தமிழீழப் பத்து - திருக்கோணமலைப் பதிகம்
- நாக. இளங்கோவன்
(ஆன்மீகம் என்ற வகையில் திருக்கோணமலைப் பதிகம் என்ற இந்த வழிபாட்டுப் பாடலை
"விரும்பியோரை" பாடச் சொன்னால் மகிழ்வேன். இது ஈழமக்களின் நிலை எண்ணிப் பாடியது.
சிலரேனும் படிக்க அல்லது பாடினால் மகிழ்வேன்.)
திருக்கோணமலைப் பதிகம்
தமிழீழப் பத்து
திருச்சிற்றம்பலம்
கோணல் மாமதி தாவு மாநதி
... ஆடு பாம்பணி சூடு நீள்முடி
கோண மாமலை தேவி கோமகள்
... கூடி யாடிடு வான நாடவன்
கோணல் வாழ்வுழை ஈழ மாகுடித்
... தேசங் கூடுகைக் காண வாவுறுக்
கோணீச் சுரத்தனைச் சூழு வேனனை
... நாடி யாவையுந் நாளுந் தாருமே! .......(1)
குன்றா மலையில் குன்றா விளக்கே
... குன்றா மணியின் குன்றா ஒளியே
இன்றே இனியே என்றே எனவே
... கன்றாய்க் கதறீ நின்தாள் நினைவாய்
நின்றோர் குலமே நில்லா நிலையோ
... நித்தா நிமலா நல்லார் நிலையா
ஒன்றார் ஒன்றாய் உன்னோர் ஒழிப்பார்
... வென்றே அருளாய் உமையாள் துணையே! .......(2)
குணக்கரை வரைப்புறு முதுமலை முடிதனில்
...குலமொடு குடியிரு கழல்தரு குலமுதல்
துணையவள் மலைமகள் தனதிடம் வலனதில்
...தழலவன் அணிபெறு மழுவது பெரும்படை
வணங்கினர் அருளுவன் அதுகொடு பகைதரு
...விதியில பவுதரின் உடன்இரு வைதிகர்
மணமுடை ஒருக்கினில் முளைகெட இடிவிழ
...மதிகிளர்த் தமிழ்க்குடி நிலைத்திடும் இறையே! .......(3)
தமிழ்நில முனையினில் நெடிதுயர் திருமலை
... திருநுதல் உமையுடன் திருதரு அருள்திருக்
குமிழ்நகைக் கனிவினில் கரைந்தடி புகுந்தவர்
... குடியுறுக் குழைவினில் கலங்குதல் முறையிலை
அமிழ்தினை யருளிட விடமுகந் தெழுந்தனை
... அடியவர் பெறுதுயர் அடிகளுக் கினிதிலை
உமிழ்ந்திடும் பவுதரின் விடப்பகை ஒழிந்திட
... மகிந்தனின் முடியினை முடக்கிடு சிவமே! .......(4)
கோத்திட் டிலுறையும் கோணீச் சுரனே
... கூடு மலைமகள் கோனே அரனே
போத்தன் பிடியினில் கோணீச் சுரமே
... பீழ்ந்து புரண்டது போலே வருமோ
ஏத்தும் சிவக்குடி இல்லா தொழிமோ
... ஈது மயங்கினம் ஈசா எழுமே
கோத்தன் குடியெமைக் கொல்லா வகையே
... கோத்தன் குலத்தினைக் குறுக்கிடு சிவமே! ....... (5)
மங்கலை மாதுமை மாரினில் இருத்தி
... மற்றொரு மாதினைப் பூவெனத் தரித்தாய்
எங்கெனு மேறினன் ஏறது விரும்பி
... என்பொடு நாகமும் சூடினன் மகிழ்ந்தே
திங்களும் தாங்கியத் தீநிறத் திருவே
... தொல்தமிழ் ஈழமும் கூடிட உடனே
சிங்களத் தீத்திறல் சேகனின் திரளே
... சிந்திடத் தீர்ந்திடச் சீரளி சிவமே! .......(6)
வெண்டலை ஏந்தி உண்பலி மகிழ்ந
... வெண்பொடிப் பூசும் தொல்குடி உறவே
பண்மொழி யாளின் பங்கனே பரமா
... பைந்தமிழ்க் கோடுப் பதியா உடையாய்
மண்பழிப் பூண்ட மண்டையை மழித்தோன்
... மத்தமும் நோவ மண்ணிடைப் பணிப்பாய்
நுண்ணிய தீமை நன்புலம் விதைப்போர்
... நொந்திட தேவ நல்லருள் புரிவாய்! .......(7)
எல்லையில் புகழுடை எங்குலப் பெருமான்
... எளியவர்க் கருள்செயும் எம்தனி இறையே
தில்லையில் நிகழ்த்துந் திருநடம் இடையே
... திருமலைத் திரும்பி திருவிழி திறவாய்!
நெல்லிடை விளையும் புல்லினை நிகர்த்தோர்
... நற்குடிப் பிறந்தும் நடத்திடும் அல்லலும்
ஒல்லையும் பிளப்பும் உதிர்ந்திட ஒளியே
... உன்னுதல் ஒளிர்வாய் ஒருநொடிப் பொழுதே! .......(8)
எழுகதிர் விழுந்தடி தொழுதெழுந் திருமலை
... எழுந்தருள் விரிசடை வளர்பிறைப் புனைவுறு
கெழுமிய கொழுங்கடை விழியருள் உமைத்துணை
... கமழ்தரு கழலணி மலரடிக் கிழவனை
செழுமறக் களம்புகு அடல்மிகுத் தமிழ்ப்படை
... செயுதுதி செயசெய வெனசெயம் நிதம்தரும்
புழுவென நினைந்தவர் புழுயினித் தரணியில்
... புகழுடைப் பழங்குடி செயசெய செயவே! .........(9)
அறம்பொருள் இன்பொடு வீடெனும் நால்மறை
... யருளிய ஒருதனி யருட்பெருங் கடலே!
அறுவிடம் குரம்பையி லுயிரெனக் குடியிருந்
... தறுத்தெறி முழுஇருள் தொழிழுடைத் தலைவா!
உறுபிழைப் பொறுப்பதி லுனைவிடப் பிறிதிலை
... சிறியனின் சிறுமதி பிழைத்தன பொறுத்திடு
சிறியனின் சிறுமதி பிழைத்தது அதெனினும்
... செயலிழந் திரந்தனர்க் கிரங்குக சிவமே! ......(10)
திருச்சிற்றம்பலம்
தமிழகத்தில் செயலிழந்து
கையறு நிலையில் கைகூப்பியபடி
நாக.இளங்கோவன்
சென்னை
இப்பதிகத்தின் நான்கு பாடல்களை பாடித்தந்த பாடகி
திருவாட்டி தெரசா அம்மையாருக்கும்
அதற்கு அன்புடன் உதவி செய்த திரு.சபாபதி & திருமதி.சபாபதி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அதனை இங்கே கேட்க.
சிறுவிளக்கம்:
பாடல் 1)
1.1 கோணல் மாமதி - பிறை நிலவு வளைந்து இருப்பதைச் சொன்னது. சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல்
எடுத்துக் கொடுத்த சொற்கள்.
1.2 கோணல் வாழ்வுழை - வாழ்வும் குமுகமும் பகைவர்
துன்பம் தாங்கமுடியாமல் பிறையாய்ச் சுருங்கி துன்பப் படுதலைச்
சொன்னது.
பாடல் 2)
2.1 குன்றாமலை - திருக்கோணமலையின் இன்னொரு பெயர் திருக்குன்றாமலை என்று நூல்கள் சொல்கின்றன.
2.2 "இன்றே இனியே என்றே எனவே"
அ) இன்று வரும் இனிவரும் என்று வரும் என்று பொறுமையுடன் காத்திருக்கும் மக்களின் மனம் குறிப்பது.
ஆ) இன்று உன்னைச் சேர்வேனோ இனிச் சேர்வேனோ
என்றைக்குச் சேர்வேனோ என்று தவமிருக்கும் சிவநெறியரின் தவிப்பினைக் குறிப்பதுமாம்.
இ) இன்றும் நீயே இனியும் நீயே என்றும் நீயே என்று
சிவபெருமானின் மேல் இருக்கும் பற்றினைச் சொல்வதுமாம்.
2.3) 'ஒன்றார் ஒன்றாய்" - தமிழர்களிடம் ஒன்றாது அவர்கள் மேல் தீரா அழுக்காறும் பகையும் கொள்வதில் ஒன்றாய் நிற்பவரைச் சொன்னது.
பாடல் 3)
"குணக்கரை வரைப்புறு முதுமலை" - தமிழீழத்தின் கிழக்குக் கடற்கரையின் மேல் நிமிர்ந்து நிற்கும் பழம்பெரும் திருக்கோணமலையைச் சொன்னது.
பாடல் 5)
போத்தன் = போர்த்துக்கீசியன். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக் கீசியர்கள் ஈழத்தைப் பிடித்து கோணமலைக் கோயில் உள்பட பல கோயில்களை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கி
அழித்தார்கள். தரைமட்டமாகிய கோணமலைக் கோயிலைத் தமிழர்கள் மீண்டும் எடுப்பித்து இறைவன் திருவருளால் இறைவனை இருப்பித்தார்கள் என்பது வரலாறு.
பாடல் 7)
பைந்தமிழ்க் கோடு - பைந்தமிழர் மலையான கோணமலை.
பாடல் 10)
10.1) "அறம்பொருள் இன்பொடு வீடெனும் நால்மறை" - நால்மறை நால்வேதம் என்பது அறம் பொருள் இன்பம் வீடுபேறு என்ற
தமிழியத்தின் நான்கு வேள்விகளைக் குறிப்பதாம். வைதீக மதத்தினர் தமது வேறுபட்ட கொள்கைகளை (காட்டாக இருக்கு, யசுர், சாம அதர்வண என்று ) நால்வேதம் என்றும் அதனைத் தமிழர்களிடமும் தள்ளிவட்டனர் என்பதும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது.
"நால்வேதம் ஆறங்கமானாய் போற்றி" என்று அப்பர் பெருமான்
கூறுவதைக் கவனிக்க. இந்த நால்வேதம் என்பது தமிழர்களின்
அற வேள்வி, பொருள் வேள்வி, இன்பவேள்வி, வீட்டு வேள்வி
என்ற வாழ்க்கையியல் மெய்யியல் கலந்த அருமையான தத்துவங்களாம்.
10.2) "அறுவிடம் குரம்பையி லுயிரெனக் குடியிரு" - ஆறங்கமானாய் என்பது சிவன் மனித உடலில் மூலாதாரம்,
சுவாதிட்டானம், மணிப்பூரகம், வாசித்தி, அநாதகம், ஆக்கை
என்ற ஆறு இடங்களில் விளங்கி நிற்கும் மெய்யியல் சூக்குமம்
குறித்தது. குண்டலினியோகிகளிடமும் திருமூலரின் திருமந்திரத்திலும் கற்க வேண்டியது.
ஆகவே நால்வேதம் என்பதற்கும் ஆறங்கம் என்பதற்கும் வைதீக
மதத்தினர் கொள்கையோடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.
மேலும் பல இடங்களுக்குப் பொருள் சொல்ல முடியாமைக்கு
மன்னிக்க.
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நாக. இளங்கோவன் - 3
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment