பண்புடன் ஆண்டு விழா - செப்டம்பர் & அக்டோபர் போட்டி முடிவுகள்

இனிய தமிழ் உறவுகளே!

இணைய வெளியில் இயங்கும் அன்பர்களுக்கு ஆசாத் அவர்களைப் பற்றிய தனிப்பட்ட அறிமுகத்திற்கு அவசியமில்லை. அதீத வாசிப்பனுபவமும், வாழ்க்கையைக் குறித்த தெளிவான அணுகுமுறைகளும் கொண்ட ஆசாத் அவர்களின் எண்ணம் வலைப்பூ அவர்களது பல படைப்புகளை தாங்கி நிற்கிறது. மலைனப்பட்ட எழுத்துகளுக்கிடையில் ஆசாத் அவர்களின் எழுத்து பாணி வித்தியாசமானது. தான் அறிந்த விசயத்தைத் தெளிவாகவும் சுவையாகவும் சொல்லும் ஆசாத் ஏற்கெனவே சத்தமில்லாமல் 'கானா', 'கஸல்' 'ஹஜ்' என்ற மூன்று நூல்களுக்கு ஆசிரியரும் கூட.

தேன்கூடு இணைய திரட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றிருக்கிறார். மரபுக் கவிதைகளிலும் சந்தத்திற்குப் பாட்டெழுதுவதிலும் வல்லவரான அவரது இந்தப் பன்முகத்தன்மைதான் அவரை பண்புடனின் ஆண்டு விழா போட்டிகளுக்கான நடுவராக அவரைத் தேர்வுபெற வைத்தது.

படைப்பாளிகள் யாரென்ற அறிமுகம் இல்லாமல் வெறும் படைப்புகளை மட்டுமே அவருக்கு அனுப்பி அதனை அவர் சீர்தூக்கி அளித்திருக்கும் தீர்ப்பு அடுத்த அஞ்சலில்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெற இருப்பவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்தும் எழுதுங்கள். போட்டிகளுக்காக மட்டுமில்லாமல் உங்க்ளை நீங்களே உற்சாகப்படுத்துவதற்காகவும்.

முதல் பரிசு இரண்டாம் பரிசு என்றெல்லாம் இல்லாமல் போட்டிக்கு வந்த சிறந்த மூன்று படைப்புகள் என்ற வகையிலேயே தேர்வுகள் அமைந்தன.

வெற்றி பெற்றவர்களுக்கு பண்புடன் சார்பில் இந்திய ரூபாய் 500 மதிப்புள்ள புத்தகங்கள் எளிய பரிசாக அனுப்பி வைக்கப்படும். செப்டம்பரில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படவில்லையென்பதால் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்குமே ஆறுதல் பரிசாக இந்திய ரூபாய் 100 மதிப்புள்ள புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்களைப் பெறுவதெப்படி என்று பண்புடன் ஆண்டு விழா குழு சம்பந்தப்பட்டவர்களை உடனே தொடர்பு கொள்ளும்.

சொல்லவே தேவையில்லை - நம் அன்பு வேண்டுகோளை ஏற்று மிகச் சிறப்பாகப் பணியாற்றி படைப்புகளைத் தேர்வு செய்து தந்திருக்கும் அன்புக்குரிய ஆசாத் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்!!

தோழமையுடன்
ஆசிப் மீரான்

0 பின்னூட்டங்கள்: