- நாக. இளங்கோவன்
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பார்கள்.
அதையே வெள்ளையன் எழுத்தில்
"If it is not Measured, it is not Managed" என்று
சொல்லப்படும்போது பல்வேறு துறைகளில் பணி புரியும்
நமக்கு இந்த "Manage by Metrics" என்ற சொல்லாடல்
கிளுகிளுப்பைத் தருவதாய் இருக்கும்.
"ஆகா, என்னமாச் சொன்னான்யா" என்று
நாமெல்லாம் பல தடவைகள் மெய்புளகம்
அரும்பித் ததும்பியது உண்டு!
"இந்திய விடுதலைக்கு முன்னரும்
அதற்குப் பின்னரும் தமிழ்" என்ற இந்த உரையும்
நமது நிலையை சற்று அளந்து பார்க்க உதவுமானால்
நானும் நாமும் மகிழ்ச்சியடையலாம்.
அண்மையில் கூட தமிழக முதல்வர் கலைஞர் இந்த அளவைக்குக்
காட்டாக ஒரு செய்தியைச் சொன்னார்.
"சிங்கம் ஒரு தொலைவு நடந்து போனதும், தான் எவ்வளவு தொலைவு
வந்திருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்குமாம்!"
விலங்குக்குக் கூட இந்த அளந்து பார்க்கும் குணம் இருக்கிறது
என்ற ஒரு செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.
இன்னொரு பார்வையில் சொன்னால், "அப்படி அளந்து பார்க்குந்
தன்மை இருப்பதால்தான் அது அரசராக, ஆளுமையுடன்
இருக்கிறது!".
அப்படியென்றால் அளந்து பார்த்தால்தான் ஆளமுடியும்
என்ற ஒரு உண்மை நமக்குப் புலப்படத்தான் செய்கிறது.
அதுமட்டுமல்ல, அண்மையில் நண்பர் எசென்.இராசா ஒரு
கூட்டத்தில் கென்யாவில் சிங்கங்களைப் பற்றித் தான்
அறிந்த செய்திகளைச் சொன்னார். அதில் ஒன்று சிங்கங்களுக்குத் தன்மானம் அதிகம் உண்டு என்ற செய்தி.
ஆக, அளந்து பார்க்கும் தன்மையும், தன்மானமும்
பெருமையோடு வாழ அவசியம் என்று நாம் உறுதியாக
நம்பலாம்.
இந்தத் தலைப்பை ஒரு சிற்றுரை/கட்டுரை மூலமாக
நிறைவாகச் செய்து விட முடியுமா? என்றால்
வாய்ப்பேயில்லை என்பது உண்மை.
ஏனென்றால் அதற்கு மிகப் பல பரிமாணங்கள் உண்டு.
அத்தனையும் முடியாதெனினும் சிலவற்றை மட்டும்
இங்கே நான் எடுத்து வைக்கிறேன் நமது சிந்தனைக்காக.
1) கால, குமுகச் சூழல்
2) கல்விச் சூழல்
3) பிறமொழிகள்
என்ற இந்த மூன்று நிலைகளிலே நாம் விடுதலைக்கு முன் காலத்தையும்
பின் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தோம் ஆனால் நமக்கு அது
ஒரு தொடர்ச் சிந்தனையை ஏற்படுத்தக் கூடும்.
விடுதலைக்கு முந்தைய காலத்தை பலவாறாகப் பிரிக்கலாம்.
வரலாறு, இலக்கிய, அரசியல் ஆசிரியர்கள் பலவாகப் பிரித்திருக்கிறார்கள்.
இங்கே நான் 5 போர்க் காலங்களாகப் பிரித்துக் காட்டுகிறேன்.
போர்கள் குமுகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிக முக்கியமானது.
சங்ககாலம் என்பது கி.மு 300க்கும் கி.பி 100க்கும்
இடைப்பட்ட காலம். என்ன இது ஆங்கிலேயர் காலத்தைப் பேசச்
சொன்னால் சங்ககாலத்திற்கு ஓடுகிறானே என்று நீங்கள் எண்ணக் கூடும்.
இந்த 400 ஆண்டு காலம் வரலாற்றில் நன்கு பதியப்பட்ட
தமிழ் தமிழரின் இயல்பு மாறாத உயர்ந்த
காலமாகும். அக்காலத்தை விடுத்து தமிழ் என்று எதையும் பேசுவது
காற்றில் கத்தி வீசுவது போலவாகும்!
அந்த 400 ஆண்டுகளிலே தமிழகத்திலும்
தமிழகத்திற்காகவும் நடந்த போர்கள்,
வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஆழப்
பதிவாகியிருக்கிற போர்கள் சுமார் 40.
(குறிப்பு: போர்கள் பற்றி செய்திகளுக்கு ஆதாரமாக நான் எடுத்துக் கொண்டிருப்பது பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரின் "தென்னாட்டுப் போர்க்களங்கள்" என்ற
நூலை. சில போர்கள் மற்றும் செய்திகள் விடுபட்டுப் போயிருக்கக் கூடும் கட்டுரையில்)
ஆக, கணித்துப் பார்த்தால் 400 ஆண்டுகளிலே
40 போர்கள் என்றால், 10 ஆண்டுக்கு ஒரு போர் வீதம்
நடந்திருப்பது தெரிகிறது அல்லவா?
அடுத்ததாக, கி.பி 101க்கும் கி.பி 900க்கும் இடையேயான
800 ஆண்டு காலம். இந்தக் காலத்தை இரண்டாவது போர்க்காலமாகப் பிரிக்கிறேன். இப்படி ஏன் நான் பிரிக்கிறேன் என்றால், இது சங்கம் மருவியகாலமும், 300 ஆண்டு இருண்ட
காலம் என்று சொல்லப்பட்ட களப்பிரர் காலமும், சோழப் பேரரசிற்கு
அடிகோலிட்ட அந்த 9 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியையும்
உள்ளிட்டதாகும். இவை முக்கியமான காலங்கள்.
இக்காலத்திலே 80 போர்கள் வரலாற்றிலே ஆழப் பதிந்திருக்கிறது.
அதாவது 800/80 = மீண்டும் 10 ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம்
நடந்திருக்கின்றது.
சோழப்பேரரசு 850களில் தழைக்கத் தொடங்கி ஏறத்தாழ 130 ஆண்டுகள்
தழைப்பிற்குப் பின் பேரரசாக விரிந்து 300 ஆண்டுகாலம் நமக்குப் புகழ்
சேர்க்கிறது. ஆகவே கி.பி 901க்கும் சோழன் நலிந்த 1300க்கும்
இடைப்பட்ட காலமான அந்த 400 ஆண்டுகளை மூன்றாவது போர்க்காலமாகப் பிரித்துப் பார்த்தால் அங்கே அந்த 400 ஆண்டுகளிலே 166 போர்கள் நிகழ்ந்துள்ளமை நமக்குக் காணக் கிடைக்கிறது. இது தமிழகத்தில் கொஞ்சமும், தமிழ் அரசு வடக்கே கங்கை, கிழக்கே கடாரம், மேற்கே சேரம், தெற்கே மாலத்தீவுகள் வரை எல்லை விரிப்பிற்கும் செய்யப் பட்டப்
போர்களின் எண்ணிக்கையாகவும் கிடக்கிறது. இவை தமிழர்களுக்குச்
வலு சேர்த்த போர்கள் என்று எண்ணலாம்.
ஆக இந்தக் கால கட்டத்தில் 400/160 = 2.5 ஆண்டுகளுக்கு ஒரு
போர் வீதம் நடந்திருப்பது ஒரு இன்றியமையாத புள்ளிவிவரம் அல்லவா?
நிரவலாக சராசரியாக 10 ஆண்டுகளுக்கு 1 போர்
என்று இருந்த போர்வீதம் திடீரென்று 2.5 ஆகக் குறையும் போது
அதனால் குமுக கவனங்களின் மேல் தாக்கம் இருக்கும் அல்லவா?
நான்காவதாக, கி.பி.1301க்கும் 1750க்கும் இடைப்பட்ட 450 ஆண்டு காலம். தமிழகம் இந்தக் காலத்தைப் போல என்றைக்கும் அலைக்கழிக்கப் பட்டதில்லை என்று சொல்லக் கூடிய காலம்.
இக்காலத்தில்தான் மொகலாயர், மராட்டியர், தெலுங்கர், கன்னடர்,
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், பிரித்தானியர்
என்ற 8 வகையான கூட்டத்தின் தாக்கம் ஏற்பட்ட காலம். தமிழரசு
என்பது இல்லவே இல்லை. போதாதற்கு ஒய்சளர்கள் என்ற பிரிவினரும்
வந்தனர்.
இக்காலத்தில் நடைபெற்ற போர்கள் 120.
சராசரியாக 3.75 ஆண்டுகளுக்கு ஒரு போர். இந்தப் போர்கள்
தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்லாது, இக்கூட்டங்களுக்கு
இடையே நிகழ்ந்ததாகவும் நிறைய அமைந்திருக்கின்றன.
ஐந்தாவது போர்க்காலமாக,
1750க்குப் பின் ஏறத்தாழ இந்தியா பிரித்தானியரின் கீழ் அடங்கிவிட்டது.
1750க்கும் 1850க்கும் இடையேயான 100 ஆண்டுகளில் மட்டும்
தமிழகம் 50 போர்களைக் காணுகிறது.
அதாவது 2 ஆண்டுகளுக்கு ஒரு போர் என்ற அளவில்.
1850க்குப் பின்னர் இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஓங்க
ஆரம்பித்து 1947 வரைக்கும் நீண்டது வேறு வகையினது.
அக்காலத்தினை இவ்வாய்வில் நான் விட்டு விடுகிறேன்.
ஆகவே மேற்சொன்ன இந்த 5 போர்க்காலங்களை ஓர்ந்து பார்க்க.
இப்பொழுது, 1947க்குப் பின்னர் தமிழகத்தை உள்ளிட்ட இந்தியா
செய்துள்ள போர்கள் எத்தனை ?
பாக்கித்தானுடன் நான்கு போர்கள்,
48-49 - காசுமீரப் போர்
65 - கட்ச் போர்
71 - கிழக்கு வங்கப் போர்
99 - கார்கில் போர்
சீனாவுடன் 1 போர்
62 - இமயப் போர் / அருணாச்சலப் போர் - சீனாவுடன்
ஈழத்துடன் 1 போர்
87 - சிங்களச்சார்புப் போர்
தமிழ்நாடு இந்திய மாநிலங்களுள் ஒன்று என்பதால் இந்தியா
செய்கின்ற போர்களால் தமிழ்நாட்டு அரசியலுக்கும் பொருளியலுக்கும்
குமுகத்திற்கும் தாக்கம் உண்டு.
ஆக, விடுதலை அடைந்து இந்த 61 ஆண்டுகளிலே மொத்தம் 6 போர்களில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது.
இங்கே சராசரிப் போர் வீதம் பார்த்தால் அது 10 என்கிறது!
கி.மு.300 இல் இருந்து இன்று வரை யில் நிகழ்ந்த போர்களின் வீதங்களை உற்றுப் பார்த்தால் அது 10-10-2.5-3.75-2-10 என்று இருக்கிறது. படம்-1 ஐக் காண்க.
இப்படத்தைப் பார்த்தால் குமுக அமைதியின் தன்மை விளங்கும்.
குமுக அமைதி என்பது ஒரு நாட்டின் பொருளியல்,
கலை, பண்பாடு மற்றும் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதது
என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமக்குப் பல தரவுகள் அல்லது
செய்திகள் கிடைக்கின்றன.
அ) சங்ககாலத்தில் மொழிக் கலப்பு இல்லாமல் தமிழ் செழித்துச் சிறந்திருந்தது என்று சொன்னால், அதற்கு அப்போதிருந்த குமுக அமைதியும் ஒரு முக்கிய காரணம்
ஆ) சங்ககாலத்தைத் தொடர்ந்து வந்த இரண்டாம் போர்க்காலத்தில்
தமிழ்நாடு சில இன்னல்களுக்கு உள்ளாகி இருந்த போதிலும்
மொழிச் சிதைவு திகைக்க வைக்கும் வகையில் ஏற்படவில்லை.
நன்றாகவே இருந்திருக்கிறது. சொல்லப்போனால் தமிழ் தமிழாகவே இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பெருமை குன்றி விடவில்லை. அதற்குச் சான்றாக தேவார, பிரபந்த
இலக்கியங்களில் உள்ள தமிழின் செழுமையைச் சொல்லலாம்.
இ) சோழர்களின் காலத்தில் போர்களின் எண்ணிக்கை
அதிகமாக இருந்தது அரசியல் வலுவைக் கூட்டவே. ஆயினும்
மொழிச் சிதைவும் கலப்பும் இக்காலத்தில் ஏற்பட்டது
என்று சொல்லப்படுவதற்கு,
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம்
நடந்த குமுக அமைதியின் தன்மையும் ஒரு காரணம் என்பதைப்
புறம் தள்ளிவிடல் ஆகாது.
ஈ) 1300க்குப் பின்னரான கால கட்டங்களில் நடந்த போர்களின் வீதம்
நமக்கு சொல்வதெல்லாம் மொழியின் பேரழிவையே. இரண்டு மூன்று
ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம் தமிழகத்திலும் தமிழகத்தைச் சுற்றியும்
நிகழ்ந்த போர்கள் தமிழ் மொழிச் சிதைவை, தமிழர் குமுக வேறுபாடுகளை அதிகப் படுத்திச் சீரழித்திருக்கிறதைக் காண முடிகிறது.
குன்றிய குமுக அமைதி தொடர்ந்து தமிழும் தமிழரும் கெட்டதையே
காட்டுகிறது.
இன்னொரு காரணம் என்னவென்றால் இக்கால கட்டங்களில் வலுவான தமிழ் அரசர் இல்லை. ஆளுகை முற்றிலுமாக தமிழர் அல்லாதவர்களிடம் சென்று விட்டது.
உ) சொல்ல வந்த கருத்தாக நான் இங்கு சுட்டிக் காண்பிக்க விழைவது
என்னவென்றால், "தமிழ்நாட்டில் சங்க காலத்தில் இருந்த அதே
குமுக அமைதி, போரமைதி இந்திய விடுதலைக்குப் பின்னரான
தற்போதைய காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.
படத்திலே, சங்ககாலத்தில் நிகழ்ந்த போர்களின் எண்ணிக்கையை
ஒட்டியே தற்போதைய போர்களும் எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளன.
விடுதலைக்கு முன்னர் ஏறத்தாழ 1050 ஆண்டுகளில் இல்லாத
குமுக அமைதி தற்போது தமிழருக்குக் கிடைத்திருக்கிறது.
குறிப்பாக கி.பி 1300க்குப் பின்னர் போர் ஓலங்கள் குறைந்த அமைதியான குமுகச் செழிப்பைக் காண வேண்டுமானால் அதைத் தற்போதுதான் காண முடிகிறது."
பொருளியல் மற்றும் குமுகச் சூழலில் பல்வேறு சவால்களைச்
சந்திக்க வேண்டி இருந்தாலும், இந்த அமைதியான சூழலில்
நமது மொழியையும் பண்பாட்டையும் முழுமையாக மீட்டெடுக்க
வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. கடந்த பல நூறு
ஆண்டுகளில் சந்தித்த சறுக்கல்களை எல்லாம் இன்று செப்பனிட
வேண்டி உள்ளது.
அதற்குக் காலமும் துணையாயிருக்கிறது.
அதனால்தான் தமிழ்ச் சான்றோர்கள் மொழித் தூய்மையின் அவசியத்தையும், அதைச் செய்யவேண்டிய அவசரத்தையும்
சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்திய தேசியத்தில் இணைந்திருக்கிற தமிழ்நாடு இந்தச் சூழலை
செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால்,
வறட்டு வாதங்களில் ஈர்க்கப் பட்டுப் போய்க் கொண்டிருந்தால்
எதிர்காலத்தில் இக்குமுகம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளத்
தேவையான வலுவை அறவே இழந்து போய் விடும். சிட்டிசன் திரைப்படத்தில் ஒரு சிறிய குமுகம் சேற்றில் புதைந்து
மறைந்து போனது போல், தமிழ்நாட்டுக் குமுகமும் எதிர்காலத்தில்
தனது அடையாளத்தை காலமாற்றம் என்ற பெயரிலும், உலக மாற்றம்
என்ற பெயரிலும் புதைத்துவிட்டு ஏதோ ஒரு மொழியைப் பேசி
சார்புக் குமுகமாகிவிடக்கூடும்.
ஆகவே, குமுக அமைதி என்பது தமிழ் மக்களுக்கு
நிறையவே கிடைத்திருக்கிறது. அதில் ஆற்ற வேண்டிய
கடமைகள் எவ்வளவோ இருப்பினும், மொழியைக் காக்க
வேண்டிய அவசியமும் மீட்க வேண்டிய அவசியமும்
நிறையவே இருக்கிறது।
2) அடுத்ததாக விடுதலைக்கு முன்னரும் பின்னரும் கல்வியின் நிலையைக் காண்போம்।
(தொடரும்)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment