பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நாக. இளங்கோவன் 1

ஈழம்: - தமிழகத்தின் பித்துக்குளி அரசியல்!
- நாக. இளங்கோவன்


இவ்வளவு நாள் திடீர்-ஞானாம்பிகை செய்த அடாவடியால் ஈழ
விதயங்களைப் பேசுவதற்கே அஞ்சிக் கிடந்த தமிழகம் - தற்போதைய
மெல்லிய மாற்றத்தால் குறைந்த பக்கம் பேசத் தொடங்கியிருக்கிறது.
எல்லோரும் நினைப்பது போல் திடீர்-ஞானாம்பிகையின் சுய நிர்ணயம்
பற்றிய அறிக்கையில் "தமிழ்" கொட்டிக் கிடக்கவில்லை.
தேவைக்கேற்ற படி திருப்பிக்கொள்ள ஏதுவாகத்தான்
அம்மையார் அளந்து விட்டிருக்கிறார் அறிக்கை.
அதனை அரசியல் நோக்கர்கள் உணராமல்
இல்லை.

ஆயினும் வலமா போனாலும் சரி
இடமா போனாலும் சரி
கடிக்காமல் போனால் போதும் என்ற
நிலையிலேயே தமிழகம்இருக்கிறது.

தி.மு.க ஆட்சியிலே "தமிழகத்தில் இருந்து ஈழத்திற்கு
வெற்றிலை பாக்கு கடத்தல்", "மூக்குப் பொடி கடத்தல்",
"பொரி-கடலை கடத்தல்" அதிகமாகிவிட்டது என்றெல்லாம்
தினம் தினம் தூற்றி அலைக்கழிக்க வைத்தவர்கள்
இன்று சற்று அடக்கி வாசிப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

ஆக அந்த வகையில் அரசியல் வாதிகள் செய்த அரசியல் கடந்த
காலங்களிலே இதமாக இல்லை. தற்போது அவர்கள் செய்யும் அரசியல்,
வேறுபாடுகள் இருந்தாலும் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும்,
வைகோ மற்றும் செயலலிதாவின் அனைத்துக் கட்சிக் கூட்டப்
புறக்கணிப்பு முகம் சுளிக்க வைக்கிறது.

அடங்கி ஒடுங்கி என் வேலை உண்டு நான் உண்டு என்று
இருந்த தி.மு.கவிற்கு அழுத்தத்தைக் கொடுத்து சில கட்சிகள்
ஆதரவையும் கொடுத்து ஈழச் சரவலில் கவனம் செலுத்த
வைத்திருக்கின்ற இந்தச் சூழலில் தந்தி அடிக்கச் சொன்னது
இந்திய அரசியலையும் நடுவண் அரசையும் திரும்பிப் பார்க்க
வைத்திருக்கிறது.

அந்த கையோடு அக்டோபர் 14 ஆம் திகதி அனைத்துக்
கட்சிக் கூட்டத்தைக் கூட்டக் கலைஞர் முன் வந்திருக்கிறார்.

இந்த இரண்டில் என்ன பெரிய தவறை புரட்சித் தலைவியும்
புரட்சிப் புயலும் கண்டிருக்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

தந்தி அடிக்கச் சொன்னது செகசால தந்திரம் என்று வைகோ
சொல்கிறார். அதேபோல அம்மையாரும், விசயகாந்தும் சொல்கிறார்கள்.

அப்படி என்றால் திருமாவளவனும், இராமதாசும் இன்ன பிற
அமைப்புகளும் திமுகோவோடு சேர்ந்து தந்தி அடித்ததால்
அவர்கள் எல்லாரும் முட்டாள்களா? அதனை வரவேற்ற
பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் முட்டாள்களா?

தந்தி அடித்தது போதாது மேலும் அழுத்தம் தர வேண்டும்
என்று அவர்கள் சொன்னால் அது அரசியல் நாகரிகம் மற்றும்
பிரச்சினைக்கு மேலும் வலுவும் ஆதரவும் சேர்ப்பதாகும்.

அதைவிட்டு விட்டு அறிவின் ஆழத்தை அளந்து காண்பித்துக்
கொண்டிருக்க வேண்டிய அவசியமே இங்கே எழவில்லை.

கருணாநிதி பேசினால் தந்திரம் எனவேண்டியது. பேசாவிட்டால்
கண்டிக்க வேண்டியது. தந்தி அடித்து அரசியல் கவனத்தைத்
திருப்பினால் அதனை கேலி பேசவேண்டியது. அதையும் மீறி,
வாங்க எல்லோரும் சேர்ந்து பேசலாம் என்றால் அதையும்
புறக்கணிக்க வேண்டியது.

இது என்ன அரசியல் என்று நமக்குப் புரியவில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு, அதில் ஒவ்வொன்றாக
செய்ய வேண்டிய செயல்களை வரிசைப் படுத்தி அதனை
எல்லாக் கட்சிகளும் தொடர்ந்து பின்பற்றி, வலியுறுத்தி,
நடத்திக் காட்ட வேண்டியதுதான் இன்றைக்குத் தேவை.

கோமாளிகள் குறுக்கும் நெடுக்கும் ஆடுவது போல
ஆடுவது ஈழவிதயத்திற்கான அரசியலில் தேவையில்லை.
அதற்கு கேரள, கன்னட, ஆந்திர, சேது போன்று எத்தனையோ
விதயங்கள் இருக்கின்றன; ஒருவர் மாற்றி ஒருவர் நீ துரோகி
நான் துரோகி என்று சொல்வதற்கு.

"மன்மோகன் சிங்கை இராசபக்சேவுடன் பேசச் சொல்" என்று
தடித்த குரலில் கூச்சலிடலாம்தான். சரின்னு அவரும்
ஒரு 5 நிமிடங்கள் "அலோ இராசபக்சேவா...என்னங்க
கொஞ்சம் பார்த்து பண்ணுங்க" என்று
பேசிவிட்டால் போதுமா?

அதேபோல, மற்றவிசயத்துக்கெல்லாம்
மத்திய அரசை மிரட்டலாம்
இதுக்கு மிரட்டக் கூடாதா என்ற குரல்கள்
மிகப் பரவலாக ஒலிக்கின்றன.

இவர்கள் துளியேனும் அரசியலைக் கவனிக்கிறார்களா?
என்று நமக்கு ஐயம் வருகிறது.

பா.ச.கவோடு நடுவண் அரசில் இருந்த போதும் சரி, பேராய
ஆட்சியோடு இருக்கும் போதும் சரி தரமற்ற மிரட்டல்களை
தி.மு.க நடுவண் அரசிற்கு ஏற்படுத்தியது இல்லை.

காங்கிரசு நடுவண் அரசு பொறுப்பேற்கும் முன்னர்
கப்பல் துறை கேட்டுக் கொடுக்கப் படாததால் மிரட்டி வாங்கினார்
கருணாநிதி. இதைத் தவிர வேறு எதற்கு தி,மு.க மிரட்டியது
என்று யாராலும் சொல்ல முடியுமா?

கப்பல் துறையைக் கேட்டுப் பெற்றது சேதுக் கால்வாய் திட்டத்தை
முன்னெடுக்க. அது நல்லதுதானே. தமிழகத்திற்கு அந்தப் பொறுப்பு
பயனளிக்கும் என்பதற்கு மட்டும்தானே. திமுகவிற்கு பலனோ
இல்லையோ தமிழகத்திற்கு பலனளிக்கும் ஒன்றை ஏன் பரிகசிக்க
வேண்டும்? இதில் என்ன புத்திசாலித்தனத்தை கிடுக்குபவர்கள்
காட்டுகிறார்கள் என்று புரியவில்லை.

வாச்பாய் தலைமையில் பா.ச.கவின் ஓராண்டு ஆட்சியின் போது
செயலலிதா அம்மையார் நாளொரு மேனியும் பொழுதொரு
மேனியும் விடுத்த மிரட்டல்களை விரும்பும் அறிவுடையார் யார்?

அவர் விடுத்த மிரட்டல் எதற்காக என்று வைகோவிற்கும்
நெடுமாறனுக்கும் இன்ன பிறருக்கும் தெரியாதா என்ன?

செயலலிதா வாச்பாயை மிரட்டி ஆட்சியைக் கவிழ்த்து
அடைந்ததால் தமிழ் மக்கள் பெற்ற இலாபம் என்ன?

இந்த இரண்டு அரசுகளோடும் இணக்கமாக ஒரு காலத்தில்
இருந்த வைகோ மிரட்டினாரா? இப்பொழுது கூட மிரட்டும்
இடத்தில் இருக்கும் இராமதாசு மிரட்டுகிறாரா? கருணாநிதி
மிரட்டாவிட்டால் நான் மிரட்டுகிறேன் என்று ஏன் அவர்
முன் வருவதில்லை.

சரி - அப்படியே இப்பொழுது கருணாநிதி நடுவண் அரசை
மிரட்டி ஆட்சியை விட்டு வெளியே வருவதால் என்ன இலாபம்?

நடுவண் அரசு கலைந்து போய், அதனால் தமிழக அரசும்
கலைந்து போய் விடுவது ஈழத்தமிழர் விதயத்தில் என்ன
பலனை அளிக்கும்?

அப்படி இரண்டு அரசுகளும் கலைந்து போய் மத்தியிலும்
தமிழகத்திலும் அமையக் கூடிய மாற்று அரசுகளின்
ஈழத்தமிழர்களுக்கான நலனில் நிலைப்பாடு என்ன?

அமையக்கூடிய மாற்று அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு
முழு அணுசரனையாக இருக்கும் என்பதற்கு உறுதி
இருக்கிறதா வைகோவிடமும் அவர் கூடாரத்திடமும்?

ஈழ நலன் என்பதை எல்லாத் தமிழர்களும் விரும்புகிறார்கள்.
இன்றைய நிலையில் தமிழகத்தில் இதனைச் செய்வதற்கு
"செயல் திட்டம்" என்ன?

சும்மா வைகோ மாதிரி சுற்றிச் சுழன்று பேசிப் பேசிக் காலம்
கழிக்கலாமா? நெடுமாறன் மாதிரி புலம்பிப் புலம்பிக் கழிக்கலாமா?
விசயகாந்த் மாதிரி எதாவாது பேசிக் கழிக்கலாமா? அல்லது
செயலலிதாவிற்கு ஒற்றை நாற்காலியை மேடையில் போட்டு
கீழே உட்கார்ந்து ஞானோபதேசம் கேட்கலாமா?

வைகோவுக்கு ஒரு வித மனநோய் வந்துவிட்டது போல.
இந்த தொடரிப் (இரயில்)பாதைக்கருகே
குடியிருப்பவர்களுக்கு தொடரிகள் ஓடவில்லையென்றால்
இரவில் தூக்கம் வராதாம். அதே போல ஈழப் பிரச்சினைகளை
வீராவேசமாக கூட்டம் போட்டு பேசிப் பேசிப் பொழுதைக்
கழிக்கவே விரும்புகிறார் போல. தீர்க்க விரும்பவில்லை. தீர்ந்து
போனால் இவர் பிழைப்பு என்ன ஆகும் என்ற கவலையோ
என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இவர் பேசிப் பேசி 15 வருடமாக
என்ன சாதித்தார் என்று புரியவில்லை.

இராசீவ் கொலைக்குப் பின்னர் 18 ஆண்டுகளும்,
அந்தப் பழியில் இருந்து முழுதாக தி.மு.க
விடுவிக்கப் பட்டு 7அல்லது 8 ஆண்டுகளும்
ஓடியிருக்கிற இந்தக் கால கட்டத்தில் கவனமாக
செயல்பட வேண்டிய கட்டாயம் தமிழகத்திற்கு
உண்டு. இது இன்றைக்கு இராசபக்சே+பொன்சேகாவின்
கொக்கரிப்பிற்கு சவால் விட
மட்டுமல்லாமல், ஈழ, தமிழக மக்களிடையே
நல்லுறவு நிலைப்பதற்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும்.

இன்றைய நிலையில், தமிழக அரசியல் வாதிகள் எப்படியோ
அப்படியே ஏறத்தாழ ஈழ தமிழக மக்களும் இருக்கிறார்கள்.
ஈழத்தமிழனும் தமிழகத்தமிழனும் தமிழ்நாட்டில் மட்டும்தான்
பேதப் பட்டு இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

பல வெளிநாடுகளில் சேர்ந்தியங்க, சேர்ந்து பேச எவ்வளவோ
வாய்ப்புகள் இருந்தும் "தமிழர்" என்ற அடையாளத்தின் கீழ்
சேர்ந்து கொள்ள எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும்
"இருக்க வேண்டிய அளவிற்கு" ஒட்டுணர்வு இல்லை என்பதை
எத்தனை பேரால் மறுக்க முடியும்? அங்கெல்லாம் இந்தியச்
சட்டங்கள் யாரையும் தடுக்க முடியாது.

ஆகவே, "நினைச்ச உடனே நெய்க்காரன் குதிரை ஏறவேணும்"
என்ற முரட்டு அரசியல் செய்யாமல், "முறைப்படுத்தப் பட்ட
கட்டுப்பாடு கொண்ட கண்ணியமான" அரசியலை இந்த
ஈழ விதயத்தில் இந்தச் சூழலில் அரசியல் வாதிகள்
கையாள வேண்டும். குறிப்பாக வைகோ போன்ற
புயல்களும் அவர் கூட இருப்பவர்களும்.

எல்லோரும் கூட வேண்டும் என்பதுதான் தேவை. அப்படியிருக்க
முதலில் கூட்டப் படுகிற கூட்டத்திற்கே சவால் விடுவது எந்த
வகையில் ஞாயம்?

இவரும் செயலலிதாவும் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப்
புறக்கணிக்கிறார்கள்?

அதற்கு இவர்கள் சொல்லும் காரணம் என்ன?

கருணாநிதி மத்திய அரசை விட்டு விலக வேண்டும் என்பதுதான்.
அதைத்தான் தனது அறிக்கையில் செயலலிதா கூறியிருக்கிறார்.

வைகோ மற்றும் செயலலிதா கூட்டணி
ஒரு மர்மமான பாதையில் பயணிக்கிறது. இவர்களின் குறி
ஈழ நலன் அல்ல; கருணாநிதியின் வீழ்ச்சி மட்டுமே என்பதையே
அவர்களின் அனைத்துக் கட்சிக் கூட்டப் புறக்கணிப்பு எடுத்துக்
காட்டுகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ
உள்ளன.

கட்டம் கட்டமாக இந்தப் பிரச்சினையின் சிக்கல்களை அவிழ்க்க
வேண்டும்.

1) முதற்கட்டமாக, சிங்களத்தவரால் பாதிக்கப் பட்ட மக்களுக்குத்
தேவையான உணவும் மருந்தும் அளிக்கத் தமிழ்நாட்டிற்கு இந்திய
அரசு உத்தரவிட வேண்டும். அதற்கு எல்லாவிதத்திலும்
அணுசரனையாக இருக்க வேண்டும்.

2) சிங்களத்திற்குக் கொடுத்த ஆள், ஆயுத உதவிகளைத்
திரும்பப் பெறல் வேண்டும். நிதி உதவியை நிறுத்த வேண்டும்.

3) தமிழக மீனவர்கள் துன்புறுத்தப் பட்டால் கச்சத் தீவை திரும்பப் பெற
வேண்டும் என்று எச்சரிக்கையை முதலில் விடுக்க வேண்டும். அதை

மீறும் போது கச்சத்தீவை திரும்ப எடுக்க வேண்டும்.

4) இந்திய அரசு தனி ஈழத்தை அங்கீகரிக்கச் செய்ய வேண்டும்.

5) குழறுபடியாகக் கிடக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை
சீர் படுத்தி ஈழத்தை இந்திய நட்பு நாடாக ஏற்படுத்த வேண்டும்.

6) இந்தியா தெற்காசிய பகுதியில் இழந்திருக்கும் மதிப்பை
திரும்பப் பெற தமிழர் நட்பைப் பேண வேண்டும்.

7) இலங்கையில் செய்யும் முதலீடுகளை நிறுத்தவேண்டும்.
ஈழப் பகுதிகளில் செய்யும் முதலீடுகளில் தமிழ்க் கூட்டு
இருக்க வேண்டும்.

ப்படிச் செய்ய எவ்வளவோ இருக்கையில் வைகோவும்
செயலலிதாவும் அ.க.கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டிய
காரணம் என்ன?

ஒரு வேளை அ.க.கூட்ட முடிவுகளுக்கு நடுவண் அரசு
செவி சாய்க்க வில்லை என்றால் எல்லோரும் சேர்ந்து
போராடலாமே!

அல்லது கருணாநிதி செயல் படவில்லை என்றால் அவரை
கண்டிக்கலாமே! அழுத்தம் தரலாமே?

வைகோவும் செயலலிதாவும் தமது அரசியல் மேடைப்
பேச்சு சுகத்திற்காக தமிழ் மக்கள் சாவுகளை தமிழின
அழிவை இந்தச் சூழலிலும் பயன்படுத்துவது நாணத் தக்கது.

ஆகவே, வேகமெடுத்த சில நாள்களிலேயே
அ.தி.மு.க+ம.தி.மு.கவின் நிலைப்பாடு
கருணாநிதியின் நாற்காலியை காலி பண்ணுவது
என்பதைப் புரிந்து கொள்ளப்பட்டதால்,
மன்மோகனையும் இராசபக்சேவையும் நிம்மதிப்
பெருமூச்சை விட வைத்திருக்கிறார்கள்
வைகோவும், செயலலலிதாவும்;
நெடுமாறனின் அசீர்வாதம்
என்றைக்கும் வைகோவிற்கு இருப்பது உண்டு.

கடந்த 20 ஆண்டுகளில் எந்தத் தேர்தலும் ஈழத் தமிழர்களின்
நலனை முன் வைத்து நிகழ்ந்தன அல்ல. மாறாக அவர்களுக்கு
எதிராக நடந்த பிரச்சாரத்திற்கு ஒரு வேளை வாக்குகள்
விழுந்திருக்கலாம். வரப் போகும் தேர்தலுக்கு தமிழ் நாட்டு
மக்களின் ஆதரவு மின்சாரத்தையும் விலைவாசியையும் பொறுத்து
இருக்குமேயல்லாமல் ஈழத் தமிழர் நலனுக்காக மட்டும் இருக்கும்
என்று எதிர்பார்த்தோம் என்றால் அது கனவாக இருக்கக் கூடும்.

தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க+காங்கிரசு தோற்கும்
சூழல் ஏற்படுமேயானால் அந்தத் தோல்வி ஈழத் தமிழருக்கு
இந்த இரண்டு கட்சிகளும் எதுவும் செய்யவில்லை என்ற
காரணத்திற்காக இருக்காது என்பது உண்மை.

ஆகவே ஆட்சி வேறுபாடுகள் இல்லாமல் ஈழ தமிழக
உறவில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் ஒழுங்கான
ஒரு நீண்ட காலத்திட்டத்துடனான கூட்டு முயற்சி இருக்க
வேண்டும். ஆட்சி மாற்றங்கள் ஈழ, தமிழக உறவை பாதிக்கக் கூடாது.
அதை அடைய கொஞ்சம் பண்படும் அரசியலார்க்குத் தேவை.
ஈழத்தமிழர் நலன் பேண அவற்றை வலியுறுத்தும்
பொறுப்பு தமிழகம் மட்டுமல்ல, உலக வாழ் தமிழர்களுக்கும் உண்டு.

0 பின்னூட்டங்கள்: