க வச்சாங்க.
நிக்க வெச்சதும் அந்தல்ல யிந்தல்ல திமறதுக்கில்லாம கையிரண்டையும் பிந்தாயம்மா* இறுக்கிப் புடிச்சிக்கிட்டா. அவ இறுக்கிப்புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப்புட்டு , 'மாதா, மாதான்னு இவ வருந்த, வருந்த , கண்ணமூடி முழிக்கிறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குன்னு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா. அப்பிடி அறுத்ததும் அடேயேங் கொண்டாலா! காலடியில உதிரம்போவுது தானா காவேரி ஆறாட்டம்.
செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா.


தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும் பிடி அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. மயக்கம் போட்டவள கன்னங்கன்னமா அப்பி , அம்மான்னு சொல்லாதடி மாதான்னு சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே! எரியுதேன்னு தன்னப்பால பெணாத்தறா. தன்னப்பால பெணாத்தும்பிடி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காய வச்சி கைப்பொறுக்க கொண்டாந்து அந்த பச்சப்புண்ணு வாப்பாட்டச்சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.


ஊத்த ஊத்த வாட்டமா காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு நோவு திலும்பும்படி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளேயேன்னு அந்த பிள்ள ஒரு கத்துதாங் கத்தினாப்பாரு ! கடகால் மட்டத்துலேயிருந்து அந்த கட்டடமே கிடுகிடுன்னு நடுங்குது!
அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதாலவொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப்போடறம்?எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப்போட்டு* சோக்கேத்தி* ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து ஆலாத்திச்சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் , ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல மாயமுமில்ல.


வலின்னு வாயத்தொறந்துப் புட்டா, மோரியிலக்* குந்த வெச்சி ஒலத்தண்ணிய மூட்டு மூட்டு காவு* மேல அடிச்சி வுடறதோடச்சேரி! அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத் தடவிப்பத்து போடறதோடச் சேரி!


ஓடம்போக்காக் கூடப்போயி பக்கதிலேயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும் பாத்திக்கிட்டிருந்த எனக்கு, கைப்போட்டா , தாயம்மாக்கிட்டதான் கைப்போட்டுக்கினுமின்னுருந்த வைராக்கியம் எங்கப்போச்சின்னே தெரில.


அத இன்னக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்திரும், காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும். அந்த பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல, கிய்யும் போட்டுக்கல. சொல்லப்புடிக்காம அபிராமிக்கு மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்திட்டன்.
உதரக்கட்டு நிக்காம , காஞ்சப்புண்ணு பாதி , காயாத புண்ணு பாதின்னு அப்பிடியே கோமணத்து மேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப் பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்த வெட்டி ஆராச்சிம் மாருமேல சாச்சிப்பாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலிந்த கந்தர கோலம்னு கேக்கிற சனத்துக்கு வதிலுஞ்சொல்ல முடில. ஆதியில பகவாம் படச்சபண்டம் அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும் மூக்கு மேல பீயப்பினாப்போல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டு திரிய முடியல.


பவானி குட்டமுனியப்பங் கோயிலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச்சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கிச்சிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ , அவ பேரு அழிஞ்சிகண்ணி. பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன், பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப்பித்து பிடிச்சிட்டிது.


கண்ணுக்கு மையெழுதி , மண்டயில பூவ சொருவி, கவுனு மாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச்சட்டியின்னு பேரடுத்து ஊருல பேரெடுத்து, கூலிநாலிக்கு போற எடத்திலேயும் பேரெடுத்து, கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு , கடவாயிக்கி கல்லையும் , நடுவாயிக்கி புழுலுயும் வெக்க, பத்துபேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கெக்கா பாவடயோட ஓடி பூதப்பாடி கல்பனா ஆயா* காலடியில விழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப்போகவேயில்ல. வவுத்துக்கு திங்கிற சோத்துக்கும், இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம வளத்தனா ங்காயதான் எனக்கு பேரு வச்சா! மூக்கு குத்தியுட்டு 'தொளசி' ன்னு அவதான் பேரு வச்சா. தந்தாவும் * வேண்டாண்டி ஒரு கிந்தாவும் வேண்டாண்டி! அலேய் ஆதமுத்து முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப்பேரோட படுத்து நோவு கீவு வாங்கிட்டம்னா அந்த வெனய எங்கக்கொண்டுப் போயி தீக்கிறது?


ஆடுமாடுகளுக்குக்கூட ஆசுபத்திரி இருக்கிது, நாயிம் தம்புண்ணத்தானே நக்கி ஆத்திக்கிது.அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக்கெடுத்தாலுங்கோல குடுத்தாங்கிறப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப்பொழைக்க மாளாத தெம்பு குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பது , நூறு பொட்டைங்கள ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்டருக்கிட்ட


"சாரு, சாரு இந்த மாதர , இந்த மாதர நாங்க சொந்தமா பாடுப்பட்டு தின்னுக்கிறம், எங்களுக்கு எதுனா ரோனு* கீனு ஏப்பாடு பண்டி விடுங்கன்னு" பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க.., ஊடு வாச இருக்குதா? உங்க பேருல சொத்துப் பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம், கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க.


உங்க சோறு இல்ல, ஒதுங்கவொரு நெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா* நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சினா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா.., போங்கடா எம்பட்டைங்களான்னு * திலும்பி வந்திட்டோம்.


ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கடிங்கன்னு ஆயா சாமியாருக்கிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா. சும்மா எப்பிடி சொல்றது சாமியாரப்பன் வெட்டு வெடுக்குன்னு ஒரு வார்த்தப்பேசினதில்ல. பெத்தப்புள்ளங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்து அக்குசா தொழில கத்துக்குடுத்தாரு.


அபிராமி கண்ணாலந்தான்* மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வெளங்கனது.


செரியான வுனுப்புக்காரி , எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டும், ஆட்டம் அப்பிடித்தான். பாட்டும் அப்பிடித்தான். என்னாவொண்ணு சாரீரம் மட்லுங்கொஞ்சங் கட்ட சாரீரம். நெட்டையோ , குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம , மெயினு வேசக்காரி இவதாங்கிறாப்பிடி ஆயிட்டா.


சரி சரீங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வெளஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்துவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஓராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிகள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஒரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா? செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க.


"உன்னையொரு பெரிய மனுசன் , வாத்தியாருன்னு நம்பி செட்டு மத்தாளத்துக்கு வுட்டா, எம்பிருசனுக்கும் அந்தப்பொட்டையனுக்கும் வெளக்கு புடிச்சி, என்ற வேரப்பறிச்சி,வெந்தண்ணி வாக்கிற , பரவால்லடா மாப்ளே உன்ற பண்ணாட்டுன்னு" ராசுப்பொண்டாட்டி வந்து பேயாடிப்புட்டு போனா.


அல்லாருக்கும் எட்டெழுத்து, நம்புளுக்கு பத்தெழுத்துலே அலே பறமுண்ட! என்னா பாவம் பண்டினமோ ஆணுக்காவாம், பொண்ணுக்கும் ஆவாம, இந்த மானங்கெட்ட பொறப்பெடுத்து, போற வாரப்பக்கமெல்லாஞ் சின்னப்பட்டு சீரழியுறோம். ஒருக்குத்தமும் பண்டாதமின்னியே நம்பள தேவியாப்பட்டங்கட்டி பல்லுமேல நாக்குப்போட்டு மந்தைங்க பலவெதமாப் பேசுதுங்க. எச்செலைக்கி வீங்கறப்பொழப்ப இன்னையோட தல முழுவிடி ஆயான்னு உள்ள நாயத்த நானு எடுத்துச் சொல்ல , வாத்தியாரும் ரெண்டு நல்ல பித்தி சொன்னாரு.


சரீன்னு அபிராமியும் கம்மின்னிருந்தா ராசு வழிக்கிப் போகாம , ஆடி நோம்பிக்கிக் கூத்தாட தேவுரு செட்டிப்பட்டிக்கி போனாம்பாரு அங்கவொரு எத்துக்காரவன் வந்துச் சேந்தான் அவளுக்கு எமனா.


களரிக்கூட்டுமிந்தியே வந்தவம்பா! விடிய விடிய சுத்தி விடிஞ்சும் அபிராமிய வுட்டு அந்தல்ல நவுரல. இவ என்றான்ன அவஞ்சொல்ற பாட்ட பாடுறா, அந்த பாட்டுக்கு பதினஞ்சி சீல மாத்றா ச்சும்மா பறந்து பறந்து ஆடுறாப்பா. அந்த திருவாத்தான் ஆளுமேல ஆளவுட்டு இவளுக்கு நோட்டு நோட்டு பின்னுக்குத்தறாஞ் சலிக்காம, எப்பிடியும் அன்னைக்கி அனாமுத்தா சேந்தது உரூவா ஏழ்நூத்தம்பதுக்கு மேலியே இருக்கும்.


அலங்காரம் முடிஞ்சிதும் எங்கடா பிள்ளயின்னு தொழாவுனா ரெண்டுபேரும் எவத்தயிருக்காங்கன்னு ஒன்னுந்துப்பே இல்ல. அப்பறம் பாத்துக்க எந்த பிருசம் பொண்டாட்டி அந்த மாதர ஒத்துமையா இருப்பாங்க ! அவிங்க திங்கிறதும் ஒரே வட்டிலு , படுக்கிறதும் ஒரே கட்டிலு.., ஒண்ணும் மண்ணா பொழங்கிட்டிருந்தாங்க! நாளாவ ஆவ இந்தப்பிள்ளக்கி சுத்தமா நெப்புக்கெட்டுக்கிடுச்சி. மாப்ள பெரும கண்ண மூடிக்கிம்பிடி அஞ்சாறு அலங்காரத்துக்கு ஆளு வரல, கூத்து படு பாணி*


சாமியாரு கூப்புட்டு கண்டாற,கழுத,ங்கோயா, ங்கொம்மான்னு ரவுசுப்பண்டும் பிடி மாப்ளக்காரனுக்கு ச்செட்யான ரோசம் வந்துட்டது.


அவனப்பத்தி அனாவசியம்! அவனென்ன உன்ன அடிப்புடிங்கிறது? நானாச்சி வா உனக்கு தனியா செட்டுக் கட்டித்தாரமின்னு. ஒரே ரெண்டு நாளயில ஆளுங்களுக்கு மூவாயிரம் நாலாயிரம் மிம்பணங்கொடுத்து சாமியாரு செட்டக்கலச்சி தனிச்செட்டு கட்டிக்குடுத்துட்டான்.
இந்த ஆடுகாலிப் போனவ, குருவுக்கிட்டவொரு வார்த்தச் சொல்லிப்புட்டு நல்ல வாக்குசம் வாங்கிட்டுப் போவப்புடாதா? போடா பிலாக்கப்பையான்னு போவக்குள்ள சாமியாரு குடுத்து வச்சிருந்த பொதுப்பணம் நாப்பதாயிரத்தையும் வாயிலப் போட்டுக்கிட்டுப் போயிட்டா. ஒரு கூத்தன்னைக்கி இந்த மனுசன் தண்ணிதாசனூர் அம்மங்கோயிலண்ட நின்னு,
" அடியே குருத்துரோகி ! எண்ணி வொரேவொரு வருசத்துக்குள்ள என்ற கும்பி பத்தறாப்பல பத்தியெரிஞ்சி போயிருவடின்னு" மண்ணவாரி வாரி தூத்தவாச்சொல்லுப் பலிச்சிட்டுது. அந்த ஆளிட்ட சாபனையோ! அடி நாளு தீவனையோ கவுண்டம்மவங்க கூட சோடிப் போட்டுக்கிட்டு அங்கயிங்க சுத்தி ஆட்டம் போட்டது பத்தாதுன்னு இந்த கடகெட்ட மூளி அவனக்கூட்டிக்கிட்டு வூட்டுக்கேப் போயி கும்மாளம் போடறதா?


அவிங்கம்மாக்காரி பாக்கிறவரிக்கும் பாத்துட்டு, 'எங்கித்தி பாமனையோ என்னு வவுத்துல வந்து பொறந்து இப்பிடி ஈனப்பானமில்லாம திரியற! நீதாம் புளுத்துச் சாவற! எங்கியாச்சும் கண்ணுக்கு மறப்பாப்போயி சாவு! இங்கேண்டி வூட்ட கந்தறப் பண்டற? கூடப்பொறந்த பொறப்பு ஒரு வயசிப்பிள்ள இருக்கற வூட்ல இந்த மாதர அக்குறும்புல அழியறீங்களே நல்லாயிருப்பீங்களா?நாசமுத்து வேசமாரி போவிங்களான்னு ச்சும்மா வுட்டு வணக்கு வணக்குன்னு வணக்கி , கடதாம்பு கட்டும்பிடி கவுண்டம் மவன் போக்குவரத்து அறுதியா நிறுத்திக்கிட்டான். இவ மாப்ள வந்து பாக்கறதல்லையின்னு அலைமோதி கெட்டலைஞ்சி சோறுதண்ணி கூட குடிக்காம கூத்துக்கு போறது, வந்து கூதப்போட்டுக்கிட்டு படுத்துக்கறது. பங்கினி மாசம் ச்செட்யானப்படிக்கி சீசனு! வருசக் கூத்தா வருது! வர்ற கூத்த வாண்டாங்கலாங்கமா?


போற இடத்திலேயெ தங்குமடம், போட்டுக் கூத்தாடிக்கிட்டு தப்படியா வூட்டுக்கு வந்து போயிக்கிட்டிருந்தா.


அந்தப் பிரகாரம் பூலாம்பட்டி சித்தூருல நோம்பிக்கூத்து வொண்ணு தானாவதி* மழைக்கி நிக்கிம்படி வூட்டுக்கு போகவலாம்னு வந்தவ நட்ட நடு தாவாரத்திலியே மாப்ளக்காரனும் அவ அம்மாக்காரியுங் கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்கறதப் பாத்துருக்கறா.


அப்பிடியே அங்கம் பதற, அடி வவுறுக்காந்த ச்சட்டங்குன்ன , ச்சரிகலம் பதற நடுநடுங்க நின்னவ , " அடியே உத்தமபத்தினி எனக்கு பித்திச் சொன்னியே இப்ப நீயேண்டி அவுசேரிப் போன" ன்னு ஒரேயொரு வார்த்தயின்னாலும் நாண்டுக்கிட்டுச் சாவும்பிடி கேட்டுப்புட்டு, கடகடன்னு கண்ணுத்தண்ணிய வுட்டுப்புட்டு அந்தாண்ட வந்துட்டா.


அவ்வளதான் மக்யாவது வாரமெல்லாம் பன்னிக்கறிய வறுத்து அதல பாசானத்த கலந்துக் குடுத்து அபிராமிய கொன்னுப்புட்டா அவிங்கம்மாக்காரி.


நெருப்பூரு நாவமரைக்கி சீருக்குப் போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி கூடுகாட்ல மவ மூஞ்சியப்பாக்க கூட ரொணமில்ல . ஆவுசந் தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம்.
நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்?


தாயப் பழிச்சமா? தண்ணியத் தடுத்தமா? ஏழய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு , மொண்டி , மொடம், இப்பிடி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக்கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறுபண்டி வேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக்கண்ணு சாமி !


அபிராமிபுள்ளய நெனச்சிட்டம்னா அன்ன பொழுதுக்கும் அன்னந்தண்ணி ஆகாரம் எதுவுமே உள்ற எறங்காது. நாம்ப அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமாயிருந்தா மாண்டவிங்க பொழைக்கப் போறாங்களா? மறிச்சி மண்ணவுட்டு மேல வரப்போறாங்களா ? இல்ல அன்னைகியெழுதன எழுத்த பிரம்மன் அழிச்சி எழுதப்போறானா?


உச்சியத்தாண்டி ஒருமாறுப் பொழுதாச்சி சம்பளம் பிரிக்க. செங்கமா முனியப்பங் கோயில்ல எறங்கி பொடு பொடுன்னு வூட்டுக்கு போயி, துணிமணிய அலசிப்போட்டுட்டு ஒருவாச்சோத்த குடிச்சதும் களப்பாயிருக்குதேன்னு செத்த படுத்தம்பாரு , எந்திரிக்கும் போது மணி ஏழு!
எஸ்.டூ.எ பஸ்சு சங்கிரி வந்துட்டு திலும்பி பவானி போயிரிச்சு. அதும்பொறவு ஆதியா பாதியா கெளம்பி அம்மாபேட்ட வாரதுக்குள்ள மணி ஒம்போதர, அலங்கார கறவதானுங்க* ஒருத்தங்கூட வூட்ல இல்ல. எட்டு மணி முட்டும் பாத்துட்டு மினி வண்டி பேசி எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். வூடு வூடா அவிங்களத் தொழாவிப் புட்டு வரதுக்குள்ள பத்துமணி கடைசி பஸ்சும் போயிட்டுது.


பக்கமாயிருந்தாலுந் தேவல. நாகனூரு வாத்தியாரூட்டு கூத்து. மெயினு ரோட்லேயிருந்து பழையூரு. முழியனூரு மேல நடந்துப்போனா ஏழு மைலுக்கும் மேல சேரும். எந்நேரம் போறது? நேரங்காலமா வந்திருந்தா எதாவொரு வண்டி கிண்டி புடிச்சிப்போயிருக்கலாம். அத்துவானத்துல* வந்து மாட்டிக்கிட்டமே என்னாப் பண்டறது?


செட்ல சாரி வேசமே* இல்ல. அந்த சிறுத்த கண்ணஞ் சேவுருப்பையன் இப்பதான் புதுப்பழக்கம், சந்து அடைக்கத் தானாவும் , பெருங்கொண்ட ஆக்கிட்டு கட்டிச்செலுத்த மாண்டான்.
மிந்தியாச்சும் சுப்ரமணி இருந்தாப்ல,பொண்ணு வேசத்துக்கு பஞ்சமில்ல. போனப்பூட்டிலேயே ஆளு அலங்காரத்துக்கு வரல. அவரென்ணாப் பண்டுவாரு? பத்திருவது வருசமா செட்டுக்கு அவரு பட்ட பாடு அந்த பஞ்சும் பட்டிருக்காது. அப்பிடி ஒழைச்ச ஒழப்புக்கு கைமேல கண்ட பலனா இன்னிக்கி ஒவித்திரியப்பட்டிக்கிட்டுக் கெடக்கறாரு.


குஞ்சாண்டியூருக்கு அந்தாண்ட ஆண்டிக்கர காக்காயந்தெருவுக்கு ஓராட்டத்துப் போயிருந்தம். மூணாம் வருசம் கூம்புக்கு* கூத்துவிட்டவங்க வக்ரகேது பலிதான் ஆடனுமின்னுப்புட்டாங்க. எந்த அலங்காரமாயிருந்தாலுஞ்செரி சுப்ரமணி எத்து வரிசையாதான் தொழிலுப்பண்டுவாரு. அன்னைக்கிம் அவரு விலோச்சனா வேசம் போட்டுருந்தாரு.


அம்மாபேட்ட கணேசண்ணன் எரிகண்டங்கட்டியிருந்தாரு. வேகாத திரேகமும், போவாத உசுரும், நீங்காத சேம்பரமும் வேணுமின்னு வரம் வாங்க எரிகண்டன் வக்ரகேதுவ ரணகாளிக்கி பலி குடுக்க கூட்டிப்போறான், மவன் உசுர மாய்க்க வேண்டாமின்னு விலோச்சனா அழுது பொலம்பறா. மின்ன வச்ச கால பின்ன வெக்க மாண்டேன்னு சூரனொருபக்கம் இழுக்க, வுடமாட்டேன்னு பொண்டாட்டி குறுக்க விழுந்து தடுக்க, ஓரியாட்டத்தில சூர வேசக்காரன் அவள எட்டி ஒதச்சி தள்ளி அந்தாண்ட தாட்டி போவனில்ல, அந்த கட்டத்தல கணேசன் ஒதச்ச ஒதயில ஏமாந்தாப்பிடி அழுதுக்கிட்டிருந்த சுப்ரமணி முதுவுல ஈடுதாங்கி போச்சி. சும்மா ரெண்டு நாளு மூச்சுத்தப்பு உழுந்ததுதான் காரணம், பொறவு மனுசன் வாயத்தொறந்து பாட முடியல. எங்கியங்கியோ போயி அளவத்த பணம் செலவு பண்டியும் நோவு நல்லாவல. பொறிக்கித் திங்கிற கோழிக்கி மூக்கத் தறிச்சாப்ல . நல்ல தொழிலாளிக்கு நேந்த கதியப்பாரு. வவுத்துப் பாட்டுக்கு இப்ப ஊரு வூரா ஈயம் பூசிக்கிட்டு திரியறாரு.


அவருமில்ல, நானும் போவலைன்ன கனகராசி வாத்தியாரு கொஞ்சத்தப் பேச்சா பேசுவாரு. கெடயில காலு தங்காம அங்கயும் இங்கயும் ஏண்டா காலந்திரியா திரியற? செட்டுக்கே வந்துர்றா! ஆத்தர அவரசத்துக்கு வேணுமின்னா பணங் கிணம் வாங்கிக்குவியாம்னு அவருதாம் பொணையாயிருந்து ஆபரேசம் பண்ட செட்டு பணத்திலியிருந்து எட்டாயிரம் தாரமின்னு சொல்லி மிம்பணம் மூவாயிரத்த கையோட குடுத்தாரு.


ஆச்சி , ஆச்சி இந்த எட்டு பூர்த்தியா ஆடனா வேணுங்கற பணந்தெரண்டுக்கும், ராய வேலூருலியே டாக்கிட்ருமாருங்க கைபோடராங்களாம். நோவு இல்லாம போயி செஞ்சிக்கிட்டு வந்துர்லாம் நிம்மிதியா!


கல்பனா ஆயா கூட முடிஞ்சத தாரமின்னிருக்குது. எப்பிடி பாத்தாலும் போவ வர மேஞ்செலவு ஆயாப்பாத்துக்குவா. ஆசுபத்திரி சமாச்சாரம் செலவு இவ்ளவுதான் ஆவுமின்னு ஆரு கண்டது ? முன்ன பின்னக்கூட ஆவும். எதுக்கும் உண்டுன்னா காசிருந்தா ஒதாரணைக்கி ஆவுமின்னுதான் நானு கரவாட்டத்துக்கும் கூத்துக்குங் கைகுடுத்துட்டு இப்படி பட்டழியறன்.


கனகராசிச் சமாவையுஞ் சும்மாச் சொல்லக்கூடாது. மனசர காங்காம ஏவிடியம் பேசுவாங்களோ என்னமோ தெரியாது. கண்டவொரு நாளும் எச்சி எடுப்பு பேசனதில்ல. நாலுப்பேத்து தொழிலு நம்பளப் பத்தி வாதிக்கக்கூடாது. ரோட்டுக்கால்ல நின்னு பால மாதர பொந்தியப்போட்டு ஒழப்பிக்கிட்டு போறவர ஒண்ணுரெண்டு வண்டிங்கள நாங்குறுக்காட்ட ஒருத்தங்கூட நிக்கல.
நேரம் எந்நேரமோ அம்மாபேட்ட ஊரே அடங்கிப்போச்சி. வவுநேரங்கழிச்சி தொலையா ஆரோவொரு ஆளு வாட்டச்சாட்டமா நடமாடற மாதர தெம்பட்டது. ஆராயிருந்தா நமக்கென்னா? கூத்துக்கு போவ முடியாத வெசனத்துல எம்பாட்ல நானிருக்க, கிட்ட வரச்சொல்லி அவங்கைச்சாட பண்றானே! இதென்றா தும்பமின்னு பக்கம் போயிப்பாத்தா அவனெங்கியோவொரு போலிசு ஏட்டு.


சிப்பமோ* சீமச்சரக்கோ என்னான்னுந் தெரில. ஆளுக்குப் பதமான போத. சீப்பு வண்டிமேல அட்னகாலுப் போட்டு படுத்திக்கிட்டிருந்தாஞ் சிவரெட்டுப் பத்தவெச்சிக்கிட்டு
என்னாங்க கூப்ட்டதுன்னு நாங்கேக்க எடுத்த எடுப்பில " வர்றீயா" ங்கறானே ஒரு துடியா.
தடி எடுக்கறப்பவே அடி எங்க வுழுமின்னு எனக்கா தெரியாது.இருந்தாலும் நம்மள வெச்சி தெரிஞ்சி கூப்டறானா? தெரியாம கூப்டறானான்னு அறிக்கொழப்பம்! எப்பிடியோ இருந்து சாட்டாவுது, இதுக்கு மேல்பட்டு நாங்கூத்துக்குப் போறது நெசமில்ல. வளச்சிக்கிட்ட்டு வூட்டுக்குப் போவலாமின்னாலும் பவானி வரிக்கும் காரு இருக்கும். அந்தாண்ட வண்டியில்ல. பைபாஸ்ல போயி பொழுது விடியந்தின்னியும் குந்தியிருக்கனும்.


அவுத்தப்போயி ஏப்பா அவுதிப்பட்டுக்கிட்டு கெடக்கனும்? இப்பிடிப்போயி சித்தங் கூறியும் இவங்கிட்ட தடுமாறிப்புட்டு வந்தா என்னாக் கெட்டுப்போச்சி? இருந்தாப்பிடியிருந்து எனக்கு தெங்கற* நெனப்பெடுத்துக்கிச்சு.


ஆம்பிள தெரண்டு ஆளாளா ஒடனே கண்ணாலங் கார்த்தி , அவனுக்குண்டான குடும்பங்குட்டி உற்பத்தி ஆகுது. அப்பிடியதுக்கு வசிதிப்பத்தலைன்ன அததுக்குபொண்டுங்க இருக்கறாங்க அங்க போயி அம்பதுன்னும் நூறுன்னுங் கடஞ்சொல்லிக்கூட அறுப்பத் தீத்துக்கறாங்க. பொம்பள சமைஞ்சா பெத்தவிங்க கடம்பட்டு , ஒடம்பட்டு ஒருத்தங் கையில புடிச்சிக் குடுக்கறாங்க. அதுச் சுத்தப்படலியா , அவப்பாத்து துணிஞ்சா அவ பொச்சி பொறன ஆணாகப்பட்ட அத்தன சீவனுங்களும் காரோடத்து நாயி மாதர காசுங்கையுமா சுத்தறாங்க.


இந்த திக்கத்த ஆத்துமாவுக்கு ஊத்த ஒடம்புல பிப்பு எடுத்தா அதக்கண்டு ஆத்த மருந்துண்டா? நம்பள அரிசின்னு அள்ளி பாப்பாருமில்ல , உமின்னு ஊதிப்பாப்பாருமில்ல்ல. பிரியப்பட்டு வலியினா வர்றங்கறவன ஏம்பா வாண்டானுச் சொல்லனுமின்னு நானு அவன அப்பிடிவுட்டுட்டு , இப்பிடி இந்தாண்ட வந்து ரோசனப்பண்டிக்கிருக்கவே, அவஞ்சீப்பு வண்டி ஆள ஓரங்கட்டி நிக்குது. வந்து ஏறுன்னு அவஞ்சொல்லுமிந்தி நானு மின்னித்தி சீட்டேறிக் குந்திக்கிட்டன்.


ஒரே அழுத்துல வண்டி எட்டிப் புடிச்சாப்பல கொடம்பையூரு கரட்டுக்கு வந்துட்டது. அடிக்கரட்ல வட்டப்பாறையும் பாழியுமா இருக்கும் பாரு ! அவுத்த வண்டிய நிப்பாட்டினான், பாற மேல மழக்காயித்த விரிச்சுட்டுட்டு வண்டியிலந்து நாலஞ்சி பொட்ணத்த எடுத்துப் பிரிச்சி வெச்சாம்பாரு ! எந்த சோத்துக்கடயில வாங்கனதோ! கறிச்சோத்துப் பொட்ணமாயிட்டயிருக்குது வட்ட வாகறயே நெய்யி மணக்குது.


மூக்குல பருக்க வர தின்னுப்புட்டு எந்திரிச்சன். அன்னந்தினியும் வாயே பேசாமயிருந்தவன் " சரக்கு சாப்டுறியா" ன்னு ரெண்டு வெராந்தி பாட்லயும் எடுத்து மின்ன வெச்சான் ஏட்டு.
அதயுஞ் சைசா மண்டயத்திருவி வாயில ஊத்திக்கிட்டன், வீக்கங்கண்ட வவுறு தூக்கங்கேட்டுது. அதோட அளவான போத, ஆடியாடி அலண்ட ஒடம்புக்கு தோதாயிருந்தது. குளுங்காத்துச் சிலுச்சிலுங்க, மேலுப்பசபசங்க எனக்கு ஏனா தொப்ளச்சுத்தி புரு புருங்குதே! அப்பிடியே கட்டயக் கீழச்சாச்சி கண்ண மூடனம்பாரு ஏட்டும் எம்மேல சாஞ்சான்.


சாவலு நல்ல பெருஞ்சாதி சாவலு. அணைய அணைய ஒணக்கையா இருந்திச்சி., இப்பிடியே கதய ஒப்பேத்தி ஓட்டி, கூத்த கொண்டயத்துக்கு கொண்டு போயி மங்களம் பாடிப்புடலாமின்னு நாங்கெனாக் கண்ட மாயத்துல , மின்னாம மொழங்காம எண்ணத்துல இடி எறங்குதே!
ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்? வெறியெடுத்து ஆவு ஆவுன்னு என்ற அடிமடிய தொழனவனுக்கு ஆட்டு ஒதப்பையாட்டம் எம்புடுக்குச் சிக்கும்பிடி அவம் மொவற நறவல்ல கையுட்டாப்ல சுண்டிப்போச்சி. "த்தூ"ன்னு காறித்துப்புனவங் காது காதா அப்பறாஞ் சடையாம.


ஓரடியா? ரெண்டடியா ? " அய்யோ சாமி நானு அறியாத பித்தியில தெரியாம தப்பு பண்டிப்புட்டன். வுட்று சாமி நானு ஓடிப்பொழச்சிக்கிறன்னு அழுது பரிதவிங்கறன். அவங்காலப் புடிச்சிக் கெஞ்சறன். அவங்காய காதறந்த மேல ஓக்க ! அதயெதயுங்காதுல போட்டுக்கவேயில்ல. " மி யெம்மா பூக்குல தெங்கோ! ஓரி திக்கர நீ பணியின காமிச்சேவு"ன்னு மயித்த வளச்சிப்போட்டு சும்மா குப்பு குப்புன்னு குப்பி , என்னய மிங்கட்டு பிங்கட்டு கட்டி சீப்பு வண்டியீல தூக்கிப்போட்டு கண்ணாடியச் சாத்தி , கதவுசந்துல எங்காலு ரெண்டையும் வெளியே இழுத்து , ஓரட்டாங்கையில புடுச்சிக்கிட்டான்.


சோத்தாங்கையில அடிப்போன பூணோட அத்தச்சோட்டு குண்டாந்தடிய புடிச்சி, எல்லப்பன்னிய குத்தறாப்போல என்ற உசுரு நெலயில ஒரேக்குத்து! ஆண்டவங்குடுத்த அந்த ஆதார பொருளு கொழண்டு கலங்கிப்போச்சு. இன்னும் நாலீடுப் போட்டு அப்பையே அடிச்சிக்கொன்னிருந்தா ஆயிருக்கும் வத வதயான வதப்பண்டி , வாய்க்கா கரையில வாரிச் சூறையிட்டுப்புட்டு போயிட்டான்.


ராவெல்லாம் எங்க கெடந்தன் ? எப்பிடி பூதப்பாடி வந்தன் ? ஆருக்கொண்டாந்து ஆயாவூட்ல போட்டது ஒரு பிருவுந்தெரில. நாம் பொழச்சது மாதா புண்ணியம் ! மறுசென்மம். " பொறப்படு ஆயா வேலூருக்கு, போயி டாக்டரிண்ட கைப்போட்டுக்கிட்ட்டு வந்தரலாமின்னு" கண்ணு முழிச்சதும் மொதக்காரியமா ஆயாளக்கூப்பிட்டு சொன்னேன்.

அருஞ்சொற்பொருள்கள்:


தெரட்டி = பூப்புனித நீராட்டு விழா


சொணையான் = சம்பளம்


வரிக்கல = வாங்கல


ஆட்டத்துக்கு = கரக்காட்டத்துக்கு


அலங்காரம் =தெருக்கூத்து


கூத =போதை


பொட்டைங்க = திருநங்கைகள்


தாயம்மா = திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கு செய்பவர்.


கைபோடுதல் = உறுப்பு நீக்கும் நிகழ்வு


கோத்தி = ஆண் உறுப்பு நீக்காமலே பெண் உணர்வுடன் வாழ்பவர்


ஆயாமாருங்க = திருநங்கைகளிடையே வழங்கும் உறவுமுறை


சேலாமாருங்க= மகள் உறவுமுறையினர்


பிந்தாயம்மா= திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கின் போது சம்பந்தப்பட்ட திருநங்கையை பிடித்துக்கொள்பவர்


மானி/சுனி/புடுக்கு/குஞ்சி = ஆண்குறி


கப்பு போடுதல் = முகத்தில் உள்ள முடிகளை அகற்றுதல்


ஜோக்கேத்தி = பாவடை,சேலை முதலான பெண்கள் தரிக்கும் உடைகளையும் தோடு மூக்குத்தி கொலுசு மெட்டி முதலான ஆபரணங்களையும் அணிவித்தல்


மோரி = குளிக்கும் அறை


காவு = புண்


தந்தா = திருநங்கைகள் புரியும் பாலியல் தொழில்


ரோனு = லோன் ( வங்கிக்கடன்)


பாணி = நிகழ்ச்சி தோல்வி


தானவதி மழை = பங்குனி மாதத்தில் பொழியும் உத்திரட்டாதி மழைக்கும் ரேவதி மழைக்கும் இடையே எதிர்பாரது பெய்யும் மழை


சாரி வேசம் = பெண்வேடம்


வக்ரகேது பலி = ஒரு சிவபுராணக்கிளைக்கதை


சிப்பம் = பாக்கெட் சாராயம்


தெங்கிற = புணர்கிற

0 பின்னூட்டங்கள்: