இரை தேடும் இயந்திரக் கழுகுகள்
- கானா பிரபா
புக்காரா, சியாமாசெட்டி, அவ்றோ, சகடை, ஜெட், ஹெலி,பொம்பர் இதெல்லாம் எங்கடை ஊர்ப்பிள்ளையள் ஆனா ஆவன்னா சொல்லமுதலேயே பேசப்பழகும் வார்த்தைகள்.
நான் சின்னப்பிள்ளையா இருந்த காலத்திலை பலாலிப் பக்கம் போன உபாலிப் பிளேனைக்காட்டி என்ர அம்மா எனக்குச் சாப்பாடு தீத்தின காலம் இருந்தது. பிறகு அதே வான் பரப்பில வந்து ரவுண்ட் அடிச்சு, விதம் விதம் விதமான பிளேன்கள் வகை வகையாக் குண்டு பொழிஞ்சு எங்கட சனத்தைச் சாப்பாடு ஆகின காலமா ஆகிவிட்டுது இப்ப.
"அங்க பார் பிளேன் வருகுதடா" வீட்டு ஜன்னலுக்குள்ளால
புழுகமாப் பார்த்து, நடு முற்றத்தில போய்ப் பிளேன் பார்த்த காலம் போய்,
"அங்க பார் பிளேன் வருகுது,
ஐயோ...!,ஐயோ...! ஓடுங்கோ" எண்டு சொல்லிக்கொண்டே
சனங்கள் குலை தெறிக்க, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே ஓடி ஒளியும் காலம் இது.
இப்பவும் நினைவிருக்கு, இது நடந்து 20 வருசத்துக்கு மேல்.
எங்கட வீட்டிலை இருந்து தாவடிச் சிவராசா அண்ணை வீடு அதிகம் தொலைவில் இல்லை. சிவராசா அண்ணை வீட்டை சுற்றி பின் பக்கம் தோட்டவெளி நீண்டவெளி கணக்காய் இருக்குது. வழக்கமாப் பின்னேரப் பொழுதில ராமா அண்ணரோட ஆட்டுக்குப் புல்லுப் பிடுங்கப் போற சாட்டிலை, தங்கட தோட்டத்தில வேலை செய்யிற பெடியளோட சேர்ந்து, பொயிலைக் கண்டுகளுக்குள்ளை ஒழிச்சுப் பி்டிச்சு விளையாடுறனான்.
பிளேனாலை எங்கட சந்ததியைச் சிங்களவப் பேரினவாத அரசு அழிக்க முதன் முதல் ஒத்திகையைத் தொடங்கின நாள் அது.
அந்த நாள் மட்டும் தோட்ட வெளிப்பக்கம் போகாமல், சிவலிங்க மாமா வீட்டு சீமெந்துத் திண்ணையில் இருந்து றோட்டால போற வாற சனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன். திடீரெண்டு வானத்திலை இரண்டு பிளேன்கள் நோட்டம் வந்திச்சினம். முன்பின் பிளேன் குண்டு பொட்ட அனுபவம் தெரியாத சனம் நாங்கள் எண்டதால சிவலிங்க மாமா வீட்டு சின்ன கேற்றில் ஏறி நின்று மேல பிளேனை வேடிக்கை பார்த்தன். வானத்தில ரவுண்ட் அடிச்ச அந்தபிளேனிலை ஒண்டு திடீரெண்டு தாழப்பறந்து ஏதையோ தள்ளிவிட்டது தான் தெரியும்.
அந்த அதிர்ச்சியில கேற்றிலை இருந்து விழுந்து விட்டன். பிறகும் ரண்டு மூண்டு குண்டுகள் போடும் சத்தம் கேட்டது. ஒரே புகை மண்டலமாத் தாவடிப்பக்கம் தெரிஞ்சது. ஈழத்தமிழின வரலாற்றிலை சிங்களப் பேரினவாத அரசு போட்ட அந்த முதற்குண்டில் பலியானது சிவராசா அண்ணை வீட்டுக்குப் பக்கத்துத் தோட்டத்தில் விளையாடிய பாலகர்கள். அதுக்குப் பிறகு பின்னேரங்களில நான் அந்தத் தோட்டப்பக்கம் விளையாடப் போறதேயில்லை.
என்ர பதின்ம வயது இரவுகள் பாதி இரவுகளாகத்தான் இருந்திருக்கின்றன.
அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பேன். நடுச்சாமத்தில எங்கோ ஒரு தொலைவில பிளேன் வாற ஒலி கேட்கும். அடுத்த அறையில படுத்திருக்கும் என்ர அம்மா விறு விறுவெண்டு ஓடி வந்து
என்னைக் கட்டிப்பித்துக்கொண்டு நடுங்கிகொண்டிருப்பா. ஓரு பறவை தன்ர குஞ்சை இறகுச்சிறையால் மறைப்பது போல என்னைத் தன் கைச் சிறைக்குள்ள மறைச்சுக்குக்கொண்டிருப்பா. எனக்கு மேல் தன் உடம்பால மறைச்சால், பிளேன் குண்டு போடேக்கை தன்னைதான் பாதிக்கும், தன்ர பிள்ளையையாவது காப்பாற்றலாம் எண்ட அல்ப நம்பிக்கை என்ரஅம்மாவுக்கு. எனக்கும் பயத்தலால் உடம்பு நடுங்கிக்கொண்டிருக்கும். தூரத்தில் கேட்கும் பிளேன் சத்தம் கிட்டக் கிட்ட வரவும்,
"தண்ணித் தொட்டிப் பக்கம் ஓடுவம் வா" எண்டு சொல்லிக்கொண்டே தரதரவெண்டு என்னை கட்டிலிலிருந்து எழுப்பி இழுத்துக்கொண்டு ஓடுவார்.
எங்கட வீட்டின் பின்பக்கம் நீண்டதொரு தண்ணித் தொட்டி இருக்குது. அதன் கீழ் குளியலறை. பிளேன் குண்டு இந்தச் சீமென்ற் கட்டிடத்தை ஒண்டும் பண்ணாது எண்ட நினைப்பிலை குளியலறை மூலையில் ஒடுங்கி இருப்போம்.அம்மாவின் வாய் ஊரிலுள்ள அத்தனை தெய்வங்களையும் இறைஞ்சி அழைக்கும். மணித்தியாலங்களாக ஈரக் குளியலறைத் தரையில் இருட்டுக்குள் அடைக்கலம். பிளேனுக்கு வீடுகள் தெரியக்கூடாது எண்டு மின்சாரமும் இல்லாமல், கைவிளக்கு வெளிச்சமும் இல்லாமல் ஊர் கும்மிருட்டில் இருக்கும். சமீபமாக வந்து விழுந்து வெடிக்கும் குண்டுகளின் அதிர்வால குளியலறைக் கதவு அறைந்து ஓயும். ஊர்நாய்கள் வாள் வாள் எண்டு நடு நிசி தாண்டி அழுது கொண்டே இருக்கும்.
லலித் அத்துலத் முதலி பேரினவாத அரசாங்கத்தில பாதுகாப்பு அமைச்சரா இருந்த காலம் அது. பீப்பாய்க் குண்டுகள் என்ட புதுவகையான குண்டுகளை எங்கட சனத்தின் மேல் பரிசோதிச்ச ஜனநாயகவாதி அவர்.
பீப்பாய்களுக்குள் மலக்கழிவுகள் மற்றும் விஷக்கிருமிகள் கொண்ட சேதனக்கழிவுகளை நிறைத்து வைத்த குண்டுகள் தான் இந்தப் பீப்பாய்க் குண்டுகள். ஒருமுறை யாழ்ப்பாணம் சிவன் கோயிலுக்கு மேலாலை பிளேன்கள் வட்டமிடேக்கை கோயிற்கோபுரத்துக்குக் கீழ
தன்ர உயிரைக் காப்பாற்ற, ஒதுங்கிய என்ர நண்பன் பிரதீபனின்ர இரண்டாவது அண்ணையை அந்தப் பிளேன்களில் ஒன்று போட்ட பீப்பாய்க்குண்டு காவு எடுத்தது. எங்கட பள்ளிக்கூடத்தில அப்போது உயர் வகுப்புப் படிச்சுக்கொண்டிருந்த அவர் சாகிறதுக்கு முதல் நாள் " சொன்னதைச் செய்யும் சுப்பு" எண்ட முசுப்பாத்தியான தனிநடிப்பை எங்கட பள்ளிக்கூடத்தில நடிச்சதும் இண்டைக்கும் நினைவிருக்கு. பீப்பாய்க்குண்டுகள் பட்டு உடைஞ்சபடியே பலகாலம் சிவன் கோயில் கோபுரமும் கிடந்தது.
ஏ.எல் படிக்கிற காலத்திலை இணுவிலிருந்து நான் யாழ்ப்பாணத்துக்கு ரியூசனுக்கும் போற
நாட்களில பிளேனுக்கு கண்ணாமூச்சி காட்டிய காலங்கள் மிக அதிகம்.
ஒருநாள் தாவடிப்பக்கமாப் சைக்கிள்ள போகேக்கை குண்டு போட வட்டமிட்ட பிளேனைக் கண்டு மதகுப் பக்கம் சைக்கிளைப் போட்டு விட்டு ஓடினதும், அப்போது முள்ளுப் பாலத்துக்குள் ஓடி ஒளியேக்கை என்ர காலி்லை போட்ட செருப்பைத்தாண்டி பிசுங்கான் ஓடுகள் குத்தியதும் ஒரு அனுபவம்.
ஓருமுறை கொக்குவில் மஞ்சவனப்பதிப்பக்கம் நானும் நண்பன் முகுந்தனும் சைக்கிளிலை வரேக்கை, இரண்டு சீ பிளேன்கள் வந்து வட்டமிட்டுக் கோள் மூட்டி விட்டுப் போன கையோட, சியாமாசெற்றி பிளேன்கள் வந்து ரவுண்ட் போட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு மஞ்சவனப்பதி கோயிலுக்குப் பின்னால சைக்கிளில் வேகமெடுத்தோம்.
திடீரெண்டு மிகச் சமீபத்தில் குண்டொன்றைப் பறித்து விட்டு மேலெழுப்பியது ஒரு பிளேன். கண்ணுக்கு முன் புகை மண்டலம் தெரிந்தது. சைக்கிளிலிருந்து தானாகவே பொத்தொன்று விழுந்தோம்.
"ஓடு.. ஓடு எண்டு என்ர மூளை கட்டளை போட்டது. என்கால்கள் ஓடுவது போல பிரமை. ஆனால் பயத்தில் அதே இடத்திலேயே குத்திட்டு நின்று மண்ணை விறாண்டிக்கொண்டிருந்தன என் கால்கள். உடம்பெல்லாம் மின்சாரம் அடித்தது போல இருந்தது. சற்றுத் தூரத்தில் முகுந்தன் அதிர்ச்சியில் குப்பிறப்படுத்திருந்தான். நானும் பொத்தென்று தரையில் விழுந்து படுத்தேன்.
இருவருமாக தரையில் படுத்தவாறே ஊர்ந்து ஊர்ந்து அந்தக் கோயில் வெளிமைதானத்தைத் தாண்டி பின்னால் இருக்கும் வீடொன்றுக்குள் ஓடினோம். காலெல்லாம் சிராய்ப்புக் காயங்கள் சுண்டிச் சுண்டி வலியை எழுப்பின. "தம்பியவை கெதியா ஓடியாங்கோ " அந்த வீட்டு பின் பங்கரிலிருந்து ஒரு வயசாளியின் குரல் அது. சர்வமும் ஒடுங்க கால்கள் மட்டும் பங்கரைத் தேடிப் பாய ஓடி ஒளித்தோம்.
அடுத்த நாள் எங்கட பள்ளிக்கூடம் போன போது தான் தெரிந்தது, முதல் நாள் கொக்குவில் இந்து பள்ளிகூடச் சந்தியில் விழுந்த குண்டு எங்கட கொமேர்ஸ் பாடம் படிப்பிக்கும் ரீச்சரையும் காயப்படுத்தியும், சிலரைப் பலியெடுத்தும் விட்டதெண்டும்.
ஓரு சில மாதங்கள் கழித்து எங்கட கொமேர்ஸ் ரீச்சர் சுகமாகி, எங்கட வகுப்புக்கு வந்த போது தான் தெரிந்தது. அவரது மற்றக்காலுக்கும் பதில் ஊன்று கோல் தான் இருந்தது. முன்பெல்லாம் கலகலப்பாக இருந்த அவர் அன்றின் வாழ்க்கை மாறிவிட்டதை அவர் முகம் காட்டிக்கொடுத்தது. ஏனோ தெரியவில்லை சில நாட்களுக்குப் பின் அவர் பள்ளிக்கூடமே வரவில்லை. அப்போது கல்யாணம் கட்டாமல் இருந்த அந்தரீச்சர் இப்ப எங்க இருக்கிறா, அவருக்கு உதவி யார் எண்டும் எனக்குத் தெரியாது.
இந்த நினைவுப் பதிவுகள் என் மனசுகுள் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் இந்த வடுவைக் கிளறியது நேற்று முல்லைத்தீவில் செஞ்சோலைச் சிறார் இல்லம் மீது விமானக்கழுகுகள் 16 குண்டுகளைப்போட்டு 61 பிஞ்சுகளை அழித்து சிங்கள அரசபயங்கரவாதம் அரங்கேறிய அனர்த்தம்.
இந்தப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடையையும் தாங்கி தான் அரைவயிறு கால் வயிறு நிரப்பி நாட்கள், வருடங்கள், ஏன் ஒவ்வொரு கணமும் எண்டு விமானக் கழுகில் இருந்து காத்து பொத்தி வளர்த்தவை இன்று பட்டுப்போன மரங்கள். மரணம் என்பது மயிரிழையில் வந்து போகும் வாழ்க்கையில், 61 பிஞ்சுகளைத் தொலைத்த இவர்களின் வேதனைகளுக்கு என்ன மாற்றீடு?
இருபது ஆண்டுகளுக்கு மேல் நம் உறவுகளைத் தின்னும் இந்த இயந்திரக்கழுகுகள் சாவது எப்போது?
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - கானா பிரபா 4
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment