பண்புடன் ஆண்டு விழா - அக்டோபர் போட்டி முடிவுகள் - நடுவர் தேர்வு

அன்புடையீர்,

போட்டிக்கான படைப்புகளைப் படித்து எனது பார்வைக்கேற்றபடி மூன்று பரிசுகளைத் தெரிவு செய்தேன். மரபுசார் ஆறுதலான எல்லா படைப்புகளும் நன்றாக இருந்தன என்னும் வழமைக்குள் செல்வதற்கு முன்பாக, எங்கள் ஜித்தா தமிழ்ச் சங்கத்திலும், ஜித்தா டோஸ்ட் மாஸ்டர்ஸ்ஸிலும் போட்டிகள் நடக்கும்போது நான் சொல்லும் வழமையான வாசகத்தை இங்கே சொல்ல விருப்பம். போட்டிகளுக்கு நம்மை ஆயத்தப்படுத்தும்போதே, தோற்பதற்கும் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியை ஏற்று அடுத்த போட்டியில் ஆர்வமுடன் ஈடுபடுவதற்கான மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். போட்டியில் வெல்லாவிட்டாலும் இப்படிப்பட்ட மனப்பக்குவத்தால் அடையப்போகும் பலன் வாழ்வில் நாம் செய்யும் சிறிசிறு முயற்சிகள் தோல்வியடைந்தாலும், மனம் தளராத உழைப்பை நம்மில் தக்கவைத்துக்கொள்ள உதவும். .

ஒரே கருத்து, ஒரே களம், இவற்றில் நிகழும் போட்டிகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பதே சிரமம் என்னும் நிலையில் கவிதை, கட்டுரை, சிறுகதை என மூன்று தளங்களில் வெளிவந்த படைப்புகளைப் படித்து வரிசைப்படுத்துவதும் சிரமம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இடத்தில் உதவியாக நான் நினைத்தது படைப்பானது வாசகனிடம் எந்தவிதமான தாக்கத்தை உண்டாக்கவேண்டும் என படைப்பாளி நினைத்திருப்பார் என அநுமானித்து, உத்தேசமாக அந்தத் தாக்கம் எனது பார்வையில் வாசகனாகிய எனக்குக் கிடைத்திருக்கிறதா என்பதை அவதானித்தேன்.


அதில் என்னை ஈர்த்தது, ஒத்தையடிப் பாதையில. படைப்பாளர் விவரிக்க விரும்பிய கைக்கிளையின் வேதனையும் வலியும் என்னை அடைந்ததாக நான் உணர்ந்ததால், ஒத்தையடிப் பாதையில என்னும் படைப்பு பரிசைப் பெறுகின்றது.

பொதுவாகவே படைப்புகள் என்று வரும்போது விவரணங்கள் அடங்கிய கட்டுரைகளை யாரும் படைப்பின் ஒரு அங்கமாக வைத்துப் பார்க்கவும் தயங்குகின்றார்கள். கவிதைகளும், கதைகளுமே படைப்புகளென்றால் கனவில் மட்டுமே நீந்திக்கொண்டு இயல்பின் அறிமுகத்தை ஒதுக்குவதாகும். விவரணக் கட்டுரைகள் பல நேரங்களில் துறைசார்ந்த வல்லுனர்களால் எழுதப்படாமல், துறைசார்ந்தவர்களால் மட்டுமே படிக்கப்படாமல் எல்லோராலும் படிக்கப்படும்போது, வாசக விருப்பத்திற்காக மேலோட்டமாக விவரத்தைத் தொட்டுச் செல்வது நிகழும். வல்லுனர்களால் எழுதப்படும்போது அது துறைசார்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதாகி விவரணங்கள் விரியும்போது துறைசாராத வாசகனுக்கு கட்டுரை அன்னியமாகிப்போகும். இப்படிப்பட்ட சிக்கல்களால்தான் பலர் இதுபோன்ற கட்டுரைகளைத் தொடுவதில்லை. இந்தப் போட்டியில் அப்படிப்பட்ட கட்டுரையை இட்டமைக்காகவும், மொழி என்பது கவிதைக்கும் கதைக்கும் மட்டுமல்ல என்பதை தன்னளவில் ஏற்று கட்டுரை அனுப்பிய உணர்விற்காகவும், விவரமாக எழுதியதற்காகவும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம் என்னும் படைப்பும் பரிசைப் பெறுகின்றது.

எந்தவிதமான தடைகளும் இல்லாமல் சரசரவென சொல்ல வந்ததைச் சொல்லி வாசகனுக்கு கடைசி வரி அதிர்ச்சியெல்லாம் தராமல் இயல்பாக அழைத்துச் சென்று, தான் பார்த்த நகரின் முகத்தை தனது மனைவிக்கு அறிமுகம் செய்யும் இந்தச் சிறுகதை குறித்து எதுவும் எழுதப்போவதில்லை. பண்புடன் வாசகர்கள் படித்தார்களென்றாலே பிரமிப்புக்கு ஆளாவார்கள் என்னும் நம்பிக்கை இருக்கிறது. ஒரு சிறுநகரத்தின் பகல் தூக்கம் என்னும் படைப்பும் பரிசைப் பெறுகின்றது.

இனி சில பகிர்தல்கள்.

பரிசு கிடைக்காதோர்கள் தயைகூர்ந்து சிறுவருத்தத்திற்குப் பின் உங்களது அடுத்த படைப்பிற்கு ஆயத்தமாகுங்கள். வருத்தமெல்லாம் கிடையாதென்னும் மனப்பக்குவம் உங்களுக்கு இருந்தால் பாராட்டுகள். இதனினும் முனைப்பாக சிறப்பாக உங்களுடைய அடுத்த படைப்பு வரவேண்டுமென்னும் பண்புடன் குழுமத்தாரின் விருப்பம்தான் எனது விருப்பமும்.

ஒரு திரட்டியில் நடந்த போட்டியில் மாதாமாதம் இரண்டு மூன்றென்று படைப்புகளை அனுப்பிவைத்து பரிசு கிடைக்காமல், தொடர்ந்து எழுதிக்கொண்டே வந்தேன், கடைசியில் பரிசு கிடைத்தது. வென்றது வாசகர்களின் வாக்குகளால்தான் என்றாலும் மனம் தளராமல் போட்டியில் பங்குகொண்டதால்தானே வாக்குகளும் கிடைத்தன. அந்த சிறிய அனுபவத்தின் அடிப்படையில் அதனையே உங்களுக்கும் பரிந்துரைக்கின்றேன்.

கவிதை எழுதுவோர் பரந்துபட்ட வாசிப்பனுபவத்தைப் பெறும் ஆர்வத்தை வளர்த்து நீங்கள் சிறந்ததென்று விரும்பும் படைப்புகளை வாசிக்கத் துவங்குங்கள். ஆய்வுக் கட்டுரை / விமர்சனக் கட்டுரைகள் எழுத விரும்புவோர் ஓரிரு வரிகளில் தங்கள் ஆய்வை முன்வைக்காமல் நிறையவும் நிறைவாகவும் எழுதப் பழகவேண்டுகிறேன். மேற்கோள் காட்டப்படும் விடயங்கள் இருபத்தைந்து முப்பது சதமானத்திற்கு மேல் போகாமல் மற்றவை அனைத்தும் உங்கள் ஆய்வின் / விமர்சனத்தின் வரிகளாக இருத்தல் நலம்.

உங்கள் அடுத்த படைப்பு பரிசை வெல்ல எனது அன்பான வாழ்த்துகள்.

அன்புடன்
ஆசாத்

0 பின்னூட்டங்கள்: