பண்புடன் ஆண்டு விழா - செப்டம்பர் & அக்டோபர் போட்டி - பரிசுக்கான படைப்பு - 1

ஒத்தையடி பாதையில......
- தமிழ் ரசிகை..


ஒத்தையடி பாதையில
ஒரு அந்தி வேளையில
ஒய்யாரமாய் நா(ன்) நடந்தேன்..
ஓசையின்றி பின்னால் வந்து
ஒசத்தி தூக்கி
உருக வச்சியே....
உனக்காக பொறந்தவன்
நானு சொன்னீயே..

நீ தொட்ட நேரத்துல
நெஞ்சுக்குள்ள பூ பூக்க..
நித்தமெலாம் உன் நினவால
நித்திரை கெட்டு அலஞ்சேனே...

விடிஞ்சா உன பாக்க
வாடி நிக்கும் என் கண்ணு..
அய்த்த மகென் உன் மேல
ஆச நூறு வச்சேனே...

சீமைக்கு நான் போறேன்
செவத்த புள்ள உனக்காக..
சம்பாதிச்சு நான் வாரேன்
சந்தோசமா நாம வாழனு
சொல்லிப்புட்டு நீ கிளம்ப..

சோறு தண்ணீ இறங்காம
சுகங்கெட்டு நா(ன்) கெடந்தேனே...

வரும் வெள்ளி உன் மாமென் வாரான்
வாஞ்சையோடு உன அள்ளிக்கொள்ள...
வருந்ததே மருமகளேனு
வைரமான அத்தை சொல்ல..
வானத்துக்கு நா(ன்) குதிச்சேன்
வாசமல்லி வச்சுக்குட்டேன்....

வெள்ளிக்கிழம காலையில
விராலி மஞ்ச(ள்) தேய்த்து
வெந்நீரில் நா(ன்) குளிச்சு...
வெண் பட்டு சேல கட்டி
வட்டமா பொட்டு வச்சு
வெள்ளிமணி கொலுசு போட..
தங்க விக்ரஹந்தாண்டி-என்
தங்கச்சி மவனு
தங்கமான மாமெ(ன்) சொல்ல..-வெட்கம்
தாழம தலக்குனிஞ்சு
எனக்குள்ளயே சிரிச்சுக்குட்டேன்..

..
வெளியே வண்டி சத்தம் கேட்டு
விரைந்து நா(ன்) ஓடி வர...
இறங்கி நின்னீயே
இன்னொருத்தி கை பிடிச்சு..
இடி இறக்கிபுட்டீயே
இறகு நெஞ்சத்துல..

பாவி மவென்
பாசம் மறந்து போனானேனு
பந்தமெலாம்
பொலம்பித் தள்ள..
உயிர் உறஞ்சு போனேனே...
அந்த இடம் விட்டு போனேனே...

வார்த்தையெலாம் சாம்பலாச்சே...
வாடையில கரஞ்சு போச்சே..-எனை
ஒதறி போனவனே..
ஒத்தையில நடக்குறனே-இந்த
ஒத்தையடி பாதையில.....!

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

மண் வாசனை மணக்குது